Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-1

90’s பையன் 2k பொண்ணு-1

ரி-ஷி-வா-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

“காலையில் தினமும் கண்விழித்தால் கை தொடும் தேவதை அம்மா.” என்று பாடியபடி வந்தான் ரிஷிவேந்தன்.

     இந்த வீட்டில் ரிஷிக்கு தாய் தந்தை என்றதை தாண்டி, அம்மா அப்பா இருவருமே நல்ல சிநேகிதர்கள். அதனாலே ரிஷி எப்பொழுதும் ஒரு இளகிய உணர்வோடு வலம் வருபவன்.

“என்னடா… எப்பவும் எழுந்திரி எழுந்திரினு உலுக்கி, தண்ணி ஊத்தினாலும் எழுந்துக்க மாட்ட. இன்னிக்கு என்ன விடியற்காலையில எழுந்திட்ட. இதுல பாட்டு வேற” என்று சரண்யா இடையில் கை வைத்து நின்றார்.

ரிஷிவேந்தனின் தாய் சரண்யா கேட்டதும், ‘இன்னிக்கு பொண்ணு பார்க்க போகணும்னு பேசினாங்களே.. எப்ப போவாங்கனு தெரியலை. லேட்டா எழுந்துட்டேனோ’ என்று ரிஷி சுவரில் தொங்கும் அந்த நீண்ட கடிகாரத்தை கண்ணை கசக்கி பார்த்தான்.

‘மணி ஆறுமுப்பது. அச்சச்சோ காலையில ஆறுக்கு பொண்ணு பார்க்க போவாங்களோ? நான் லேட்டா?’ என்று மனதில் புலம்பினான்.

     “என்னடா கண்ணை கண்ணை கசக்குற? என்னங்க இவனை என்னனு வந்து பாருங்க. பொண்ணு பார்க்க போகணும். இந்த நேரம் பார்த்து கண்ணு கசக்கறான். கண்ணு கிண்ணு தெரியலையானு தெரியலை… என்னங்க..” என்று கூப்பாடு போட, ரிஷி தலையில் கை வைத்து அதிர்ந்தான்.
   
    “எம்மா… எனக்கு ஏன் இத்தனை வயசாகியும் பொண்ணு கிடைக்கலைனு இப்ப தாம்மா புரியுது. சும்மா இருக்குற சங்கை ஊதி விடற. நான் லேட்டா எழுந்துட்டேனா என்னனு பார்த்தேன். நீ என்ன எனக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்படுவ போலயே.” என்று கோபித்தான்.

     “இஇஇ.. சாரி டா. நீ கண்ணை கசக்கியதும் அம்மாக்கு பகிருனு ஆயிடுச்சு. அதானே என் பையன் கேரட் பொரியலு கேரட் சாம்பாரு, நெய் ஊத்தி கேரட் அல்வா என்று நான் கேரட்டை சமைச்சி சமைச்சி போட்டேனே. நீயும் ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டியே என்னடா பயந்துட்டேன்.” என்று கூற, ”ஆமா முதல்ல கண்ணு இப்ப நான் நல்லா திங்கறேன்னு சொல்லி என் வெயிட்டை சொல்லு நல்ல அம்மா.” என்று புலம்பினான்.

      “என்னடா ரிஷி பதிலே சொல்லாம போயிட்ட. இன்னிக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம். தெரியும் தானே. பொறுப்பில்லாம ஆபிஸ்ல உட்காராதே. மூன்று மணிக்கு போகணும், இரண்டு மணிக்கு டான்னு வந்துடு” என்றதும் சரியென்று வேகமாக ரிஷி தலையாட்டினான்.

      வீட்டின் உள்பக்க படிக்கட்டிலிருந்து கண்ணபிரான் இறங்கியபடி, “நம்ம பிள்ளைக்கு கல்யாண யோகம் அமைஞ்சிடுச்சு டி சரண்யா. பாரு பூம்பூம்மாடு மாதிரி தலையாட்டறான். இப்ப பொண்ணு பார்த்தா சரியா மேரேஜ் முடிஞ்சி வாழ்க்கை ஆரம்பிப்பான்.” என்று கூறினார்.

       ‘எப்பா நானே எப்ப பொண்ணு பார்ப்பிங்கனு காத்திட்டு இருக்கேன். என்னோட லைலா எங்க இருக்காளோ… எனக்கு வயசாகலை வயசாகலைனு சின்ன பையன்னு சொல்லி சொல்லியே முப்பத்தொரு வயசு ஆகிடுச்சே’ என்று சலித்தான்.

     இந்தம்மா என்னடானா ஆபிஸ் போகாம இருக்கலாம்னு பார்த்தா இப்பவே ஆபிஸ்ல போய் இரண்டு மணிக்கு வான்னு சொல்லறாங்க. இப்ப நான் போகலைனா அதுக்கு வேற ஏதாவது சொல்வாங்களோ. இந்த நைண்டி கிட்ஸா பொறந்துட்டு நான் படுற அவஸ்தை இருக்கே.’ என்று தந்தை தாய் சொல் பேச்சை கேட்டு நடக்கும் மகனாக ரிஷிவேந்தன் அலுவலகம் செல்ல கிளம்பினான்.
    
     பெயர் ரிஷிவேந்தன், பார்க்க அனைவராலும் வசீகரிப்பவன் என்று கூறிட இயலாது. ஆனால் அவனின் திறமையை கண்டு நிச்சயம் பிடிக்கும். என்ன திறமையா.. ஒற்றை விரலில் நோட்டை சுழற்றி விழாமல் சுத்துவான், நீருக்குள் குதித்து மீனை எடுத்து கொண்டு வருவான். வேகமாக ஒரே மூச்சில் ஒரு பேக்கேட் பிஸ்கேட்டை கூட சாப்பிடுவான்.

     போதாதற்கு போனில் எவ்வளவு நேரமானாலும் விளையாடுவான். இன்னமும் அம்மா சொல்வதை கேட்கும் ரகம்.

    அலுவலகம் செல்ல புறப்பட்டவன் டக்இன் செய்ய, சின்ன தொப்பை கண்ணாடியில் பெரியதாய் காட்டி கொடுத்தது.

    “அடக்கடவுளே… இப்ப என்ன பண்ண?” என்று வேறு வேறு சட்டையை மாற்றி மாற்றி போட்டான். ஷர்ட் டீ-ஷர்ட்ஸ் என்று போட்டும் சிறிதாய் காட்டி கொடுத்தது அந்த எட்டப்பா வயிறு.  

    “ஸப்பா… முடியலை. இன்னிக்கு இரண்டு வேளை சாப்பிடாம இருந்நு வயிற்றை குறைக்கணும் என்று அதிமேதாவியாக கூறிவிட்டு வயிற்றை உள்ளிழுத்தான்.

      அழகான தட்டை வயிற்றை காட்டாவிட்டாலும் அழகனாக காட்டியது.

    “இது போதும் பொண்ணு வீட்டுக்கு போறப்ப முதல் ரிட்டன் வர்ற வரை மூச்சை இழுத்து பிடிச்சி அட்ஜஸ்ட் பண்ணிட வேண்டியது தான்” என்று கண்ணாடியில் தன் பிம்பத்திற்கு பறக்கும் முத்தம் கொடுத்து சென்றான்.

      சரண்யாவோ ”அடேய் சாப்பிடாம போற” என்று கூப்பிட, “பசிக்கலை மா.” என்றான்.

   “டிபன் பாக்ஸ் எடுக்கலையா டா.” என்று வாசலில் வர, “வேண்டாம் மா. மதியம் வந்துடுவேன் மா.” என்றான் ரிஷி.

      “எதுக்குடா மதியம் வந்துடுவ?” என்று கேட்க பைக்கை ஸ்டார்ட் செய்ய போனவன் வேகமாக கையை அம்மா கழுத்தில் நெறிப்பது போல வந்து, “எனக்கு பொண்ணு பார்க்க போனோம் நினைவிருக்கா இல்லையா.

    மா இப்ப மட்டும் கல்யாணம் சொதப்பலாச்சு. நான் எவளையாவது இழுத்துட்டு வந்து கல்யாணம் பண்ணிப்பேன்.” என்று கதறுவதை கூட மிரட்டலாய் கூறினான் ரிஷிவேந்தன்.

       “ஏன்டா… நீ லவ் பண்ணின பொண்ணுக்கெல்லாம் கல்யாணமாகிடுச்சுனு சொன்ன?” என்று கண்ணபிரான் மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டு கேள்வி கேட்டு வந்தார்.

      “ப்பா… அது ரெக்கார்ட் நோட்ல இருந்த பொண்ணு. இது வேற தமிழ் புக்ல பெயர் எழுதி இருப்பேன்.” என்று கூறிவிட்டு கிளம்ப, “தமிழ் புக்குல ஏதோ இயல் தமிழ் இசைத்தமிழ் போட்டிருக்கானே அதுல யாராயா இருக்கும் டி?” என்று கண்ணபிரான் கேட்க தலையிலடித்தபடி சரண்யா “வந்ததும் சரியில்லை பெத்ததும் சரியில்லை” கிச்சன் பக்கம் சென்றார்.
  
    ரிஷிவேந்தன் தன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபடி தன் வருங்கால இல்லாளை கனவு கண்டான்.

      என்னோட இத்தனை வருட காதலை கொட்டப்போற இடம். இப்படி இருப்பாளா… அப்படி இருப்பாளா… சே சேரி கட்டினா ஆன்ட்டி மாதிரி இருக்கு. இந்த சுடிதார் தேவதை. ம்ஹகும்.. இந்த ஜெக்கின்ஸ் போட்டு டாப் போட்ட பொண்ணு மாதிரி இருந்தா ஓகே என்றவன் கனவு, அலுவலகம் வந்தப் பின்னும் தொடர்ந்தது.

   அதன் பின் பாதிக்கு மேல் வேலை செய்தாலும் நொடிக்கு ஒருமுறை கடிகாரத்தை கண்டு நேரத்தை கணக்கிட்டான்.

   அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நேரத்தை பார்த்தவனை அருகே இருக்கும் பெண் விநோதமாக பார்க்க, அசடு வழிந்து அமர்ந்தான்.

   மதியம் ஒரு மணிக்கு அலுவலக நண்பர்கள் சாப்பிட அழைக்க அவனோ மறுத்துவிட்டு லீவ் கூறிவிட்டு கிளம்பினான்.
 
       ஆசையாய் கனவோடு வந்ததும்,  வீட்டில் அக்கா தங்கை இருவரும் குடும்ப சகிதம் வந்திருந்தனர்.

     அக்கா கவிதா, மாமா குமார் அவர்களின் இரண்டு மகன் வருண் தேவ், வாசுதேவ் என்று டிவியில் படம் பார்க்க, தங்கை சரிகா கணவன் ஹரிஷோ வாங்க மச்சான் என்று வரவேற்றான். புதிதாக சரிகா ஹரிஸ் திருமணம் ஆனவர்கள் என்பதால் குழந்தை இல்லை.

     “வாங்க மாப்பிள்ளை வாங்க மாமா. அக்கா… எப்படியிருக்க? ஏய் சரிகா.. சமையல் எல்லாம் செய்யறியா. டேய் வாண்டு ஸ்கூல் லீவ் போட்டுடிங்களா டா” என்று கேட்க ஒவ்வொரு பதிலும் வர மகிழ்ச்சியாய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று ஓடினான்.

     கண்ணபிரான் மற்றும் சரண்யா எல்லாம் சாப்பிட்டு ரெடியாகலாம்.” என்று கூப்பிட இரு பேரன்களும் சாப்பிட வந்தனர்.

       காலையில் எடுத்த சபதம் மறந்து சாப்பிட கை வைக்க சென்றான் ரிஷி.
   
      வாசுவோ மாமா இது என்ன சட்டை… கட்டம் போட்டு. நல்லாவேயில்லை” என்று கூற மாற்ற போக சரண்யா முறைத்தார்.  ”காலையில ரூமுக்கு போனா சட்டை முழுக்க கட்டிலில் இருக்கு. மரியாதையா இதையே போட்டுட்டு வர்ற” என்றார்.
  
    அன்னை சொல் தட்டாத ரிஷியோ முகம் தூக்கி வைக்க, “மாமா பிளைய்ன் ஒய்ட் போடு. எப்பவும் மாஸா இருக்கும். ஆச்சி சொல்லறதை கேட்காதே. நீ நைஸா போய் மாத்திக்கோ” என்றான் வருண்தேவ். இக்கால பிள்ளை அல்லவா தாய் தந்தை பேச்சை கேட்காதே என்ற போதனையை  கூறினான்.

      ரிஷிக்கோ தாயின் மனமும் வதைக்காது, குழம்பை சட்டையில் ஊற்றிட, “ம்மா… சட்டையில குழம்பு நான் மாற்றிடறேன் மா” என்று காரணம் கூறி ஓடினான்.

     மடமடவென உடை மாற்றி பார்த்தான். சாப்பிடாவிட்டாலும் சின்ன தொப்பை தெரிந்தது.

    வருண் கூறியது போல வொயிட் நிற ஷர்ட் அணிந்தான். அதில் சிறு சிறு வேலைப்பாடு கொண்ட பூக்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் இருந்தது.
 
       ”நீ அழகன் டா” என்று கூறி பொண்ணு பார்க்க கிளம்பினான்.

    தன்னோடு சேர்த்து ஒன்பது பேர் வர இரண்டு ஓலோ கார் பிடித்து கிளம்பினார்கள்.

 -சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “90’s பையன் 2k பொண்ணு-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!