Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-23

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-23

ஆலி-23

     சைதன்யனிடம் தயங்கி வந்தவள் “அவங்க வந்துயிருக்காங்க” என்றாள்.

    யாரென கேட்டு ருத்ரேஷோடு செஸ் விளையாடி கொண்டிருந்தான் சைதன்யன்.

     ருத்ரேஷ் அடுத்து மூவ் செய்ய யோசனையில் செஸ் போர்டை பார்க்க சைதன்யனிடம் ‘ருத்ரேஷ் அம்மா’ என்று கண் ஜாடையில் புரிய வைத்தாள்.

     “ஓ… ப்ரியங்கா வா… என்னவாம்?” என்றான் திமிராக.

   ருத்ரேஷ் அம்மா பெயர் என்றதில் நிமிர்ந்தவன் சைதன்யனின் முகம் கண்டு விளையாட்டு காயினை நகர்த்தினான்.

     அவனே ப்ரியங்கா என்றதும் அகமேந்தி “ருத்ரேஷை அழைச்சிட்டு போக வந்திருக்காங்க” என்றதும் “ருத்ரேஷ் நீ அங்க போக போறியா?” என்று கேட்டான்.

    “ஆமாம் அண்ணா. அம்மா தனியா இருப்பாங்க. போர் அடிக்கும்.” என்று சொன்னான்.

     “சரி.” என்றவன் இந்த விளையாட்டு முடிந்ததும் அனுப்பி வைத்தான்.

     “இமயனிடம் சொல்லியிருக்கேன். எப்ப வேண்டுமென்றாலும் போன் பண்ணுவேன். ருத்ரேஷை அழைச்சிட்டு வாங்க.” என்று ருத்ரேஷ் தலையை கலைத்து விட்டான்.

   அதில் ருத்ரேஷ் அரவணைப்பை உணர்ந்தானோ என்னவோ சைதன்யனை கட்டி அணைத்து, “ஐ லவ் யூ அண்ணா.” என்றான். பதிலுக்கு மென்னகையை மட்டும் பிரதிபலித்தான் சைதன்யன்.

     இருவரும் சென்றதும் வாசல் கதவை தாழிட்டு திரும்ப, சைதன்யன் அகமேந்தி இடையை பற்றி தூக்கி, “என்ன கோபம் என் மேல…” என்றான்.

     “கீழ விடு டா. தெரியாத மாதிரி நடிக்காதே.” என்று திமிறினாள்.

     அவளை கையில் ஏந்தி அறைக்கு வந்து மெத்தையில் போட்டவன். “இங்க பாரு நானா கேட்டப்ப மாமாவுக்காக திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட… . திருமணம் நின்றால் அவப்பெயர் வரும் என்ற ஒர் ரீசன் இருந்தாலும் கணவன் என்ற அங்கீகாரம் அளிக்க நீ யோசித்து இருப்ப, நீயும் என் மேல  க்ரஷ்ஷா இருந்ததில் ஓகே சொல்லியிருப்ப. இந்த இரண்டு காரணம்  நீ மேரேஜ்க்கு சம்மதித்தது.

      ஆள்மாறாட்டம் செய்ததற்கு தண்டனையா நீ தூக்கமாத்திரை கலந்த, சும்மா விட்டேன். சுடத்தண்ணீரை மேல ஊத்தின, கிணத்துல தள்ளிவிட்ட, இங்க வந்தும் என்னோட தள்ளியிருந்த… இட்ஸ் ஓவர். எனக்கான தண்டனை முடிந்தது.”

     “எப்ப டா தண்டனை முடிந்தது. தூக்கமாத்திரையை போட்டேன். ரீ என்னை எதுவும் பண்ணிடக்கூடாதுனு. சுடத்தண்ணீர் எல்லாம் நான் பண்ணலை. அது தெரியாம ஊத்திட்டேன். கிணற்றுல தள்ளினேனு சொல்லற உன்னை கொல்லவா தள்ளினேன். சுடத்தண்ணீர் பட்டதும் உனக்கு மெடிசனா தள்ளினேன். இதுல நீயா தண்டனை முடிந்ததுனு சொல்லற…”

     “ஏய் நீ நான் நாமாகினப்பவே எனக்கான தண்டனை முடிந்தது. இப்ப தருணேஷ் பேசியதுக்கு திரும்ப கிளறுற. இது போங்கு. அவன் வந்தா நாலு அறை விட்டு என்னடானு கேளு. அன்னிக்கு ஆபிஸ்ல அண்ணினு சொல்லி அவனை வாயை திறக்காம பண்ணியிருந்த. திரும்ப நீயா கேளு. புரிய வை. நான் இதுல நடுவுல என்ன செய்ய.

      என் தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்த அக்சப்ட் பண்ணிட்டேன். இங்க பாரு இந்த தழும்பு இனி என் லைப் முழுக்க இருக்கும். ஏதாவது பேசி மனதில் விழுப்புண் வைச்சிடாதே.” என்றதும் அவன் கையில் இருந்த தழும்பு அவளின் வாயை கட்டிவிட்டது.
 
    அமைதியாக மெத்தையில் அமர்ந்திருக்க, “அப்பறம் நீ அண்ணியாயிரு வெண்ணீராயிரு எனக்கு தம்பி ஒருத்தன் தான். அது ருத்ரேஷ் தான்.” என்று திடமாக சொல்லி நித்திரையை தழுவ முயன்றான்.

    அகமேந்தியும் எதுவும் திரும்ப ஆரம்பிக்கவில்லை அவன் முதுகை வெறித்து பார்த்தவள் தானும் கோபத்தில் இருப்பதாக திரும்பிக் கொண்டாள்.

     அடுத்த நாள் அலுவலகம் சென்றிட தேனீ போல சுறுசுறுப்பாக கிளம்பினான்.

     தருணேஷ் விடியலில் கண்விழித்தவன் தனது மற்றொரு கையை தேடினான். அதாங்க போனை தேடினான்.

    அதுவோ ஒரு வாரமாக சார்ஜின்றி பிணமாக இருந்தது. அதனை உயிர்ப்பு கொடுக்க சார்ஜ் போட்டு விட்டு மணியை பார்த்தான். வருணிகா ஒன்பது மணிக்கு வந்திடுவாள் அதற்குள் குளிக்க போனான்.

      குளித்து முடித்து உடையணிந்து தலைவாறி, போனை ஆன் செய்து முடிக்க ஒரு வாரத்திற்கான வாட்சப் மெஸேஜ் போன் அழைப்பு என்று வரிசையாய் வந்து நின்றது.

    சேகரிடம் போன் அழைப்பு அதிகமாக வரவும் என்ன அது என்பதாய் எடுத்து பார்த்தான். வாட்சப்பிலும் ஏதோ குரல் பதிவு மெஸேஜ் வந்திருக்க, அதை பிளே செய்தான்.

      ‘hai buddy… என்னடா மறுபடியும் சைதன்யன் சார் ஆபிஸ் முதலாளியா வந்து நிற்கறாரு… ஆபிஸ் விற்கனும் சொன்ன… அவருக்கே விற்றுயிருக்க, இதுக்கு நீ பணத்தை டிமாண்ட் பண்ணி முடிச்சியிருக்கலாம். ஆபிஸ் உன் பெயருக்கு மாற்றி திரும்ப அவர் பெயருக்கு எதுக்கு டா…’ என்ற ஆடியோ பதிவும்

       ‘உனக்கு என்னாச்சு டா. எதுக்கு ஆபிஸ் வரலை. போனும் அட்டன் பண்ணலை. ஆர் யூ ஓகே.’

    ‘வசந்த் திரும்ப ஓவரா பண்ணறான் டா. நான் தான் உனக்கு மெஸேஜ் பாஸ் பண்ணறேனு திட்டறான். மச்சி பார்த்து டா டிரக்ஸ் என்னால தான்னு காட்டி கொடுக்காதே.’

     ‘மச்சான் சேர்ந்து போலாமா டா. பணம் கொஞ்சம் உஷார் பண்ணேன்.’ இப்படியாக வந்த வண்ணம் இருந்தது.
   
     எரிச்சலில் தருணேஷ் மதுவகையை தேடி எடுக்க, கையில் ஊசியோடு வருணிகா நின்றிருந்தாள்.

      “நீ எல்லாம் சரிப்பட மாட்ட. உன்னைய..” என்று அவன் எதிர்பாரவிதமாக கையில் ஊசியை செலுத்தினாள்.

     “ஏய் எனக்கு சாகறதுக்கு விருப்பமில்லை. ப்ளிஸ் என்னை காப்பாற்று. நான் டிரக்ஸ் யூஸ் பண்ணலை. ஜஸ்ட் ஆல்கஹால் தான்.” என்று பதறினான்.

     காதை சுட்டுவிரலால் தேய்து “உஷ்… கத்தாதே காது வலிக்குது. நீ தண்ணி அடிச்சி கஞ்சா அடிச்சி கொஞ்சம் கொஞ்சமாக சாகறதுக்கு ஒரேடியா போய் சேரு. நான் வலிக்காம எப்படி சாகடிக்கனு தானே ஊசி போட்டேன். அப்பறம் என்னடா.” என்றதும் தன்னுடல் வேர்வை சுரக்க பயந்தான்.

    “ப்ளிஸ் ப்ளிஸ்… அது வேற இது வேற.  நான் வேற டென்சனில் கையில எடுத்தேன். இனி அதுக்காகவும் எடுக்கலை. என்னை காப்பாற்றேன். மயக்கமா வருது.” என்று அலறினான்.

     “அடச்சீ… சாதரண டோஸ் போட்டுயிருக்கேன். விஷ ஊசி போடலை. நீ பயத்துல இருக்க அதான் உடல்ல வேர்க்குது. போய் தண்ணீர் குடி.” என்று கூறி காதோரம் முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டாள்.

     நீரை பருகிக் கொண்டே அவளை பார்த்தான். சுடிதாரில் செதுக்கிய சிலையாக நின்றவளை, பார்த்து பயந்து நீரை பருகி முடித்தான்.

     “சாப்பிட்டிங்களா… இந்த மாத்திரை போடணும்” என்று எடுத்து முன் வர, கண்கள் கலங்கி நின்றான்.

     “என்னாச்சு.?” என்றாள் வருணிகா.

    “சாப்பிட்டிங்களா… இந்த வார்த்தை அம்மா தவிர யாரும் கேட்டதில்லை. நீங்க கேட்டதும் , நமக்கும் ஒர் ஆள் கேட்கறாங்களேனு ஒர் மாதிரி பீல் ஆச்சு.” என்றவன் “இனிமே தான் ஆர்டர் பண்ணணும்” என்றான்.

    வருணிகா “என்னது இனி தான் ஆர்டர் பண்ணணுமா? யோவ் நீ இந்நேரம் சாப்பிட்டு மாத்திரையை விழுங்கியிருக்கணும். இல்லை நான் போட்ட இன்ஜெக்ஷன் வேலை ஆரம்பிக்கும். பிடி இதை சாப்பிடு” என்று உப்புமாவை நீட்டினாள்.

    “இதா… இது கொழகொழனு நல்லாயிருக்காது. ஐ ஹேட் உப்புமா.” என்றான்.

      “தம்பி… நீ திங்கிற பீட்சா பர்க்கர் டோஸ்டரை விட இது ஹெல்தி புட். என்ன பார்க்கற இதுல பட்டாணி கேரட் பீன்ஸ் இருக்கு. கதை பேசாம சாப்பிடு” என்று பையில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

     ‘என்னது தம்பியா… நேரம் டி’ என்று டிப்பன் பாக்ஸை நுகரவும் நெய் மணம் வீச, தானாக உண்ணத் துவங்கினான்.

    “எதையும் டிரக்ஸ் மாதிரி நுகர்ந்துட்டு தான் சாப்பிடுவியா.” என்றாள். பார்வை என்னவோ புத்தகத்தில் இருந்தாலும் கேள்வி இவனை சாடி விழுந்தது.

      “வாசனை பிடிச்சது தப்பா…” என்றவன் குரல் பெரிதாக கொடுத்து,  ‘என்னவோ கனிவு சாந்தம் அதுஇதுனு சர்டிபிக்கேட்ல போட்டுயிருக்குனு சொன்னாங்க. ஒரு கனிவு இல்லை. ஸப்பா… எப்ப விடுதலை ஆவேனு இருக்கு.” என்று முணங்கினான்.

     “ஹலோ… கனிவு எல்லாம் மற்றவர்களுக்கு காட்டுவேன். உன்னை மாதிரி ஆல்கஹால் டிரக் அடிட்கிட்ட எல்லாம் இந்த கனிவு போதும். நீ ஒழுங்கா மாறினாலே விடுதலை தான். நான் போயிடுவேன்.” என்று புத்தகத்தின் தாளை திருப்பினாள்.

     மதியம் உணவை ஆர்டர் கொடுத்து காத்திருந்தான். வெஜ் புலாவ் வரவும் சாப்பிட ஆரம்பித்தனர். வருணிகா கொண்டு வந்த வாழைப்பூ குழம்பு மீன் குழம்பாக தோற்றத்திலிருக்க, கலர் புல்லானா புலாவ் தற்போயு வறண்ட அரைவேக்காடு அரிசியாக பல்லிளித்தது. 
    
    அவனின் பார்வை கண்டு பாதி வைத்து ஷேர் பண்ணி உண்டாள்.

     “நீ அப்படியொன்னும் கெட்டவனா தெரியலை. உன்னை எளிதா மாற்றிடலாம். இரண்டு வருஷமா இந்த பழக்கம்?” கேட்டாள்.

    “இல்லை… ஒரு வருஷம். முதல்ல ஆல்கஹால் மட்டும் தான். இப்ப சேகர் தான் கடந்த ஒரு வருஷமா டிரக் தந்தான்.” என்று கூறவும் அப்பெயரை நினைவுப்படுத்திக் கொண்டாள்.

    “டிரக் ஆல்கஹால் தப்புன்னு தெரியாதா. அப்படியிருந்தும் உபயோகிக்கிற. இதே பழக்கம் உன் தம்பிக்கு வந்தா கைகட்டி வேடிக்கை பார்ப்பியா?” என்றதும் மறுத்தான்.

     “பச் எனக்கு பணம் வேண்டும் வருணிகா. என் தம்பி இதயநோயாளி. ஆப்ரேஷன் செய்யணும். இதுல நான் தோற்றுட்டேன். 
   வாழ்க்கையில் மட்டும் இல்லை அவனிடமும் தோற்றுட்டேன்.” என்று கூறவும் அது சைதன்யன் என சொல்லாமலே அறிந்திருந்தாள்.

    இப்ப கூட அவன் ஜெயித்துவிட்டான். நான் ஆபிஸை விற்றா… மோப்பம் பிடிச்சி வந்து அதை வேறொரு நபர் மூலமா வாங்கிட்டான்.

     வாங்கிட்டான் ஜெயிச்சுட்டான். என்னை தோற்கடிச்சிட்டே இருக்கான். இதுக்கு சப்போர்ட் எங்க அம்மா, என் தம்பி ருத்ரேஷ், அந்த வசந்த் நாயி. அந்த வசந்த் ரொம்ப விசுவாசமா இருக்கறேன்ற பெயரில் எல்லாத்துக்கும் உதவறான்.” என்று புலம்பினான். மவனே உன்னை அழிக்க ஒரு காலம் வரும் நீ அழுவ என்று மனதிலே சொல்லிக் கொண்டான்.

       “இங்க பாரு… உங்கண்ணாவே நாயினு சொல்லு எங்க அண்ணாவை சொல்லாதே. அவர் செய்யற வேலைக்கு நியாயமா இருக்கார்.” என்று கோபமாக தன் அண்ணா வசந்தை தரக்குறைவாக தருணேஷ் பேசிவிட்டதால் பொரிந்தாள்.

     “ஏய்… நீ… நீ… அந்த வசந்தோட தங்கையா..? அப்போ நீயும் அந்த சைதன்யனோட ஆளா… ஆக மொத்தம் என்னை கண்காணிக்க இப்பவும் அவன் பாதுகாப்பில் தான் இருக்கேன். அப்படி தானே.
  
      ஆபிஸ்ல உங்கண்ணா வசந்த், நான் வீட்க்கு போறவரை கண்காணிப்பான். இப்ப வீட்டுக்குள்ளே ஆள் வைக்கிற அளவுக்கு அவனுக்கு தைரியம் பார்த்தியா…? அதுவும் ஒரு பொண்ணை அனுப்பி…” என்று கட்டுக்கு அடங்காமல் கோபத்தை கொண்டான்.

      “என்னடா… ஒரு நர்ஸ் கனிவா இல்லாம திமிரா இருக்காளே… நம்மை பற்றி தெரிந்தவிதமா நடந்துக்கறாளேனு அப்பவே மூளை சொல்லிச்சு. பட் டாக்டர் சுந்தர் அனுப்பியதும் கொஞ்சம் யோசிக்கலை.” என்று அக்கம் பக்கம் பார்வையை சுழலவிட, அங்கே மது மட்டும் இருக்க, அதனை எடுக்க சென்றான்.

      வருணிகாவோ, இங்க பாரு நீ சாப்பிட்டுயிருக்கிற மாத்திரைக்கு மது டிரக்ஸ் எடுத்துக்க கூடாது.” என்று தடுக்க போராடினாள்.

     வருணிகாவுக்கும் தருணேஷுக்கும் போராட்டம் வலுத்தது.

    இங்கு வசந்த் தனது அலுவலகம் முடித்து வீட்டுக்கு சென்றிருந்தான். மணி எட்டாக “சக்தி வருணிகாவை இன்னும் காணோம். போன் பண்ணி பார்த்தியா… லேட்டாகும்னு சொன்னாளா?” என்று கேட்டான் வசந்த்.

      “இல்லையேங்க… ஒரு விவரமும் சொல்லலை. போன் பண்ணினேன். சுவிட்ச் ஆப்னு வந்துச்சு.” என்று தன் இரண்டு வயது குழந்தைக்கு பாலை ஆற்றியபடி வந்தாள்.

    வசந்திற்கு பயம் ஆட்கொள்ள, வருணிகாவுக்கு போனை போட்டான்.
    
    நாலைந்து முறை சுவிட்ச் ஆப் என்றதும் பயந்துவிட்டான். மணி எட்டுமுப்பது இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. மணி ஏழுக்கு பணி முடிந்திடுமே.

    பயம் சூழ்ந்தாலும் சைதன்யன் சார் கேட்டு அனுப்பிய இடம் நிச்சயம் பாதுகாப்பு இருக்கும் என்று எண்ணினான். இருந்தும் அவரிடம் கேட்டு அந்த இடத்திலிருந்து வருணிகா எப்பொழுது கிளம்பினால் என்று கேட்டால் கொஞ்சம் பதட்டம் குறையுமே என்ற எண்ணம் பிறக்க சைதன்யனுக்கு போன் செய்தான்.

     தற்போது க்ரஷாக அவளை சீண்டி அவளின் கோபத்தை குறைக்க கன்னத்தில் முத்தமிட்டு கடித்து வைத்தான். போன் அலறவும் அவளை கை வளைவிலே நிறுத்தி, “என்ன வசந்த் சொல்லுங்க?” என்றான்.

     “சார் வருணிகா வீட்டுக்கு வரலை. போனும் சுவிட்ச் ஆப்னு வருது. நீங்க யாரிடம் அவளை வேலைக்கு அனுப்பினீங்கனு தெரிந்தா போன் போட்டு கிளம்பிட்டாளானு கேட்டுப்பேன்.” என்றான். வசந்த் பேச்சில் தவிப்பு அதிகமாக தெரிந்தது.

     “வசந்த் ஆர் யூ ஓகே. வருணிகா… வருணிகா நர்ஸ் தானே… இந்நேரம் போயிருப்பாங்களே. அவங்க டைம் ஏழு மணி வரை தான்.” என்று சைதன்யன் கூறினான்.

     “இன்னும் வரலை சார். என் ஒய்ப் போன் பண்ணினாலாம் அப்ப இருந்தே சுவிட்ச் ஆப் தான் வருது. அதான் யாரை பார்த்துக்க அனுப்பினீங்களோ அவங்க நம்பர் தந்தா கேட்டுப்பேன்.” என்று மீண்டும் கூறினான்.
  
   இம்முறை சைதன்யன் வருணிகா பற்றி வசந்த் எதற்கு கேட்கின்றானென யோசித்தான்.  அறிந்தவள் என்ற வகையும் தாண்டி அல்லவா பதட்டம் கொள்கின்றான் என்று தருணேஷை பாதுக்காக்க என்று கூறினான்.

     “சார் தருணேஷா… என்ன சார் நீங்க. அவன் என்றால் நான் என் தங்கையை அனுப்பியிருக்க மாட்டேனே. சார் அவனுக்கு என்னை பிடிக்காது. வருணிகா என் தங்கை என்றால் அவநிலைமையை யோசிச்சிங்களா சார்.” என்று துடித்தான்.

    “வாட் வருணிகா உன் தங்கையா…? வசந்த் அவளுக்கு ஒன்றும் ஆகாது. அவன் தவறா நடந்துக்க மாட்டான். எதுக்கோ உடனே போய் பார்க்கலாம். அவன் வீட்ல தான் இருப்பான்.” என்று அகமேந்தியிடம் செய்கையிலே செல்வதாக கூறி புறப்பட்டான்.

      “சார்… அவன் டிரக்ஸ் அடிக்ட் சார்… அகமேந்தி மேடத்தையே சைட் அடிச்சவன் சார். என் தங்கை என்று தெரிந்தா என் மேல இருக்கற கோபத்தில.” என்று அவனுமே கிளம்பினான்.

    “வசந்த் ப்ளிஸ் ட்ரஸ்ட் மீ. பதறாதீங்க நான் கார் எடுத்து அவன் வீட்டுக்கு தான் போறேன்.” என்று ஆறுதல் படுத்த முனைந்தான்.

-சுவடுபதியும்.

-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!