Skip to content
Home » செந்நீர் துளிகள்

செந்நீர் துளிகள்

        செந்நீர் துளிகள்

  பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது. 

   பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது. 

    தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா. 

    “சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்… வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?” என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.

     “நோ… இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை.” என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார். 

    மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்பதாக ஜானகியும் புன்னகைத்தார். 

     தனிஷ்காவோ உப்ஸ்ஸ்…என்று சலித்துக் கொண்டு, நிர்மலாவை போலவே செய்கை செய்து உதட்டசைவில் மட்டும் நிர்மலா பேசிய வசனத்தை பேசி காண்பித்தாள். 

      “தனிஷ்… எப்படி டி. ஒருத்தர் செய்யறதை அப்படியே அங்க அசைவில செய்து காட்டற… நிர்மலா மேம் செய்தது மாதிரியே இருக்கு.” என்று பிரபா கேட்டாள்.

     “பழகிடுச்சு டி. ஒருத்தரை அதிகமா கவனித்தா அவங்களை மாதிரி செய்கைகள் வந்திடுது.” என்று சாதரணமாக தோளைக் குலுக்கினாள். 

     ஸ்டெல்லா “பச்…” என்று சலித்து திரும்பினாள். 

     “என்னாச்சு இவளுக்கு…” என்று தனிஷ்கா பிரபாவிடம் கேட்டு திரும்பினாள். அது மூவர் அமரும் பயணயிருக்கை. தோழிகள் மூவரும் அதில் அமர்ந்து இருந்தனர்.

   “அவள் லவ்வரோட சாட் பண்ணினா தனிஷ். பதினெந்து நிமிடமா நெட்வோர் இல்லை. மெஸேஜ் சென்ட் ஆகாம மேடம் அப்சட்” என்றதும் தனிஷ்கா “ஓ… இதானா…” என்று கிண்டலாய் சிரித்தாள். 

     ஸ்டெல்லாவோ, “எந்த வலியும் தனக்கு வந்தா தான் தெரியும். காதலும் அப்படி தான். உனக்கு காதல் வந்து நீ அதை உணருறப்ப பீல் பண்ணு.” என்று அறிவுரையா, இனிய சாபமா ஏதோவொன்றை உதிர்த்து விட்டு மீண்டும் ஸ்டெல்லா போனை வெறித்தாள்.  

     “காதலா…  ம்ம்… நானும் அப்படி தான் ஏதாவது வந்து தாக்கும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். லைப் போர் அடிக்கு ஸ்டெல்லா.” என்றவளிடம் “வராத வரை சந்தோஷப்படு. வந்துட்டு அவஸ்தைபடுவ” என்று சொன்னவள் அடுத்த நொடி “ஹேய் மதன் காலிங் உஸ்..” என்று ஹட் செட்டில் “ம்… எஸ் டா நெட்வோர்க் இல்லை.” என்று பேச்சை ஆரம்பித்தாள். 

   தற்போது பிரபா இந்த அழைப்பை துண்டிக்க மீண்டும் நெட்வோர்க் தடைப்பட்டால் மட்டுமே இருப்பிடம் உணருவாள். 

   அது வரை தனியுலகம் தான். பிரபாவும் தனிஷ்காவும் ஜன்னல் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்து பேசியபடி வந்தனர். 

  இவர்கள் எல்லாம் பேட்சுலர் ஆப் டூரிஸம் பாடத்தை பயில்பவர்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட இடமாக சென்று நேரில் தகவல் சேர்த்து மொழி முதல் அம்மாநிலத்தின் சிறப்பை அறிந்து வழிநடத்த கற்று தேர்வது. இதில் மொத்தம் முப்பது பேர். 

     குழுவில் இருபத்தியெந்து மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர். அனைவரும் பெண்களே…. டிராவல் கையிடு சர்வேஷ் மற்றும் ஓட்டுநனர் மணிகண்டன். கல்லூரி எடுப்பிடியாக ப்யூன் மருது வந்திருந்தார்கள். 

     நார்த் இந்தியாவை சுற்றி பார்க்கவும், அறியவும் இந்த சுற்றுலாவுக்கு தற்போது வந்திறங்கி டெல்லியை பார்த்து முடித்து அடுத்து பஞ்சாப் சென்று கொண்டிருந்தனர். 

      பாதி பேர் உறக்கத்தில் இருந்தனர். பாதி பேர் குளிரிலும் புது இடம் என்பதிலும் வேடிக்கை பார்த்தனர். 

      அரை மணி நேரம் செல்ல ஒரு தேனீர் கடை தென்பட்டது. 

     டிராவல் கையிடான சர்வேஷ் நிர்மலாவிடம் “மேம்… காபி டீ வேண்டும்னா கேர்ல்ஸ எழுப்பி குடிக்க சொல்லுங்க. இங்கிருந்து அரைமணி தாண்டினா, சப்பாத்தி தால் நல்லாயிருக்கும். சவுத் சைட் புட் கிடைக்கும்.” என்று கூறியதும் நிர்மலாவும் சரியென்று தலையாட்டினார். 

    “கேர்ல்ஸ் வண்டி இப்போ ஒரு டீ கடையில நிறுத்தப்போறோம். யாரெல்லாம் டீ காபி குடிப்பிங்களோ வந்து குடிச்சிக்கலாம். யாரும் தனியா போகாதிங்க.” என்று பஸ் நிற்க கூறவும் தனிஷ்கா, பிரபா, ஸ்டெல்லா மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கினார்கள். 

     மற்ற மாணவிகளும் இறங்கி குடிக்க, ஆண்கள் மூவருமான சர்வேஷ், மணிகண்டன், மருது தேனீர் பருகினார்கள். 

   அந்த நேரத்திற்கு டீ தேவமிர்தமாக இருந்தது. வண்டியின் ஓனர் மற்றும் கையிடான சர்வேஷிடம் அங்கிருந்த இராணுவ உடையணிந்த ஒருவர் பேசுவதை தன்ஷிகா பார்த்தாள். 

     முதுகு பக்கம் பார்க்க, ஏதோ அந்த இராணுவ வீரன் தன் வண்டியில் வந்த வழிகாட்டியிடம் என்னவோ பேசுவது புரிந்தது.. 

      தேனீர் சூடாக பருகியவள் அந்த வீரன் திரும்ப முகத்தை கண்டாள். 

     இதுவரை கம்பீரமான முகம் என்று அவள் கண்டதுண்டு. ஆனால் இத்தனை தூரம் அவள் மனதில் ஒரு நொடியில் பதிவாகி ஈர்க்கவும் அவனையே கண்டிருந்தாள். 

     அவன் பேசும் பேச்சுக்கும், கையசைப்புக்கும் மீண்டும் முகம் காண தலையை அங்கும் இங்கும் திருப்பினாள்.

      சர்வேஷ் எதையோ நிர்மலா மேமிடம் பேச, அவர்களோ முதலில் தயங்கி, பின்னர் மென்னகையோடு தலையசைப்பதை கண்டாள். 

      என்ன பேசினார்களோ ஆர்வம் மேலோங்க, அருகே செல்ல அதற்குள் மாணவிகள் பஸ்ஸில் ஏறச்சொல்லவும் அவனை திரும்பி திரும்பி பார்த்தாள். 

     மாணவிகள் ஏறியதும், நிர்மலா வந்து, “கேர்ல்ஸ் இங்க இந்திய இராணுவத்துல வந்துட்டு இருந்தவங்க வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு. இவங்களோட வந்தவங்க எல்லாம் முன்னாடி வண்டில போயிட்டாங்க. ஐந்து பேர் இங்கயே மாட்டிக்கிட்டாங்க. அவங்க இப்ப நம்மளோட பாதி தூரம் டிராவல் பண்ணப்போறாங்க. கொஞ்ச உங்க வால்தனம் காட்டாம இருங்க.” என்றதும் அவன் வருகை வந்தது. 

   உதட்டில் முறுவலோடு “தன்யவாட் மா” என்று உள்ளே வர தனிஷ்கா இதயம் தாறுமாறாக துடித்தது. 

    வெளியே அவள் கண்ணெடுக்காமல் பார்த்தவன். காந்தமாக ஈர்க்க அவன் வந்து மேம் அமர்ந்த இடத்திற்கு வலது புறம் அமர்ந்தான். 

தனிஷ்காவிற்கு வலது பக்கம் முன்னிருக்கையில், அவள் பார்க்க வசதியாக இருந்தது. 

    மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றாள். 

     “ஸ்டெல்லா.. ஸ்டெல்லா…” என்று சுரண்டினாள் தனிஷ்கா. 

     “என்னடி…?” என்று ஸ்டெல்லா கத்த, அவன் திரும்பி பார்த்தான். 

     “ஏன்டி கத்தற… நான் அங்க உட்கார்ந்துக்கவா..?” என்றாள். 

    “நீ தானே ஜன்னல் சீட் வேண்டும்னு பஸ் ஏறினப்ப சண்டைப் போட்டு உட்கார்ந்த.” என்று ஸ்டெல்லா சொன்னாள். 

      “அய்யோ… அப்போ சொன்னேன். இப்ப மாறி உட்காரலாம். கால் வலிக்கு. கொஞ்ச நேரம் மாற்றி உட்கார்ந்து வரலாம். ப்ளிஸ் டி. ப்ளிஸ் டி” என்று கெஞ்சினாள்.

     பிரபா அதிசயமாக வாயை பிளந்து வேடிக்கை பார்க்க, ஸ்டெல்லா ஜன்னல் இருக்கைக்கும், தனிஷ்கா அவனை காண ஏதுவாக வழிப்பிரிவின் முனையிலும் அமர்ந்தாள். 

       “வெற்றி கம்பர்டபிளா இருக்கா..?” என்று சர்வேஷ் கேட்டதும், “யா… தேங்க்ஸ் அகைன் சர்வேஷ்” என்றான் அவன். 

     ‘இவன் பெயர் வெற்றியா… அப்போ தமிழ் பையன். அவ்வ்… அதான் அட்ராக் பண்ணிட்டான்.’ என்று தனிஷ்கா கண்கள் அங்கே இருக்க, “இந்தா இதை வச்சிக்கோ.” என்று பிரபா கொடுக்க, அது செவியில் எட்டாது போக, கையை கிள்ளி நீட்டினாள். 

     “என்னடி…” என்று முகம் வெற்றியை பார்ப்பதை தடுத்து விட்டாளே என்ற கோபத்தில் தனிஷ்கா கிள்ளிய இடத்தை தேய்த்தபடி கேட்டாள். 

      “ரொம்ப வழியுது துடைத்துக்கோனு கொடுத்தேன். எதுக்கு இப்படி அந்த மிலிட்டரிகாரனை சைட் அடிக்கிற.” என்றாள் பிரபா. 

     “சேசே.. தமிழ் ஆளு அதான் பார்த்தேன். தெரிஞ்சவரா இருப்பாரோனு.” என்று சமாளித்தாள். 

     “என்னிடம் சமாளிக்கிற… நீ வழியறது தான் அப்பட்டமா தெரியுது . ஸ்டெல்லாவை இங்குட்டு தள்ளிட்டு சைட் அடிக்க தோதா அங்க உட்கார்ந்துட்ட. பிடி கர்ச்சீப்ப.” என்று கொடுக்க “ஹிஹி.. அழகா இருக்கான்ல” என்றாள் தனிஷ்கா.

     தலையிலடித்து பிரபா சிரிக்க தனிஷ்கா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

     தனிஷ்கா கன்னத்தில் வைத்து வெற்றி சர்வேஷிடம் பேசுவதை தான் விழியகற்றாது பார்த்திருந்தாள். 

   நேரங்கள் நகர ஒரு தபாவில் பஸ் நின்றது. சாப்பிட ஆர்டர் கொடுக்க, அனைவரும் உண்டனர். 

     மாணவிகள் சிலர் வெற்றி தமிழ் என்றதும் பேச்சு தொடுத்தனர்கள். 

நிர்மலாவும் ஜானகியம்மாவும் கல்லூரி பெண்கள் வெற்றியிடம் பேச எந்த தடையும் கூறாததில், சில பெண்கள் இயல்பாக கதைக்க ஆரம்பித்தனர்.

     சாப்பிட்டு முடித்து பஸ்ஸில் ஏறியதும் கூட்டம் ஆளுக்கு ஒருவராய் வெற்றியிடம் இராணுவத்தின் பணிபற்றி கேட்க, பகிர வேண்டியதை சில சுவைப்பட சுவாரசியமாக சொன்னான். 

     அவன் பொதுவாக அங்கிருப்பவரின் கண்களை கண்டு தான் கூறினான். ஆனால் தனிஷ்கா கண்களை கடக்கும் நேரம் அவளுக்கு மட்டும் என்னவோ அவளிடம் பேசுவதாகவே மனதில் தோன்றியது. 

      “அண்ணா அண்ணா… கன் பார்த்ததேயில்லை. ஒரே முறை அதை தூக்கி தொட்டு பார்க்கலாமா?” என்று ஒரு பெண் கேட்டதும், புல்லட்டை எடுத்துவிட்டு கொடுத்தான். அனைவருமே தூக்கி பார்த்துவிட்டு கருத்து கூறவும், தனிஷ்காவிடம் நீட்டினான். 

      “எனக்கு எப்படி சுடற பொஷிஷன் சொல்லி கொடுக்க முடியுமா?” என்றாள்.

      அவன் தன் ஷோல்டரில் வைத்து பிடிமானதாக வைத்து அந்த நீண்ட துப்பாக்கியினை எப்படி பிடிப்பது எந்த விதத்தில் வைத்தால் சுடுவதற்கு தோதானது என்றும் சொல்லிக் கொடுத்தான். 

      அவளோ இன்னமும் கற்றுக் கொள்ள கேட்டாள். அது துப்பாக்கியை பற்றியல்ல. அவன் தன்னிடம் பேசுகின்றானே என்ற ஆவலில் உரையாடினாள். 

    அவனும் ஒரு சிக்னலில் வண்டி நின்ற நேரம் அவளை தன் முன் கைப்பிடித்து சொல்லி தந்தான். 

    சில நேரத் தொடுகை தனிஷ்காவை வானில் பறக்க வைத்தது எனலாம். என்னவோ தன் காதலன் இவனாக எண்ணி பார்த்தது இதயம். 

     ஸ்டெல்லா கொடுத்த இனிய சாபம் நிறைவேறிய உணர்வு. இதோ மூன்று மணி நேரப் பயணத்தில் வெற்றியோடு பேச துடித்த நெஞ்சை, கட்டுப்படுத்தினாள். 

    ஆனால் சர்வேஷிடம் குறிப்பிட்ட இடத்தின் பெயரை சொல்லி அங்கே தங்களோடு வந்த வீரர்கள் காத்திருப்பதாக சொல்லவும் அங்கே சென்று இறங்குவதாக அறிந்ததும் வெற்றியோடு பேசி தொலைப்பேசி எண்ணை வாங்க திட்டம் போட்டாள். 

    இவர்கள் நைட்டின் கிட்ஸ் அல்லவே. டுவென்டி கிட்ஸ் நினைத்ததை பேச, பழக, தயக்கமின்றி இருந்தாள் தனிஷ்கா. 

     இன்னமும் பஞ்சாபை தாண்டி இவர்கள் தங்குமிடம் செல்ல மாலையாகிவிடும். வெற்றியோடு தனிப்பட்டு பேசினால் பஸ்ஸில் இருக்கும் கூட்டம் அத்தனையும் தன்னை விநோதமாக பார்க்கும். ஆனால் மனதில் சட்டென மலர்ந்த இந்த வித்தியாசமான உணர்வை பகிராது சென்றால் மனம் அழுத்தம் கொண்டது. 

   வெற்றியும் தன்னை அடிக்கடி பார்த்து ரசிப்பதை அறிந்தவள் அடுத்த இளைபாறுதலுக்கு கீழே இறங்கினால் கூறிட வேண்டுமென நேரம் பார்த்தாள். 

    பிரபா தனிஷ்காவின் பரிதவிப்பை கண்டு விட்டாள். சிரித்துக் கொண்டே “ஸ்டெல்லா சாபம் உடனே பலிச்சிடுச்சு. என்ன டி லவ்வா.” என்றாள். 

      “சும்மாயிரு பிரபா. வெற்றி பார்த்ததிலருந்து ஒரு வேளை இவர் தான் எனக்கானவரோனு மனசு சொல்லுது. ஒரு பயணத்துல பஸ்ல போறவனை பார்த்தா உடனே வந்திடுமா என்று மனசாட்சி எதிர் வாதம் செய்தாலும், எனக்கு வெற்றி பார்த்து மனசு என்னவென்னவோ பட்டாம்பூச்சியாட்டம் பறக்குது. நிலையில்லாம என் கண்கள் அவனை படபடவென நோட்டமிடுது.” 

    “ஏய் ஜஸ்ட் பேசு. அவர் நம்பரை வாங்கிடு. அதுக்கு பிறகு ஒரு வாரம் கழிச்சு லவ் சொல்லு. எப்படியும் அவரோட பார்வை லவ் என்பதா தான் காட்டுது. பார்டர் தாண்டி வந்து லவ் அக்சப்ட் பண்ணுவார்.” என்று பிரபா ஏற்றி விட்டாள். 

     அடுத்த இளைபாற நேரத்தை பஸ்ஸை ஓட்டும் ஓட்டுநர் கூட யோசிக்கவில்லை. ஆனால் தன்ஷிகா காத்திருந்தாள். 

    சண்டிகர் வந்து நிற்க மாலை நான்கானது. மீண்டும் இளைபாற  இறங்கிய நேரம், மற்ற இராணுவ வீரர்கள் தபாவில் கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் டீ கச்சோரி என்று உள்ளே தள்ள, வெற்றியோ யாரிடமோ போனில் பேசுவது கண்டாள். 

    மெல்ல பிரபாவை இழுத்துக் கொண்டு தயங்கி வந்தாள் தனிஷ்கா. 

      பிரபாவோ, இதுக்கு மேல நான் வரலை. நீ போடி.” என்று நழுவி கையை எடுத்துக் கொண்டாள். 

     தனிஷ்காவோ எச்சிலை விழுங்கி அருகே வர, “சத்தியமா உன்னை பார்க்கற மாதிரி இருக்கு. அவ கண்ணு துறுதுறுன்னு உன்னை போல. ஐ திங்க் தைரியமான பொண்ணுனு நினைக்கிறேன்.” என்று வெற்றி பேச, தன்னருகே நிழலாட வெற்றி திரும்பினான். தனிஷ்கா இருப்பதை கண்டு, “நன்விழி செக்கப்புக்கு சரியா போ. டேக் கேர் நான் அப்பறம் பேசறேன்.” என்று கத்தரித்தான். 

     “ஹாய்..” என்றாள் தனிஷ்கா. 

     “ஹாய் மா. என்ன கூட்டத்தோட இல்லாம தனியா..  இட்ஸ் நாட் சேப்” என்றான் வெற்றி. 

     “உ.. உங்க.. உங்களிடம் பேச வந்தேன். நான் பேசறது தப்பா சரியா தெரியலை. பட்… நீங்க தப்பா நினைக்க மாட்டிங்கனா உங்க நம்பர் தரமுடியுமா? அதோட இதுல உங்க ஆட்டோகிராப்… இரயில் சிநேகிதம் மாதிரி…” என்று ஒருவழியாக கேட்டு விட்டாள். 

     “ஸ்டோர் பண்ணிக்கோ. ***** ***** இதான்.” என்று ஆட்டோகிராப் போட்டு விட்டு, இலகுவாக செல்ல “என் பெயரை கேட்கவேயில்லையே.” என்றாள். 

     “உன் பெயர் தனிஷ்கா. பிரெண்ட்ஸ் தனிஷ் னு கூப்பிடறாங்க. சரியான வாயாடி… தைரியமான பொண்ணு. சரியா.” என்றான் வெற்றி. தலையை ஆம் என்று அசைத்தவள் பின் தொடர, பிரபா இழுத்து “என்ன நம்பர் வாங்கிட்டியா” என்றாள். 

     ம்ம்..” என்றவள் ஏறினாள். 

     மணி ஆறாக துவங்க, பஸ் அந்த ஆளரவமற்ற பகுதியில் பயணிக்க ஆரம்பித்தது. திடீரென எதிரே வந்த வண்டியின் கட்டுப்பாட்டில் மணிகண்டன் வண்டியை திருப்ப, எதிரே வந்த வண்டி அப்படியும் மீறி மோத முயன்றது. இது எதிர்பாராது நடக்கும் சம்பவமாக தோன்றாமல் வேண்டுமென்றே மோத திருப்புவதை அறிந்து தடுக்க வழியின்றி மோதியது. 

      பஸ்ஸில் பயணித்தவர்கள் பெரும்பாலும் சுருண்டு விழுந்தனர். 

    பாதிக்கு மேலாக இரத்த வழிந்து அடிபட்டு சிராய்புகள் கொண்டு இருந்தனர். 

   பின்னால் வந்த மினி வேன் ஒன்று  உடனடியாக காப்பாற்ற வந்தனர்.அது காலியாக இருக்க, அடிப்பட்டவரை அதில் ஏற்றிட அனுமதித்தனர். 

    வெற்றியோடு கூட வந்த கஸிப், வீர்சிங், தாகூர், மோகித் என்று உதவினார்கள். 

    ஜானகியம்மாவோடு இருபது மாணவியர்களை ஏற்றிக் கொண்டது. அந்த மினிவேன் அருகே நாற்பது நிமிடம் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றனர். கூடவே இத்தனை பெண்களை தனியாக விட மனமின்றி சர்வேஷ் சென்றான். ஏற்கனவே மணிகண்டனும் உடல்காயம் கொண்டதால் ஓட்டுநர் அவரும் சென்றார். 

    மீதி களைத்து ஓய்ந்து வெற்றி மோகித் தாகூர் கஸிப் வீர்சிங் இவர்களோடு நிர்மலா, தனிஷ்கா ஸ்டெல்லா, பிரபா, மருது கூடவே மற்றொரு மாணவி லில்லி இருந்தாள். 

     பதினென்று பேர் அடுத்து எப்படி செல்வது என்று யோசித்தவர்கள். ஏற்கனவே தங்கள் வந்த வண்டியினை விடுத்து இதில் வந்ததால் அடுத்து வரும் வண்டியை நிறுத்தி பயணம் செய்வது என்று சற்று தொலைவில் இருந்த வெளிச்சத்தை தேடி நடந்தார்கள். 

     ஆனால் கும்மிருட்டில் யாரோ தொடர்வதை அறிந்து காவல் செய்யும் நேரம், மோத காரணமாக இருந்த வண்டி மீண்டும் திரும்பி வந்து துப்பாக்கி சூட்டை நடத்தியது. 

    நொடியில் நடந்த நிகழ்வில் மருது லில்லி உயிர் பிரிந்தது. 

      வெற்றியும் வெற்றி கூடயிருந்தவர்களும் உடனடியாக அருகேயிருந்த பெண்களை கீழே தள்ளி காப்பாற்றினாலும் கஸிப் கால்கள் துப்பாக்கி குண்டு பதிந்து நடக்க தள்ளாடினான். 

    அடுத்து வெளிச்சம் திருப்பி சுடவும், கஸிப் உயிரும் கண்ணெதிரே பிரிந்தது. 

    இது ஏதோ ஒரு கூட்டமென அறிந்து உடனடியாக ஓடத் துவங்கினார்கள். 

   நிர்மலாவால் ஓட முடியாத காரணத்தால் கீழே விழுந்திட ஸ்டெல்லா அவரின் கைபற்றியதால் அவளுமே விழுந்தாள். 

      “அய்யோ ஸ்டெல்லா விழுந்துட்டா.  நிர்மலா மேம்.” என்று தனிஷ்கா அழ, பிரபா பேச்சற்று இருக்க, பிரபாவை துளைக்க வந்த குண்டில் தாகூர் தாங்கி அவளை ஓட சொன்னான். 

     நொடியில் நடந்யேறிய அதிர்வில், இது தங்களை துரத்தி வந்த கூட்டமென்று வெற்றி சரியாக கணித்தான். 

     சுதந்திர தினத்துக்கு பாதுகாப்பிற்கு டெல்லி வந்து திரும்பிய இராணுவ வீரர்களை கொல்ல வந்த ஆட்களாக இருக்கும் என்று எண்ணி எஞ்சியவரை கண்டான். 

      மோகித், நிர்மலா மற்றும் ஸ்டெல்லாவை காப்பாற்ற முன் வர, அவனின் நெஞ்சில் குண்டு  துளைத்தது.

   நிர்மலா “ஜீஸஸ்” என்று அலற அவரை துப்பாக்கியின் பின் பக்கமாக வைத்து மண்டையில் அடித்தனர். ஸ்டெல்லாவையும் அதே போல அடித்து முடிக்க, தனிஷ்கா பிரபா அலறவும் அந்த திசையிலும் குண்டை துளைத்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீர்சிங் பிரபாவை மரத்தோடு மறைத்து காப்பாற்றி தானும் ஓடுங்கினான். 

     ஆனால் வெற்றி தோளில் குண்டு பதிய, தனிஷ்காவை அழைத்து ஓடினான். பதுங்க முயன்றான். 

      ஓடிவந்து மூச்சிரைக்க, ஒரு மரத்தின் குகை போன்ற அமைப்பில் இருவரும் அமர்ந்தனர். 

       “அச்சோ… இரத்தம்..” என்று கண்கள் அருவியாய் பொழிய, “உஸ்” என்று அமைதியாக சொன்னான். 

    அதன் பிறகே வயிற்றில் ஒரு குண்டு துளைத்ததை உணர்ந்தான். 

       சற்று தூரத்தில் தீப்பொறி மூட்டி ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வண்டியின் வெளிச்சம் முன் ஸ்டெல்லாவை கிடத்தினார்கள். 

     கண் திறக்க கடினப்பட்ட வெற்றி அடுத்து நடக்க போகும் கோரத்தை அறிந்து தனிஷ்காவை பார்க்க விடாமல் நெஞ்சில் அணைத்தான். 

     “ஸ்டெல்லா… ஸ்டெல்லாவை..” என்று அழ “கத்தாதே… நீயும் மாட்டிப்ப. என்… னால  என்னால எழுந்துக்க முடியலை. இதுல காப்பாற்ற முடியாது. அது சுதந்திர தின விழாவுக்கு ஏதேனும் தடை செய்ய வந்த ஆட்கள். அப்போ முடியலையென்றதும் இப்ப செய்ய முயற்சிக்கறாங்க. வேற நாட்டை சேர்ந்தவங்க.” என்றதற்குள் உயிர் திருகிய வலியில் கண்கள் சொருகியது. 

   வீர்சிங் உடனடியாக செடியை ஆடையாக மேலோட்டமாக மாற்றி முடித்தான். பிரபா கரும்பச்சை என்றது அவனுக்கு சாதகமாக மாற இருவரும் மறைந்த் மறைந்து மற்றொரு பாதை வழியாக தப்பித்தனர்.

     ஸ்டெல்லாவை மூன்று பேர் சின்னா பின்னமாக்கியப் பின் ஒருவன் இயற்கை உபாதை கழிக்க தனித்து வந்தான். 

     தனிஷ்கா வெற்றி மார்பிலே சத்தமின்றி அழுதாள். 

       அவளுக்கு என்ன செய்வது என்று புரிபடவில்லை. படத்திலும் நாவலிலும் இது போன்ற நிகழ்வை எளிதாக கடந்தவளால் கண் முன் கடந்திட இயலவில்லை. 

     வெற்றி அணைத்திருக்க, பயத்தில் ஒன்றி விட்டாள். 

    “தனிஷ்… அங்க ஒருத்தன் வந்துட்டு இருக்கான். யாருமில்லையென்ற மிதப்பில கன் எடுத்துட்டு வராம இருக்கான். நீ அவனை எதிர்க்க செய்” என்று தனது துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பி நீட்டினான். 

     “விளையாடறிங்களா… எனக்கு சுட தெரியாது. அதுவுமில்லாம எனக்கு பயமா இருக்கு.” என்று அழுதாள். 

    “நீ தைரியமான பொண்ணு. இப்படி பேசக் கூடாது. பிடி..” என்றான் மூச்சுவாங்க. 

    “ஸ்டெல்லா… ஸ்டெல்லா நிலையை பார்த்தப்பிறகு என் தைரியம் தூளாகிடுச்சு. எனக்கு சுடவும் வராது.” என்று பயந்தாள்.  

   எங்கே அந்த பாதகன் தன்னையும் கண்டு பிடித்திடுவானோயென்று அஞ்சினாள். 

     “இங்க பாரு தைரியம் சில நிகழ்வுகளோட சிதறலில் குறைவானது போல தோன்றலாம். முடங்கிடாம யோசி… தைரியம் என்பது இந்த மாதிரி சூழ்நிலையில் நாம எதிர்கொள்வது தான். தவிர மற்ற நேரத்துல சீன் போட விஷயத்துல இல்லை. 

   உன் பிரெண்ட் ஒருத்திய நாசமாக்கியிருக்காங்க. சிலரை கொன்றிருக்காங்க. உன்னோட டிராவல் செய்தவங்களை காயப்படுத்த பார்த்திருக்காங்க.

முக்கியமா அவங்க இந்த நாட்டு மக்கள் இல்லை. நம்ம நாட்டில் அசம்பாவிதம் செய்ய வந்தவங்க. சுதந்திர தினத்துல அது நடக்க முடியாது வெறுப்புல நாங்க வந்த வண்டியை பின் தொடர்ந்து இருக்காங்க. 

    மக்களோட நலனில் பாதுகாப்பா பார்டரில் இருக்கறவங்களை தாக்க வந்த கூட்டத்தை நீ தாக்கி பதிலடி தரப்போவதில்லையா. இதுல உன் வாழ்வு நினைக்காம களத்துல இறங்கு.” என்றான். 

    அவன் பேசியது கேட்டு அவள் உடல் மொழிகள் எதிர்க்க கூறியது. ஆனால் மனம்..? 

    “எனக்கு சுடத்தெரியாதே..” என்றாள் 

    “நான் உனக்கு செய்து காட்டியதை நீ உன் தோழியிடம் செய்து காட்டினியே.. அது போல தான். முயற்சி செய். நீ உன் தோழியிடம் செய்து காட்டினப்ப, சரியான முறையில நின்ற. உன்னால முடியும்.” என்ற பொழுது தனிஷ்கா கண்கள் அவன் உடலை துளையிட்ட குண்டடிப்பட்ட இடத்தில் வரும் செந்நீரில் கவனம் இருந்தது. 

    இதே செந்நீர் வெளியேறி கொண்டே இருந்தால் வெற்றி உயிர் ஆபத்தினை அடையும். முயற்சி செய்து பார் என்றது மனம். 

     கண்களை துடைத்து துப்பாக்கி ஏந்தி, குறி பார்த்தாள். 

    இது புதிது. ஒருவரின் செயலை அப்படியே பிரதிபலிப்பதை வைத்து எடுக்கப்படும் முடிவு. 

      இதுவரை நடித்தது செய்தது அனைத்தும் அந்தந்த மாந்தரையே பிரதிபலிக்கலாம். இது… சாத்தியமா..  அந்த கலக்கம் மனதில் வகுத்தாலும் இதை தவிர தீர்வு இனி இல்லை. வருபவன் தன்னையும் வெற்றியையும் கண்டு பிடித்து விட்டால்… பிறகு… நினைக்கவே பகிரென்றது. 

     ஐந்து பேரை ஒரே நேரத்தில் சாகடிக்க அப்போது முடியாது. தற்போது ஒருவனை வீழ்த்த இயலாதா என்றது மனம். 

    துப்பாக்கியில் குறி பார்த்தாள். “ஷோல்டரில் அழுத்தம் கொடு.” என்று கூற, தலையாட்டி குறி பார்தது முடித்தாள். 

     அந்த வட்டத்தில அவனோட பிம்பம் தெரியுதா. தெரிந்த அடுத்த விநாடி யோசிக்காதே சுட்டுடு.” என்று வயிற்றை பிடித்து நிற்க முயன்றான் வெற்றி. ஆனால் வெற்றியால் நிற்க முடியவில்லை. 

     தனிஷ்கா வெற்றியின் மொழிகளை கேட்டு அதை போலவே செய்து முடிக்க, துப்பாக்கி சுட்டு முடித்திருந்தாள். 

   அதன் சத்தம் கேட்டு அவளே கண் மூடி கை நடுங்க நிற்க, “வெல்டன் தனிஷ்கா. அடுத்து இரண்டு பேர் வருவாங்க ஜாக்கிரதை. இரண்டு பேரை அடுத்தடுத்து சுடு. 

     ஸ்டெல்லா உயிரோட இருந்தா அவளை விட்டு வர யோசிப்பாங்க.” என்றதும் இதயத்தை கையில் வைத்து அதிர்ந்து மறுக்க, “டு இட்.. உன்னால முடியும்.” என்றான். 

    பேசியவன் கையில் இருந்த குண்டை தன் காலில் வைத்திருந்த கத்தியால் எடுத்து முடித்திருந்தான். 

   அதன் காரணமாக செந்நீர் இன்னும் அதிகமாக வெளியே வழிந்தது. 

      தனிஷ்கா கண்களை துடைத்து சத்தம் வரும் திசையில் குறி பார்க்க, சட்டென லென்சின் பிம்பத்தில் விழுந்தவனை சுட்டு முடித்தாள். இம்முறை அவன் வயிற்றில் வெற்றி போலவே சுட்டிருந்தாலும் வீழ்ந்தான். அடுத்து ஒருவன் வெற்றியின் கையில் இருந்த கத்தி தொண்டையில் இறங்கி மடிந்தான். 

       “வேகம் வேண்டும் தனிஷ்கா.” என்றவன் மூச்சு அதிகமாக வாங்கியது.

     “பேலன்ஸ் இரண்டு பேர் நாம முன்னேறி போகணும்.” என்றவன் எழுந்துக் கொள்ள போராடி நின்றான். 

     எதிராளியிடம் தொண்டையில் இறங்கிய கத்தியை உருவி தனிஷ்காவால் வயிற்றில் சுடப்பட்டவன் முன் வீசினான். 

     இம்முறை அவனுமே உடனடி மரணம் சம்பவிக்க, துப்பாக்கியை நீட்டினாள். 

     என்னால அழுத்தமா பிடிக்க முடியாது. கன் வைக்கிற தோள்ல அடிபட்டு இருக்கு. பிடி நழுவும். அதுவுமில்லாம அந்த கன் வெயிட் இப்ப முடியாது மா.” என்று பேச யாரோ ஒடி வரும் அரவம் கேட்டது. 

     தனிஷ்கா கன்னை தானாக தோளுக்கு முட்டு கொடுத்திருந்தாள். 

      “வெல்… ரெடியாயிரு” என்ற வெற்றி மயக்கத்துக்கு போயிருந்தான்.

      தனிஷ்கா எச்சிலை விழுங்கி சுட்டு தள்ள வயிற்றுக்கு குறிபார்த்தவள் நெஞ்சில் செலுத்தியிருக்க மாய்ந்திருந்தான்.

   “இன்னும் ஒருவன் தான் இருக்கான் வெற்றி.. வெற்றி…” திரும்ப தரையில் சருகு இலையின் மீது விழுந்திருந்தான்.

    பெண்ணவள் பயந்து அருகே செல்ல, அவளின் குதிரை பின்னலை கொத்தாய் பிடித்திருந்தான் ஒருவன். 

   “ஏக் லடுக்கி.. அமே ஹரே அயிகேய்”(ஒரு பொண்ணு.. எங்களை கொல்ல வந்திருக்கே) என்று எச்சிலை துப்பி இழுத்தான். 

     “வெற்றி… வெற்றி…” என்றவளின் கதறல் செவியில் தாக்கினாலும் கண்கள் திறக்காமல் இமைக்குள்ளே சுழன்றது. 

    தன்னோடு இறந்தவனை பற்றியோ அல்லது தான் சுட்டு இறந்து போனவர்களை பற்றியோ அந்த கயவனுக்கு வருத்தம் இல்லை. தான் துன்புறுத்த ஒரு பெண் கிடைத்த திருப்தியில் தனிஷ்காவை தோளில் போட்டு தூக்கி சென்றான்.      

   செல்லும் நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமில்லை என்பதையும் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்டான். 

    ஸ்டெல்லாவின் உடலை எட்டி உதைக்க, அந்த காரின் முகப்பிலிருந்து விழுந்தாள். அதேயிடத்தில் தனிஷ்காவை படுக்க வைக்கவும் தனிஷ்கா இதயம் பலமடங்கு துடித்தது.

    வெற்றி இருக்கும் திசை பார்த்து கத்தினாள். 

      நிச்சயம் வர இயலாத சூழ்நிலையில் மயங்கியிருப்பதை அறிந்தும் ஒரு நம்பிக்கை வந்திட மாட்டானா? என்று. ஆனால் தாமதிக்கும் நேரம் இது அல்ல. எதிர்பார்ப்பை விட, தன் கையே தனக்குதவி என்பதை தாமதமாக உணர்ந்தாள். 

    கையில் அழகுக்கு வளர்த்து வைத்த நகங்கள் பிங்க் நிற நகப்பூச்சில் இருக்க, தன் பலம் கொண்டு தன்னை நோக்கி உதடு குவித்தவனின் முகத்தில் பிராண்டினாள். 

      கையை எடுக்காமல் கீறி முடிக்க கன்னத்து சதை வலிக்க அவன் பின்னடைந்தான். பிங்க் நிற நகப்பூச்சு இரத்த நிறத்தில் மாறியது.

    வண்டியிலிருந்து குதித்தவள் அங்கே இருந்த துப்பாக்கியினை எடுத்து மண்டையிலேயே வெறி தீர அடித்தாள். ஓய்ந்து போகும் வரை… தன் பயம் நீங்கும் வரை. மீண்டும் எழுந்திடக்கூடாது என்ற எண்ணத்தோடு அடிக்க, நான்கு அடியிலேயே அரை பிணமாக மாறி போனான் கடைசி ஒருவனும். 

     அடித்து ஓய்ந்தவள் அழ, தூரத்தில் வெற்றியின் போன், “சிங்கப்பெண்ணே… சிங்கப்பெண்ணே..” என்று காலர் ட்யூன் அழைத்தது. அவன் மனைவிக்காக வைத்த ஸ்பெஷல் காலர் ட்யூன். 

    விழுந்தடித்து வெற்றி இருக்கும் இடம் வந்து அவனை எழுப்ப, அவனோ இமை மூடி இருந்தான். 

    அழுதவாறு போனை எடுத்தாள். “வெற்றி ஸ்கேன் எடுத்தாச்சு. குழந்தை முழுயுருவம் வந்திடுச்சு டா. உனக்கு வாட்ஸ் அப்ல ஸ்கேன் போட்டோ அனுப்பறேன். சின்னதா சுருண்டு.. கருப்பா..” என்று போனில் வெற்றி மனைவி பேசிக் கொண்டு போனவள். ஒரு பெண்ணின் அழுகை கேட்டு, “வெற்றி.. யார் யார் பேசறது.” என்றாள் வெற்றி மனைவி நன்விழி. 

     “நான் தனிஷ்கா. வெற்றி என்பவர் எங்களேட பஸ்ல வந்தார்…” என்று நடந்தவையை கூறி அழுதாள். எதிர்ப்புறம் இருந்த நன்விழி என்பவளோ, “இங்க பாரு தனிஷ்கா. உன்னை பற்றி அவர் லாஸ்டா பேசியப்ப சொன்னார். நீ போல்டான பெண் என்றாரே. எதுக்கு அழுவுற. இப்ப அந்த ஐந்து பேர் இறந்துட்டாங்களே. அது நம்மளோட வெற்றி புரியுதா. எத்தனை பேரையோ இழந்து தான், பார்டர்ல ஒரு அந்நிய தேசத்து ஆளை சாகடிப்பாங்க. அது மாதிரி எடுத்துக்கோ. இப்ப போன உயிரை நினைத்து அழாம, அங்க இருக்கிற மற்ற உயிரை காப்பாற்று. சுற்றி யாரும் வருவதற்குள்ள யாரிடமாவது உதவி கேளு.” என்றதும் தனிஷ்காவுக்கு மெல்ல விளங்கியது. 

   “அக்கா… வீர்சிங்னு கால் வருது.” என்றாள் தனிஷ்கா. அவள் கை இன்னமும் பதட்டத்தில் நடுங்கியது. 

   “அட்டன் பண்ணு மா. வெற்றியோட ஒர்க் பண்ணற அண்ணா. நான் மறுபடியும் கால் பண்ணறேன்.” என்றாள். 

   வீர்சிங்கிடம் பேசி இடத்தை கூறினாள். அங்கே போலிஸுடன் வீர்சிங் மற்றும் பிரபா வந்தனர். 

    வரும் போதே ஆம்புலன்ஸும் வந்து சேர, ஸ்டெல்லா மற்றும் நிர்மலா இருவரையும் ஏற்றினர். ஸ்டெல்லா மயக்கத்திலே வன்முறைக்கு ஆளாகியிருந்தும், உயிர் இருந்தது. 

    நிர்மலா மேம் உயிர் பிரிந்து இருபது நிமிடமாகியிருந்தது. வெற்றியின் பல்ஸ் குறைவாகி கொண்டு இருப்பதை கண்டாள். 

    வெற்றி ஸ்டெக்சரில் தூக்கி சென்றனர். 

    மருத்துவ சிகிச்சைகள் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டாலும் ஸ்டெல்லாவை தனிப்பிரிவுல் மாற்றிட, தனிஷ்கா அங்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள். 

  அதன் பின் வெற்றி உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்பதை அறியாது தவித்தாள். ஸ்டெல்லா அரை மயக்கத்தில் இருந்ததாளோ என்னவோ, கெட்ட கனவாக எண்ணி தனக்கு நடந்தவையை மறக்க முயன்றாள். அதற்கு அவள் சுற்றமும் நட்பும், காதலும் துணையாக மாறியது. 

   ஒரு மாதம் ஆனாது. 

தனிஷ்கா போனில் வெற்றியின் எண்ணை அழுத்தினாள்.

   ரிங் செல்லும் முன்னே அதனை கத்தரித்தாள். 

   பிரபா “ஏன்டி போனை போடு. உயிரோடு..” என்றதற்குள் தனிஷ்கா அவள் வாயை மூடினாள். ‘உயிரோட இருந்தா போனை எடுப்பார்’ என்பதை சொல்ல விடாது தடுத்தாள். ஏன் என்றால் வெற்றி கடைசியாக ஸ்டெக்சரில் தூக்கிய பொழுது வழிந்த செந்நீர் துளிகள் ஆம்புலன்ஸ் வரை சொட்டிக் கொண்டே இருந்தது. 

     “வேண்டாம்… எதுவும் தெரிய வேண்டாம். அவர் உயிரோட இருக்கார். நான் போன் பண்ண மாட்டேன். என்னை பொறுத்தவரை வெற்றி எங்கயோ ஒரு இடத்துல பனிப்பிரதேசத்தில துப்பாக்கி வைத்து நெஞ்சு நிமிர்த்தி காவலுக்கு இருக்கார். அவ்ளோ தான்.” என்று அவனிடம் வாங்கிய கையெழுத்தை தடவி அழுதாள். 

  பிரபா அதற்கு மேல் தனிஷ்காவை ஆறுதல்படுத்தவோ, பேசவோ செய்ய தோன்றாது அழவிட்டு நகர்ந்தாள். 

      தனக்குள் குறுகிய நேரத்தில் ஒருவன் மனதில் புகுந்து நிலைத்து நின்று விட்டதை தனிஷ்கா அறிவாள். அது அவளின் நிஜ நாயகனாக பார்த்ததால் அழியாது போனான். அவன் இவளுக்காக சண்டையிடவில்லை. சினிமா போல புல்லட்டை எடுத்து போட்டு எதிரியை பந்தாடவில்லை. 

   அவன் கொடுத்த வாய்மொழி தைரியம், தன்னோடு இருந்த இயல்பான குணத்தோடு அவன் பொருந்தி அவனாலே தான் காப்பாற்றப்பட்டடது என்பதாய் யோசித்தாள். 

   வெற்றி திருமணமானவர்… கருவுற்ற மனைவியோடு அவரின்  மிச்ச காலம் அமையும். நான் அவரை இரசித்தேன்… காதலித்தேன்… காதலின் தூய்மையே தான் விரும்பும் இதயம் நலமாக இருக்க வேண்டும் என்பது தான். வெற்றி ஏதோவொரு மூலையில் என்றும் வாழ்வார். போனை போட்டு எதிர்மறையாக கேட்க வேண்டாம். 

    திடமான மனதோடு எழுந்தாள். வெற்றி என்னும் நிஜநாயகனின் கையெழுத்தை தன் புத்தகத்தில் வைத்து கல்லூரிக்கு.

-முற்றும்.

-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “செந்நீர் துளிகள்”

  1. Evlo Tim padichalum ivanga ellam aptiya manasukilla oru thairiyatha kondu vanthuttu poorathu ennavoo nijama muthal murai padikkara mari ❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *