Skip to content

கரை தந்த கடலே-11

51 / 100 SEO Score

அத்தியாயம்-11

 

‘டீ டைம்’ என்ற தேநீர் கடையில் முரளியும் பிரதீப்பும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

 

அவர்களுக்கு முன் தேநீர் சூடாக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.

 

முரளி தான் பெண்ணை பெற்றவராக, “இங்க பாருங்க சார். நல்ல வரன் என்பதால தான் உங்களை பொண்ணு பார்க்க வரச்சொன்னோம்.

உங்க பையன் செய்த குளறுபடியில் அன்னிக்கு நம்ம சந்திப்பு ஒரு மாதிரி மாறிடுச்சு.

சரி முதல்ல பார்த்த வரனே எத்தனை பேர் திருமணத்துல முடிவாகுதுனு விட்டாச்சு.

ஆனா உங்க பையன் என் பொண்ணோட தினமும் போன்ல பேசறான், சாட் பண்ணறான். என்னவோ புருஷன் பொண்டாட்டி மாதிரி கொஞ்சிக்கறாங்க. இதெல்லாம் இந்த இடைப்பட்ட நாளில் இவ்ளோ வேகமா காதலை வளர்த்திருப்பதை எதிர்பார்க்கலை.

 

ஆனா பாருங்க… இந்த குளறுபடியில் அவ திரும்ப திரும்ப பிரசன்னாவை தான் விரும்பறேன்னு ஆணித்தரமா சொல்லறா.

 

நான் உங்க பையன் கெட்டவன்னு சொல்லலை. அதே சமயம் அக்சப்ட் பண்ணவும் முடியலை.

எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. என் பெரிய பொண்ணோட கணவர் வழியில் வரன் வருது.

இரண்டு மாசத்துல பிரசன்னா-சுஹாசினி கல்யாணம் முடிவானா, நாங்களே கல்யாணம் செய்து வைக்கறோம். ஆனா உங்க பையன் உங்களுக்கு கல்யாணம் செய்தப்பிறகு தான் கல்யாணம்னு நாட்களை கடத்தினா, ஐ ம் சாரி.. உங்க பையனுக்கு வேற பொண்ணை பாருங்க.” என்றார் முரளி.

 

“சார்… காதலை சேர்த்து வைக்கறேன்னு சொல்லிட்டு ஏன் சார் இரண்டு மாசம் கெடுபிடி பண்ணறிங்க.” என்று பிரதீப் கேட்டதும், “எனக்கு நம்பிக்கையில்லை சார். உங்க பையனை நம்பி நான் என் பொண்ணுக்கு வர்ற நல்ல நல்ல வரனை தட்டி கழிக்க முடியுமா?” என்றார்.

 

பிரதீப்போ சங்கடமாய் மாற, முரளியே, “நீங்க மேரேஜுக்கு ஓகே சொன்னா பிரசன்னா பொண்ணு தேடுவார். பொண்ணு கிடைச்சா தானே கல்யாணம். உங்களுக்கு தான் உங்களை யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னு தோனுதே. சம்மதிச்சிடுங்க. இதே இரண்டு மாசத்துல பொண்ணு கிடைக்கலைன்னா உங்களுக்கு கல்யாணம் பண்ணப்போறதா பேச கூடாதுனு நீங்க செக்மேட் வையுங்க.

என்னால இவ்ளோ தான் உங்களுக்காக செய்ய முடியும். ஏன்னா பெரிய மாப்பிள்ளை பிறகு எங்க சொந்தத்தை வேண்டாம்னு சொல்லிட்டிங்கன்னு அதுக்கு வேற சண்டையோ பஞ்சாயத்தோ போடக்கூடாது.” என்று கூறவும் பிரதீப் மனமேயின்றி சம்மதித்தார்.

 

“ஓகே சார்… பிரசன்னாவிடம் சம்மதிப்பதா பொய் சொல்லி இரண்டு மாசம் மட்டும் ரூல்ஸ் போடறேன். எனக்கு செட்டாகலைனு தெரிந்ததும் பிரசன்னாவும் சோர்ந்துட்டா… அடுத்து சுஹாசினி-பிரசன்னா கல்யாணத்தையாவது பார்ப்போம்.” என்றதும் டீயை குடித்து கைகுலுக்கி புறப்பட்டார்கள்.

 

பிரதீப்பிற்கு தலைவலி வராத குறை. பார்க்க இளமையா இருப்பது ஒரு குற்றமாடா. இப்படி வகையா வந்து சிக்கியிருக்கேன் என்று வீட்டிற்கு வந்தார்.

 

அங்கே பிரசன்னாவும் காஞ்சனாவும் சிரித்து பேசி கதையளக்க, வருண், அகில் சலீம் வேறு உருளைக்கிழங்கு பஜ்ஜி போட்டு தேங்காய் சட்னியுடன் சுவைத்தபடி படம் பார்த்தார்கள்.

 

பிரதீப் வரவும், “ஹலோ அங்கிள்’ ‘ஹாய் அங்கிள்’ என்றவர்கள், சினிமா பார்ப்பதில் முழ்கினார்கள்.

 

‘அடேய்… உங்க எதிர்ல இரண்டு பொண்ணுங்க, என்னை அழகா இருக்கான்னு சொல்லிட்டு போனது குற்றமாடா? இந்த அளவு என்னை புலம்ப விட்டுட்டிங்களே’ என்று பார்வையிட்டு அறைக்குள் முடங்கினார்.

 

பிரசன்னா வேகவேகமாய் தனது அறைக்கு வந்து, போனில் ஹாசினிக்கு அழைத்தான்.

 

“சொல்லு… பிரசன்னா” என்று சுஹாசினி கேட்க, “உங்கப்பா பேசிட்டு வந்துட்டாரா? ரிசல்ட் என்ன?” என்று கேட்டதும், “மாமா கூட தான் பேச போனார். ஆன்-தி-வேல வந்துட்டு இருக்கார். மாப்பிள்ளையோட அப்பாவிடம் பேசிட்டேன்மானு மட்டும் போன் பண்ணினார். ரிசல்ட் வந்ததும் தான் சொல்ல முடியும்.” என்றதும் பிரசன்னா, “ஓ… இன்னும் வரலையா?” என்று சலிப்படைய, “மாம்ஸ்… நீங்க தலையை சுத்தி மூக்கை தொடறிங்க. காத்திருக்க வேண்டாமா?” என்று விஜய் குரல் வேறு கேட்டது, ‘இவன் வேற இருக்கானா?’ என்று பிரசன்னா அயர்ச்சியானான்.

 

“அக்கா.. அப்பா வந்துட்டார்” என்று விஜய் குரலில், “ஏய் மாமாவிடம் போனை கொடு” என்றான் நாயகன்.

 

“வெயிட் வெயிட்’ என்று நடந்து செல்வதை பிரசன்னா காத்திருப்பில் உணர்ந்தான்.

 

சுஹாசினி பிரசன்னாவிடம் லவ் யூ என்று பேசி கொஞ்சியதை கேட்ட முரளிக்கு முதலில் கோபம் பெருகியது.

பின்னர் மகள் கேட்ட வினாவும் சரியாக தோன்ற, மனைவியிடம் அபிப்ராயம் கேட்டார்.

 

இருவரும் கூடிகூடி பேசியதில் பிரசன்னா மீது நல்ல அபிப்ராயம் மட்டும் எஞ்சியது. அதோடு வருங்கால சம்பந்தி பிரதீப் மீதும் மரியாதை குறையவில்லை. தாங்களே மாப்பிள்ளை என்று முடிவுக்கட்டி பார்வையிட்டதால், பிரதீப் வேறு பெண்ணை மணந்தால் தவறென்ன என்று தான் தோன்றியது.

 

பிரசன்னா சொந்த மகனும் இல்லை. அப்படியிருக்க ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உப்புசப்பில்லாத வாழ்க்கையாக மரித்திட யார் விரும்புவார்.

 

இரண்டு நாளில் மகளை அழைத்து பிரசன்னாவை வரவழைத்து கூடி பேசினார்கள்.

 

இரண்டு மாசத்தில பொண்ணு பார்த்து உங்கப்பாவுக்கு கல்யாணத்தை முடிச்சா, அடுத்து உங்க கல்யாணத்தை நடத்தறதை பத்தி பேசுவோம். ஆனா உங்கப்பாவுக்காக நீங்களும் காலத்தை விரையம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்கள்.

 

பிரசன்னாவுக்கு இதுவே மகிழ்ச்சி என்றால் அடுத்து முரளி சொன்ன விஷயம் கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.

 

‘எங்க உறவுக்கார வழியிலேயே ஒரு பொண்ணு கல்யாணமாகாம இருக்கு. பெயர் கௌசல்யா. வயசு முப்பத்தி நாலு.

அந்த வீட்ல நல்ல வசதி. பொண்ணும் நல்லா செக்கசிவப்பா இருக்கும். நல்லா படிச்சி லட்சத்துல சம்பாதிக்கு.

ஆனா என்ன… அவங்க அப்பா இருந்தவரை என் மகளுக்கு ராஜகுமாரனை போல மாப்பிள்ளை வேண்டும்னு, அதுல பெஸ்ட் வேணும். இதுல பெஸ்ட் வேணும்னு நிறைய நல்ல வரனை தட்டி கழித்தார்.

அடுத்து என் மக இவ்ளோ சம்பளம் வாங்கறா… அதுக்கேத்த அளவு பையனும் சம்பாதிக்கணும், பெரிய பெரிய படிப்பு வேணும்னு வரன் கழிச்சி கட்டினாங்க. அடுத்து ஜாதகம் வேற சரியா பொருந்தலைனு சிலது போச்சு.

இதுல அவங்க அப்பா மாரடைப்புல இறந்துட்டார். அப்பாவோட இழப்பை அந்த குடும்பத்தையும் தாங்கி வெளியே வரவும், அந்த பொண்ணுக்கு முப்பதாகிடுச்சு. அவங்க அம்மாவுக்கும் பெருசா விவரம் இல்லை. பொண்ணு கல்யாணம் செய்ய சொல்லி வச்ச இடமெல்லாம் அதே வசதி, சம்பளம் எதிர்பார்க்க யாரும் முன்ன வரலை.

 

சம்பளம் இல்லைன்னாலும், வசதி இவங்களை விட குறைச்சல்னாலும், படிப்பு இல்லாட்டியும் கல்யாணம் பண்ண தேடினாங்க. அதோட ஜாதகம் உச்சத்துல நின்னுடுச்சு. அந்த தோஷம் இந்த தோஷம் பரிகாரம்னு எங்க போனாலும் அந்த பொண்ணோட மனசை நோகடிச்சிடுச்சு.

கல்யாணமே வேண்டாம்னு அந்த பொண்ணு சொல்லிடுச்சு.

அவங்க அம்மாவும் சமீபத்துல இறந்துட்டாங்க. இப்ப மறுபடியும் பேசி பார்த்தா உங்கப்பாவுக்கு சரியா பொருந்தும். இதான் கௌசல்யா போட்டோ” என்று கொடுத்தார்.

 

அதென்னவோ பார்த்ததும் பிரதீப் அப்பாவிற்கு பொருத்தமென்று முடிவு கட்டியவன், “அவங்களிடம் நான் பேசலாமா?” என்று கேட்டு கல்லூரிக்கு மட்டம் போட்டு, சுஹாசினியை அழைத்து கொண்டு கௌசல்யாவை சந்தித்தான்.

 

கௌசல்யாவோ ”நான் அவரோட நேர்ல சில விஷயம் பேசணும். அப்படி பேசிட்டு அவருக்கு சம்மதம்னா பிரதீப்பை மணக்க தயார்’ என்றாள்‌.

 

பிரசன்னா யோசித்தவனாக ‘அப்பாவிடம் பேச வைக்கறேன்” என்று வாக்கு தந்தான்.

 

ஓரளவு அழகான வட்டம் வரைந்துக்கொண்டிருக்க, அதில் உள்ளே நிறுத்தும் நபரான பிரதீப், அவர் ஒரு கட்டத்தில் சென்று நின்று கொண்டால்? அதற்கு தான் பிரசன்னா திட்டம் போட்டு முரளி மூலமாக தந்தை பிரதீப்பிடம் பேச வைத்தது. இந்தளவு உரிமையும் ஓட்டுதலும் உண்டானது.

 

முரளி போனை பெற்றதும் “அப்பா என்ன மாமா சொன்னார்.” என்று கேட்டான்.

 

“அவர் எதுவும் சொல்லலை மாப்பிள்ளை. நான் கல்யாணத்துக்கு இக்கட்டை மட்டும் முன்ன வச்சிட்டு வந்துட்டேன். எப்படியும் உங்கப்பா உங்களிடம் பொண்ணு பார்க்க சம்மதிக்கலாம். அவருக்கு பொண்ணு கிடைக்காதுனு ஒரு மிதப்பு இருக்கு. அவர் சம்மதிச்சிட்டா மிச்சதை நீங்க பார்த்துப்பிங்கன்னு விட்டுட்டேன்.

 

உங்கப்பா பிரதீப் எப்படி நல்லவரோ அதே அளவு கௌசல்யாவும் நல்ல பொண்ணு மாப்பிள்ளை‌.” என்பதை மட்டும் காதில் போட்டார்.

 

“நான் பார்த்துக்கறேன் மாமா.” என்று பிரசன்னா துள்ளிக் குதிக்காத குறையுடன் வெளியே வந்தான்.

 

பிரதீப் இன்னமும் அறையிலிருந்து வெளிவரவில்லை‌. பிரசன்னாவோ தானாக சென்று தந்தையிடம் பேச்சு தொடுத்தால் கண்டறிந்திடுவாரோ என்று ஆச்சி காஞ்சனாவை தான் அனுப்பி என்ன நிலையில் இருக்கின்றார் என்று அறிந்து வர கூறினான்.‌

 

கதவு வரை சென்ற காஞ்சனா மூக்கை சுருக்கி சுவாசித்து, பிரசன்னாவை காண திரும்பி வந்தார்.

 

“உங்கப்பா ரூம்ல சிகரெட் வாடை வருது. எப்படிடா கதவை தட்ட?” என்று கூறிய அடுத்த நொடி, “இவருக்கு இதே வேலையா போச்சு” என்று அவனாகவே கதவை பலமாக தட்டினான்.

 

பிரதீப் மெதுவாக கதவை திறந்து, “என்னடா?” என்றார்.

 

“கதவை பூட்டிட்டு ஸ்மோக் பண்ணறிங்களா? அதுவும் உங்க அம்மா வீட்ல இருந்தும்” என்று பிரசன்னா கோபமாக கேட்டான்.

 

அன்னை எதிரில் மகன் கண்டிக்க, “அதெல்லாம் இல்லையே. நான் சிகரெட் பிடிக்கலையே.” என்று மழுப்பினார்.

 

“பொய்.. பச்ச பொய். ஆச்சி நீங்க தானே சொன்னிங்க.” என்று அதட்டி கூப்பிட, “ம்கூம்… அவங்க அப்பா பழக்கம் இதை மட்டும் பிடிச்சிக்கிட்டான். என்ன பிரதீப் இதெல்லாம்?” என்று காஞ்சனா கண்டிப்பான தாயாக மாறினார்.

 

வருண் அகில் சலீம் எல்லாம், “அங்கிள்… வர்றப்பவே வெளியே தம் அடிச்சிட்டு வந்தா பிரசன்னாவிடம் மாட்ட மாட்டிங்கள்ல… போங்க அங்கிள். தப்பு செய்யவும் தெரியலை. மறைக்கவும் தெரியலை.” என்று சிரித்தார்கள்.

 

பிரதீப்போ பிரசன்னாவை பார்த்து முகம் திருப்பிக் கொண்டு அறைக்குள் திரும்ப அடைந்தார். உடனே பெண் பார்க்க பிரதீப் சம்மதிக்கவில்லை. பிரசன்னா கூட சோர்ந்தவனாக நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்க வாடினான்.

 

ஆனால் இரண்டு நாள் கழித்து பிரதீப் பிரசன்னா அறைக்கு வந்து, “சரிடா… கல்யாணம் பண்ண சம்மதிக்கறேன். ஆனா எனக்கு யாரும் பொண்ணு தரமாட்டாங்க. அதோட என்னால அடிக்கடி அவமானப்பட்டா நீயா என்னை கட்டாயப்படுத்தறதிலருந்து விட்டுடணும்.

 

சுஹாசினியை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று கோரிக்கையை முன்வைத்து அவராக தலையை கொடுத்தார்.

 

பிரசன்னாவோ ‘இதற்கு தான் ஆசைப்பட்டேன்’ என்ற ரீதியில், “கவலையேபடாதிங்க… பொண்ணு பார்க்கறிங்க, பேசறிங்க, கல்யாணம் செய்யறிங்க. தட்ஸ் இட் இதுல எவன் குறுக்கே வந்தாலும், கவலையில்லை. ” என்று புதிர் போடும் விதமாக பேசினான்.

 

“ம்கூம்… நல்ல நாளிலேயே இவன் பேச்சுக்கு தலை

யாட்டுவேன். இதுல தலையே கொடுத்துட்டேன். என்னென்ன செய்யறானோ’ என்று முனங்கினார் பிரதீப்.

 

-தொடரும்.

 

 

 

 

2 thoughts on “கரை தந்த கடலே-11”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 paara maamanarum marumaganum plan podranga😘 super idea edhu mattum pradeep ku therinjidhu avlo dhan 🤣 endha kowsalya dhan pair ah parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!