Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-4

90’s பையன் 2k பொண்ணு-4

ரி-ஷி-வா-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   காலையில் வேதாச்சலம் மகன் ராமமூர்த்தி முன் நின்றார்.

      “இங்க பாரு டா. பொண்ணு பார்க்க வர சொல்லறதுக்கு முன்ன என்னிடம்  பெரிய பேத்தி லவ் பண்ணறானு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவளிடம் பேசி பிறகு வரவழைச்சிருக்கலாம். நீயும் உன் பொண்டாட்டியும் பேசி முடிவெடுத்தா இப்படி தான்.

     இப்ப பாரு…

     ஏம்மா… சந்தியா.. நீயாவது ஒரு வார்த்தை தாத்தா நான் எதிர் வீட்டு பையனை விரும்பறேன்னு சொன்னியா?

   யாரோ ஒருத்தன் பொண்ணு பார்க்க வந்தவனிடம் காதலை சொல்லியிருக்க?” என்றதும், “தாத்தா… நான் அவரிடம் எதுவும் சொல்லலை. நான் அழுவறதை பார்த்து கேட்டார். அதுக்கு பிறகு தான் சொன்னேன். நானும் அழறதை மறைக்க போராடினேன். முடியலை” என்று கூறவும் மனோகரி வந்தார்.

     “இப்ப என்ன மூக்கு சிந்திட்டு இருக்க. ஹரிகரன் வீட்ல வந்து பேச சொல்லு” என்று மனோகரி கூறவும் வேதாச்சலமும் ராமமூர்த்தியும் திகைத்தனர்.
 
    “என்ன பார்க்கறிங்க ஊர் உலகத்துல இப்ப நடக்கலையா என்ன. ஏன்க உங்க தம்பியோட பேரன் யூஎஸ்ல ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.

     இதோ நம்ம மருமக ராஜியோட அண்ணன் பொண்ணு ஏதோ டாக்டரை கட்டிக்கிட்டானாமே. நம்ம பேத்தி காதலிச்சா கட்டி வைக்க என்ன.? பேசற ஊர்ல, நல்ல பையன் அதனால நாங்களே கட்டி வச்சிட்டோம்னு சொல்லுங்க. அதுவுமில்லாம இதோ பெரியார் போட்டோ தொங்குதே இதை வச்சிக்கிட்டு ஜாதி எப்படி பார்க்கறதுனு பிட்டு போடுங்க. பேசற வாய் தானா மூடும்.

    சிலருக்கு இறந்தாலும் மவுஸு தெரியும்ல.” என்று பேசிட, வேதாச்சலம் மவுனமாய் நின்றார்.

     “ம்மா… வெள்ளக்காரி கட்டினா பாரின்ல செட்டில், இங்க டாக்டர் மாப்பிள்ளை. இவன் என்ன இழவோ, இதோ இப்ப பார்த்தவன் இன்ஞினியர்” என்று பேச, “அப்பா… ஹரிகரன் சொந்தமா மொபைல் ஷோரூம் வச்சிருக்கார்.” என்று கூறவும், “அய்… அப்போ ப்ரீயா என் மொபைலுக்கு டெம்பர் கிளாஸ் போட்டு தருவாரா? அடிக்கடி ரீசார்ஜ்  பண்ணலாம்” என்று ஷிவாலி நேரங்காலமெல்லாம் இல்லாமல் கேட்டு வைத்தாள்.

      “ஷிவாலி… கிண்டல் பண்ணாதே. அவங்க அவங்களுக்கு காதலிச்சா தான் அதோட வலி புரியும். ஏன் உனக்கு பிடிச்சிருந்தா நீ பொண்ணு பார்க்க வந்தவரை கட்டிக்கோ” என்று சந்தியா கடுப்பில் மொழிந்தாள்.
 
     “இ….யாக்.. நோ வே. நீ கல்யாணம் பண்ணினா பண்ணு இல்லை போ. ஆமா ஹரிகரன் கடை எது…? அங்க போய் டெம்பர் கிளாஸ் இருக்கானு கேட்டுக்கறேன். காசு கொடுத்து தான் வாங்குவேன். நம்ம ஏரியாவுல எங்க தேடியும் இப்ப இல்லை இல்லைனு சொல்லறாங்க இடியட்ஸ்.” என்று அறைக்குள் சென்றாள் ஷிவாலி.

      மனோகரி ராமமூர்த்தியை அழைத்து வந்து, “ஏன்டா… இங்க வா. பேசாம அந்த ஹரிகரனுக்கு சந்தியாவை கட்டி கொடுத்துடு. நேத்து வந்த பையன் ரொம்ப நல்லவனா தெரியறான். அவனை நம்ம ஷிவாலிக்கு கட்டிக் கொடு.
 
     சந்தியா காதலுக்கு தடையே பின்னால இருக்கற பொண்ணு மாப்பிள்ளை அமையுமோ என்னவோனு தானே? இப்ப நேத்து வந்த பையன் ஷிவாலிக்கு புருஷனா வந்தா நம்ம சந்தியாவோட லவ்வை பத்தி மூச்சு விட மாட்டான். அவனே தானே காதலிக்கறவங்களை சேர்த்து வைக்க அட்வைஸ் பண்ணினான். சொந்தமாகிட்ட யாரு பேசுவா? கமுக்கமா இரண்டு கல்யாணத்தையும் முடிச்சிடு” என்று கூறினார்.

   வேதாச்சலமோ யோசனை செய்து சரியென்றுபட ராமமூர்த்தியை பார்த்தார். ராஜலட்சுமியும் ராமமூர்த்தி கையை பிடித்து, “சந்தியாவுக்கும் அவளுக்கு பிடிச்ச லைப் கிடைக்கும்.” என்பதாய் ஆமோதிக்க, ராமமூர்த்தி அரைமனதாய் தலையாட்டினார்.

    “ம்மா.. அப்படியேனா கூட அந்த தம்பி ஷிவாலியை கட்டிக்க ஒத்துக்கணும், அவங்க வீட்டு ஆட்கள் ஏற்றுக்கணும், நம்ம வீட்ல ஷிவாலி என்ன முடிவெடுப்பாளோ?” என்று கேட்டு வைத்தார்.

     “அதெல்லாம் சம்மதிக்க வைக்கறேன்” என்று மனோகரி அந்த விஷயத்தை தன்னிடம் விட்டு விட கூறிவிட்டார்.

     வேதாச்சலமும் ராமமூர்த்தியும் உடனடியாக, ரிஷி வீட்டிற்கு செல்ல முயன்றனர்.

   இன்று சனி கிழமை என்பதால் அரை நாள் வேலை. ஆனால் ரிஷி வீட்டில் தான் இருந்தான். அவனுக்கு இன்று போக பிடிக்காமல் தவிர்த்து விட்டு அக்கா பையனோடு கிரிக்கேட் விளையாடினான்.

      இங்கு வீட்டில் ஷிவானியிடம் பேச மனோகரி ஆயத்தமாக, ராமமூர்த்தி வேதாச்சலம் ரிஷியின் வீட்டு கதவை தட்டினார்கள்.

      கவிதா வந்து கதவை திறக்க, மெலிதாய் அதிர்ந்தாள்.

    “ம்மா… அப்பா..” என்று தாய் தந்தையை அழைத்து, “வாங்க அங்கிள்” என்று பொதுபடையாய் வந்தவர்களை அழைத்தாள்.

    சரண்யா சமையல் கட்டிலிருந்து எட்டி பார்க்க, கண்ணபிரான் கண்ணாடி அணிந்து தோளில் துண்டை போட்டு நடந்து வந்தார்.

      “உட்காருங்க உட்காருங்க. சரண்யா… காபி” என்றதும் “இதோ போடறேன்ங்க” என்று நுழைந்தார்.

     வேதாச்சலம் ராமமூர்த்தி சோபாவில் அமர்ந்தனர்.

     பேச தயக்கம் கொண்டு, “தம்பி இல்லைங்களா?” என்று ரிஷியை கேட்டனர்.

     அதற்கு கவிதா தூங்கி கொண்டிருந்த குமாரை எழுப்பி வந்தவரை பற்றி கூற முகமலம்பி மூத்த மருமகன் என்று அறையிலிருந்து வந்து சேர்ந்தான்.

    “அவன்… அவனோட அக்கா குழந்தைங்க வந்தாங்கனு கிரிக்கேட் விளையாட கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போனான்.
  கவிதா… கூட்டிட்டு வாமா” என்று கூறவும், கவிதா தலையாட்டி கிரவுண்ட் இருக்கும் திசையை நோக்கி அடியெடுத்தாள்.

    “தம்பி பேசியது நைட் முழுக்க மனசுல ஓடிட்டே இருந்தது. அதனால எங்க பெரிய பொண்ணை அவ விரும்பியவனுக்கே கட்டி தர அப்பா சொன்னார்.” என்று சரண்யா கொடுத்த காபியை பருகியபடி  ராமமூர்த்தி பேசினார்.
  
    குமாருக்கோ அதுக்கு எதுக்கு இங்க வந்திருக்காங்க. லவ் பண்ணின பையன் வீட்டை தேடி போக வேண்டியது தானே? என்று எண்ணினார்.

      “அப்படியா ரொம்ப சந்தோஷம். இப்ப எல்லாம் அந்த காலம் மாதிரி முறுக்கிட்டு வருஷக்கணக்கா பேசாம இருக்க முடியாது. நாம நம்ம குழந்தைங்க முடிவை மதிக்கறது தானே நமக்கு அழகு” என்று கண்ணபிரான் பேசினார்.

      “ஆமா தம்பி அதனால பெரியவளிடம் அவங்க வீட்டுக்கு போன் பண்ணி பொண்ணு பார்க்க வர சொல்லிட்டோம். ரிஷி தம்பியை…” என்றதும் ரிஷி வேர்த்து  டீஷர்ட் ஷார்ட்ஸ்  அணிந்தவனாய் வாசலில் நின்றான்.

     “தம்பியே வந்துடுச்சு… எங்களுக்கு ரிஷி தம்பியையும் பிடிச்சி போச்சு.” என்று வேதாச்சலம் கூற, குமாரோ அடேய் என்னடா சொல்ல வர்றிங்க? என்று மனதிலேயே கவுண்டர் கொடுத்தார்.

    “தம்பியோட குணமும் பக்குவமும், நிதானம், அவர் பேசிய பேச்சு எல்லாம் பிடிச்சது. அவரை எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைக்க தோனுதே தவிர விட முடியலை. அதனால…” என்று தயங்கினார் அந்த பெரியவர்.

    ‘அடங்கொய்யால என்னை என்ன டா பண்ண போறிங்க?’ என்று ரிஷி இம்முறை மனதில் புலம்பினான்.

     “எனக்கு ஷிவாலினு ரெண்டாவது பொண்ணு இருக்கா. நீங்க பார்த்திங்களானு தெரியலை. அவ காலேஜ் பரீட்சை எல்லாம் முடிச்சிட்டு இப்பதான் கொடைக்கானல்ல இருந்து அன்னைக்கு தான் வந்தா.

    உங்களுக்கு விருப்பம் இருந்தா என் இரண்டாவது மகளுக்கு கட்டிக்க சம்மதமா?” என்று கேட்டு விட்டார் ராமமூர்த்தி.

      ரிஷியோ அன்னை தந்தையை கண்டு விழித்தான்.

     கண்ணபிரானோ மனைவி சரண்யாவை பார்க்க, சரண்யாவோ மகன் ரிஷியை பார்த்து, கண்ணபிரானிடம் பார்வையாலே சம்மதமாய் தலையாட்டினார்.
  
   சரண்யா மகனின் வயதையும், திருமணம் ஆகட்டும் என்ற நோக்கில் கூறினார். ரிஷியோ என்ன பேசறாங்க என்று புரியாமல் விழித்தான்.

      “என்னங்க நீங்க..  தானா வந்து மறுபடியும் பேசறிங்க. அதுவும் என் மகனோட குணத்தை உசத்தி பேசி, மறுக்க முடியுமா? ஆனா ஒரு வார்த்தை உங்க இரண்டாவது பொண்ணிடமும் தெளிவா கேட்டுக்குங்க. ஏன்னா.. திரும்ப ஏதாவதுனா பாதிக்கப்படுவது என் பையன் இல்லையா. உங்க வீட்ல அந்த பிள்ளை பெயர் என்ன?” என்று கண்ணபிரான் கேட்க, ராமமூர்த்தியோ “ஷிவாலி” என்றதும் “ஆங்.. ஷிவாலிகிட்ட கேட்டு சம்மதம்னா எங்களுக்கு முழு சம்மதம். அடுத்த விஷயத்தை பேசலாம்” என்று கூறினார்.

      “சரிங்க மற்ற விவரத்தை போன்ல பேசறேன்” என்று நம்பரை பகிர்ந்து கொண்டனர்.

    ரிஷியிடம் வணக்கம் வைத்து செல்ல, குடும்பம் மொத்தமாய் வாசல் வரை வழியனுப்பினார்கள்.

    இங்கு மனோகரியிடம் ஷிவாலியோ, “வாட் நான்சென்ஸ் மனோ… இந்த அப்பா தாத்தா இதுக்கு தான் போனாங்களா..  முதல்லயே சொல்லி தொலைக்க என்ன? இவ லவ்வுக்கு ஓகேனா அவளை ஹரிகரனோட கல்யாணம் பண்ணி பேக் பண்ணுங்க. நான் எதுக்கு நடுவுல. என்னை ஏன் அந்த ரிஷியோட கோர்த்து விடறிங்க.

   பாட்டி முதல்ல அப்பா தாத்தாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லுங்க.” என்று தலைவிரிக் கோலமாக ருத்ர தாண்டவம் ஆடினாள் ஷிவாலி.

-சட்னி சாஸ் அலப்பறைகள் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “90’s பையன் 2k பொண்ணு-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!