ஆலி-19
சைதன்யன் கடினமாகக் காரோட்டி கொண்டிருக்க, அகமேந்தி பேசாதிருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் சைதன்யன் ஹாலில் அதே கடினத்தோடு சோபாவில் அமர்ந்து நெற்றியை கீறி நிமிர்ந்தான்.
“எதுக்கு அவனைக் காரில் ஏறச்சொன்ன? அவங்களோட என்ன பேச்சு? அவன் வீட்டுக்கு எப்படி உள்ள போன?” என்று கத்தவும் அகமேந்தி கையைக் கட்டி குறுகுறுவெனப் பார்த்தாள்.
“தன்யன் நான் டிராப் பண்ண தான் கேட்டேன். நீ தான் தம்பி வீட்டுக்கு கூப்பிட்டானு போனது.” என்று அவனருகே அமர்ந்தாள்.
“யாருக்கு தம்பி எனக்குத் தம்பினு யாருமில்லை. நான் எங்கம்மாவுக்கு ஒரே பையன். நான் ஒன்றும் அவன் வீட்டுக்கு போகலை. அவன் தான் இழுத்தான்.” என்று சைதன்யன் குழந்தை போலக் காரணம் கூறி அவன் பாட்டிற்கு அறைக்குச் சென்றான்.
அகமேந்தி பின்னாலே வந்து இடையில் கைவைத்து, தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் அதன் பின்னே மெத்தையை இங்கே ஒன்றாகப் போட்டதை எண்ணி, “சாரி… இரண்டு நிமிஷம் கட்டிலை பழையபடி அந்த ரூம்ல வைச்சிடறேன்.” என்று நகர்த்த முனைந்தான்.
“க்ரஷ்… நான் அதைப் பற்றி எதுவுமே கேட்கலை.” என்றவள் அவன் கன்னம் தாங்கி அவனருகே அமர்ந்தாள்.
“நீ ஏன் டல்லா இருக்க? உனக்கு ருத்ரேஷ் பற்றித் தெரியும் தானே? அவனோட ஹெல்த்…?” என்று கேட்கவும் சைதன்யன் கோபமாக அங்கிருந்த ஜாடியை உடைத்தான்.
“எனக்கு ப்ரியங்கா தருணேஷ் மட்டும் தான் தெரியும். ருத்ரேஷ் பற்றி எதுவும் தெரியாது.
டென்த் படிக்கிற வயசுல ஒரு தம்பி நான்… த..தருணேஷுக்கு எதிர்பார்க்கலை.” என்றான்.
“தெரிஞ்சிருந்தா என்ன செய்து இருப்ப?” என்று கேட்டு அகமேந்தி அவனைக் கண் எடுக்காமல் பார்க்க, சைதன்யன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து நிலைக்கொள்ளாமல் தவித்தது.
“க்ரஷ்… க்ரஷ்… மனசில இப்ப என்ன தோன்றுது. அதை மட்டும் சொல்லு.” என்று தலைக்கோதி கேட்கவும் அவளைக் கட்டிக்கொண்டு தன்னை மறைக்க முயன்று தோற்றான்.
“க்ரஷ் என்னாச்சு… மனசில அவங்களை பிடிக்கலைனா கூடச் சொல்லிடு. நாம மனிதர்கள் தான் விருப்பு வெறுப்பு இருப்பது சகஜம்” என்று ஆற்றுமைப்படுத்தினாள்.
“இல்லை ஸ்வீட்ஹார்ட்… அவங்க பணம் பணம்னு கேட்டப்ப எனக்கு இரிடேட்டா இருந்தது. எப்படி ஒரு பணப்பேயை, அம்மா இருக்கும் பொழுதே அப்பா திருமணம் செய்தாங்கனு நினைச்சி எரிச்சலா இருக்கும்.
தருணேஷ் என் முன்ன வீம்புக்கு போட்டி போடும் போது அத்தனை கோபம் வரும்.
அவனுக்குப் பதிலடி வரணும்னு தான் என்னோட செய்கை அமையும்.
பட் ருத்ரேஷை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. எப்படி அதைச் சொல்றதுனு தெரியலை. அவங்க சொன்னதைக் காது கொடுத்து கேட்டிருக்கலாமோ நான் தான் தப்போனு வலிக்குது.” என்று அழற்சியில் உழன்றான்.
“சரி… அப்போ தெரியலை. இப்ப தெரிந்துயிருக்கு என்ன பண்ண போற.?” என்று கேட்டதும்
“என்ன பண்ணணும்… அவனுக்குக் கூடப் பிறந்த அண்ணன் இருக்கான். சொத்து முழுக்க அவன் பெயர்ல இருக்கு. அவனே ஏதாவது செய்வான். நான் யார் செய்ய?” என்று சட்டையைக் கழட்டி குளியலறைக்குப் புகுந்தான்.
“க்ரஷ்… என்ன பேச்சு இது?” என்றவள் கூடவே வரவும் “நீ வெளியே போ நான் சில்லாகணும்.” என்று ஷவரை திறந்திட, நீரானது அவன் மேனியை நனைத்திட அகமேந்தி அவன் முன் வந்து நின்று, “எதுவும் செய்யாம வேடிக்கை பார்க்க போற, தருணேஷ் மாதிரி அப்படித் தானே?” என்று கேட்க, அகமேந்தி மீதும் நீரானது வழிய துவங்கியது.
அவள் பேசியதை காதில் கேளாது தன் முகத்தை நீரில் காட்டி அமைதிப்படுத்த முயன்றான். கூடவே அகமேந்தி நனைந்தவள் அவன் பதிலளிக்காததைக் கண்டு விறுவிறுவென வெளியேறினாள்.
முன்பிருந்த அறையில் ஈர உடையை மாற்றி நைட்டி அணிந்து வெளியேற அதற்குள் சைதன்யனும் தன் ஈர உடையை மாற்றி ஷார்ட்ஸுகு மாறியிருந்தான்.
அகமேந்தி அவனிடம் பேசாமல் அங்கிருந்த மெத்தையிலே முதுகு காட்டிப்படுத்துக் கொண்டாள்.
சைதன்யனும் அவ்வாறே படுத்துக் கொண்டான்.
இருவரும் நெடுநேரம் அமைதியாக இருந்தனரே தவிர உறங்கவில்லை. பிறகு சைதன்யன் எழுந்து பாடலை இசைக்கவிட்டு ஓசையை மிதமாக வைத்தான்.
அதுவோ அரைமணிநேரத்தில் தானாக அணைந்திடும் என்பதால் இருகையையும் தலைக்குக் கொடுத்து இமை மூடினான்.
ஒரளவு அகமேந்தி உறங்குவதைக் கண்டதும் போனில் குகூளில் டாப் நம்பர் இதயமருத்துவரின் பெயர் வரிசையை நோட்டமிட்டான்.
அகமேந்தி தூங்குவதாக நடித்தவள் அரைக் கண்ணைத் திறந்து பார்க்க சைதன்யன் செயலில் நிம்மதி அடைந்து நிஜமாகவே உறங்கினாள்.
அடுத்த நாள் அதிகாலை எழுந்தவன் அகமேந்தி அருகே இல்லாமல் போக எழுந்து தன் காலை பணியெல்லாம் முடித்துக் கிச்சன் வர அவளோ அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள்.
“காலையிலேயே அப்பளம் எதுக்கு?”
“வத்தக்குழம்பு செய்திருக்கேன், அதுக்குச் சைட்டிஷ் அப்பளம்.” என்றவள் மேடையைச் சுத்தமிட்டு முடித்தாள்.
“நான் தான் வீட்ல இருக்கேனே… மதியம் பொறுமையா செய்து உனக்கு அனுப்புவேன்” என்று சொன்னதும்
“அப்போ அந்த ஹாஸ்பிடலுக்குப் போகலையா… வெறும் இன்பர்மெஷன் தரப்போறியா?” என்றதும் சைதன்யன் காபி கப்பை கீழே வைத்து அறைக்குள் அடைந்தான்.
அகமேந்தி சிறிது நேரம் கழித்து வந்தவள்.
சைதன்யன் யோசனையோடு அமர்ந்திருக்க, “என்னடா யோசனை… அவங்களுக்காக நீ போகணுமா வேண்டாமானா? க்ரஷ்… மாமா இருந்திருந்தா அவர் என்ன செய்திருப்பார். இத்தனை நாள் கைக்கட்டி வேடிக்கை பார்த்திருப்பாரா? மாட்டார்… ஏதாவது முயற்சி பண்ணியிருப்பார். இப்ப நீ அவருக்கு அடுத்த இடத்தில இருக்க, என்னதான் தருணேஷ் அவங்க பையன் என்றாலும் உன் அளவு உலகம் தெரியாம தான் இருக்கான்.
நீயே மாமாவுக்கு இரண்டாம் மனைவி இருப்பதை ஏற்க முடியாம தவிச்சே, அவன் இரண்டாம் மனைவியோட பையன் அவனுக்கு என்ன தோன்றுமோ. ஒரே நாளில் அடிமட்டத்தில் சென்ற வலியிருக்கும். எதையும் யோசிக்க முடியாது.
அதுவும் இல்லாம அவனையே அவனால பார்த்துக்கத் தெரியலை. நீ இப்போ வழிநடத்தி ருத்ரேஷுக்கு உன்னால முடிஞ்சதை செய்யலாம். தப்பில்லையே…” என்று புரியவைக்க முயன்றாள்.
“நான் டாக்டரிடம் பேசிட்டேன். அவனைச் செக்கப் வர சொல்லிட்டாங்க. அவனோட மெடிக்கல் பைல் கேட்டுயிருக்காங்க. அவனிடம் கேட்டு எனக்கு அனுப்பு.” என்று குளிக்கச் சென்றான்.
இவனா போய்ப் பேசமாட்டானா… என்று ருத்ரேஷுக்கு கால் செய்து ப்ரியங்காவிடம் பேசி அனுப்ப கூறினாள்.
ப்ரியங்காவும் அனுப்பி விட்டு “பெரியவன் கோபத்தில் இருந்தா எதையும் போஸ் பண்ண வேண்டாம்.” என்று தன்மையாகவே கூறவும்
“அதெல்லாம் உங்க பெரியவன் தான் கேட்டார்.” என்று அணைத்துவிட்டாள்.
சில நொடியில் அந்த மருத்துவப் பைல் வந்து சேரவும், அதை க்ரஷிற்கு அனுப்பினாள்.
அவன் மருத்துவருக்கு அனுப்பி முடித்து, போனில் கேட்கவும் முடிந்தா பையனை சின்னதா ஒரு செக்கப் பண்ணிட்டா விரைவா என்ன பதிலென்று தெரியும் சைதன்யன் என்று மருத்துவர் கூறவும் ருத்ரேஷை எப்படி அழைக்க என்பதாய் தவித்தான்.
அவன் நலம் பார்த்து ஒப்படைத்து விட்டு ஒதுங்கிட வேண்டும். இவை மட்டும் தோன்றவும் அகமேந்தியிடம் வந்து நின்றான்.
“நீ இன்னிக்கு ஆபிஸ்கு லீவ் போட்டுட்டு அவனை அழைச்சிட்டு…”
“வாட்… நானா… எனக்கு உங்க மருத்துவரிடம் பேசி புரிய வைத்து ப்ரியங்காவுக்குக் கம்யூனிக்கேஷன் பண்ணி டாக்டர் உங்களுக்குக் கம்யூனிக்கேஷன் செய்து ஸ்ப்பா… டாக்டரிடம் நீ போ. நான் வேண்டுமென்றால் ப்ரியங்காவுக்குப் புரியவைக்கிறேன்.” என்று உணவு மேஜையில் ஏறி காலையாட்டி பேசவும் சைதன்யன் அவளருகே வந்து நின்றான்.
“நீ கூட வந்தே ஆகணும். நீ தானே அந்தச் சின்னப் பையனுக்கு ப்ரெண்ட் ஆனா” என்று சொல்லவும் அகமேந்தி கீழே குதித்து “வர்றேன் வர்றேன்.” என்று சேர்ந்து நடையிட்டாள்.
தருணேஷ் நேரத்தை பார்த்து அகமேந்தி வராததை எண்ணி எதற்காக இருக்குமென யோசித்தாலும் சைதன்யன் இங்கு வருவதை நிறுத்தியிருக்கலாம்.
ப்ரியங்கா வீட்டுக்கு வந்ததும் “அவனைக் கூப்பிடு போகலாம்.” என்று காரில் சாய்ந்தமர்ந்தான்.
“நீ போய்க் கூப்பிடு.” என்று அகமேந்தி அதே போல அமர்ந்திடவும் , “இங்க பாரு பேமஸ் ஹாஸ்பிடலில் அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன். இரண்டு பேருக்கு மேல உள்ள போகக் கூட அனுமதியில்லை. நம்ம நேரம் கடத்தாம போறது பெஸ்ட். நீ போய்க் கூப்பிடு நான் போன் பண்ணி அரைமணி நேரத்தில் வர்றதை சொல்லிடறேன். நம்ம கியூட் பைட்டை வீட்டுக்குப் போய்த் தொடரலாம்.” என்று கூறவும் அகமேந்தி இறங்கி நடந்தாள்.
ப்ரியங்கா அகமேந்தி வந்ததும் வாசலை எட்டி பார்க்க சைதன்யன் வருகையை விரும்புகின்றாரென அகமேந்தி அறிந்து, “டைம் ஆகறதால ருத்ரேஷ் கூப்பிடறார்.” என்று தயங்கினாள்.
அண்ணியென்று ருத்ரேஷ் மனதில் எதுவும் இல்லாததால் விளித்துவிட்டான். ஆனால் அனைத்து உறவும் இப்படித்தானென அறிந்த அகமேந்தியால் அத்தை என்ற வார்த்தை எளிதில் கூற வருமா?
ருத்ரேஷ் கிளம்பி கூலர் அணிந்து “ஹாய் அண்ணி… நான் ஹாஸ்பிடல் போறதை விட, உங்களோட டைம் ஸ்பென் பண்ண போறேன் செம ஹாப்பி” என்றவனின் பேச்சில் அகமேந்தி வருந்தினாள்.
கார் முன் வந்து நிற்க சைதன்யன் போனில் “ஓகே ஓகே… வித் இன் பிப்டின் மினிட்டஸ்” என்று யாரிடமோ பேசி அணைத்தான்.
“அகமேந்தி நீ வீட்டுக்கு போ. அங்க கொரானா அகைன் பிராப்ளம் என்பதால் உள்ள விட மாட்டாங்களாம். நானும் த… அவனும் மட்டும் போயிட்டு வர்றோம்.” என்று முடித்தான்.
“நான் எப்படி நீயே வந்து கூப்பிட்டுட்டு போ.” என்று சிணுங்கினாள்.
“அகமேந்தி அப்ப இங்கேயேயிரு வந்திடறேன். அவனை ஏறச்சொல்லு” என்று கார் கதவை திறந்து முன்பக்கம் ஏறச்சொன்னான்.
ருத்ரேஷ் அகமேந்தியிடம் ஜாலியாகப் பேசி பொழுதை கழிக்க விரும்பி இருந்தவன் அவள் வரவில்லை என்றதும் சோகமாக மாறவும், “டைம் இல்லை டாக்டர் உடனடியா டெல்லி போகணும்.” என்று அவசரப்படுத்தினான்.
ருத்ரேஷ் அமைதியாக அமர்ந்திடவும் ப்ரியங்கா அகமேந்தி இருவரும் வழியனுப்பினர்.
ருத்ரேஷ் மற்றும் சைதன்யன் இருவரும் கூலர் அணிந்து இருந்தனர்.
காரோட்டியபடி சைதன்யன் இடது பக்கம் பார்வை பதிக்க, அங்கே தன்னைப் போலவே கண்ணாடி அணிந்து ஜன்னலை பார்த்த சிறுவனை எண்ணி பகையோ கோபமோ எதுவும் தோன்றவில்லை.
தருணேஷ் தன் முன் வரும் நேரம் ஏற்படும் எரிச்சலுணர்வும் இவனிடம் இல்லை. ஒரு வேளை உடல்நிலை காரணமாகப் பாவம் பார்க்கின்றோமோ என்ற உணர்வு தோன்றியது.
இருக்ககூடும் யாரெனும் உடல்நிலை சரியில்லையென்றால் பாவம் பார்க்குமே இந்த மனிதனின இளகிய மனம்.
சைதன்யன் பேசாமல் வரவும் ருத்ரேஷும் பேசாமல் வந்தான். அவனின் மனம் அணணா என்றால் இப்படித் தான் ஒதுங்கியிருப்பார்களெனப் பதிவாகியிருந்தது.
மருத்துவமனை வரவும் ருத்ரேஷ் இதயம் பயத்தை உணரவும் தானாகச் சைதன்யன் கையைப் பற்றியிருந்தான்.
சைதன்யன் கையை உதறவும் மனமில்லை அதே நேரம் இறுக்கி பிடித்துப் பாசம் காட்டவும் தயங்கி மறுகினான்.
மருத்துவர் இமயன் ருத்ரேஷை தனியாக அழைத்து இதயத்திற்கான தனி டெஸ்ட் அனைத்தும் பார்த்து முடித்தார். ஏற்கனவே மருத்துவ அறிக்கையைப் பார்த்தவர் ஒரளவு அவனின் தற்போது நிலைமை எந்த அளவு உள்ளதென அறிய ஆய்வு செய்தார்.
சில டெஸ்ட் மட்டும் ஒரு மணி நேரமாகுமெனக் கூறவும் காத்திருந்தனர்.
மருத்துவர் இமயன் ருத்ரேஷ் தவிர்த்துச் சைதன்யனிடம் பேசி நிலைமையை விவரித்தார்.
கடைசியாக இந்த டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தனர்.
இமயனுக்கு ஒரு காப்பி மருத்துவமனையில் கிடைக்கும் அதனால் என்னவென்று பார்த்துப் போனில் பேசுவதாகக் கூறி டெல்லி செல்ல பயணமானார்.
சைதன்யன் ருத்ரேஷ் மட்டும் இருந்து ரிப்போர்டை வாங்க ரிசப்ஷனில் அமர்ந்திருந்தனர்.
பெரும்பாலும் இது கொரானா காலம் என்பதால் மருத்துவமனை காலியாக இருந்தது.
ருத்ரேஷ் சைதன்யன் கையை இறுகப்பற்றிப் புஜத்தில் சாய்ந்திருந்தான்.
சைதன்யன் மனம் ருத்ரேஷ் செய்கையால் அதிகமாக மனதை பிசைய செய்தது.
மணியைப் பார்த்து “நான் சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் டேப்ளட் போடணும். தண்ணிர் வேண்டும் அண்ணா.” என்று மாத்திரையைக் கையில் வைத்து கேட்கவும் சைதன்யன் கேண்டீன் அழைத்து வந்தான்.
“வாட்டர் பாட்டில்” என்று கேட்டுப் பணத்தைச் செலுத்தி வாங்கி ருத்ரேஷ் முன் நீட்டினான்.
ருத்ரேஷ் மாத்திரை விழுங்க அஞ்சாமல் ஏழு மாத்திரையை வரிசையாகத் தொண்டையில் இறக்கவும், சைதன்யன் தனக்குத் தலைவலியென ஒரு மாத்திரை போடவும் பிடிக்காததை எண்ணி, ருத்ரேஷ் இத்தனை சாப்பிடுவதைக் கண்டு வருந்தினான்.
சூடாக அதே நேரம் பதினென்றுக்குப் பப்ஸ் வகைகள் வந்திறங்க, ருத்ரேஷ் பார்வை உணர்ந்து “ஒன் சிக்கன் பப்ஸ்” என்று வாங்கி ருத்ரேஷ் கையில் கொடுக்க, “தேங்கஸ் அண்ணா” என்றான்.
“எனக்குப் பப்ஸ் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு வாங்கலையா?” என்றதும் தலையை மறுப்பாக அசைத்தான் சைதன்யன்.
“அண்ணா இந்தாங்க. ஷேரிங் அண்ட் கேரிங்” என்று நீட்டவும் சைதன்யன் மனதால் உடைந்து போனான்.
“நோ தேங்க்ஸ்.” என்றதும் ரிப்போர்ட் வர வாங்கிக் காரில் கிளம்பினார்கள்.
“அண்ணா டாக்டர் என்ன சொன்னாங்க. நான் ரொம்ப நாள் வாழறது பாஸிபிளா பாஸிபிள் இல்லையா. அம்மா மாதிரி சைலண்டா வராதீங்க. பீ பிராங்க்.. நான் பிக் பாய்… புரிஞ்சிப்பேன். சாகத் தான் போறேன்னா தயவுசெய்து மாத்திரை எதுவும் வேண்டாம். தினமும் இருபது சாப்பிட எனக்குப் பிடிக்கலை.” என்று பேசவும் சைதன்யன் கண்கள் கலங்க உதடும் துடித்தது.
ருத்ரேஷ் தன் தோள் சாய, அவனை வருட சென்ற வலக்கரத்தை விசித்திரமாக நோக்கி காரில் வைத்து மனதை அடக்கினான்.
ருத்ரேஷோ தோளில் சாய்ந்து தன் போனில் சைதன்யனோடு செல்பி எடுத்து முடித்தான்.
சும்மா இல்லாமல் “நானும் அண்ணாவும் மருத்துவமனைக்குப் போயிட்டு ரிட்டேன் வர்றோம்” என்று தருணேஷுக்கு அனுப்பினான்.
அது சென்றடைந்ததாயென்று பார்க்க தருணேஷ காணவில்லையென இரண்டு வெள்ளை டிக் மட்டும் இருந்தது.
-சுவடு பதியும்
-பிரவீணா தங்கராஜ்.

Wow super sainthu. Super very intresting
Avanum manushan thane..paapom
Chinna paiyanuku intha mari problemna yaruka irunthalum valikume athe mari tha chaithu ena irunthalum unakum thambi thana avan