Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1

அத்தியாயம்-1

   ரிஷி காட்டிய காணொளியிலிருந்து கண்ணெடுக்காமல் பைரவி பேச்சற்று நின்றார். அதில் ஒரு பெண் குழந்தை அழகாக வெஸ்டர் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். அவளை கண்டு கண்ணீர் உடைப்பெடுத்தது.

  பைரவி தன்னை சுதாரிக்கவே சில நொடி தேவைப்பட, “அம்மா” என்று ரிஷி தீண்டவும், உணர்வு பெற்றவராய், “இந்த வீடியோ எப்படிடா கிடைச்சது?” என்று பைரவி கேட்டார்.

   “என் பிரெண்ட்டோட அண்ணன் பொண்ணும், இதே ஸ்கூல் அம்மா. கே.ஜி கான்வெக்கேஷன் செலிபிரேட் பங்ஷனாம்மா. அதை காட்டினப்ப இந்த வீடியோ கண்ணுலப்பட்டுச்சு. குழந்தை டான்ஸ் ஆடியது ரொம்ப அழகாயிருந்தது. அதோட டான்ஸ் ஆடி முடிச்சி, நம்ம துர்கா அண்ணி அங்க இருப்பதை பார்த்தேன். அதுல அந்த குழந்தை அவங்களை கட்டிப்பிடிச்சி அம்மானு சொல்லுறதை பார்த்ததும், நேரா இங்க வந்துட்டேன். அண்ணா… அண்ணா இல்லையாம்மா?” என்று கேட்டான்.

  “துர்காவே தான் டா. உயிரோட இருக்கா. அதோட.. குழந்தை… இந்த குழந்தை… துர்கா உயிரோட இருந்தா குழந்தையும் உயிரோட தான இருக்கும். பாரு… அவயிங்கயிருந்து போனப்ப, நிறமாசமா இருந்தாளேடா. இது நம்ம இஷானோட குழந்தை தான்‌. உங்கண்ணா இஷானோட குழந்தை. கடவுள் கண் திறந்துட்டார்டா. முதல்ல உங்கண்ணாவுக்கு போன் பண்ணு” என்று உந்தினார்.

இவ்வீட்டில் பைரவியின் கணவர் சோமசுந்தர் இயற்கை மரணத்தில் இறந்துவிட்டார்.  சோமசுந்தர்-பைரவிக்கு மூன்று பிள்ளைகள். அதில் இஷான் மூத்தவன், ரிஷி இரண்டாவது, பிரதன்யா கடைக்குட்டி.

இஷான் நம் கதையின் நாயகன்.
தந்தை இறப்புக்கு பின் பொறுப்புகளை தானே தன் தலையில் போட்டுக்கொண்டு வீட்டை நல்வழிபடுத்துபவன்.

ரிஷி கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான்.‌
 
பிரதன்யா பி.காம் தேர்ட் இயர் படிக்கின்றாள்.

   ரிஷி காட்டிய காணொளியில், இஷான் இறந்துவிட்டதாக நினைத்த அவன் மனைவி  துர்கா. அதோடு இஷானின் குழந்தை தான் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடியது.
  இஷானுக்கு நடனமாடுவதில் தனி அலாதி. அந்த விருப்பம் அவள் மகளுக்கும் இந்த வயதில் இருந்திருக்கும் போல, துர்கா அதை வழிநடத்தி கே.ஜி கான்வெக்கேஷன் விழாவில் ஆட ஊக்குவித்திருக்கின்றாள்.

  அந்த காணொளி தான் இப்பொழுது பைரவியின் ஆனந்த கண்ணீருக்கு காரணம்.

“போன் போட்டா இஷான் கவனிப்பானா? இந்த வீடியோவை அவனுக்கு அனுப்பு. இல்லை வீடியோ எல்லாம் பொறுமையா பார்க்க மாட்டான். துர்காவையும் அந்த குழந்தையையும் போட்டோ மாதிரி எடுத்து அவனுக்கு அனுப்பு. அடுத்த நிமிஷம் இங்க நிற்பான் பாரு” என்று நிகழப்போவதை கூறினார்.

  ரிஷியும் அதே போல அந்த வீடியோவிலிருந்து துர்காவையும், அந்த குழந்தையையும் மட்டும் போட்டோவாக மாற்றி எடுத்து, இஷானின் எண்ணிற்கு அனுப்பியிருந்தான். கூடவே “துர்கா அண்ணி உயிரோட இருக்காங்க அண்ணா” என்று அனுப்பியிருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் இஷானிடமிருந்து அழைப்பு வந்தது.

  “ரிஷி… இந்த போட்டோ எங்க கிடைச்சது?” என்று பதட்டமாய் கேட்க, “என் பிரெண்ட் அனுப்பிய வீடியோ அண்ணா” என்று கூறவும், “நான் அங்க தான் வர்றேன். உன் பிரெண்டை அங்க வரச்சொல்லு” என்று அழைப்பை துண்டித்தான். அசுர வேகமெடுத்து, தனது காரை தானே ஓட்டி வந்தான். இஷான் கார் சாவியை எடுத்து பாய்ந்த விதத்தில், அவனுடன் பணிபுரிந்தவர்களை மறந்து பேயாய் பறந்தான்.

  பைரவி உரைத்தது போல கார் கீறிச்சிட்டு அரைமணி நேரத்தில் வாசலில் இஷான் வந்திறங்கினான்.‌

  பைரவி ஆனந்த கண்ணீரை வடித்தவராய், “இஷான்… துர்காடா.. உன்னோட துர்கா. உயிரோட தான் இருக்கா. பக்கத்தில் உன்னோட குழந்தை.” என்று வீடியோவைக் காட்டினார்.‌

  தன் போனில் புகைப்படமாக கண்டவன், அன்னை காட்டிய காணொளியில் விரிவாய் கண்டான். அதிலும் அந்த சுட்டிப்பெண் வளைவு நெளிவோடு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடவும், தொண்டையில் நெருஞ்சிமுள்ளாக எச்சியை விழுங்கினான்.‌

  அன்னையிடம் “என் பொண்ணும்மா” என்று அவன் நெஞ்சை தொட்டு கூறினான்.

  முழுகாணொளியும் எத்தனை முறை பார்த்தானோ, பைரவி தடுக்கவில்லை. எத்தனை வருடமாக மனைவி குழந்தை இறந்துவிட்டதாக எண்ணினான்.

   நிமிடங்கள் நேரமாய் கரைய, “இந்த வீடியோ எப்படி கிடைச்சது? துர்கா எங்க இருக்கா? இந்த ஸ்கூல் எங்கயிருக்கு?” என்றான் கற்பாறையாய்.

இத்தனை மணி நேரம் இறந்து போனவள் உயிரோடு இருப்பதாக அறிந்ததும் வந்த சந்தோஷம். ஆனால் அடுத்த நொடியே என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டாளே! அந்த அளவுக்கா தன்னிடம் வீம்பு. கடைசியாக இஷான் துர்கா போட்ட சண்டை சில்லரை சண்டையாயிற்றே. தங்கள் திருமணத்தை ஏற்காத அவளது அப்பா அம்மாவை பார்க்க, அந்த பூசணிக்காய் வயிற்றை வைத்து செல்வதாக வீம்பு பிடித்தாள். அதற்கு இஷான் போக கூடாது என்று கூறியது. அப்படி போனால், அப்படியே போயிடு’ என்றான். 
  அந்த உப்பு சப்பில்லாத காரணத்திற்கு, தன்னிடம் தன் குழந்தையை பற்றி கூறாமல் ஒளிந்து கொண்டாள் என்ற ரௌத்திரம்.

  இஷான்-துர்கா இருவரும் காதலித்து வந்தனர். துர்கா வீட்டில் காதலிப்பது அறிந்து பிரச்சனை செய்து வீட்டில் பூட்டி வைத்திட, இஷான் யாருக்கும் தெரிவிக்காமல் துர்காவை பதிவு திருமணம் செய்து கொண்டான்.
  அந்த கோபத்தில் அவள் வீட்டில் இவர்களை சேர்க்கவில்லை.
  கருவுற்று ஏழாம் மாதம் வளைகாப்பு எல்லாம் இஷான் வீட்டில் நடந்தேறியது. தன் தாய் தந்தை வராமல் போனால் என்ன? நான் அவர்களை இந்த நிலையில் சந்தித்தால் என்னை ஏற்பார்கள் என்று கூற, இஷானுக்கும் அவளுக்கும் கொஞ்சம் பெரிய சண்டை நிகழ்ந்தது.
  எவ்வளவோ கூறியும் இஷானிடம் கோபித்துக் கொண்டு சென்றாள்‌. அங்கு சென்ற ஒரு வாரத்தில் இஷான் அவளிடம் தொடர்பு கொள்ளவில்லை. அதற்குபின் அவ்வூரில் நடந்த பேய் மழை, வெள்ளத்தில் வீடு இடிந்து துர்கா குடும்பம் இறந்ததாக செய்தியே காலம் கடந்து அவனுக்கு கிடைத்தது. அதுவரை இஷான் ஏதோ அவளை அவ்வீட்டில் சேர்த்துக் கொண்டதால் தங்கியுள்ளாள் என்று நினைத்தான். அங்கு சென்ற இரண்டாம் நாளிலேயே இந்த அபத்தம் நிகழ்ந்து துர்கா இறந்ததை காலம் கடந்து தான் அவனே அறிந்தது.

  இன்று துர்காவும் அவன் குழந்தையும் உயிரோடு இருக்க, இத்தனை வருடமாக இஷான் அனுபவித்த வலிகள் அவனை அரக்கனாய் மாற்றியது.
 
   கர்ப்ப காலத்தில் திருமணத்தை ஏற்காத பெற்றவர்களை காண போவதாக தனியாக சென்றவளை, ‘போறதா இருந்தா அப்படியே போடி” என்று வார்த்தை கூறியதை எந்த முட்டாள் பெண்ணாவது பிடித்துக்கொண்டு திரும்பி வராமல் இருப்பாளா?
 
  இஷான் இத்தனை வருடமாய் கட்டிய மனைவியும், தன் உதிரத்தில் உதித்த குழந்தையையும் இறந்ததாக எப்படியெல்லாம் துடித்தான்.‌

   அந்த கோபம் எல்லாம் இஷானுள் அரக்கனை உருவாக்கியதே! யாரிடமும் பேசாமல், உயிர் வாழ பிடிப்பின்றி, எப்பொழுது எழுந்தோம், எப்பொழுது உறங்கினோம், எப்பொழுது சாப்பிட்டோம் என்று கூட யோசிக்காமல் அல்லும் பகலும் வேலையில் மூழ்கி, அவன் வேதனையை களைய முற்பட்டான்.

  இமைமூடி நடந்தவையை மறந்து, “உன் பிரெண்ட் எங்க? இது எந்த ஊர். எந்த ஸ்கூல்?” என்று விவரம் கேட்க, “அண்ணா.. என் பிரெண்ட்டோட அண்ணன் குழந்தையும் இதே ஸ்கூல்ல தான் படிக்கறாங்க. அதனால் அந்த வீடியோவை பார்க்கறப்ப இது சிக்கியது.” என்றான் ரிஷி.‌

    ரிஷி கல்லூரியில் இளங்கலையில் படிக்க அடியெடுத்த பொழுது இஷானுக்கு இச்சம்பவம் நிகழ, இஷான் வீட்டையே மறந்தான். தம்பியை தோழனாக பழகிய இஷானின் குணம் முற்றிலும் மாறி, என்றாவது தம்பியை பார்த்து எவ்வித உணர்வையும் காட்டாமல் சென்றதால் அண்ணனே அந்நியமாக, அவரை கண்டு பயந்து நின்றான்.

  “ஓகே… அந்த பிரெண்டை வரசொல்லு.” என்று கூற ரிஷியோ அன்னையை பார்த்து தயங்கி விழித்தான்.

  இஷானோ, பிரெண்ட் பையனா பொண்ணா?” என்று கேட்க, ரிஷி தலைகவிழ்ந்தான்.

பைரவி ரிஷியை கல்லூரியில் சேர்க்கும் பொழுதே. “இந்த காதல் கத்திரிக்காய் காரணமாக தான் உன் அண்ணா இப்ப தலைகீழா மாறியிருக்கான். அதனால் படிக்க காலேஜ் சேர்த்திருக்கு. படிக்கற வழியை மட்டும் பாரு” என்று கண்டித்து கல்லூரியில் சேர்த்திருந்தார்.
 
   அதனால் இப்பொழுது காதல், பெண் சிநேகிதம் என்றால் அன்னை தன்னை துவைத்தெடுப்பரென அஞ்சினான். அதோடு பைரவியோ ‘உன் அண்ணா வீட்ல சாப்பிட்டே பல வருஷமாகுது. அவன் இரவு பகலும் பாராம வேலையில் முழ்கியிருப்பது உங்களுக்காக தான். தயவு செய்து எந்த அபத்தமான விஷயத்தையும் வீட்டில் கொண்டு வராதிங்க. புரிந்ததா?!” என்று அறிவுறுத்தியிருக்க, அன்னையை ஏறிட அஞ்சினான்.

  இஷானோ, அவன் வயதை தாண்டி வந்ததால் புரிந்துக் கொண்டவனாக, “அந்த பொண்ணை உடனடியா இங்க வரச்சொல்லு” என்று கூறிவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து, அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஓடவிட்டான்.‌

   அன்னையை பார்வையிட்டபடி தனியாக வந்து, “அஞ்சனா… அந்த வீடியோ வீட்ல காட்டினேன். சில விவரம் வேண்டும்னு அண்ணா உன்னை வீட்டுக்கு வரச்சொல்லறார். உடனே வா” என்றான்.

  “என்ன விளையாடறியா? காலேஜ் முடிந்த நேரத்துலயிருந்து சரியா வீட்டுக்கு போற, அதே நேரத்துக்கு நான் வீட்டுக்கு போகணும். இல்லை எங்கப்பா உப்புகண்டம் போட்டுடுவார். நான் வரலை” என்றாள். நிசப்தமான இடத்தில் அஞ்சனா குரல் கேட்க, பைரவியோ “நேரத்தை கடத்தாம வரச்சொல்லு.” என்றார்.

  “அஞ்சனா… அம்மா பேசியது கேட்டதா? உடனே வா. ஏதாவதுன்னா அப்பறம் பார்த்துக்கலாம்.” என்றதும் அஞ்சனா கேப்-புக் செய்து ரிஷி வீட்டுக்கு வந்தாள்.

  ஒரிரு முறை ரிஷி இந்த பக்கம் வீடு என்று சுட்டிக்காட்டிட, கவனித்திருந்தாள்.

  கார் வாசலில் விடவும் பணத்தை தந்து இறங்கினாள் அஞ்சனா.

  கல்லூரி பையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, தயங்கியபடி நடந்தாள்.

பைரவியோ, “இஷான்.. அந்த பொண்ணு வந்துட்டா” என்று தோளை தீண்ட, மகளின் ஆட்டத்தை கண்டுகளித்தவன், அவனை போலவே கண்சிமிட்டிய குழந்தையை கண்டு பூரித்தவன் போனுக்கு முத்தம் வைத்து, திரும்பினான்.

   அஞ்சனா ரிஷி அருகே வர, “துர்காவை எங்க பார்த்த? இது எந்த ஸ்கூல்?” என்று விவரம் கேட்டதும், அஞ்சனா ரிஷியை பார்த்து, பைரவியை கண்டு, இஷானிடம் பேச, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “என் அண்ணா பையன் கிஷோரோட கே.ஜி கான்வெகேஷன் பங்ஷன் சார். கேரளாவுக்கு போனேன் அங்க தான் இந்தக்கா இருக்காங்க. கிஷோரோட பிரெண்ட் அமுல்யா. அவ டான்ஸ் ஆடுவதை அவன் தான் வீடியோ எடுங்க அத்தைன்னு சொன்னான். அப்ப எடுத்தேன் சார். இவங்க தான் துர்கா அக்கானு தெரியாது. ரிஷி பிரப்போஸ் பண்ணினப்ப இவங்க இறந்துட்டதா சொன்னான். அவங்க தான் இவங்கன்னு தெரிந்திருந்தா அன்னைக்கே சொல்லியிருப்பேன்.” என்றாள்‌.

  ”அமுல்யா.. . அமுலு’ என்று தனக்குள் சொல்லி “கேரளாவா?” என்று கேட்டான் இஷான்.

“ஆமா சார்… அண்ணா கேரளாவுல இருக்கார். நான் ரீசண்டா லீவுக்கு போனப்ப இந்த ஸ்கூல் பங்ஷன் நடந்து ஒருவாரம் ஆகியிருக்கும்.” என்றாள்.

  இஷானோ பள்ளியின் விவரம் கேட்டு குறித்துக்கொண்டான்.‌

  “தேங்க்ஸ்.. உன் அண்ணாவிடம் இதை பத்தி பேச வேண்டாம். நான் பார்த்துக்கறேன். நீ போ. ரிஷி… பைக்ல வீட்ல போய் விட்டுட்டு வா.” என்றான்.

  ரிஷி பைரவியை காண, “அம்மாவிடம் நான் பேசிக்கறேன். நீ உன் லவ்வரை விட்டுட்டு வா” என்று ஆணையிட்டான் இஷான். ரிஷிக்கு வாயெல்லாம் பல்லாக “ஓகே அண்ணா” என்று ஓடினான்‌.

    பைரவியோ அஞ்சனாவை ஏறயிறங்க பார்வையிட, “வர்றேன் ஆன்ட்டி” என்று நழுவினாள் அஞ்சனா.‌

   “என்னை அவமதிச்சு ஏத்துக்காத வீட்டுக்கு போகாதனு சண்டை. அப்படி போறதா இருந்தா ஒரேடியா போன்னு திட்டினேன். ஆப்ட்ரால் இந்த ரீஸனுக்காக குழந்தை பிறந்ததை என்னிடம் சொல்லாம மறைச்சிட்டு அவளா தனியா வாழறாளாம்மா? நான் இத்தனை நாளா மனைவியும் குழந்தையும் இறந்துட்டதா இல்லை நினைச்சிட்டு பைத்தியக்காரனா இருக்கேன். இல்லைம்மா… முட்டாள்தனமா காதலிச்சா இப்படி தான். அவளுக்கு நான் வேண்டாம்னா, எனக்கும் அவ வேண்டாம். ஆனா என் குழந்தை எனக்கு வேணும்” என்று முடுவெடுத்தவனாக தன் அறைக்கு வந்து கேரளா சென்று மகளை அள்ளிக்கொள்ள வேண்டி ஆயத்தமானான் இஷான்.
 
பைரவியோ எதுவும் சொல்லயியலாமல் கையை பிசைந்து மகனின் விடியல் எத்திசையோ அவ்விடம் மலரட்டுமென காலம் கடந்து நினைத்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


ஹாய் புதுக்கதை எப்பவும் போல உங்க ஆதரவு தாங்க. எல்லாரும் கமெண்ட்ஸ் பண்ணினா எனக்கு உற்சாகமா இருக்கும்.

அடுத்து ஒரு சந்தோஷமான விஷயம் இன்று இரவுக்குள் பகிர்வதற்கு வருவேன்.





11 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    அடப்பாவி..! பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்குப் போனால், “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு” அப்படியே தலை முழுகிட வேண்டியது தானா..? பின்னாடியே துரத்திட்டுப் போய் கையில காலுல விழுந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்திருக்கணுமா இல்லையா ? அட்லீஸ்ட் போனாவது பண்ணியிருக்கணும் தானே..? அப்ப தப்பு யார் மேல ?
    இவன் மேல தானே..?
    அதான் தான் பெத்த பிள்ளையை கூட ஒழிச்சு வைச்சுக்கிட்டு
    அப்ஸ்காண்ட் ஆகிட்டாப்ல.
    வாட் எ பிட் டி ? வாட் எ பிட் டி ?

    ஆனாலும் இந்த ரிஷி,
    “என்னோட லைலா..
    வராளே மெயிலா..
    சிக்னலே கிடைக்கலை, கிடைக்கலை…
    நெஞ்சுல கூலா, ஊத்துது கோலா
    தாகமே அடங்கலை,
    அடங்கலைன்னு..”

    அஞ்சனா இழுத்து விட்டு சைக்கிள் கேப்ல சிந்து பாடிட்டான் பாருங்களேன்.

    போச்சு போ, அப்போது துர்கா ஒரு முடிவெடுத்து அவ இஷ்டத்துக்கு வாழ்ந்திட்டாள், இப்ப இந்த இஷான் ஒரு முடிவெடுத்து இவன் இஷ்டத்துக்கு மகளை மட்டும் கூட்டிட்டு வரப் போறானாக்கும்..
    ரொம்பவே கஷ்டம் தான் குழந்தை அமுல்யாவுக்கு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    PUTHU KATHAI ETHIR PAKALA UNGA STYLE EOVUME DIFFERENT AH IRUKUM SISY ATHE MARI INTHA DIFFERNET AH NALLA KONDU POVINGA NAMBIKAI IRUKU . RELAXATION IRUKUM UNGA STORY PADIKIRAPO . THANK U SO MUCH

  3. ஆரம்பமே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். .. இஷான் துர்கா தரப்பை கேக்காம இவனே முடிவு எடுக்கறான்… இவனோட அம்மா ஏதோ பண்ணிருக்காங்க அதான் துர்கா திரும்பி வரல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!