Skip to content
Home » நீயே என் ஜீவனடி – ஜீவன் 8

நீயே என் ஜீவனடி – ஜீவன் 8

அரவிந்த் சென்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அரவிந்துக்கும் தன் தந்தைக்கும் நடுவே என்ன நடந்தது என ஆனந்திக்கு இன்னும் புரியவில்லை.

மருதமுத்துவும் எதையும் சொல்வதாக இல்லை. ஆனால் ஆனந்திக்கு ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது.

தன் தந்தை அவன் காலில் ஏன் விழுந்தார். அப்படி என்ன நடந்திருக்கும் என குழம்பிப் போயிருந்தாள்.

அரவிந்த்தை பார்க்கும்போதெல்லாம் தடுமாறியவள் இப்போதும் அவன் மேல் கோபமாக இருந்தாள்.

தன் தந்தையின் முகமும் இரண்டு நாட்களாய் சரி இல்லாமல் இருந்தது அவளை மேலும் கவலையில் ஆழ்த்தியது.

டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டிருந்தவளை உலுக்கினாள், பர்வதம்.

“இப்ப தானே எந்திரிச்ச. திரும்ப தூங்க ஆரம்பிச்சிட்டியா. எவ்ளோ நேரமா காலிங் பெல் அடிக்குது போய் பாத்துட்டு இந்த டீய குடி” என டேபிள் மேல் டீயை வைத்த பர்வதம் சமையலறைக்குள் நுழைந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு சலிப்புடன் கதவை திறந்தவள் கண்களை அகல விரித்தாள்.

” நீ இங்க என்ன பண்ற.”

” சாரி ஆனந்தி.”

” எதுக்கு பிரகாஷ்?” என பேசிக் கொண்டிருக்கையில் சிதம்பரத்தின் ஆட்கள் வீட்டினுள் புகுந்து ஆனந்தியின் கைகளை பிடித்துக் கொண்டனர்.

” டேய் யாருடா நீங்க. என்னடா பண்றீங்க. விடுங்கடா.” என கத்த அறையினுள் இருந்த மருதமுத்துவும் சமையல் அறையில் இருந்த பர்வதமும் வெளியில் வர அங்கே நடப்பதை பார்த்து பயந்து ஆனந்தியை காப்பாற்ற முயற்சி செய்ய அவர்களை தள்ளிவிட்டு ஆனந்தியை வேனின் அருகே கொண்டு சென்றனர்.

கீழே விழுந்த மருதமுத்து எவ்வளவு போராடியும் ஆனந்தியை காப்பாற்ற முடியவில்லை.

அவள் அவர்களுடன் போராடி கொண்டிருந்தாள்.

வேன் அங்கிருந்து கிளம்பியதும் அவசரமாக உள்ளே நுழைந்த மருதமுத்து அரவிந்த்தை தொடர்பு கொண்டார்.

“ஹலோ”

” தம்பி. அந்த சிதம்பரம் ஆளுங்க ஆனந்திய கடத்திட்டு போறாங்கப்பா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”

” என்ன சொல்றீங்க…..? சரி. இப்போ அவங்க எந்த பக்கம் போறாங்க.”

” கிழக்கு பக்கம் போறாங்க.”

“சரி. நீங்க பயப்படாதீங்க. நான் பாத்துக்குறேன்.” ன்னு அலைபேசியை அணைத்து விட்டு மணியை தொலை பேசியில் அழைத்தான்.

” டேய் எங்க இருக்கீங்க. உங்கள நம்பி தானே ஆனந்திய பாத்துக்க சொன்னேன்.”

” அண்ணே பதட்டப்படாதீங்க. அவங்க வேன்ல போனதால நான் அவங்கள பார்க்கல. ஆனால் திரும்பி வரும்போது அண்ணிய பார்த்துட்டேண்ணே. அண்ணி போற வண்டிய தான் துரத்தி போயிட்டு இருக்கோம்.”

“இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க.”

“கோயில் கிட்ட வண்டி நிக்குதுண்ணே.உள்ள போகவா.”

” இல்ல வேணாம். நான் வர்ற வரை அவங்களையே பாத்துட்டு இருக்கேன்.”

அங்கு அரிவாள்களுக்கு நடுவே தன் கழுத்தில் கீரல் விழக்கூடாது என பயந்த வண்ணமே பச்சை நிற பட்டில் மின்னும் நகைகளுடன் சிதம்பரத்தின் முன் நின்றாள், ஆனந்தி.

” என்னையே ஆள் வெச்சு மிரட்ட பார்க்கிறீர்களோ. நான் தான் சொன்னேன்ல நீ தான் என் மருமவன்னு. எவனும் இதை தடுக்க முடியாது.உனக்கு உன் உயிர் மேலயும் உன் அப்பா அம்மா உயிர் மேலயும் ஆசை இருந்தா வாய மூடிட்டு போய் மணவறைல உக்காரு.” என்றார் அதிகார தோணியில்.

வெட்கத்துடன் வரும் மணப்பெண்ணை , அவள் தோழிகள் சீண்ட அழைத்து வருவதற்கு பதிலாய் கட்டையாய் இருவர் அரிவாளை காட்டி மிரட்டியதில் பயந்து கொண்டே மணவறையில் அமர்ந்தாள்,ஆனந்தி.

இவள் ‘என்னவள்’ என பூரித்து பார்க்க வேண்டிய பிரகாஷோ ‘அய்யோ அப்பா மேல இருக்குற கோபத்துல என்னை கடிச்சு வச்சுருவாளோ’ என மிரண்டு உட்கார்ந்திருக்க அவனுக்கு அருகிலும் அவனை மிரட்ட அரிவாளுடன் ஒருவன் நின்று கொண்டு இருந்தான்.

ஆனந்தியின் சம்மதம் இன்றி அவளை திருமணம் செய்வதில் பிரகாஷிற்கு துளியும் விருப்பமில்லை.

ஆனால் தன் தந்தைக்கு பயந்தே வளர்ந்த பிரகாஷால் எதுவும் செய்ய முடியவில்லை.

” ஆனந்தி என்ன தப்பா எடுத்துக்காத. என் அப்பாகிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன். என்னால எதுவும் செய்ய முடியல.” எனக் கூறியவனை முறைத்தாள்.

சிதம்பரத்தின் மிரட்டலில் ஐயர் வேகவேகமாக மந்திரத்தை ஓதி விட்டு தாலியை பிரகாஷிடம் நீட்ட அந்தத் தாலி அந்தரத்தில் பறந்து அக்னி குண்டத்தில் விழுந்து கருகியது.

அதை கண்டு ஆத்திரமடைந்த சிதம்பரம் திரும்பிப்பார்க்க ஆண் மகனுக்கே உரிய தோரணையில் கம்பீரமாக மீசையை முறுக்கிக் கொண்டு நின்ற அரவிந்தை பார்த்ததும் அவர் முகம் கோபத்தில் கொப்பளித்தது.

தன் அடியாட்களை சிதம்பரம் பார்க்க அவர்கள் முன்னேறி அரவிந்தை தாக்க முயற்சிக்க அவர்கள் அனைவரையும் இரண்டே நிமிடத்தில் அடித்து துவசம் செய்தான்.

‘ இவன் எப்படி வந்தான். சப்ப பீஸ்னு நினைச்சேன்.அட்ட டைம்ல இத்தனை பேற துவச்சு காய போடுறான்.’ என எண்ணிக் கொண்டிருந்தவளை கலைத்தான், பிரகாஷ்.

“அடிப்பாவி உனக்கு தான் தெரியும்ல. இதுல எனக்கு எந்த சம்பந்தமும் இல்ல. சொன்ன மாதிரியே என்னை அடிக்க அவன கூட்டிட்டு வந்துட்ட.”

” சும்மா இருடா முண்டம். நானே அவன் எப்படி வந்தான்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். வந்து காமெடி பண்ணிட்டு இருக்கான்.”

” என்னது காமெடியா.அதானே அன்னக்கி நீ அடி வாங்கிருந்தா தெரிஞ்சிருக்கும். நான்தானே வாங்குவேன். உனக்கு எப்படி தெரியும்.” என்றவன்,

‘ கடவுளே என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா. இவள புடிச்சிருக்குன்னு தானே சொன்னேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா.

நல்லவேளை லவ்வெல்லாம் பண்ணல. பண்ணி இருந்தா இன்னைக்கு பலி நானாதான் இருப்பேன். என்னை எப்படியாவது இதிலிருந்து காப்பாத்தி விட்ரு கடவுளே.’ என வேண்டிக்கொண்டு இருக்க அவன் முன் வந்து நின்றான்.

பிரகாஷை பார்த்தவன்,” என்னை மன்னிச்சிரு.” என கூறி பளார் என்று ஒரு அறையை விட,

‘ இது என்னடா புது ட்ரென்டா இருக்கு. மன்னிப்பு கேட்டுட்டு அடிக்கிறான். கடவுளே காப்பாத்த தானே சொன்னேன். கோத்து விட சொல்லலையே.’ என மனதில் நினைக்க,

“யாருல நீ. எம்புட்டு தைரியம் இருந்தா என் மவன் மேலேயே கைய வப்ப.” என சிதம்பரம் மிரட்ட,

” நான் யாருன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ சிதம்பரம்.” என தைரியமாக சிதம்பரத்தின் முன் பேசினான், அரவிந்த்.

” என்னையவே பேர் சொல்லுதியால.”

” பேர் சொல்லி கூப்பிட தானே சிதம்பரம் பேரு வச்சிருக்காங்க.”

” ஏலேய், சின்ன பையனா இருக்கிறதால உன்ன விடுறேன். ஒழுங்கா என் குடும்ப விஷயத்தில தலையிடாம கிளம்பிரு.

பின்ன ரொம்ப வருத்தப்படுவ. இன்னைக்கு என் பையனுக்கும் என் மருமவளுக்கும் கல்யாணம். அத யாராலயும் தடுக்க முடியாது.”

” என்னது மருமவளா?” என்றவன் பிரகாஷிற்கு அருகிலிருந்த ஆனந்தியை கரம்பற்றி தன் புறம் இழுத்தவன்,

” எங்க தைரியம் இருந்தா உன் பையன ஆனந்தி கழுத்துல தாலி கட்ட சொல்லு.” என கூற முதலில் மிரண்ட சிதம்பரம்,

“ஏலேய், வேற தாலிய எடுத்துட்டு வாங்கல.” என கூற அவசரத்திற்கு அங்கிருந்த மரத்தில் இருந்து தாலியை எடுத்து வர, அது பிரகாஷிடம் கொடுக்கப்பட்டது.

“கட்டுல தாலிய….” என பிரகாஷை சிதம்பரம் ஏவ,

” அப்பா” என பிரகாஷ் தயங்க,

” கட்டுல அவன் என்ன பண்ணுதான்னு நான் பார்க்குதேன்.”

‘ சொல்லுவையா சொல்லுவ. நீ நல்லா வேடிக்கை பார்ப்ப. அடிவாங்க போறது நான்தானே.’ என தன் தந்தையை அர்ச்சனை செய்து கொண்டு நிற்க,

‘ யாருக்கு பயப்படுறதுன்னே தெரியல. ஒரு பக்கம் அப்பா. தாலி கட்டல சீவிருவாரு.

இன்னொரு பக்கம் ஆனந்தி. தாலியை கட்டினேன் நான் செத்தேன்.

இதுல புதுசா இந்த ரவுடி சும்மாவே ரீசன் இல்லாம அடிப்பான். இப்ப தாலி கட்ட ட்ரை பண்ணாலே சாவடிச்சிருவான் போலயே.’ கைகள் நடுங்க தாலியை பிடித்திருந்தான்.

” என்ன சிதம்பரம் உன் வித்தையை கொஞ்சம் உன் பையனுக்கும் சொல்லி கொடுத்து இருக்கலாம்ல.

எப்டி நடுங்குறான் பாரு.

இவன் ஆனந்தியை உன் வீட்டுக்கு மருமவளா கொண்டு வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல.

நீ வேணா என்னை உன் பையனா ஏத்துக்கோ. இவள நம்ம வீட்டு மருமவளா நான் கொண்டு வரேன்.” என அரவிந்த் கூற அந்த அர்த்தத்தை சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்ளும் முன் தன் கழுத்தில் இருந்த தாலியை உறுவியவன் ஆனந்தியின் கழுத்தில் கட்டினான்.

அரவிந்த் இவ்வளவு பேசிய அதிர்ச்சியில் ஆனந்தி சிதம்பரத்தை பார்த்துக்கொண்டிருக்க, தன் கழுத்தில் ஏதோ உறுத்த கீழே குனிந்து தாலியை பார்த்தபோது, அரவிந்த் மூன்று முடிச்சை வெற்றிகரமாக போட்டு முடித்திருந்தான்.

ஆனந்தியின் கழுத்தில் அரவிந்த் கட்டிய தாலியை பார்த்த சிதம்பரத்தின் வாய் ‘அரவிந்த்’ என அனிச்சையாய் கூற,

” இப்ப தெரியுதா இந்த அரவிந்த் யாருன்னு. பாத்து பத்திரமா இருங்க. பூச்சாண்டி காட்டேற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம்.” என்றவன், ஆனந்தியை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

என்ன நடந்தது என தெரியாமல் அரவிந்தின் இழுப்பிற்கு சென்றவளை காரில் ஏற்றினான்.

1 thought on “நீயே என் ஜீவனடி – ஜீவன் 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *