Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -5

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -5

துஷ்யந்தா-5

         விக்னேஷ் மூலமாக டாக்டர் வந்து சேர அலுவலக அறையிலேயே கட்டு கட்டிக் கண்ணாடி சில்லை எடுத்தார். அவ்வறையையே வெறித்தான். வலிகளை பொருட்டாகவே தோன்றிடவில்லை. அவனுக்கு தாத்ரு தன்னை கேலிப்படுத்தி சென்று விட்டாரே என்ற மனதாங்கல் வெறியை கிளப்பியது.

     அலுவலகத்தினை எப்பொழுதும் சுத்தம் செய்ய வரும் பார்வதி வந்து அறையை சுத்தப்படுத்தினார்.

   டாக்டரோ கையிலிருக்கிற கண்ணாடி சில்லை எடுத்து முடித்து கட்டு போட்டு ஊசியை செலுத்தினார்.

       தர்மா வந்து மருந்து மாத்திரை பெயரை பெற்று கொண்டான்.

   டாக்டர் கைகளை எப்படி பாதுகாக்க என்று கூறியதை எதுவும் அவன் செவிக்கு எட்டவில்லை.

     விக்னேஷ் அப்பொழுது தான் ஆதித்யரிடம் பேசி வழியனுப்பி வந்தான். ஆதித்யன் கூறியது போலவே அதிக சினத்தில் இருந்தான் விதுரன். விக்னேஷோ “சார் நாளைக்கு தீபிகா அண்ணியோட வளைகாப்புக்கு வளையல் பிரசண்ட் வாங்கியாச்சு. நாளைக்கு வளைகாப்பு நேரத்துக்கு அனுப்பிடவா சார்” என்று கேட்டான்.

    “ம்” என்று குரல் வரவும் விக்னேஷ் நம்ப முடியாது வளையலை பரிசு பெட்டியில் வைத்து பேக் செய்தான்.

      அடுத்த பத்து நிமிடத்தில் தர்மா அலுவலக கதவை மாற்ற ஆட்களை கூட்டி கொண்டு வந்தான்.

     அதன் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்க, தனது பணிக்கு ஓய்வெடுக்கும் அறையில் காலைநீட்டி சோபாவில் தன்னை சமன்படுத்த முயன்றான்.

    இரவு வரை தன் மனநிலை சமநிலைக்கு அடையாது போகவும் எழுந்து வெளிவந்தான்.

    அறைக்கு வெளியே புது கதவு, மேஜையருகே உணவு கேரியர். கூடவே வோட்கா வகைகள் என்றிருக்க “விக்னேஷ்…” என்று கூப்பிட தர்மா வந்து நின்றான்.

     “சார் விக்னேஷ் வீட்டுக்கு போயிட்டார்” என்று கூறியதும் “மணி பதினொன்று ஆகிடுச்சா?” என்று கேட்டான். ஏனென்றால் விக்னேஷ் பணி முடிவடையும் நேரம் பதினொன்று. அதுவரை விதுரன் கூடவே இருப்பான். அதன் பின் வீட்டுக்கு சென்றிடுவான்.

    தர்மா தனியாள் என்பதாலும் விதுரனின் மனதிலும் பணியிலும் நிரந்தர இடம் பிடிக்கும் நோக்கத்திலும் விதுரன் இருக்குமிடமே தன்னிடமாக மாற்றிக் கொள்பவன்.

     “நீ சாப்பிட்டியா?” என்று உணவை காட்டி கேட்டான்.

     “இ..இல்லை சார். உங்களை கூப்பிட்டேன். நீங்க கவனிக்கலை.” என்று பதில் தந்தான்

     “நீ சாப்பிடு எனக்கு பசியில்லை” என்று வோட்காவை மட்டும் நாடினான்.

     தர்மா அவன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். உணவை முடித்து அங்கேயே உறங்கியும் போனான்.

  விதுரன் அன்று முழுதும் உறங்காது யோசனையில் சுழன்றான்.

     பிரகதியோ தன் அன்னையிடம் இரவு கதை அளந்தாள். இன்று பக்கத்து வீட்டு ஆடவன் காதலிப்பதாக கூறியதை.
  
     “என்ன பதில் சொன்ன பிரகதி” என்று பத்மாவதி கேட்டதும் “என்னம்மா சொல்ல… எனக்கு அவனை பார்த்து எந்த பீலும் வரலை. அட்லீஸ்ட் ‘பிடிக்கலை’ என்ற உணர்வு கூட. அதனால அவனிடம் நோ சொல்லிட்டேன்.” என்று கூறவும் பத்மாவதி “அப்பாடி” என்று நிம்மதியான பதில் தந்தார்.
     
      “ஓய் மம்மி… என்ன அப்பாடினு நிம்மதியா சொல்லற… பயமா..? இல்லை லவ் மேரேஜை அக்சப்ட் பண்ண மாட்டியா” என்று வினாவினாள்.

     “நீ லவ் பண்ணினா நான் ஏன் டி அக்சப்ட் பண்ணாம இருக்க போறேன். அப்படியா இருந்தாலும் நீ சொல் பேச்சை கேட்டுடுவியாக்கும். இங்க டூர்ல வந்த இடத்தில் ஒருத்தங்க பிரெண்ட் ஆனாங்க. அவங்க பழக ரொம்ப கனிவா இருந்தாங்க. அவங்க பையனுக்கும் வரன் பார்க்கறாங்களாம்.

   நான் என் பெண்ணிடம் பேசிட்டு வர்றேனு சொல்லவும் அடிக்கடி என்னை நோட் பண்ணிருக்காங்க. நீ பேசியதை வீடியோ காலில் பார்த்து உன்னை பிடிச்சிருக்காம். அவங்க பையனுக்கு காலையில் உன்னை கேட்டாங்க. நீ தான் நைட் போன்ல வருவ அதனால என் பொண்ணிடம் கேட்டு சொல்லறேனு சொல்லிட்டேன்.” என்று கூறவும் பிரகதி இரண்டு நிமிட மௌனமாக இருந்தாள்.

     “பிரகதி நீ இப்பவே பதில் சொல்ல வேண்டாம். நான் ஊருக்கு போகவே இன்னும் ஒரு மாதம் ஆகும். அதுவரை டைம் இருக்கு.” என்றார் பத்மாவதி.

     “ஓகே மா. யோசிக்கறேன்… நீ அந்த பையன் போட்டோவை அனுப்பு.” என்று எப்பொழுதும் போல சாப்பிட்டாயா மாத்திரை போட்டியா என்று வழமையாய் கேட்டு முடித்தார்கள்.

    விக்னேஷ் இங்கு அதிகாலை கிளம்பி வந்த நேரம் தர்மா ஒரு பக்கம் உறங்கியும் விதுரன் அலுவலக ஓய்வறையிலும் இருக்க விதுரனை எழுப்பினான்.

     “சார்… சசி சார் போன் செய்தார். நீங்க வர்றிங்களானு?” என்றதும் விதுரன் இல்லையென்பதாக தலையசைத்து முடித்து எழுந்து “நீ பூங்கொத்தோட பிரசண்ட் கொடுத்துட்டு கிளம்பிடு” என்று கட்டளையிட்டு வேகமாக வெளியேறினான்.

     அதன் பின் விக்னேஷ் புறப்பட, எழுந்த தர்மாவோ “சார் எங்கே?” என்று கேட்டதும் விக்னேஷ் தர்மாவை கண்டு எள்ளினான்.

    “அவர் எப்போ எங்க என்ன பண்ணுவாரு? என்ற அப்டேட் இல்லாம தூங்கற நீயெல்லாம் லெப்ட் ஹாண்ட். வெளியே சொல்லிடாதே காரி துப்புவாங்க. சார் வீட்டுக்கு போயிருப்பார். என்னை தீபிகா அண்ணியோட வளைகாப்புக்கு போக சொல்லிருக்கார்” என்று கூறி அகன்றிட தர்மா விழுந்தடித்து குளித்து முடித்து விதுரன் வீட்டுக்கு சென்றான்.

    அங்கே எங்கேயோ செல்ல தயாராகியிருந்த விதுரனை கண்டு இங்க தான் இருக்கார் என்ற நிம்மதியில் மூச்சை வெளியிட்டான்.

     சசிதரன் வீட்டில் விக்னேஷ் வந்து வாழ்த்தை கூறி பரிசு பொருளை நீட்டவும் தீபிகாவுக்கு நல்ல வேளை அந்த அரக்கன் வரவில்லை என்று நிம்மதியடைந்தாள்.

  கீதாவோ தீபிகாவின் தாய்மை எண்ணி பூரித்து போக தீபிகா தன் வீடு செல்வதற்கு ஆவலாய் நடையை கட்டினாள்.

    கோமதி சசிதரன் இருவருமே இந்த இரு மாதம் கூட தங்கள் வீட்டிலே இருக்கலாமென ஆசையாய் கேட்டனர். அதற்கு தீபிகாவோ “ஏன் என் அம்மா வீட்ல நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா?” என்று அழுவதாய் கேட்டு முடிக்க சசிதரனோ “அ.. அ.. அழாதே தீபிகா. உன் இஷ்டப்படி இரு. நல்லா சாப்பிடு. உன்னிடம் இரண்டு விஷயம் சொ… சொ..சொல்லணும். குழந்தை பிறந்தவுடன் சொல்லறேன்.” என்று எழுந்தான்.

   கோமதி வந்து மகனின் தோளில் கையை வைக்க சசிதரன் தீபிகாவை காரில் ஏற்றிவிட்டு நின்றான்.

   சசிதரனுக்கு இப்படி எப்பொழுதாவது திக்கும். அதுவும் எமோஷனல் ஆகும் பொழுது திக்கி திக்குவாயாய் காட்டி கொடுக்கும். மற்றபடி சரளமாய் பேசுவான்.

    தீபிகாவோ கதவை மூடியவள் கழுத்திலிருந்த மாலையை எடுத்து அருகே தாயிடம் எறிந்தாள்.

     “என் வாழ்க்கையை நாசம் பண்ணி இந்த குழந்தை ஒன்னு தான் குறைச்சல் இவனுக்கு.” என்று முனங்கிய பெண்ணை கண்டு கீதாவும் அவர் தந்தை பரமகுருவும் அதிர்ந்தனர்.

     பெண்ணை கட்டிக்கொடுத்து குழந்தை உண்டாகிவிட்டால் என்றதிலிருந்து சசியை தன் வீடாக பாவித்து விட்டாளென ஆனந்தம் கொண்டவருக்கு ஏமாற்றம் அப்பியது.

     கார் டிரைவர் சசியின் பணியாட்கள் என்பதால் அமைதியாக இருக்க, வீட்டுக்கு வரும் வரை கீதா வாய் திறக்கவில்லை.

      தீபிகா வீட்டுக்கு வந்ததும் செருப்பை தூரயெறிந்து மடமடவென வீட்டுக்குள் சென்றாள்.

    “ஹய் தீபிகா ஆரத்தி எடுக்கணும் டி” என்றதும் சட்டை செய்யாது ஹாலுக்கு போனவள் உள்ளே விதுரன் கால் மேல் கால் போட்டு பேப்பரை புரட்டி கொண்டிருந்தவனை கண்டதும் பின்னாலே நடையிட்டு திரும்பினாள்.

     “சொன்னேன்ல ஆரத்தி எடுக்கணும்னு” என்று கீதா அருகே வந்து மகள் கையை பற்றியதும் தான் உள்ளே விதுரன் இருப்பதை பார்த்தார்.

      அதற்குள் ஆரத்தி கரைசல் வரவும் சுற்றி முடிக்க பரமகுரு தான் விதுரனை நலம் விசாரித்தார்.

     “நல்லாயிருக்கிங்களா தம்பி விழால வருவிங்கனு பார்த்தா தனியா வந்திருக்கிங்க?” என்று கேட்டுவிட்டார்.

      “நான் நல்லாயில்லை மாமா.. மாமா தானே? சசியோட மாமானார் எனக்கும் அதே முறை தானே?” என்றவன் பார்வை தீபிகாவின் வயிற்றில் நிலை குத்தியது.

    “தீபிகா நீ வேண்டாமின்னா உள்ள போய் ரெஸ்ட் எடு.” என்று கீதா கூறி விதுரனுக்கு சாப்பிட ஏதேனும் வேண்டுமா என்று கேட்டார்.

    “எனக்கு தீபிகாவோட பேசணும்.” என்றான்.

    “அவ உங்களை பார்த்தா பயப்படறா. நீங்க எதுனாலும் எங்களிடம் கேட்கலாமே…?” என்று பரமகுரு பதில் தந்தார்.

     “எனக்கு பிரகதி வீடு தெரியணும்.” என்று தீபிகாவை நெருங்கினான்.

     “எனக்கு அவ எங்கயிருக்கானு தெரியாது. திரும்ப திரும்ப பைத்தியம் மாதிரி கேட்கறிங்க.” என்று நின்றாள். ஆனால் மூச்சு வாங்கியது.

      “அவ எந்த நாட்டுக்கு போனானு தெரியாம இருக்கலாம். அவ இங்க இருந்தப்ப அவளோட வீடு நிச்சயம் தெரியும். பொய் பேசாதே… வீடு மாற்றியது காலேஜ்ல கடைசி வருஷம். அப்படி பார்த்தா பத்திரிக்கை வைக்க நீ போயிருக்க. மரியாதையா சொல்லு” என்று நின்றான். தர்மாவோ அட இது பாயிண்ட் . முன்ன காலேஜ் படிச்ச அட்ரஸ்ல மாற்றினாலும் பத்திரிக்கை வச்சிருப்பாங்களே. சார் எப்படி இத்தனை நாள் இதை கேட்கலை. என்று யோசிக்க, “அய்யோ… தம்பி என் மகளை விட்டுடுங்க. அவ வாயும் வயிறுமா இருக்கா.” என்ற கீதா அலறலும் “தம்பி தம்பி அவ உங்க வீட்டு வாரிசை சுமக்கறா.” என்று பரமகுருவும் கெஞ்சி கதறிய குரலாக ஒளித்தது.

   தர்மா சட்டென முன் வந்து பார்க்க பழம் வெட்டும் கத்தியை தீபிகா வயிற்றுக்கு அருகே வைத்து நின்றான் விதுரன்.

    “அம்மா” என்று தீபிகா அழுவதும் கைகள் படபடவென உதறுவதும் அறிந்தவன் “சொல்லு” என்று அலட்சியமாய் கேட்டான்.

     “அப்பா சசிக்கு போன் போடுங்க.” என்று தீபிகா கத்தவும், போன் ஒயர்கள் ஏற்கனவே துண்டிக்கப்பட்டு இருந்தது.

    வந்ததும் போனை டீபாய் மீது வைத்திருக்க விதுரனை மீறி எடுக்க அஞ்சி நின்றனர்.

    “இங்க பாரு… நீ இப்பவும் சசியை மனுஷனா கூட மதிக்கலைனு தெரியும். இந்த நிமிஷம் இன்பாவை சந்திச்சா அவனோட ஓடிபோகவும் தயங்க மாட்டனும் தெரியும். இந்த குழந்தை எல்லாம் கடனேனு சுமக்கற தவிர உண்மையா இந்த தாய்மை செய்தில சந்தோஷமாவா இருக்க?” என்றான்.

  தன் மனதில் இருப்பதை புட்டு புட்டு வைப்பதை கண்டு தீபிகா அதிர்ந்தாள்.

     கத்தியை தூரப்போட்டு “நீ பிரகதி வீட்டு அட்ரஸை கொடுத்தா… நான் இன்பா இப்ப எங்கயிருக்கானு சொல்வேன்.” என்று பேசினான். இன்பா இருந்த இடமே தீபிகா அறிவாள். தற்போது விதுரனால் வீடு மாறியப்பின் அவனை அறிய முடியாது இருக்க விதுரனின் இந்த பேச்சு வார்த்தை தனக்கு சாதகமாக எண்ணி பிரகதி அட்ரஸை ஒப்புவித்தாள்.

    “தர்மா… அங்க போய் நான் சரியானதாயென்று பார்க்கறவரை நீ இங்கயே இரு. இவங்க மூன்று பேரையும் இந்த ஹாலை விட்டு எங்கயும் போக கூடாது.” என்று மூவரின் போனை எடுத்து கொண்டான்.

      மூவரும் ஹாலில் தங்கள் வீட்டில் தங்களே சிறைகைதி போல அமர்ந்திருக்க வேலையாட்கள் கிசுகிசுவென பேசிக்கொள்வதும் தர்மா கண்டதும் விலகி பணியை மேற்கொள்வதும் என்று இருந்தனர்.

       தீபிகா மட்டும் இன்பாவை காண கிடைக்கும் வாய்ப்புக்கு ஏங்கினாள்.

        விதுரன் வந்திறங்கிய நேரம் பிரகதி வீடு அவனை யாருமற்று வரவேற்றது.

     “இங்கயிருக்கறவங்க எங்க போயிருக்காங்க.” என்று வாட்ச்மேனிடம் கேட்டு நின்றான்.

     “பிரகதிம்மா படிக்க ஆஸ்திரேலியா போய் இருக்கு சார். பத்மாவதி அம்மா இந்தியா டூர் ஆறு மாசம் போயிருந்தாங்க. அதுல சில இடம் நேரம் எடுத்துக்கிச்சு. அடுத்த மாசம் வருவதா பட்டு சொல்லுச்சு சார்.” என்றான்.

     “பட்டு மீன்?” என்றான் விதுரன்.

     வாட்ச் மேன் ஏதோ கேட்கறான் என்னனு புரியாம முழிக்க, “அதாவது பட்டுனா யாரு?” என்று கேட்டு வைத்தான்.

     “இந்த வீட்டு வேலை செய்யற பொண்ணு சார். வாரத்துக்கு வந்துட்டு சுத்தம் செய்துடும். இந்த தோட்டத்துக்கு மட்டும் தண்ணி பாய்ச்சறது என் வேலை.” என்று சிகரெட்டை இழுத்தபடி பதில் தரவும் விதுரன் பட்டுவோட போன் நம்பரை வாங்கி கொண்டு விடைப்பெற்றான்.

    அலுவலகம் வந்தவன் விக்னேஷ் பாதிக்கு மேல் சரிபார்த்து வைத்த கோப்புகளை எடுத்து பார்வையிட்டவாறு விக்னேஷ் இந்த போனை தீபிகா வீட்டாளிடம் கொடுத்துட்டு தர்மாவிடம் இன்பா வீட்டு அட்ரஸை தீபிகாவிடம் சொல்லிட்டு வர சொல்லு” என்று அன்றைய மாத விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பற்றி வருமானத்தின் விளக்கங்களை பார்வையிட்டான்.

    பெரும்பாலும் அவன் கணித்திருந்த லாபம் பெற்றிருந்தது.

    விக்னேஷிற்கு இன்பா வீட்டு முகவரி தீபிகாவிற்கு எதற்கு என்று குழம்பி கேட்கவும் பயந்து தர்மாவை தேடி தீபிகாவின் அம்மா வீட்டுக்கு வண்டியை செலுத்தினான்.

     விக்னேஷ் இடைப்பட்ட நேரத்தில் ஆதித்யாவுக்கு போன் செய்து கூறவும் செய்ய, ஆதித்யாவோ “விதுரன் பிரகதி வீட்டு விலாசத்தை வாங்கியிருப்பான் விக்னேஷ். ஆனா எதுக்கு தீபிகாவுக்கு இன்பா வீட்டு விலாசத்தை கொடுத்து பழைசை நினைவுப்படுத்தறான். சரி அந்த விலங்காதவன் தர்மாவை கேட்டு எனக்கு என்னனு சொல்லு” என்று முடித்தார்.

      “சரிங்க ஐயா” என்று தீபிகா வீட்டை நோக்கி விரைந்தான்.

    விலங்காதவன் தர்மாவிடம் என்ற நேரம் விக்னேஷிற்கு சிரிப்பு வந்து விட்டது.

    நேராக வீட்டை அடைந்து விதுரன் கூறியதை தெரிவித்து விட்டு தர்மாவிடம் நடந்தவையை கேட்டறிந்தான்.

      முதலில் அதிர்ச்சி அடைந்தான். தர்மாவோ, என்ன அதிர்ச்சி ஒரு முறை நம்ம அலுவலகத்தின் கீழ் வேலை செய்யும் பெண், கூட வேலை செய்தவனை காதலிச்சா. அவன் சாரை ஏமாற்றி பணத்தை களவாடியதில் அவனோட காதலினு குழந்தைனு வஞ்சம் வச்சி கர்ப்பத்தை மருந்து கொடுத்து கலைக்க வைத்து அனுப்பின ஆளு தானே” என்று தர்மா நினைவுப்படுத்தினான்.

     விக்னேஷிற்கு அது மறந்தால் தானே. ஆனால் சசியின் மனைவியிடம் இப்படி நடப்பாரா? காரணம் என்னவோ என்று புரியாது தவித்தான்.

     பிரகதி வீட்டில் வேலை செய்யும் பட்டு அந்த பெரிய வீட்டின் ஹாலில் இரு ஆண்களின் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து ஒரு மணி நேரமானது. எதற்கு தன்னை இங்கே அழைத்திருக்கின்றனரென விழித்திருக்கும் நேரம் விதுரன் வந்து தர்மாவை பார்த்தான்.

    “நீ வேலை செய்யற வீட்டோட பொண்ணு நம்பர் வேண்டும். பிரகதி நம்பர் கொடுத்துட்டு போ” என்றதும் முதலில் மறுத்து பிறகு பத்மாவதி நம்பரை கொடுத்தாள். அந்த பொண்ணு பிரகதி நம்பர் இல்லை சார்.” என்று கூற விக்னேஷ் பத்மாவதி எண்ணை வாங்கி விதுரனிடம் நீட்டினான்.

  வாங்கி பார்த்தவன் எண்ணை சுழற்ற கோரி பார்வை பதித்தான். விக்னேஷிற்கு சொல்லாமல் புரிய அந்த எண்ணிற்கு டயல் செய்ய மறுபக்கம் மணி அடித்தது. அது அபாயகர மணியா என்ன என்பது விதுரனே அறிவான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *