அத்தியாயம்..6
ஏதாவது ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுத்து அதை நிரந்தரமா வச்சுக்கணும். அது வாழ்க்கையில் வர்ற மற்ற எல்லாப் பிரச்சனையையும் மறக்க வைக்கும்..இது தான் சரோஜாவின் கொள்கை. இருபது வயதில் மூன்று ரெடிமேட் குழந்தைகளுக்கு தாயாக வந்த நாளில் இருந்து அவளோட கொள்கை இது தான்.
சரோஜாவுக்கு ஆயிரம் கவலை இருக்கு. குழந்தை இல்லையே என்ற பிரச்சனை. உறவினர்களிடம் தன்னை நல்ல சித்தியாக காட்டிக்கணுமே என்ற பிரச்சனை. இந்த வீட்டை தன் கணவன் வாசுதேவன், தன் பேரிலேயே உயில் எழுதி வைக்கணுமே என்ற பிரச்சனை…. இதையெல்லாம் மறக்க வைக்கும் பிரச்சனை ஒன்று அவளுக்கு உண்டு.
அந்த தலையாய பிரச்சனை…. எப்படி தன் கணவனின் பிள்ளைகளுக்கு மண்டையிடி கொடுக்கணும் என்பது தான். இந்தப் பிரச்னையின் கவலையால் அவள் மற்ற தன் கவலைகளை மறக்கிறாள்.
மூத்தவன் கதிர். முட்டாள். அவனை அவன் தங்கைகளுக்கு எதிராக திருப்பி விட்டாள் தந்திரமாக….
“சித்தி அப்பா எங்களுக்கு டி. எம்எஸ், சுசீலா கச்சேரிக்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்திருக்கார்….இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு போனும். கார் வேணும். டிரைவர் கிட்டே சொல்லிடனும்.” என்றாள் பிரபா. மியூசிக் கச்சேரி ஒரு கேடா உங்களுக்கு….
“சரி சொல்லிடறேன் பிரபா.”
“தேங்க்ஸ் சித்தி.” சொல்லிவிட்டு இருவரும் பள்ளிக்கு சென்று விட்டார்கள். கதிர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். நேரே கதிரிடம் போய் சொன்னாள்….
“கதிர்….நீ உன் நண்பன் உமாபதியின் பிறந்தநாளுக்கு போனும்னு சொல்லிட்டு இருந்தியே….சாயங்காலம் தானே பார்ட்டி?.”
“ஆமா சித்தி. சேகர் வந்து என்னை பிக்-அப் பண்ணிக்கிறேன் சொல்லியிருக்கான்.”
“நீ எதுக்கு ஓசி காரில் போகணும்?. நம்ம காரை எடுத்துக்கிட்டு போ.”
“இல்லே பிரபாவும் சந்தியாவும் கச்சேரிக்கு போறாங்க….”
“அது கேன்சல் ஆகிவிட்டது கதிர். உனக்குத் தெரியாதா.?”
“அப்படியா….தென் ஓ. கே.”
அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி போக….சந்தியா பிரபா கல்லூரி விட்டு வந்ததும், டிரைவர் மட்டும் இருந்தார்….கார் இல்லை. ஆசையாக கச்சேரி பார்க்க இருந்தவர்களுக்கு ஏமாற்றம். டாக்சிக்கு சொன்னார்கள்….போனை பிடுங்கி அதை கேன்சல் செய்தாள் சித்தி.
“வீண் செலவு எதுக்கு.? பேசாம கோவிலுக்கு போங்க. இன்னொரு சான்ஸ் வரும்போது கச்சேரி போகலாம்.” என்றுவிட்டாள்.
அண்ணன் வீட்டுக்கு வந்ததும் பத்து மணிக்கு மேல் பெரிய சண்டை..
“அண்ணா….நாங்க கச்சேரிக்கு போறோம்ன்னு தெரியுமில்லே.? அப்புறம் எதுக்கு காரை எடுத்துக்கிட்டு போனீங்க?”
“என்னடி குதிக்றீங்க?…..நான் ஆம்பளை. எனக்குத் தான் முதல் பிரபரன்ஸ். போங்க டீ..”
சரோஜா அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தாள்.
அப்பா வயசு வந்து திட்டிய பிறகு கலைந்தார்கள்.
“நான் தான் உங்கண்ணனை கார் எடுத்திட்டு போகச் சொன்னேன். பொட்டக் கழுதைகளுக்கு இந்த வயசிலேயே என்ன பாட்டும் கச்சேரியும்.?” என்றாள் வெற்றிச் சிரிப்புடன்.
இப்படியாக மூட்டி விட்டு, அவன் கல்யாணம் ஆனவுடன், தங்கைகளை ஒதுக்கிவிட்டு தனிக் குடித்தனம் போய்விட்டான். அவர்களுடன் அவன் பேசுவதே இல்லை. அதுக்கு இன்னொரு காரணம் அவன் மனைவி ரஞ்சனி. வீட்டின் ரெண்டு பட்ட நிலைமையை ஒரு வாரத்திலேயே புரிந்து கொண்டு, அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.
“உங்க சித்தி தேவலை போலிருக்கு. உங்க தங்கச்சிகள் எமகாதகிகள்.” என்றாள் கணவனிடம்.
எங்கே தங்கைகளின் கல்யாண செலவு தன் தலையில் விழுந்து விடுமோ என்று அவனும் இது தான் சாக்கு என்று அவர்களுக்கு எதிரி ஆனான். ரஞ்சனிக்கு தான் இதில் கொண்டாட்டம்.
மருமகள் ரஞ்சனி தலையில் ஐஸ் வைத்து இந்தப் பகையை வளர்த்துவிட்டாள் சரோஜா.
பிரபா கல்யாணத்தில் தலையை காட்டியவன், சந்தியா கல்யாணத்தில் வராமலேயே இருந்து விட்டான்.
“அவன் சித்தியோட மகனா மாறிட்டான் அக்கா..” என்றாள் சந்தியா.
“அவன் கல்யாணத்தில் அவன் மனைவிக்கு வைர மோதிரம் பண்ணிப் போட்டாள் இல்லயா?…. அதில் குளிர்ந்து விட்டான் போலிருக்கு..” என்றாள் பிரபா. பாவம் சகோதரிகள், அண்ணன் என்று ஒருவன் இருந்தும் அவர்களுக்கு அவன் இல்லாதவனாகவே இருந்தான். அந்த வலி இரு சகோதரிகளுக்கும் இருந்தது.
“சே….நமக்கு வில்லன் நம்ம அண்ணன் தான்.”
இப்படிபட்ட பின்னணியில் இருந்து வந்தவளுக்கு கணவனின் சப்போர்ட் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு பாதுகாப்பு வளயத்துக்குள் இருப்பது போல் பட்டது.
ஒரு நாள் சந்தியா துணிகளை காயப் போட்டுக் கொண்டிருக்கும் போது வாசலில் மணி அடித்தது. போய் திறந்தாள். வாசலில் காந்தம்மை நின்று கொண்டிருந்தார். கணவனின் பாட்டி.
“வாங்க பாட்டி வாங்க….”
உபசிரித்தாள். காப்பி கலந்து கொடுத்தாள். டிபன் பண்ணிக் கொடுத்தாள். “ரொம்ப டல்லா இருக்கீங்களே பாட்டி. என்ன விஷயம்.” என்று அன்புடன் கேட்டாள்.
“என் பேரன் எங்கேம்மா.?”
“முடி வெட்ட போயிருக்கார் பாட்டி.”
“அவன் வந்தால் என்னை துரத்திடுவானே….”
“உங்களுக்கு என்னாச்சு பாட்டி.? உடம்பு சரியில்லையா.?”
“நான் குடி இருந்த வீட்டு ஓனர் என்னை துரத்திட்டான் மா. ஆறு மாச வாடகை பாக்கி. கட்டின புடவையோட வந்திருக்கேன். நான் எங்க போவேன்.?” அந்த வயதான கண்கள் வடித்த கண்ணீர் கண்டு இரக்கம் சுரந்தது சந்தியாவுக்கு. இந்த வயதில் எங்கே போவார்.?
“பரவாயில்லை பாட்டி….நீங்க இங்கேயே இருங்க. நான் அவர் கிட்டே சொல்லிக்கிறேன்.” என்றாள் சந்தியா அன்புடன்.
“ரொம்ப நன்றி கண்ணு….”
முடி வெட்டிவிட்டு வந்த ராஜகோபால்….
“சந்தியா….குளிக்கணும் வெண்ணி ரெடியா.?”
“ரெடிங்க….நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.”
அவன் குளித்துவிட்டு வந்தான்.
“என்ன டிபன் சந்தியா.? இன்னிக்கு நான் சீக்கிரம் அலுவலகம் போனும். தலைக்கு மேலே வேலை கிடக்கு.” சாப்பிட உட்கார்ந்தான். இவனிடம் எப்படி பாட்டி வந்ததை சொல்வது என்று யோசனையில் இருந்தாள். அவள் உப்புமாவை தட்டில் வைத்து கொண்டு வந்தாள்.
“நேற்று மாவு இருந்ததா சொன்னியே. தோசை சுட்டுப் போடேன். இந்த அவல் உப்புமாவை அவசரத்துக்கு சாப்பிட முடியாது…. “
அந்த மாவில் பாட்டிக்கு தோசை சுட்டுப் போட்டுவிட்டாள் அவள்.
“வந்துங்க….உங்க பாட்டி வந்திருக்காங்க. அவங்களுக்கு சுட்டுப் கொடுத்தேன். பாவம் அவங்க நம்மை அண்டி வந்திருக்காங்க….” தயங்கியபடி அமைதியாக சொன்னாள்.
“என்னது பாட்டி வந்திருக்காளா.? அவளை ஏன் உள்ளே விட்டே.? எங்கே அவள்.?” என்று கோபத்துடன் எழுந்து கொண்டு சத்தம் போட்டான். அறையில் ஒடுங்கிக் கொண்டு இருந்த காந்தம்மை நடுங்கினாள். அவன் அறைக்குள் வந்தான்….
“ஏய் மரியாதையா போயிடு. இங்க காலடி வைக்க உனக்கு வெக்கமாயில்லே.? செஞ்ச பாவம் போதாதுன்னு இங்கேயும் என் குடி கெடுக்க வந்தியா.? ம்ம்ம்….கிளம்பு.” என்று கூச்சல் போட்டான்.
சந்தியா அதிர்ச்சியில் உறைந்து போனாள். வயதில் மூத்த மனுஷியை இப்படி மரியாதை இல்லாமல் எடுத்தெறிந்து பேசுகிறான்….விரட்டுகிறான். என்னாச்சு இவனுக்கு.?
“வேண்டாங்க. பாவம் வயசானவங்க இருந்திட்டு போகட்டுமே.”
“அந்தம்மா இங்க இருக்கும் வரை நான் இந்த வீட்டுக்குள் வரமாட்டேன். சந்தியா….புரிஞ்சுக்க. காரணமில்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன்.”
அவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேற முற்பட்டான்.
“நான் போயிடறேன் பா. என்னாலே உங்களுக்குள் சண்டை வேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பொழச்சுக்கிறேன்.”
காந்தம்மை கண்ணீர் சிந்தியபடி கிளம்ப….
“நில்லுங்க பாட்டி. எங்க வீட்டை விட்டு இப்படி கண்ணீரும் கம்பலையுமா நீங்க போக நான் அனுமதிக்க மாட்டேன். உள்ளே போங்க….நான் பேசிக்கிறேன்.” என்றாள் திடமான குரலில்.
கணவனிடம் வந்தாள். “உங்க கூட பேசணும். நான் பேசிய பிறகு உங்களுக்கு சரின்னு பட்டா நான் பாட்டிமாவை அனுப்பிடறேன்.” என்றாள் தயவான குரலில்.
அறையில் வந்து கதவை பூட்டினாள்.
“சொல்லுங்க….ஏன் பாட்டியை கண்டா உங்களுக்கு பிடிக்கலை.? இவ்வளவு வயசனவங்களை துரத்தி விட்டா….அந்தப் பாவம் நம்மை சும்மா விடாது. அவங்க தான் உங்களுக்கு இருக்கும் ஒரே உறவு. ப்ளீஸ் மனசாட்சி இல்லாம நடந்துக்காதீங்க. பொறக்க போகும் நம் புள்ளையை அந்த பாவம் பாதிச்சிடக் கூடாது.’
அவன் கண்கள் குத்திட்டு நின்றது. முகம் பாறையாக இறுகிவிட்டிருந்தது. “புரியாம பேசாத சந்தியா. இது நல்லதுக்கில்லை. அவ்வளவு தான் சொல்வேன்.”
“இத பாருங்க….உங்கப்பாவை ஹோமில் சேர்த்திருக்கீங்க. கேட்டா அவருக்கு டிமென்ஷியா, வீட்டில் வச்சு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க. அதுவே எனக்கு உறுத்தலா இருக்கு. ஒரு தரம் கூட போய் நீங்க பார்கலை. பெத்தவங்களை நல்லா பார்த்துக்கணும். நம்ம வம்சம் விளங்க வேண்டாமா.? அன்பை தானே அவங்க
எதிர்பார்க்கிறாங்க. அதை கூட நம்மால் கொடுக்க முடியாதா.?”
இந்தக் கேள்வி அவனை எரிச்சல் படுத்தியது. கோபம் அவன் கண்ணில் தீப்பொறி போல் கனன்றது.
தொடரும்
சங்கரி அப்பன்
nice