காலை ஆறு மணி. காலண்டரையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் சந்தியா.. நாட்கள் என்னும் பூக்கள் சிந்திக்கிட்டே இருக்கு, தினம் ஒரு பூவின் வாசத்தோட….
இன்று ஜனவரி இருபத்தாறு……இருபத்தாறு வருஷம் முந்தி இதே தேதியில் அவளுக்கு கல்யாணம் நடந்தது. அப்ப அவளுக்கு இருபத்திரெண்டு வயசு…. காலண்டருக்கு மேலே அவள் பார்வை போனது. அவளின் கல்யாண போட்டோ தொங்கிக் கொண்டிருந்தது. அவளும் அவனும்….
“நா கூட கியூட்டா இருக்கேன்லே…..சின்னதா செப்பு சிலை மாதிரி.! அய்யோ என்னா வெக்கம்! கன்னமெல்லாம் பூரிச்சு….அந்த கண்ணில் தான் எவ்வளவு இன்னொசென்ஸ.! புத்தம் புது காலை மாதிரி….அன்றலர்ந்த செந்தாமரையாக…….எண்ணம் ஓடியது.
அக்ரலிக் பெயிண்ட் அடித்த சுவரில் தான் அந்த போட்டோ மாட்டப்பட்டு இருந்தது. பெயிண்ட் மங்கிப் போயிருந்தாலும். அதில் பதிந்திருந்த படத்தில் தான் அவள் சரித்திரம் தொடங்கியது. சுவரை புது பெயிண்ட் அடித்து புதுசாக்கலாம்….ஆனால் அது போல் அவள் வாழ்க்கையை புதுசாக்க முடியுமா.?
“டீச்சர்….இது நீங்களா.?….” என்று நேற்று அவள் வீட்டுக்கு வந்த ஒரு மாணவி படத்தைப் பார்த்துவிட்டு, நம்ப முடியாமல் கேட்டாள்.
“நம்ப முடியலை இல்லே.?….” என்று சிரித்தாள் சந்தியா.
“இப்பவும் அழகாத்தான் இருக்கீங்க டீச்சர்..” என்றாளே மாணவி.
பக்கத்தில் உள்ள கண்ணாடியில் அவள் தன்னை இப்பொழுது பார்த்தாள். கல்யாணப் பெண் சந்தியா….குடும்பத் தலைவியாக ஓடிய ஓட்டத்தில்….உடல் பருமன், முடியில் நரை கம்பிகள்….கண்ணில் நிதானம்….என்று கண்ணாடி இன்றய அவள் சரித்திரத்தைச் சொல்லியது. இப்பொழுதும் கூட அவளுக்கு அவள் முகம் பிடித்து தான் இருந்தது. அவனுக்குத் தான் பிடிக்காமல் போய்விட்டது ….பம்பிளிமாஸ் என்று பேர் வைத்திருக்கிறான். சிறிது குண்டாகிப் போனால் என்ன.? அழகு குறைந்துவிடுமா என்ன.?
அவன் கொடுத்த முள்ளை மறந்து, மாணவியின் பாராட்டு என்னும் மலரால் அவள் மனம் மலர்ந்தது….
ராஜகோபால்….. மலராய் தான் இருந்தான் இத்தனை வருடங்கள்….
இந்த ஒரு வருஷமா தான் அவன் முள்ளாக மாறிவிட்டான்….
கல்யாணம் நிச்சயமானதும் அவள் ஸ்மரனை செய்த பேர், இரவில் யாருக்கும் தெரியாமல் அவள் கிசுகிசுத்த பேர், நோட்டு புத்தகத்தில் சந்தியா ராஜகோபால் என்று எழுதி பரவசப்பட்ட பேர்….இன்றும் அந்த நோட்டு அவளிடம் இருக்கு.
ராஜா மாதிரி தான் இருந்தான். அவனை அவள் எப்போது பார்த்தாள்.? கல்யாண மேடையில் தான்….
அந்தக் காலம் அப்படித்தானே.! பார்க்காமலேயே கல்யாண மேடைக்கு வந்துவிடுவார்கள். பெரியவர்கள் பார்த்தால் போதுமானது.
கல்யாணம் நடந்த நாள். அதை மறக்க முடியாது. அக்கா பிரபா தான் அவளுக்கு பெண் அலங்காரம் பண்ணி விட்டது. அப்பொழுது தான் பெண் அலங்காரம் பண்ண பியூட்டிஷன் வரவழைக்கும் பழக்கம் துளிர் விட்டிருந்தது. சித்தி சொன்னாள்….
“இவ அப்படி ஒன்றும் கலர் இல்லை. பேசாம ஒரு பியூட்டிஷனை ஏற்பாடு பண்ணிடலாம்…..மாப்பிள்ளை எலுமிச்ச கலர்….அதான் சொன்னேன். காக்கா வாயிலே எலுமிச்சை வச்சது போல் இருந்திடக் கூடாது இல்லே……” சந்தியாவை குத்திக் காட்டுவது சித்திக்கு பிடித்த ஹாபி. சித்தி சிவப்பு ரோஜா மாதிரி கலர்….அந்தத் திமிர்.
சந்தியாவின் முகம் சுண்டியது.
“சந்தியாவுக்கு கலரான மாப்பிள்ளை அமஞ்சு போச்சு…..என் அக்கா பொண்ணு தங்கநிறம், அவளுக்கு கரிக்கட்டை மாதிரி மாப்பிள்ளை……” அங்கலாய்ப்பது போல், சந்தியாவை பலரிடமும் மட்டம் தட்டி சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி.
“என்ன பியூட்டிஷனுக்கு சொல்லிவிடவா.?” மீண்டும் ஆரம்பித்தாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சித்தி. சந்தியாவுக்கு என்ன குறைச்சல்.? இந்தக் கலர் போதும் குத்துவிளக்கின் தீப ஒளி மாதிரி. டல்லாத் தான் தெரியும், பொறாமை புடிச்ச கண்களுக்கு. அவள் கலர் பாந்தமான கலர். பியூட்டீஷணும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். அவங்க ஓவர் மேக்-அப் போட்டு முகத்தையே கெடுத்திடுவாங்க….நானே என் தங்கைக்கு போட்டு விடறேன்….. சந்தியா போ முதல்லே தலையை ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வா……” இவள் அக்கா இல்லை அம்மா….அதென்ன பாந்தமான கலர்? என்று முணுமுணுத்தபடி, சித்தி முகத்தை தோளில் இடித்துவிட்டுப் போய்விட்டாள்.
சந்தியா குளிக்கச் சென்றாள்…… குறுகுறுவென்று எண்ணங்கள் ஷாம்பு நுரை போல் குமிழியிட்டது. ராஜகோபால் எப்படி இருப்பான்.? ஒரு போட்டோ கூட காட்டவில்லை. லலலா லலலா என்று பாடியபடி குளியலை முடித்தாள்…….விலை உயர்ந்த சந்தன சோப்பின் வாசனை அவள் துடைத்த டவலில் கூட வீசியது. அதிசயமாக கல்யாணத்துக்காக சந்தன சோப் வாங்கித் தந்தாள் சித்தி. ஜார்ஜெட் புடவையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
“அய்யே….பச்சப் புள்ள மாதிரி குளிச்சிட்டு வந்திருக்கே….பாரு ஜாக்கெட் எல்லாம் ஈரம்….இப்படி திரும்பு….”
மின்விசிறியை சுழல விட்டு அக்கா புது துண்டெடுத்து தலையை துவட்டி விட்டாள்….அடர்ந்த கூந்தல் லேசில் காயவில்லை.
கல்யாண மண்டபம் ஜேஜே என்றிருந்தது. சித்தி கூட தன் கடுகடு முகத்தை புன்னகையில் விரிவாக்கி கொண்டாள். ரெண்டாவது பாரம் குறையப் போகிற சந்தோஷமாக இருக்கும். முதல் பாரம் அக்கா பிரபா. அவளுக்கு சொந்தத்தில் கல்யாணம் முடிந்துவிட்டது. அதிக நகை சீர் கொடுக்க வேண்டியதில்லை என்று சித்திக்கு மகிழ்ச்சி.
சந்தியாவுக்கு அவள் மாப்பிள்ளை பார்க்கும் போது தரகரிடம் ஒரு கண்டிஷன் வைத்தாள். “மாப்பிள்ளைக்கு சொந்த பந்தம் என்று யாரும் இருக்கக் கூடாது.”
“அனாதையா இருக்கணும்னு சொல்றீங்க. அதானே.?”
“யோவ்….அதிக்கப்பரசங்கித்தனமா பேசாதீங்க. சொன்னபடி செய்யுங்க உங்களை செமத்தியா கவனிப்பேன்.” என்றாள்.
நமக்கெதுக்கு வம்பு.? அப்படியே பார்த்திட்டாப் போச்சு. அஞ்சாயிரம் கூட வாங்கிட்டாப் போச்சு…..சொன்னபடி நெருங்கின சொந்தங்கள் இல்லாத ராஜகோபாலை கொண்டு வந்து நிறுத்தினார்.
ஜாதகம் பொருந்த, கல்யாணம் நிச்சயமாகிவிட்டது.
“ஏண்டி சரோஜா….எதுக்கு இப்படி ஒரு வரணை தேர்ந்தெடுத்த.? சொந்தங்கள் இல்லாத மாப்பிள்ளை….” என்று சூட்சமத்தைக் கேட்டாள் சித்தியின் அக்கா வேணி.
“அக்கா….வேற எதுக்கு.? நாம செய்கிற சீர் நகை பத்தி விமர்சனம் பண்ணி சண்டை இழுக்க ஆள் இருக்க மாட்டாங்க பாரு.? அதான்.”
வேணி பலே பலே என்று தலையாட்டினாள். இவளுக்கோ பிள்ளை இல்லை….எதுக்கு இதுங்களுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டு காசு சேர்க்கணும்.? என்ற எண்ணம் வேணிக்குள் ஓடியது. தங்கையின் அல்ப குணம் தெரிந்தும் அவளுக்கு எதிரே பேச விரும்பவில்லை வேணி.
சந்தியாவின் தந்தை வசதியானவர் தான். நமக்கென்ன? வேணி தங்கைக்கு உதவியாக கல்யாண வேலைகளில் ஈடுபட்டாள்.
உறவினர்கள் குளித்து முடித்து தங்கள் தங்கள் உருவத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது….
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி…. என்று டி.எம். ஸ் கல்யாண வீட்டின் ஒலிபெருக்கியில் வாழ்த்து பாடிக் கொண்டிருந்தார்.
பிரபா தங்கையின் ஜடையை பின்னிவிட்டு பூக்களால் அலங்கரிக்கப் பட்ட ரெடிமேட் பூ ஜடயை பின்னலில் கட்டி விட்டாள். முகத்துக்கு பேர் அண்ட் லவ்லி பூசிவிட்டு அதன் மேல் பேக்ட் கேக் பௌடரை சீராக பூசிவிட்டாள். கண்களில் மை தீட்டி, உதட்டில் லேசாக சாயம் பூசி, புருவம் டிரிம் பண்ணி….சந்தியாவின் அழகுக்கு அழகு சேர்த்தாள். கன்னத்தில் ஒரு சின்ன கருப்பு பொட்டு….
“திருஷ்டி கழிக்க….” என்று வைத்து கைகளால் நெற்றிப் பொட்டில் வழித்து விட்டாள். சட சடவென்று சத்தம்.
“எவ்வளவு திருஷ்டி..” என்றாள். சந்தியாவுக்கு அம்மாவின் நினைவு வந்தது. மறைந்த அம்மா அக்கா வடிவில் உக்காந்து இருப்பது போல் பட்டது..”தேங்க்ஸ் அக்கா..”
பிரபாவின் கணவர் ஸ்ரீராம். ரெண்டு குழந்தைகள். சுதா அஞ்சு வயது. மாலன் மூணு வயது. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சந்தியா கண்ணில் நீர் பூத்தது. அம்மா இல்லையே என்று சிறிது நேரம் சகோதரிகள் விசனப்பட்டார்கள். ஆறு வருடம் முந்தி அக்காவின் கல்யாணத்தின் போதும் அம்மாவின் நினைப்பு வந்தது. இவள் கல்யாணத்திலும் அந்த நினைப்பு வருகிறது.
“சிலருக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கு சந்தியா. பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பதுன்னு சொல்வாங்க. அம்மா மாதிரி ஆகாது….ஆனால் நான் தான் இன்று உன் அம்மா. எங்கே சிரி.?” என்றாள் பிரபா அவள் கண்களுமே கலங்கித் தான் இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் அக்கா….”
“எதுக்கு தேங்க்ஸ் டீ? நான் ஆசையா அலங்காரம் பண்ணறேன் என் தங்கச்சிக்கு. சே….இனிமே நீ அழவே கூடாது. நல்லா இருக்கணும்.” என்று ஆசீர்வதித்தாள்.
மணமேடை ஏறினாள் சந்தியா. அவள் கண்கள் வெட்கத்தை விட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தது. அவனும் ஏறிட்டான்.. கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சாரம் இருவர் மனசையும் இணைத்தது.
அவள் கரம் பற்றினான். முதல் ஸ்பரிசம்….இருவரும் அந்த மண்டபம் விட்டு எங்கெங்கோ சென்று திரும்பினார்கள். அவள் கழுத்தில் இனிதாக தாலி ஏறியது. அவர்கள் மனம். செம்புலப் பெயல் நீர் போல் அன்பாக கலந்தது.
ராஜகோபாலுக்கு அம்மா அவன் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக சொல்ல, அப்பா நோய்வாய்ப்பட்டு இருப்பதால் வரவில்லை என்றார்கள். ஆக அவன் கல்யாணத்தை சிறப்பிக்க அப்பாவோ அம்மாவோ இல்லை. வேறு நெருங்கிய உறவினர் யாரும் இருப்பதாக அவன் சொல்லவில்லை. ஒரே ஒரு பாட்டி காந்தம்மை வந்திருந்தார். அவருக்கு வயது எழுபது.. ஏழ்மை தோற்றம். அதனால் சித்தி அவரை கண்டு கொள்ளவே இல்லை. “வாங்க….” என்று வரவேற்றதோடு சரி. அதுவும் முக சுளிப்புடன்.
ஒரு ஓரமாக இருந்து சடங்குகளை பார்த்துக் கொண்டு சிரித்த முகமாக அமர்ந்திருந்தார். பொண்ணு இருக்கும் அறைக்கு அவரை கூட்டி வந்தார் ஒரு அம்மா……
“இது மாப்பிள்ளையோட பாட்டி…..” என்று சந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
“வணக்கம் மா….” என்று அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். அவர் இதை எதிர்பார்க்கவில்லை போலும். ஒரு வித பயத்துடனே இருந்தார். “நல்லா இரு மா….” என்று புன்னகை ததும்ப அவர் சொல்ல, சித்தி “கிளம்புங்க…..மணமேடை எதிரே உள்ள நாக்காலியில் போய் உக்காருங்க……பொண்ணுக்கு டிரெஸ் சேஞ் பண்ணனும்.” என்று அலட்சியமாக அவரை துரத்தி விட்டாள்.
சித்தியின் அட்டகாசம் இந்த ஒரு நாளோடு சரி….இனி இவள் பக்கமே வரக் கூடாது….என்று தீர்மானித்துக் கொண்டாள் சந்தியா.
அவளுக்கு ஃபோன் வந்தது….
“சரசு……நீ எங்கே இருக்கே.? உன்னைத் தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன். முகூர்த்தம் முடிஞ்சு போச்சு டீ. இப்படி பண்ணிட்டியே.? நீ வராம என் கல்யாணம் முடிஞ்சு போச்சு. ரிசெப்ஷனுக்காவது வருவியா.? வரல உன்னோடு பேசவே மாட்டேன்.”
“சந்தியா ஸாரி டீ. என்ன பண்ணறது?. அண்ணாவுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம். முகூர்த்தம் முடிஞ்சு போச்சு….நாத்தனார் ஆச்சே மூணு முடிச்சு போட இருக்க வேணாமா.? சாயங்காலம் அவசியம் வரேன். கூப்பிடறாங்க……கோவப்படாதே கட்டாயம் வரேன்….”
சந்தியா தனக்கு கல்யாண தேதி நிச்சயமானதும் முதலில் சரசுவுக்குத் தான் ஃபோன் செய்து சொன்னாள்.
மரப்பாச்சி பொம்மை வைத்து அவர்கள் கல்யாண விளையாட்டு விளையாடி இருக்கிறார்கள். இன்று அவளுக்கே கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. சந்தியாவின் இனிய சிறுமி காலத்து தோழி சரசு.
சரசுவின் அப்பா அம்மா அவள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த காலமது. இருவரும் சேர்ந்தே பள்ளி செல்வார்கள். சேர்ந்தே ஒரே வகுப்பில் போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள். மதியம் சேர்ந்தே சாப்பிடுவார்கள்.
“அய்….ஆவக்கா மாங்கா ஊறுகா….தாடீ.” சரசு நாக்கு ஊற கேட்பாள்.
“உனக்கு இல்லாமலா? இத பார். சித்திக்கு தெரியாம ஒரு பாட்டிலில் உனக்கு எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்….”
சந்தியாவின் அப்பா இன்சூரன்ஸ் கம்பனியில் செக்ரடரி. இருபத்தாறு வருஷத்துக்கு முன் அது பெரிய பதவி. பெரிய சம்பளம். பல ஊர்களுக்கு கேம்ப் போவார் வாசுதேவன். ஆந்திரா பக்கம் டூர் போனால் கண்டிப்பாக ரெண்டு ஜாடி நிறைய ஆவக்காய் ஊறுகாய் வாங்கி வருவார். காரமும் எண்ணையும்….அதில் சிறிது வெள்ளைபூண்டும் என்று அமர்க்களமாக இருக்கும்.
“மோர் சாதத்துக்கு வேணும். சித்தி ஜாடியிலிருந்து எடுத்துக்கவா.?” ஊறுகாய் வந்த அன்று சந்தியா கேட்பாள்.
“அது இன்னும் சரியா ஊரலை. ஒரு வாரம் கழிச்சு எடுக்கலாம்.” என்று விடுவாள் சித்தி. பிரபாவும் சந்தியாவும் முணுமுணுத்தபடி பேசாமல் இருப்பதை தவிர வேறு வழி இருக்காது.
சித்தியின் உறவினர் வந்தால் ஜாடியின் ஊறுகாய் உடனே வெளியே வரும்…..”சாப்பிடு பிரேமா….அவர் டூர் போனால் வாங்கி வருவார். அசல் ஆந்திரா பிராடக்ட். கலப்படம் இல்லாதது….”
“ரொம்ப டேஸ்டா இருக்கு அக்கா….ஒரு சின்ன பாட்டிலில் கொடுப்பியா.? அவருக்கு மாங்கா ஊறுகான்னா ரொம்ப இஷ்டம்.”
“உனக்கு இல்லாததா பிரேமா.?” இப்படி, ஒரு ஜாடி ஊறுகாயும் பலருக்கும் விநியோகம் பண்ணிய பிறகே, இவர்களுக்கு கிடைக்கும். இப்படித் தான் எல்லாமே நடக்கும். சரசுவுக்குத் தெரியும்.
சரசு வரப் போகிறாள்….மாலை ரிசப்ஷனை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாள் சந்தியா……
அலங்காரம் எல்லாம் பண்ணிக் கொண்டு அவள் ரிசெப்ஷனுக்கு ரெடியாகும் போது அவளுக்கு ஃபோன் வந்தது….
“ஹலோ….என்ன என்ன……என்னாச்சு ?” சந்தியா மயங்கிச் சரிந்தாள். அதை இப்பொழுது நினைத்தாலும் சந்தியா அழுதுவிடுவாள்….
-தொடரும்.
-சங்கரி அப்பன்
NICE
INTERESTING
சித்தி என்றாலே இப்படித்தான் இருப்பார்களோ