அகலாதே ஆருயிரே
21
வெளியில் அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக வெடித்துக்கொண்டு இருந்தாள் ரிது.
அவள் எண்ணியதெல்லாம் ரெகார்ட் நோட்டை கிழிப்பது, புத்தகத்தை ஒளித்து வைப்பது, மிஞ்சி
மிஞ்சி போனால் தன்னைப் பற்றி தவறாக ஆசிரியர் முன்னால் சித்தரிப்பது போன்ற செயல்களே.
ஆரம்பத்தில் இந்த மதியற்ற கூட்டமும் அதைத்தான் செய்தது. ஆனால் இப்போது ஆருஷிக்கு
இவர்கள் செய்து வைத்திருக்கும் காரியம் அவளை கோபத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றது
என்பதே உண்மை.
சோர்ந்து அமர்ந்திருந்த ஆருவை ஓர் இடத்தில் அமர்த்திவிட்டு, தன் வகுப்பாசிரியையை தேடிச்
சென்றாள் ரிது. அவரோ மேடையில் ப்ரின்சிபாலிடன் குனிந்து நின்று அவர் சொல்லும்
கட்டளைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரிடம் இப்போது பேச முடியாது என்று உணர்ந்து திரும்புகையில் சுகந்தன் ரிது முன்பு வந்து
நின்றார்.
“என்ன ஆச்சு?? ஏன் உன் பிரென்ட் ஒரு மாதிரி இருக்கா?? யாரோட ட்ரஸ் அது??”, என்று
கேள்வியாய் அடுக்கியவரைப் பார்த்து,
“கொஞ்சம் வாங்க சார். “, என்று ஆரூ இருக்கும் இடம் நோக்கி அழைத்துப்போனாள். ஆருவின்
நிலையை கண்ட சுகந்தனுக்கு ஏனோ ஒரு மாதிரி ஆனது.
அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர்,” என்னம்மா ஆச்சு. காலைல ஸ்போர்ட்ஸ்
ரூம் வரும்போது நல்லா தானே இருந்த?”, என்று கேட்க,
அவரிடம் என்ன சொல்லுவது என்று தயங்கினாள் ஆரூ. ஆனால் ரிது நிதானமாக நடந்த
அனைத்தையும் சொல்ல, சுகந்தன் முகத்தில் முதல் முறையாக கோபத்தை பார்த்தனர்.
அவர்களுக்கு தெரிந்த சுகந்தன் விளையாட சொல்லித் தருவதாக மேனியில் கை வைக்கும்
கயவனைத் தான். ஆனால் இந்த பள்ளிக்கு வந்த நாள் முதல் கண்ணியமான அவனின்
நடவடிக்கைகள் அவர்களுக்கு அதிர்ச்சி என்றால், இன்று அவனின் கோபம் உண்மையில்
ஆச்சர்யம்.
அதை சற்றும் மறைக்காமல் கேட்டுவிட்டாள் ரிது,”ஏன் சார் நீங்க அந்த ஸ்கூல்ல பிஹேவ்
பண்ணினத்துக்கும், இப்போ இருக்கறதுக்கும் பெரிய வித்தியாசம் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”
கொஞ்சமும் அச்சப்படாமல் கேட்ட அவளை ஒரு முறுவலுடன் பார்த்தவன்,” நான் பண்ணின
அசிங்கத்தை என் தங்கச்சிக்கு ஒருத்தன் பண்ணினான். அவ என்கிட்ட வந்து அழுதா, நான் என்ன
சொல்லி ஆறுதல் சொல்லுவேன்? எனக்கு அதை செய்ய தகுதியே இல்லன்னு அப்போ தான்
புரிஞ்சுது. அவளோட அழுகைக்கு என்னால ஒன்னும் பண்ண முடியல. அவனை போய்
அடிண்ணா அவ சொன்னப்போ எனக்கு என்னை யாரோ அடிக்க வர்றது போல இருந்தது.”,
என்று சொல்லிவிட்டு,
“நான் அந்த பொண்ணுங்களை அங்க பி.டி ரூம்ல அசம்பிள் பண்ணறேன். நீங்க வாங்க.”, என்று
சொல்லிவிட்டு அவர் முன்னால் போக,
“பாத்தியா நான் அன்னைக்கே சொன்னேன்ல, ஏதோ நடந்து அவர் மாறி இருக்கலாம்னு
சொன்னேன் தானே. “, என்று ரிது சொல்ல,
“இப்போ அவர்கிட்ட சொல்லி என்ன பண்ண போற.”
“நீ வா ஆரூ. பார்த்துக்கலாம்.”, என்று அவளை அழைத்துக்கொண்டு உடற்கல்வி அறைக்கு
சென்றார்கள் இருவரும்.
அவள் உள்ளே நுழைய, ஏளனமாக பார்த்தபடி நந்தினியும் அவள் தோழிகள் மூவரும் நிற்க,
சற்றும் யோசிக்காமல் ரிது நந்தினியின் கன்னத்தில் ஓங்கி நான்கு அறைகளை விட்டிருந்தாள்.
மற்ற மூவரும் “சார், சார்”, என்று கத்த, சுகந்தனோ அமைதியாக அமர்ந்திருந்தார்.
“உனக்கு எவ்வளோ கெட்ட எண்ணம் இருந்திருந்தா நீ இப்படி அசிங்கமா ஒரு காரியம்
பண்ணிருப்ப?? பொண்ணா டி நீ? உனக்கும் மாதவிலக்கு வரும் தானே? வலி வேதனை உண்டு
தானே? அப்போ இப்படி ஒரு காரியத்தை அவளுக்கு செய்ய உனக்கெப்படி மனசு வந்தது.
ஒண்ணு அவளோட திங்ஸ் எடுத்ததோட விட்டிருக்கணும். இல்ல பாத்ரூம் டோர் மட்டும் லாக்
பண்ணி இருக்கணும். அப்போ ஏதோ பழி வாங்கறீங்கன்னு நானும் போயிருப்பேன். ஆனா
அவளை உடல் ரீதியா கஷ்டப்பட வச்சு, கதவை சாத்தி மன ரீதியாவும் படுத்தி வச்சிருக்க.
அப்போ உனக்குள்ள எவ்வளவு குரூர புத்தி. அட்லீஸ்ட் கொஞ்ச நேரத்துல திறந்தாவது
விட்டிருக்கலாம் இல்லையா? அந்த மனிதநேயம் கூட இல்லையா?? அப்படி என்ன டி பழி வெறி
உனக்கு?”, என்று மீண்டும் கையை ஓங்கிக்கொண்டு ரிது வர,
நந்தினியின் தோழி ஒருத்தி, “ஏய்.. என்ன அவளுக்கு தான் நாலுநாளுக்கு மேல ஆகுதே. நாங்க
தான் பார்த்தோம் இன்னிக்கு அவ நல்லா தான் இருந்தா. அதான் அப்படி செஞ்சோம்.”, என்று
அறிவு கெட்டத்தனமாக பேச,
“உனக்கெல்லாம் மூளைன்னு ஒண்ணு இருக்கா இல்லையா?? அவளுக்கு எப்படி இருக்குன்னு
உனக்கெப்படி தெரியும்?”,என்று கத்த,
“எனக்கெல்லாம் நாள் நாளிலே எல்லாம் சரியா போய்டும். நீ ரொம்ப பேசாதே. “, என்று சொல்லி
அவளும் எகிற,
“ஓங்கி அறைஞ்சிடுவேன் டி. எல்லாரோட உடல் கூறும் ஒரே போல இருக்காது. அதே போல
அவளோட உடல்நிலை வேற. உன்னோடது வேற. எதுல விளையாடணும் பழி வாங்கணும் என்ற
விவஸ்தையே இல்லயா?? ஒவ்வொருத்தருக்கு இந்த மாதிரி நேரத்துல வாந்தி, மயக்கம் வரும்.
சிலருக்கு உடல் வலி, கால் குடைச்சல்ன்னு அவங்கவங்க உடலுக்கு தகுந்தது போல
பிரச்சனைகள் இருக்கும். பைத்தியமா டி நீங்க எல்லாரும்.”, என்று கத்த,
“ஏய் சும்மா எகிறாத. நாங்க தான் செஞ்சோம்னு எப்படி சொல்ற? எங்களுக்கு வேற வேலை
இல்லையா?”, என்று நந்தினி முன்னால் வர,
சுகந்தன், “நீயா ஒத்துகிட்டா இங்க மன்னிப்பு கேக்கறதோட போய்டும், இல்லனா ப்ரின்ஸி ரூம்
வரை போக வேண்டி இருக்கும்.”
“போகலாம் சார். நாங்க தான் செஞ்சோம்ன்னு ஆதாரம் இருக்கா?”,என்று தெனாவெட்டாக
நந்தினி பேச,
“போகலாம் சார். ப்ரின்சியை பார்க்க போறதுக்கு முன்னாடி கிரவுண்ட்ல இருந்து பாத்ரூம் பேஸ்
பண்ணி இருக்கற சி.சி.டி.வி புட்டேஜ் வாங்கிட்டு போகலாம் சார்.”, என்று சொல்ல, நந்தினி
தைரியமாக நின்றாலும், அவள் தோழிகள் நடுங்க ஆரம்பித்தனர்.
“ஏ, சாரி சொல்லிடலாம் நந்து”, என்று ஒருத்தி சொல்ல, அவளை முறைத்தவள், மற்ற இருவரும்
அதையே சொல்ல,
மூச்சை இழுத்துப் பிடித்து ,”சாரி”,என்று சொல்லிவிட்டு சுகந்தனை பார்க்க, அவரோ ரிதுவை
பார்த்தார்.
“சார். வார்ன் பண்ணி விடுங்க சார். மறுபடி ஏதாவது பண்ணினா கண்டிப்பா நான் ப்ரின்ஸி கிட்ட
காம்பிளைன்ட் பண்ணுவேன்.”, என்று ரிது சொல்ல,
அவரும், “கேட்டுச்சா? அந்த பொண்ணு சொன்னதால விடறேன். போங்க. இனி இப்படி எதுவும்
நடக்க கூடாது. நடந்தா விளைவு கடுமையா இருக்கும்.”,என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அவர்கள் இருவரும் சுகந்தனிடம் விடை பெற்று வெளியில் வர,
“என்ன ரிது உனக்கு இவ்ளோ கோபம் வருது. ஆனா ஊன்னா கையை ஓங்குற. சரி இல்ல ரிது.”,
என்று சொல்ல,
“நான் ஒண்ணும் சும்மா போறவங்களை கூப்பிட்டு அடிக்கலையே. அவ பண்ணின காரியத்துக்கு
இது ரொம்ப கம்மி. இருக்கட்டும். ஒரு நாள் என் கைல அவ சிக்குவா. அப்போ இருக்கு.”,என்று
பல்லைக் கடித்துக்கொண்டு கூற,
அவளை சமாதானம் செய்வதற்குள் ஆருவுக்கு போதும் போதும் என்று ஆனது.
மாலை பள்ளி முடிந்து, ஹோட்டலுக்குள் சென்று உடைமாற்றிய அபி, சுரேஷை தேட, அங்கு
பணி புரியும் ஆட்கள், சுரேஷை முதலாளி வெளியில் வேலையாக அனுப்பி இருப்பதாக
சொல்லிவிட, தன் பணி இன்று எங்கே என்று கேட்டு பெற்றுக்கொண்டவன் உணவகத்தின்
உள்ளே வேலையை தொடர்ந்தான்.
அவனை முதலாளி நித்திலன் அழைப்பதாக ஒரு பணியாள் சொல்ல, அங்கே சென்றால் அவன்
அன்னை அங்கே நின்று கொண்டு இருந்தார்.
என்னவோ ஏதோ என்ற பதற்றம் அபியை தொற்றிக்கொள்ள,”அம்மா என்னாச்சு மா?? என்ன
திடீர்ன்னு? உடம்புக்கு ஒன்னும் இல்லையே? “,என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டவனை
அவனின் முதலாளியின் வார்த்தை இயல்புக்கு கொண்டு வந்தது.
“நான் தான் தம்பி வரச்சொன்னேன். சுரேஷை அனுப்பி இப்போ தான் கூட்டிட்டு வர
சொன்னேன்.”,என்றதும் கொஞ்சம் ஆசுவாசம் ஆனவன்,
“என்ன விஷயம் சார்”,என்று கேட்க,
“நீ காலைல கொடுத்த முறுக்கு உங்க அம்மா செய்தது தானே?”, என்றிட,
“ஆமா சார். அம்மா செஞ்சது தான். என்னாச்சு?”, என்ற போது மீண்டும் அவன் குரலில் பதற்றம்.
“ரொம்ப நல்லா இருந்தது. அதான் நம்ம ஸேவரி செக்ஷன் இவங்க பார்த்துப்பாங்களான்னு கேட்க
கூப்பிட்டேன்.”,என்றதும். ஒரு நிமிடம் மலர்ந்து மறுநிமிடம் இருவர் முகமும் வாடியது.
“என்ன?”, என்று கேட்ட அவரிடம், அக்கா திருமண நிலவரைத்தை சொல்லி, அம்மா தையல்,
அப்பளம், பொடி எல்லாம் செய்தால் மட்டுமே அதற்கான கடன் தொகையை திருப்பி செலுத்த
முடியும் என்று சொல்ல,
“நான் இங்கே மெஷின் எல்லாம் வச்சிருக்கேன். கைப்பக்குவமான ஆள் தான் இல்ல. அவங்க
பார்த்துகிட்டா நல்ல சம்பளம் தரேன். அதோட, இப்ப உங்க தேவைக்கான ரொக்கமும் தரேன்.
மெதுவா திருப்பி கொடுங்க.”, என்றதும்
இத்தனை நாள் நெஞ்சின் பாரம் இறங்கிய திருப்தி சங்கரிக்கு என்றால், அவர் தரும் சலுகையை
கொண்டு எந்நாளும் தன் மதிப்பை இழப்பது போல நடந்து விடக் கூடாது என்று அபியின்
மனதில் தோன்றியது.
இருவரும் அவருக்கு நன்றி உரைத்து வெளியில் வர,
“ஏன் அபி, நீ ஹரிக்கு முறுக்கு கொடுக்கலையா?? பாவம் ஆசையா சாப்பிடுவானே?”, என்ற
அம்மாவை முறைத்தவன், “அவனுக்கு கொடுக்காமல் இங்க அனுப்பினதால தான் உனகிந்த
ஆஃபர். தெரியுதா?”, என்று அவன் தாயிடம் கிண்டலாக கேட்க,
“ஏதோ கடவுள் புண்ணியம் அபி. உன்னால தான் இந்த பிரச்சனை தீரனும்ன்னு இருக்கு.”, என்று
சொல்ல,
“அம்மா இப்பவும் சொல்றேன். ஸ்வாதிக்கு செய்ங்க. ஆனா ரேகாவுக்கு வேண்டாம். நான் மாமா
கிட்ட பேசுறேன்.”, என்று அபி சொல்ல,
“உங்க அப்பா அப்பறம் நம்மளை வீட்டை விட்டே அனுப்பிடுவார் அபி.”, என்ற அம்மாவின்
சஞ்சலம் நிறைந்த குரல் அபிக்கு மனதில் வலியை கொடுத்தது.
அகலாதே ஆருயிரே
22
அபியின் மனதில் நிறைய கணக்கு போட்டான். அன்றைய வீட்டுப்பாடம், தேர்வுக்கான
தயாரிப்பை முடிந்தவரை விரைவாக முடித்தவன், ஒரு நோட்டில் தன் நேரக்கணக்கை குறித்தான்.
அவனுக்கு கொஞ்சம் வருத்தம் வந்தது.
இருந்தும் அம்மா என்ற ஒற்றை சொல்லை மனதில் விதைத்துக்கொண்டு தன் முடிவுகளை
செயல்படுத்த ஆரம்பித்தான்.
அவனை பார்க்க டீயோடு வந்த சங்கரி, அவன் யோசனையில் சுருங்கி இருந்த புருவங்களை
நீவியப்படி, “அபி ரொம்ப தான்க்ஸ் டா”, என்ற சொல்ல, தன் அம்மாவை பார்த்தவன், “என்ன மா
எனக்கு போய் தான்க்ஸ் சொல்ற?”
“இல்ல அபி, நான் முறுக்கு பாக்கெட் போட நினைச்சேன். அதுல உள்ள சாதக பாதகத்தை நீ
சொன்ன, இப்போ உன் முதலாளி எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து இருக்கார். நல்லபடியா
செய்யணும் அபி. நீ தான் எனக்கு துணையா இருக்கணும்.”
“என்னம்மா, இதெல்லாம் நீ எனக்கு சொல்லணுமா??”
“இல்ல அபி. நீ தான் நான் இன்னும் நல்லபடியா வாழ காரணம். இல்லனா என்னைக்கோ
தலையை பிச்சுக்கிட்டு சுத்தி இருப்பேன்”, என்று சிரிக்க,
“அப்படியா சொல்ற?”, என்று அவர் தோளில் சாய்ந்து அவன் சிரிக்க, “உன் வயசுக்கு மீறிய
பாரத்தை உன் தலைல ஏற்றிட்டேன் அபி.”
“இல்லம்மா அப்பா என்ன குடிகாரரா இல்ல ஊதாரியா? மகள்கள் மேல உள்ள பாசத்துல கண்
மண் தெரியாமல் செலவு செய்யறார். அது நல்லா குளிர் காயுது. அவரும் இந்த கல்யாணத்துக்கு
எவ்ளோ மெனக்கெட்டு கடன் எல்லாம் வாங்கி இருக்கார். எனக்கும் புரியும்மா. நீ விடு. என்னால
முடிஞ்சதை நான் கண்டிப்பா செய்வேன். இது என் விருப்பம் தான். யாரும் என் மேல திணிக்கலை.
நானா விரும்பி என் குடும்பத்துக்கு செய்யறேன். ரேகா வோட செய்கைகள் பிடிக்காதே ஒழிய,
அவளை பிடிக்கும்மா.”
“எனக்கு உன்னை புரியுது அபி. அப்பாவும் உன்னை புரிஞ்சுப்பார்.”, என்று வருத்தமாக அவர்
சொல்ல,
“அப்பாவுக்கு நல்லாவே புரியும். ஆனா மகள் மேல உள்ள பாசம் அதை நம்ம கிட்ட காட்டிக்க
விடாது. அவ்ளோ தான். நீ போய் படு. நாளைக்கு நான் சீக்கிரம் கிபாம்பிடுவேன். நீ சமைக்க
வேண்டாம். எல்லா வேலையும் செஞ்சு நீ முடியாம படுத்துட்டா கஷ்டம்மா.”
“சாப்பாட்டுக்கு என்ன டா பண்ணுவ??”
“முடிஞ்சா வந்து சாப்பிட்டுட்டு போறேன். விடு. இன்னும் ஒரு வாரம் எதை பற்றியும்
யோசிக்காதேம்மா. எல்லாம் பழகும்.”
“சரிடா. “,என்று அவர் எழுந்து போனார்.
அவர் நடந்து செல்வதை வெறித்துப் பார்த்தான் அபி.மெலிந்த அவரின் தேகம் அவர் இந்த
குடும்பத்திற்காக தேய்ந்து போய் இருக்கிறார் என்று சொல்லியது. கண்களில் அவர் மீதான
அன்பயும் தாண்டி பரிவு நிறைய வந்தது. இவருக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்ற, தன்
முடிவில் உறுதியாக நின்று அடுத்தடுத்த வேலைகளை கவனித்தான் அபி.
ஆருஷி உடல்நலம் தேறி இருந்தாள். ஆனால் அடைபட்டு கிடந்ததால் கொஞ்சம் மனதளவில்
பயம் சூழ்ந்து இருந்தது. இரவில் பயம் கொண்டு எழுந்தாள்.
மீண்டும் படுக்க, அவள் அறைக்கதவு மூடி இருக்கவே, எழுந்து சென்று அதை முக்கால்வாசி
திறந்து வைத்தாள்.
மீண்டும் படுக்கையில் தலை சாய்க்க, அவளுள், ‘நாம் அப்படி என்ன அவர்களுக்கு தீங்கு
செய்துவிட்டோம் என்று இப்படி செய்து விட்டனர்’ என்ற எரிச்சல் வந்தது.
எழுந்தவள் படுக்க முடியாமல் மனம் அலைகழிக்க, ரிதுவுக்கு போன் செய்தாள். ஆனால்
எடுத்ததோ பொடியன் ரிஷி
“சொல்லுக்கா”,என்று தூக்க கலக்கத்தில் அவன் பேச,
“ரிது எங்க டா?”
“தூங்கறா.. “,என்றான் கொட்டாவி விட்டபடி.
“எழுப்பு டா. எனக்கு அவளோட பேசணும்.”,என்று சிணுங்களாக ஆரூ சொல்ல,
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லயா ஆரூ அக்கா. அவளோட தானே காலைல இருந்து
இருக்க?”,என்று கேட்டிட,
“அதனால என்ன டா? எனக்கு பேசணும். குடு”, என்று வம்புக்கு நின்றாள்.
“நான் தான் பேசுறேனே.. என்னோட பேசு. அவ தூங்குறா. நான் எழுப்ப மாட்டேன். உனக்கு
என்ன வேணுமோ என்கிட்ட சொல்லு நான் பேசறேன் உன்னோட.”,என்று சொல்ல,
“ஆமா இவன் பெரிய லார்ட்.. உன்கிட்ட எல்லாத்தயும் சொல்ல முடியுமா டா? நீயே
தம்மாத்தூண்டு இருக்க.”,என்று கிண்டலடிக்க,
அவனோ, “மவளே கைக்கு எட்டாத தூரத்துல இருக்கற லொள்ளு உன்னை இப்படி பேச
வைக்கிது. என்கிட்ட ரிஷி ரிஷி இப்படி பண்ணலாமா டா?? அப்படி பண்ணலாமா டான்னு வருவ
தானே.. அப்போ பார்த்துக்கறேன் உன்னை.. ஓடிப்போ.. “,என்று கத்தி விட்டு போனை
வைத்தான்.
அவன் சொன்னதை கேட்ட ஆரூ சட்டென்று சிரித்தபடி, “வாலுப்பய..”, என்று சொல்லிவிட்டு
சரிந்தவள், அவளை அறியாமல் உறங்கிப்போனாள்.
மனம் என்னும் மாய வலை நம் பயங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து
நம்மை உறங்க விடாமல் படுத்தும். ஆனால் அதுவே ஒரு நல்ல நகைச்சுவை, அல்லது
இனிமையான கானம் நம்மை அந்த மாய தோற்றத்தை கலைத்து நிம்மதி கொள்ள வைக்கும்.
ஆருவுக்கு அந்த அழகிய நிமிடத்தை ரிஷி விளையாட்டுப் போக்கில் கொடுத்துவிட்டான்.
ஒருவேளை ரிதுவே பேசி இருந்தாலும் அவளை சமாதானம் செய்திருப்பாளே ஒழிய, அவளால்
உறங்கி இருக்க முடியுமா என்பது கேள்வியே.
மனம் கண்டிப்பாக மாயவலை தான்…
ஹர்ஷா கொதிநிலையில் இருந்தான். பாட்டி தாத்தா வந்த பின் அவனுக்கு வெளியில் சென்று
நண்பர்களுடன் விளையாடுவதை விட, ஏனோ பாட்டியின் கையால் சமைத்த உணவை
உண்டபடி தாத்தாவின் அறிவாற்றலை சோதிக்கும் தன் சிறுபிள்ளை கேள்விகளை
கேட்டுக்கொண்டு பாட்டி மடியில் தலை சாய்த்துக்கொள்ள பிடித்தது.
ஆனால் லதா அவனை ஏதோ காரணம் சொல்லி, வெளியே அனுப்ப முயல்வதும், வேலை
கொடுப்பதும் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
அபியிடம் இதை பற்றி பேசலாம் என்று அவனும் மூன்று நாட்களாக முயல்கிறான், அபி டியூஷன்
முடிந்த நிமிடம்,” வரேன் டா பங்கு “,என்று சொல்லிவிட்டு ஓடி விடுகிறான்.
அவனோடு நின்று பேச கூட நேரம் இல்லை. வாரக் கடைசியில் வீட்டுக்கு போய் அவனை நாலு
சாத்து சாத்த வேண்டும் என்று நினைத்தவன்,அன்று காலை டியூஷனுக்குள் நுழைய அபி இல்லை.
‘இதென்ன இவனை காணவில்லை’ என்று நினைத்தபடி அமர்ந்தவனிடம் வந்த கெமிஸ்ட்ரி
சார்,”நாளால இருந்து எந்த நேரத்துக்கு வருவன்னு சொல்லு டா லெட்ஜர்ல எழுதணும்”, என்று
கேட்க,
புரியாமல் முழித்தான் ஹர்ஷா.
“அபி டியூஷன் விட்டு நின்னுட்டான் டா. நீ அவனுக்காக தான் அரை தூக்கத்துல இந்த
நேரத்துக்கு வர, இனி எப்போ வருவன்னு சொல்லு”, என்று கேட்டதும் தான் அவன்
கொதிநிலையை அடைந்தான்.
அபி ,’தான் இனி டியூஷனுக்கு வரப்போவதில்லை என்பதை கூட சொல்லாமல் நின்று விட்டான்.’
என்று கோபம் கொண்டான். “நாளைக்கு சொல்றேன் சார்”, என்று தான் பதிலுக்காக
காத்திருந்தவரிடம் சொன்னவன், கடுப்புடன் கிளப்பி வண்டியை கிளப்பி பள்ளிக்கு செல்ல,
வாசலில் சைக்கிளை நிறுத்திக்கொண்டு இருந்தனர் ஆருஷியும் ரிதுவும்.
இன்னும் ஆருஷி அவன் ஸ்போர்ட்ஸ்வேர் திருப்பி தராததால் கேட்போம் என்று நினைத்தவன்,
“ஹெலோ.. “, என்று முன்னால் போனவர்களை அழைத்தான்.
அவர்கள் இருவரும் ஒருசேர திரும்ப, ரிது கண்களில் பரிச்சய உணர்வும், ஆருஷி கண்களில் ஒரு
ஆர்வமும் மின்னியது.
“ஹாய் “,என்று ரிது அவனிடம் பேச்சு கொடுக்க, ஆரூ அமைதியாக பைக்குள் இருந்த அவன்
உடையை எடுத்துக் கொடுத்தாள்.
அதை பெற்றுக்கொண்டவன், “உனக்கு உடம்புக்கு பரவாயில்லையா?? “,என்றிட,
“ம்ம்”, என்று தலையை ஆட்டினாள்.
ரிதுவுக்கு ஆச்சர்யம் யாரிடமும் வாயடிக்கும் ஆரூ ஹர்ஷாவிடம் அமைதியின் திருவுருவாக
நிற்பதை நினைத்து உள்ளே சிரித்துக்கொண்டாள்.
மூவரும் விடை பெற்று வகுப்பறைக்கு செல்ல, அங்கே ஹர்ஷாவின் நண்பன் அவனிடம் ஒரு
கடிதம் கொடுத்தான்.
அதில் அபி,’ நான் இனி டியூஷன் வர மாட்டேன் பங்கு. இதை நேர்ல உன்கிட்ட சொல்ற தெம்பு
எனக்கு இல்லை டா. அக்கா கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு. நான் கண்டிப்பா
அம்மாவுக்கு உதவி பண்ணனும். அதனால அம்மாவுக்கு பொடி, அப்பளம் பாக்கெட் போட வீட்ல
காலைல உதவி பண்ண போறேன். அதான் சீக்கிரம் போர்சன் எல்லாத்தயும் சார் கிட்ட கேட்டு
நோட்ஸ் வாங்கிட்டேன். உன்னை தான் மிஸ் பண்ணுவேன். பார்க்கலாம் டா எப்போ முடியுதோ.’,
என்று அவன் வருத்தத்தோடு முடித்திருக்க,
ஹர்ஷா முகத்தில் சின்ன சிரிப்பு.
“நீ வராட்டி போ டா எருமை நான் வருவேன் உன்னை பார்க்க..”, என்று சிரித்தான் அவனுள்.
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Spr spr spr sis…..
Super interesting. .I already read this story but concept marathuduchi.. 3 yrs back irukum sis
Super sis
Super epi