அத்தியாயம்-25
“கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம்
“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர்
சென்னையின் மாலைக்காற்று
சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது.
சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் சாரா.
கீழே நீந்தும் நீச்சல் குளம்… அருகில் மெதுவாக அசையும் தேங்காய் மரங்கள்.
“டாக்டர் சாரே…” என்று சாரா மெதுவாக அழைத்தாள்.
“ஹ்ம்” என்று படுக்கையில் இருந்து எழுந்து அவளை பார்த்தான் சார்லஸ். இங்கு வந்ததும் நன்றாக குளித்து உறங்கி ஓய்வெடுத்தவன் சோம்பல் முறித்தான்.
“இங்கன எனிக்கு மனசு லைட்டா பீல் ஆகுது சாரே” என்றாள்.
“ம்ம்ம்.. தனியா எங்கயாவது நாம மட்டும் வந்தா, நீ சந்தோஷப்படுவனு தான் இங்க கூட்டிட்டு வந்தேன். அன்னிக்கே சொன்னேன். உனக்கு ஹனிமூன் போகாதது லேசா வருத்தம் இருக்குன்னு.” என்று யூகித்தவனாக சிரித்தான்.
“டாக்டர் சாரே.. அதில்லா.” என்று சிணுங்கினாள். அவளுக்கு அந்த ஆசையும் உண்டென அறிந்தப்பின், அதுவும் அவனுக்கு தெரிந்தப்பின் முகத்தில் வெட்கத்தை பூட்டி மறைத்து வைக்க சாராவுக்கு தெரியவில்லை.
சார்லஸ் அவளை மன்மதலீலை பார்வையால் வருட, “நான் துகிரா சேச்சியை பார்க்க போறச்ச எந்த வஸ்திரம் அணியனும்னு தேர்வு செய்யும். நிங்கள் உங்க மீட்டிங் போயிட்டு வாங்கள்” என்று அவனது முதுகில் கைவைத்து தள்ளினாள்.
சாராவை அறையில் இருக்க கூறிவிட்டு பக்கத்தில் நடைப்பெறும் மெடிக்கல் மீட்டிங்கிற்கு சென்று வர தயாரானான்.
கச்சிதமாக ஆடை அணிந்து, ஆள் உயர கண்ணாடியில் பார்த்தான். எதிரே சாரா அவனை ரசித்து பார்ப்பதை கண்ணாடியிலேயே கவனித்தான். பின்னால் திரும்பாமலே கைப்பட்டனை அணிந்தபடி, “இ மலையாள பெண்குட்டிக்கு இந்த சேட்டனை இப்படி ரசிக்குமென்றால், நான் மீட்டிங் போகணுமென மறுக்க யோசிக்கணும்.” என்று கூற, “ஆ.. அடிப்போலி… ஆள் வஸ்திரம் அணிந்து ஆளை அசத்தும் அழகில் இருந்தால் நான் எந்து செய்யும். கண்ணு ரசிக்கும் அல்லோ. நிங்கள் என்னை கேலி கிண்டலடிச்சு.” என்று கூற, சாரா அருகே வந்தவன், “நீ துகிரா வீட்டுக்கு போக ரெடியா இரு. நான் வந்துடறேன்.” என்று கூறினான்.
சாரா சம்மதமாய் தலையசைத்தாள்.
சார்லஸ் புறப்பட்டு சென்றதும், சாரா மனமெல்லாம் சந்தோஷத்துடன், கொஞ்சம் ஓய்வெடுத்தாள்.
பின்னர் நேரம் நகர, அவள் அணிவதற்கான வஸ்திரத்தை எடுத்து மெத்தையில் வைத்து, அதற்கான அணிகலனையும் வரிசையாக வைத்துவிட்டு தயாராக ஆரம்பித்தாள்.
கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருந்தாள் சாரா.
மஞ்சள் கலந்த ஆஃப்-வைட் கேரள சேலை அதன் கருப்பட்டையில் மெல்லிய பொன் வரிகள்.
முடி நீளமாக பின்னியிருந்தாள்.
காதில் பெரிய ஜிமிக்கி…
அது சாராவின் சின்ன சின்ன அசைவுக்கும் துள்ளிக் கொண்டே இருந்தது. கையில் பச்சை கண்ணாடி வளையல்கள். நடக்கும் ஒவ்வொரு நொடியும், சின்னதாய் சத்தம் எழுப்பின. கூடுதலாக மரகத பச்சை வண்ணத்தில் கல் பதித்த தங்க செயின் அணிந்துக் கொண்டாள்.
“இது ரொம்ப ஓவரா இருக்கோ” என தன்னையே பார்த்து மெதுவா சொன்னாள் சாரா. சாரா கண்களில் டாக்டர் சாரே வந்து பார்ப்பார். என்ன சொல்வாரோ என்ற எதிர்பார்ப்பு கூடியிருந்தது.
அதே நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சார்லஸ் உள்ளே வந்தான்.
மீட்டிங்கில் இருந்த சீரியஸ் முகம்,
அதிலேயே சற்று சோர்வும் இருந்தது.
“சாரா” என்று அழைக்க வந்தவன்…
அடுத்த நொடி ஸ்தம்பித்து நின்றுவிட்டான். சாரா அவனை நோக்கி திரும்பினாள்.
சாரா அணிந்த ஜிமிக்கி மெதுவா ஆடியது. ஒரு நொடி, சாராவின் அழகில் சார்லஸ் பேசவே இல்லை.
அவளும் அவனுடைய பார்வையை தாங்க முடியாமல்
விழியை பணித்தாள்.
“டாக்டர் சாரே” அவள் மெதுவா அழைத்தாள். அவன் இன்னும் பதில் சொல்லவில்லை.
அவன் மெதுவா அவளிடம் நடந்து வந்தான். ஒவ்வொரு அடியும்
அவளுக்கு இதயத் துடிப்பாய் கேட்கப்பட்டது.
“ஏய்… சாரா.. இது நீ தானா?” என்று ஆரம்பித்தான். “பின்னே?” என்று அவள் இன்னும் கண் உயர்த்தவில்லை.
“நீ ரொம்ப அழகா இருக்கே சாரா”
என்று மெதுவாக சொன்னான்.
சார்லஸின் உள்ளத்திலிருந்து வந்த உண்மையான பாவனையால்
சாரா முகம் சிவந்தது.
சாரா மூச்சே அடங்காமல் ஆர்ப்பரித்தது. அவன் கை மெதுவா உயர்ந்தது. அவள் காது அருகே இருந்த ஜிமிக்கியை மென்மையாக தொட்டான். சின்ன சத்தத்தோடு அசைந்தது.
“இப்படி நீ அழகான ஏஞ்சல் மாதிரி வர்றேன்னு தெரிஞ்சிருந்தா, சீக்கிரமா வந்திருப்பேன்” என்றவனை பார்வையை அகற்றாமல் பார்த்தாள்.
சார்லஸின் பார்வையில் காதலும் காமமும் போட்டியிட்டது.
“நிங்கள் எப்போ பார்த்தாலும் என்னிடம் விளையாடி பறையறது நியாயமா?” என்று அழகை பதுக்கிய மங்கையாக சிரித்தாள்.
“ஏ… அங்க பாரு.. யூ லுக் கார்ஜியஸ். லவ்லி” என்று அவளது அழகை அவளையே கண்ணாடி முன் நிறுத்தி காண வைத்தான்.
“டாக்டர் சாரே.. நிங்கள் இப்படி பேசுவிங்களா…?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். மணமாகும் போது பாதர் எதிரே மணக்க ஒப்புதல் அளித்தவன் முகம் இப்படியா இருந்தது.
“இல்ல” அவன் மெதுவா தலையசைத்தான். “நீ இப்படி இருக்கும்போது தான். நான் என்ன பேசறேன்னு தெரியலை” என்றவன் அவளது நெற்றியில் விளையாடிய சிகையை தொட்டு மீட்டினான்.
மெதுவா கையை நீட்டி
அவள் கன்னத்தில் சற்றே தொடர்ந்தான்.
“சாரா” என்றவன் குரல் மாறியது.
“நிஜமா.. நீ இப்படி இருந்தா…
எனக்கு வேற எதுவும் வேண்டாம் போல இருக்கு” என்று மனதை திறந்து பேசினான்.
“ம்கூம்.. டாக்டர் சாருக்கு என்னவோ ஆச்சு. நாம துகிரா சேச்சி பங்ஷனுக்கு போகணும்” என்று நினைவுப்படுத்த, லேசான டச் அப் செய்து வர தயாரானான்.
சார்லஸ் தயாராகி வந்ததும், சாரா சார்லஸை பின்தெடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
வளையல் சத்தம், ஜிமிக்கி ஆட்டம், அந்த அறை முழுக்க ஒலித்தது.
அந்த மாலையில் துகிராவின் வீடு அழகாக மிளிர்ந்தது. வாசல் முழுக்க வண்ண விளக்குகள்,
தோட்டம் முழுக்க மெதுவான இசை.
சார்லஸ் வீட்டிற்கு உபர் மூலமாக வந்து சேர்ந்ததும். அவ்வீட்டில் கூட்டம் குழுமியிருந்தது.
சார்லஸிற்கோ துகிரா-இஷான் குடும்பம் தவிர்த்து யாரையும் தெரியாததால் தயக்கமாய் நடந்தான். சாராவோ ஏதோ சொந்த சகோதரிக்கு வளைகாப்பு விழா என்பது போல உற்சாகமாய் வந்தாள்.
“சார்லஸ் அங்கிள்” என்று ஓடி வந்தது சிறு குரல். சாரா திரும்பி பார்த்தாள். சின்ன பாவாடை சட்டையில், இரட்டை சடையுடன், முகம் முழுக்க சிரிப்போட ஓடி வந்தாள் அமுல்யா குட்டி.
“அங்கிள்” என்று நேராக சார்லஸின் காலில் மோதிக் கட்டிக் கொண்டாள்.
“ஏய்… அமுல்யா குட்டி”
என்று அவளை தூக்கிக் கொண்டான் சார்லஸ்.
அந்த காட்சியை பார்த்த சாரா, அவள் மனதினுள்ளே ஏதோ மெதுவாக உருகியது.
இந்த குழந்தைக்காக தான் சார்லஸ் தன் காதலை மனதோடு மரித்து கொண்டது.
“ஹாய்… சார்லஸ் வெல்கம்” என்று இஷான் கையை நீட்டினான்.
சார்லஸ் பதிலுக்கு “ஹலோ இஷான்” என்று பேச ஆரம்பித்தனர்.
“ஹாய் மா… எப்படியிருக்கிங்க. பயணம் எல்லாம் எப்படி சௌகரியமா?” என்று விசாரித்தான்.
சாரா விழித்தவளாக சார்லஸை கண்டாள்.
“ஏய் சாரா.. துகிராவோட ஹஸ்பெண்ட் இஷான் மறந்துட்டியா என்ன” என்று கூற, “எனிக்கு ஞாபகம் உண்டு சாரே” என்று அவசரமாய் அசட்டுதனமாய் புன்னகைத்தாள்.
“வாப்பா… சார்லஸ் எப்படியிருக்க? நீ எப்படியிருக்கம்மா?” என்று துகிராவின் அத்தை பைரவி வந்தார்.
“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி. நீங்களாம் சௌக்கியமா?” என்று சார்லஸ் கேட்க, “உன் புண்ணியத்தில் துகிரா இஷானோட கல்யாணம் முடிந்தது. உன் கல்யாணத்துக்கு வர்றப்ப தான் ரிஷி-அஞ்சனா கல்யாணமும் மும்முரமா போயிட்டு இருந்தது.
அதுல உடம்பு கொஞ்சம் சுகவீனமாச்சு. அதனால தான் இஷான் துகிரா அமுல்யா குட்டி மட்டும் வந்தாங்க. இப்ப சௌக்கியத்துக்கு என்னப்பா குறைச்சல். இனி பிரதன்யா காலேஜ் முடியவும் அவளுக்கு ஒருத்தனை பார்த்து கட்டி கொடுக்கணும்.” என்று ஒப்பித்தவாறு மனதார வரவேற்றார்.
சாராவோ சார்லஸ் கையை பிடித்துக் கொண்டு இணைந்து நடந்தாள். எதிர்ப்பட்டவர் யாருமே சாராவுக்கு அறிமுகமில்லாதவராயிற்றே.
“ஏன்மா தயங்கற.. நாங்க எல்லாம் சார்லஸ் தம்பிக்கு நெருக்கம் தான்.” என்று கூறினார் பைரவி.
“இல்லா.. அம்மே.. எனிக்கு தமிழ் அதர அறில்லா. மலலயாளம் மாத்திரமே அறியும். அதை படிக்கணுமென்னு நான் சம்சாரிக்கில்லா.” என்று சாரா கூற, பைரவி விழித்தார். இவர்களுக்கு இவள் பேசுவது புரியாதென அமைதி காப்பதாக தெரிவித்தாள்.
பைரவி முகபாவனை கண்டு, “ஆன்ட்டி அவளுக்கு தமிழ் வராது. மலையாளம் தான். ஆனா நாம பேசறது புரியும். உங்களிடம் பேசறப்ப உங்களுக்கு புரியாதேனு அமைதியா இருக்காளாம்.” என்றான்
“ஓ… சாரிம்மா.. நீ மலையாளம் பேசுவதா துகிராவும் சொன்னா. எனக்கு தமிழை தவிர எதுவும் புரியாது. உள்ள வாங்க” என்று அழைத்தார். கூடவே வரவேற்பு பானத்தை கையில் தந்து பருக வைத்தார்.
“இவ்வட துகிரா சேச்சி எவ்விட உண்டு?” என்று சாரா கேட்க, அமுல்யாவை கையில் தூக்கிக்கொண்டே உள்ளே வந்த இஷானோ “அம்மா… துகிராவிடம் கூட்டிட்டு போறேன். சாராவுக்கு கம்பர்டபிளா இருக்கும்.” என்று அழைத்துப் பார்த்தான்.
பைரவியும், “அதான் சரி. நீ அழைச்சிட்டு போ. நான் மத்தவங்களையும் கவனிக்கறேன். சார்லஸ் தம்பி.. இது உங்க வீட்டு விஷேஷம்.” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அவர் நகர்ந்தும் படியில் ஏற, இஷான் தம்பி ரிஷி “ஹலோ அண்ணா… எப்ப வந்திங்க. நல்லாயிருக்கிங்களா? என்ன அண்ணா… என் கல்யாணத்துக்கு நீங்க வரலை.” என்று ரிஷி வேறு பாசத்தை பொழிந்தான்.
“வரக்கூடாதுனு இல்லை… அப்ப பிஸியா இருந்தேன். மூச்சு விடக்கூட முடியலை.” என்று பதில் தந்தான். ரிஷி அருகே அஞ்சனா மென்னகையுடன் நின்றாள்.
“டேய்… நீ அஞ்சனா வீட்டு ஆட்களை கவனி. சார்லஸ் சாராவை நான் துகிராவிடம் அழைச்சிட்டு போறேன்” என்று கூறியதும், ரிஷி அஞ்சனா கூட மற்றவரை காண சென்றனர்.
இஷானோ, “ஆக்சுவலி… துகிரா உங்க வருகைக்காக தான் ரொம்ப ஆவலா இருக்கா. இந்த வீட்ல எங்கம்மா வழி உறவு, எங்கப்பா வழி உறவு, அப்பறம் அஞ்சனா ரிலேட்டிவ்ஸ், என்னோட பிரெண்ட்ஸ், அம்மாவோட நெய்பர் பிரெண்ட்ஸ், நிறைய பேர் வந்திருக்காங்க. அவளுக்குன்னு வர்ற உறவா, துகிரா மெர்ஸியையும் உங்களையும் தான் நினைச்சா.
மெர்ஸி பிரகனென்ட் என்றதால டிராவல் பண்ண முடியாத நிலையில் இருக்க, துகிரா மூஞ்சே டல்லாகிடுச்சு.
அப்பறம் நீங்களும் சாரா சிஸ்டரும் வர்றதா சொன்னதும் தான் சந்தோஷமே.” என்று பேசியபடி அறைக்கு வர அமுல்யாவோ தந்தை கையிலிருந்து இறங்கி துகிராவை நோக்கி ஓடியிருந்தாள்.
“அம்மா.. அம்மா” என்று ஓடி சென்ற அமுல்யாவை துகிரா வயிற்றில் மோதும் அளவிற்கு வந்து சேர, “அமுலு குட்டி… ஏன் இந்த ஓட்டம். முதல்ல நில்லு. நெத்திசுட்டி எல்லாம் சிலுப்பிட்டு இருக்கு பாரு” என்று சரிப்படுத்தினாள் துகிரா.
“துகி.. நீ அமுலுவை விட்டுட்டு யார் வந்திருக்காங்கனு பாரு” என்று மெதுவாக சொன்னான்.
துகிரா திரும்பி பார்க்க சார்லஸும்,
அவன் அருகில் சாராவும் கொண்டிருந்தாள். பழைய நினைவுகளும், புதிய வாழ்க்கையும் மெதுவாக சந்தித்தது.
“வாங்க… வாங்க” என்று ஆனந்தமாய் வரவேற்றாள். துகிரா தான் முதல் வார்த்தை பேசினாள். எந்த குற்றமும் சங்கடமும் இல்லாமல், வரவேற்க, சாரா தயக்கத்தோடு முன்னே வந்தாள்.
“சேச்சி நின்ட வயிறு இத்தனை பெரிசாயி. பார்க்கவே நன்னாயிட்டு. எனிக்கு ஆனந்தமாயி” என்று பரவசமாய் பேசினாள்.
“மெர்ஸி போன் செய்து நீங்க வர்றிங்க என்றதும் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தது.” என்றவள், சாரா கையை பிடித்தாள். அந்த தொடுகை சாராவுக்கு தன் ட்வின் சிஸ்டர் கிரேஸே தீண்டியது போல ஒரு உணர்வு.
“சார்லஸோட முதல் அவுட்டிங்கே இந்த பங்கஷன் தான்னு கேள்விப்பட்டேன்.” என்று சார்லஸை பார்த்து சிரித்தாள்.
“இ.. டாக்டர் சார் பிஸி பிஸினு சொல்லி, நிங்கள் பங்ஷன் என்றதும் நான் புஷ் பண்ணி இவ்வட இழுத்துட்டு வந்தல்லோ. எனிக்கு அதில் இது அவரோட நான் பயணம் செய்யும் முதல் அவுட்டிங் என்பதே மறந்து போயி.” என்று சிரித்தாள் சாரா.
“ஓ… அப்ப இங்க சார்லஸா கூட்டிட்டு வரலையா. சிஸ்டர் தான் அழைச்சிட்டு வந்ததா?” என்று இஷான் கேட்க, சார்லஸோ “அய்யோ… மெடிக்கல் மீட்டிங் ஒன்னு சென்னையில. நான் மட்டும் வர்றதா இருந்தது. சாரா தான் ஒரே அடம். துகிராவை பார்க்க ஒரே தொல்லை” என்று கூறினான் சார்லஸ்.
“டாக்டர் சாரே… எனிக்கு துகிரா சேச்சியை காணும் போது, நொட்டு பேசும் போது, என்ட ட்வின் சிஸ்டர் கிரேஸாக பாவிக்குது மனசு.” என்று சந்தோஷமாய் உரைத்தாள்.
சார்லஸ் “என்னது கிரேஸ் சிஸ்டரா” என்று அதிர, துகிராவுமே, “எனக்கு கூட சாரா இங்க வந்து என் கையை பிடிச்சி சந்தோஷமா என் சார்பா என் வளைகாப்பு விழாவுக்கு நிற்கறப்ப, எனக்கு எங்க அக்கா துர்கா வந்தது போல மனசு ஆனந்தப்படுது. ஆனா துர்கா அக்கா என்னை விட பெரியவ. சாரா என்னை விட சின்னவங்க” என்று பகிரவும் தான் இரு பெண்களுக்கும் தங்கள் உடன்பிறந்தவர்களை நினைத்து பேசிக்கொள்வதும், அன்பாக இருப்பதால், அவர்களாக பாவிப்பதும் எதார்த்தமாக சார்லஸ் நிம்மதியடைந்தான். சிலருக்கு தன் உறவுக்கு நிகராக மற்றவரை பார்ப்பது இயல்பு தானே.
“போதும்.. நீ கிரேஸ்னு பேசி துகிராவை இங்கயே பிடிச்சி வச்சிக்காத. கீழே பங்ஷன் ஆட்கள் வந்திருக்காங்க. அவங்களையும் பார்க்கணும்” என்று சார்லஸ் மொழிந்தான்.
இஷானும், “நாமளே துகிராவை கீழே அழைச்சிட்டு போகலாம்.” என்று கூற, சார்லஸ்-சாராவும் துகிரா-இஷானோடு இணைந்து நடந்து வந்தார்கள்.
அமுல்யாவோ தந்தை இஷான் கை வளைவில் இருந்தவள், சார்லஸிடம் தாவினாள்.
“ஓ மை ஏஞ்சல். என்னிடம் வாரே” என்று தூக்க அமுல்யா சார்லஸை பார்த்து சாராவிடம் தாவினாள்.
தோட்டத்தில் வளைகாப்பு விழா ஆரம்பமானது. வண்ண விளக்குகள் ஒளிர, மெதுவான காற்று வீச, உற்றார் உறவினரின் சிரிப்பு சத்தம், குழந்தைகளின் ஓட்டம்.
அந்த சூழலில், சாரா சார்லஸ் அருகே நின்றாள்.
“டாக்டர் சாரே அதென்னவோ என்ட மனசு பஞ்சு போல இலகுவாய் இருக்குற பீலாகுது. எதனாலே?” என்று மெதுவா கூறினாள்.
“ஏன்னா… சாரா இந்த சார்லஸோட முதல் முறை இப்படியொரு பாஸிடிவான பங்ஷனுக்கு வந்திருக்கா.” என்றான்.
“நானும் அதே தான் மனசில் நினைச்சேன்.” என்று அவனது கையை இறுக பற்றினாள்.
அந்த நேரம் ஒரு மூத்த பெண் துகிராவுக்கு வளையல் போட ஆரம்பித்தாள். அந்த காட்சி
சாரா கண்களில் விழுந்தது. ஒரு பெண் முழுமையாய் தாய்மையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருப்பது அத்தனை அழகான காட்சியாக தெரிந்தது.
மனையில் அமர்ந்திருந்த துகிராவுமே சார்லஸ் சாராவை பார்த்து முகம் பூவாக மலர்ந்து பார்த்தாள். சார்லஸின் வாழ்க்கையில் சாராவை பற்றி மெர்ஸி முன்பே கூறியிருந்தால், அத்துடன் சமீபத்தில் சாராவை நிர்மலா ஏசியதும், அதற்காக சார்லஸ் அன்புடன் நிர்மலா பேச்சை கேட்டு அதட்டி, சாராவிற்காக துணை நின்றது எல்லாம் கூறியிருக்க, இதோ சாரா சார்லஸ் அழகிய தம்பதியாக பார்த்ததும் நிறைவாக உணர்ந்தாள். அதிலும் தனக்காக வந்த உறவாக மகிழ்ந்ததாள்.
அமுல்யா அங்கும் இங்கும் நடந்து சுற்றி விளையாட, சாரா கண்கள் அவளையும் மொய்த்தது.
துகிரா சாராவை அழைத்து, அவளையும் வளையலிட அழைத்திட “நானா? வேண்டாம் சேச்சி” என்று மறுக்க, “அட… எங்க துகிராவுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கிங்க. வளையல் போட்டு அழகு பாரும்மா. அடுத்த கொஞ்ச நாளில் நீங்களும் இந்த கோலத்தில் நிற்கற காலம் ரொம்ப தூரமில்லை.” என்று பைரவி கூற, சாரா பைரவியை புதிதாக பார்த்து அவர் கூறுவது போலவே வளையலிட்டு, சந்தனம் பூசி, பூமஞ்சள் அரிசி தூவி, துகிரா நெற்றியில் சிலுவையிட்டு ‘கர்த்தரே… துகிரா சேச்சி இ-வீட்டில் ஆனந்தமாய் நடத்தப்படணும். துகிரா சேச்சிக்கு நல்லபடியா சுகமாயி பிரசவம் உண்டாகணும். சேச்சியின் வயிற்றில் உதித்திருக்கும் சிசு இபிரபஞ்சத்தில் சுகமாய் பிறந்து சேச்சியை மகிழ்வித்து அருள வேண்டும்.’ என்று மனதோடு ஜெபித்தாள்.
சார்லஸ் கையை கட்டி சாராவை வேடிக்கை பார்த்தான். “சாரா.. சார்லஸ் கண்கள் உங்களையே விழுங்குது. ஹீ லவ்ஸ் யூ.” என்று காதில் கிசுகிசுக்க, சாரா சார்லஸ் இருக்குமிடம் பார்வை வீசினாள். துகிரா கூறியது போல காதல் பேசும் விழி
அம்பை சாரா மீது பதிந்திருந்தான் சார்லஸ்.
-தொடரும்.
