Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9

துஷ்யந்தா-9

     விக்னேஷ் கூட ஒரு பெண் வந்து உடைகளை வைத்து விட்டு செல்ல “மேம்… இது மேரேஜிக்கு இது ரிசப்ஷனுக்கு சார் கொடுக்க சொன்னார். இதோட செட் ஜிவல்ஸ் அந்த பாக்ஸில் இருக்கு. பியூட்டிஷன் அரை மணி நேரத்தில வருவாங்க” என்று கூறவும் திருமண புடவையை தட்டி விட்டாள் அது சரியாய் விதுரன் வரவும் அவன் வருகைகாக காலில் விழுந்தது.

    அந்த புடவையை எடுத்தவன் “இந்த புடவையை லட்சம் கொடுத்து வாங்கியிருக்கேன். நீ என்னடானா மேட் மாதிரி என் காலுக்கு போட்டு வரவேற்கற.. இட்ஸ் ஓகே… கால்மிதியா நாளைக்கு கீழே இருந்தாலும் இருக்கலாம்.

   சும்மா அலட்டிக்காம ஷோ கேஸ் பொம்மையா வந்து மேடையில நிற்கற. உங்கம்மா இன்னும் மயக்கத்துல தான் இருக்காங்க.” என்று கடுப்படித்தான்.

     விக்னேஷ் விதுரன் சொல்லாமல் வெளியேறியிருந்தான்.
     “கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி என்ன வாழ்க்கை வாழ்வ. ஒரு நாள் இல்லை ஒருநாள் சாப்பிடற சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுப்பேன்.” என்றாள் பிரகதி.

     “வாவ்… சாப்பாட்டில் நெய் கலந்து கொடுக்கற ஓய்ப் தான் பார்த்திருக்கேன். விஷம்… ம்ம்… பட் நான் ஒன்னும் கேனையன் இல்லை. எப்பவும் நீ சாப்பிட்டு உயிரோட இருந்தா நான் சாப்பிடுவேன். தேங்க்ஸ் பார் இன்பர்மேஷன். மைண்ட்ல வச்சிக்கறேன்.

      அப்பறம்… பதினைந்து நிமிடம் தான் இருக்கு. சேலை கட்டிக்க அடம்பிடிச்ச நானே கட்டிவிட வந்துடுவேன். பிறகு கல்யாணத்துக்கு முன்ன சாந்தி முகூர்த்தம் நடந்துடும். ஓகே வா.” என்று அங்கிருந்த நாற்காலியில் ஜம்பமாக அமர்ந்தான்.

      “எங்கம்மாவை ஹாஸ்பிடலில் அடைச்சி வச்சிட்டு இதுவும் பேசுவ. இதுக்கு மேலேயும் பேசுவ.” என்று கையை கட்டி திரும்பினாள்.

     “பரவாயில்லை… சாதாரண டிரஸ்ல கூட செமையா இருக்க. அதுவும் ஸ்லீவ் டாப் டைட் ஜூன்… நீ இருக்கற ஹைட்டுக்கு ஹீல்ஸே வேண்டாம். இதென்ன கம்பளுக்கு மேல எக்ஸ்ட்ரா கம்பள்… மூன்று இடத்துல கம்பள் போட்டிருக்க? இதென்ன மியூசிக் மாதிரி டாட்டூ… கழுத்துல…

    டாட்டூ குத்தினா வலிக்குமாமே… ஜுரம் வந்ததா..?” என்றதும் அவன் தன்னை அனு அனுவாய் ஊடுருவதை சகிக்க இயலாது “தயவு செய்து வெளியே போறியா. டிரஸ் மாற்றணும்” என்று பல்லிடுக்கில் வார்த்தையை துப்பினாள்.
  
    “உதட்டுக்கு மேல இருக்கற மச்சமும் அம்சமா இருக்கு.” என்றவன் கடிகாரத்தை பார்த்துவிட்டு “டூமினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வந்துடணும்” என்று வெளியேறினான்.

      ஆளுயர கண்ணாடி அதில் தன் குணத்தை தொலைத்து நிற்பதாக பிரகதிக்கு தோன்றியது. அன்னை மட்டும் இவனிடம் சிக்காமல் இருந்தாலோ அல்லது இப்படி காலை வெட்டும் அளவிற்கு கொடூரமானவனாக இல்லாமல் போனாளோ பிரகதி அவனை கிழித்து தொங்கவிட்டிருப்பாள்.

    ஆனால் தற்போது அன்னையின் ஒரு காலை வெட்டி பெரிதாய் பயத்தை விதைத்து விட்டான். ஏற்கனவே பதிவு திருமணத்தை நடத்தி விட்டான். இது ஊரறிய நடைப்பெறுவது. இனி இவனிடம் நேரிடையாக வஞ்சத்தை காட்டுவதை விட மனைவியாக ஆட்டி படைப்பது சிறந்தது.

    மின்னலாய் உதித்தவையை எண்ணி சேலையை கட்ட துவங்கினாள்.

     பியூட்டிஷன் வந்து தலையில் பூவை வைக்க, மற்ற இரண்டு பெண்கள் நெய்ல் பாலிஷ் என்றும் இன்சிடெண்ட் மெஹந்தியும் வைத்து விட்டனர்.
 
     போனில் மேக்கப் விளையாட்டுக்கு நின்றவளை போல அசையாத சிலையானாள்.

       சற்று நேரத்திற்கெல்லாம் முடிந்ததாக பியூட்டிஷன் செய்பவர்கள் சென்று விட கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.

     இப்படி அலங்கரித்து இருந்தால் அம்மா பத்மாவதி வேலைக்காரி பட்டுவிடம் சொல்லி திருஷ்டி சுற்றி போட்டிருப்பார்.

   நினைக்க நினைக்க கண்ணை கரித்தது பிரகதிக்கு.

     இது அழுவும் நொடியல்ல. தன்னை செதுக்கும் நொடிகள். எத்தனை வலிகள் அத்தனையும் வட்டியோடு திருப்பி தா.

     அடங்காதவனாக மார்தட்டும் இவனை அடிமட்டாக மாற்று என்று மனசாட்சி கூக்குரலிட்டது.

      யாரின் அழைப்பும் இல்லாமல் வெளியே வந்தாள். சுற்றி பளிச் பளிச் போட்டோ ஒளிகள். விதுரன் கை நீட்ட அதில் பட்டும் படாமலும் கையை நுழைத்தாள். அவனுமே கையை பிடித்திருக்கின்றானா இல்லையா என்பதாக தான் மென்மையாய் கரம் பற்றினான்.

       மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஐயரின் மந்திர மொழியும், காதை கிழித்தது.

     வந்தவர்கள் பலரின் கிசுகிசு வார்த்தைகள் வந்து விழுந்தது. விதுரனுக்கு ஏற்ற பெண் என்ற வார்த்தை கேட்க கேட்க அமிலம் செவியில் ஊற்றுவதாய் தகித்தாள்.

      ஏதோ பாம்பாய் ஊர்வது போல கழுத்தில் விதுரன் தாலி ஊர்ந்தது.

   பிரகதி கண்ணுக்கு அது தாலியாக தென்படவில்லை. மாட்டுக்கு கட்டும் மூக்கனாங்கயிறாக காட்சி தந்தது.

      மலர்கள் உடலில் விழ, சவத்தின் மேல் விழும் பூவாக தோன்றியது. எழுந்து ஓட தோன்றியது. பத்மாவதியின் நிலைக்கு கட்டுப்பட்டு அடங்கினாள்.

       பிரகதி முன்னே கண்கள் ஏதோவொரு திக்கிற்கு செலுத்தி அமர்ந்திருந்தாள். அக்னியை வலம் வந்தாள். போட்டோவிற்கு நின்றாள்.

      போட்டோ எடுக்கும் நேரம் “சிரி பிரகதி… உன் காலையா வெட்டினேன். உங்கம்மா கால் தானே. அது கூட இரண்டும் வெட்டலையே. ஒன்னு இருக்கு தானே… அந்த ஒன்றும் இல்லாம போகணுமா.” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

    “ம்ம்… சின்னதம்பி படத்துல ஒரு பாட்டுல ஒரு வரி வரும். குயிலை பிடிச்சி கூண்டில் அடைச்சு பாட சொல்லுதம்மா உலகம். மயிலை பிடிச்சு காலை உடைச்சு ஆடசொல்லுதம்மா உலகம்னு… இப்ப நீ அதை தான் பண்ணற. எங்கம்மா காலை வெட்டி என்ன சிரிக்க சொன்னா எப்படி டா சிரிப்பேன். இதே இடத்துல மாலையும் தாலியும் கழட்டி உன் முகத்துல விட்டெறிஞ்சு போகணும்னு மனசு அடிச்சுக்குது. ஆனா எங்கம்மாவை காட்டி மிரட்டற. இது உன் நேரம் நடத்து. என் நேரம் இதை விட கொடுமையா பதிலுக்கு தருவேன்” என்றாள்.

   பிரகதி சிரிக்கவும் இல்லை. அதே நேரம் கடுகடுவென கோபத்தை முகத்தில் பிரதிபலிக்கவும் இல்லை. கவலை எல்லாம் அன்னை உடல்நிலை என்ன எப்பொழுது தன்னிடம் இவன் நல் முறையில் அன்னையை நல்ல நிலையிலும் சந்திப்தென்றே சிந்தித்தாள்.

      கூட்டத்தை விளக்கி அந்த மேடையில் தனியாளாக வந்து சேர்ந்தார் ஆதித்யா.
  
       விதுரன் ஆசிர்வாதம் வாங்க குனிய, பிரகதி நின்றபடியிருக்க, “பிரகதி பிளஸிங் வாங்கு. என்னோட தாத்ரு அவர்” என்றான்.

     “உங்க தாத்தானா நீ விழு. நான் ஏன் விழணும். எங்கம்மா காலை வெட்டிட்டு. யார் காலிலோ விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா என் வாழ்க்கை எப்படி நல்லாயிருக்கு. உன்னை வாழ்த்த வந்தவர். வாழ்த்திட்டு போகட்டும். என்னை கட்டாயப்படுத்தாதே. ஒரு லெவலுக்கு மேல என்னை எதுக்காகவும் நீ மிரட்ட முடியாது. அந்த லெவலை கடந்துடாதே” என்று எச்சரித்தாள்.

     “பிரகதி…. சசி திருமணத்தில் தீபிகாவை வேறயொருத்தனுக்கு கட்டி கொடுக்க காரணமா இருந்த உன்னை முன்னவே சந்திக்கணும்னு ஆசையா இருந்தேன் மா. இப்ப தான் சந்திக்க முடிந்தது.

    இது என்னோட பரிசு. அலுவலகத்துல நாற்பது பங்கு ஷேர். இது என்னோட வீடு. உன் பெயர்ல மாற்றியிருக்கற பத்திரம் தான். இதை அன்னைக்கே தரணும்னு ஆசை. இப்ப தான் விடியல் பிறந்திருக்கு” என்றார்.

    ‘விடியல் இல்லை அஸ்தமனம்.’ என்று பிரகதி மனதிடம் பேசினாள்.

     “விரைவில் வீட்டுக்கு வாம்மா. நிறைய பேசுவோம். விதுர்.. வாழ்த்துகள் டா.'” என்று கட்டி அணைத்து முத்தமிட்டார்.

    சாப்பாடு போட்டோ என்று மரபாச்சி பொம்மையாக காட்சியளித்தாள்.

      ஈவினிங் இப்படியே செல்ல, சசிதரன் தீபிகா மற்றும் அவர்கள் குடும்பத்தார் கீதா-பரமகுரு, கோமதி என்று வந்திருந்தனர்.

    “அட மருமகளோட தோழினு கேள்விப்பட்டேன். விதுரன் அப்போ சசியோட மேரேஜில தான் காதலிச்சிருப்ப” என்றதும் பிரகதி யாருக்கோ வரவேற்பு என்று திரும்பியிருந்தவள் தீபிகாவை கண்டாள்.

    வயிறு பெரிதாக காட்சியளிக்க சொல்லாமலேயே தீபிகா கருவுற்று இருப்பதை அறிந்து கொண்டாள்.

     “தீ..தீபிகா… எப்படியிருக்க. நீ… நீ…” என்று சசியை கண்டவளால் மேற்கொண்டு பேச தடுமாறினாள்.

    விதுரன் செருமவும் பேச்சு தடையானது. போட்டோ எடுக்க அருகே நின்றதும், “இன்பாவுக்கு என்னாச்சு? நீ எப்படி இவரை கல்யாணம் பண்ணின?” என்று பிரகதி தீபிகாவின் கையை பிடித்து தனியாய் அழைத்து கேட்டாள்.
  
     விதுரன் தனியாக நிற்க சினம் துளிர்த்து.

    “என்னை விடு. நீ ஏன் இந்தாளை கல்யாணம் பண்ண சம்மதிச்ச. பெரிய இடம் காரு பணம், சொசைடில அந்தஸ்து கிடைக்குமனு முடிவு செய்தியா.” என்று தீபிகா கேட்டதும் பிரகதி ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள்.

     “வாயை மூடு தீபிகா. என்ன நடந்ததுனு தெரியாம பேசாதே.” என்று பிரகதி நறுக்கு தெரிந்து பேசினாள்.

    விதுரனோ பொறுத்திட முடியாது.    “பிரகதியை பிளாக்மெயில் பண்ணி மேரேஜ் பண்ணிட்டேன் தீபிகா. உனக்கு என்ன கவலை. கூட துணைக்கு உன் பிரெண்ட் தானே மாட்டியிருக்கா. பொறுமையா காசப் பேசுங்க.” என்று பிரகதியை இழுத்து மேடையின் நடுநாயகமாக இழுத்தான்.

  பார்ப்பவருக்கு சின்ட்ரெல்லாவை இளவரசன் அழைத்து வரும் காட்சியாக இருந்தாலும், விதுரன் கைப்பிடியோ முரட்டுதனமான அழுத்தத்தை கொடுத்து இழுத்து வந்தான் என்பதே சரி.

     நேரங்கள் நெட்டி முறித்து தள்ளி ஓடியது.

    வந்தவர் எல்லாம் பரிசு பொருட்களை கொடுத்து சென்று முடித்திட, விதுரன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
 
     திருமண ஒப்பனைகள் கலைத்து மெத்தையில் நகைகள் புடைவைகள் என்று எல்லாம் கைக்கு வந்த திக்கிற்கு கழட்டி எறிந்தாள்.

   தனது உடையான ஜீன் டாப் எடுத்து அணிந்திருந்தாள். காலையில் ஸ்லீவ் டாப் அணிந்து விதுரன் பேசியது வேறு ஒலித்து கொண்டிருக்க, ஸ்லீவ் அல்லாத டாபை எடுத்து மாட்டிருந்தாள்.

    ஆதித்யாவிடம் போனில் “தாத்ரு… தாத்ரு… எனக்கு அட்வைஸ் பண்ணினா எனக்கு பிடிக்காது. என்னை ஏன் அடக்க பார்க்கறிங்க. பழிக்கு பழி தான் சரியா இருக்கும். இந்த தியாகம் பண்ணிட்டு சோகமா உட்கார்ந்திருக்க என்னால முடியாது. நல்லதோ தீயதோ நான் எனக்கு பிடிச்ச லைப்பை வாழறேன். வாழுவேன். என்னை என் போக்குல விடுங்க” என்றான்.

    அந்த பக்கம் என்ன பேச்சோ அதற்கு விதுரன் “தாத்ரு… போர் அடிக்காதிங்க. எனக்கு இன்னிக்கு பஸ்ட் நைட். பிளஸ் பண்ணுங்க. பைபை.” என்று கத்தரித்து உள்ளே வர தன் முன் வந்த தாலி செயினை கையால் தாங்கினான்.

    “உறுத்தும்னு கழட்டி வீசறியா பிரகதி. சேலை நகை எல்லாம் ஓகே. அகைன் இந்த ஜீன் டாப் எதுக்கு? ஓ.. பஸ்ட் நைட் தடுக்கிற முடிவோ. அப்பறம் ரொம்ப வெயிட்டா இருக்கா தாலி. விதுரன் மாதிரி வெயிட்டான ஆள் அணிவித்தா அப்படி தான் வெயிட்டா இருக்கும். சரி விடு இருபது சவரம் இருபத்தியைந்து சவரன் கழுத்துல மாடு மாதிரி போட்டா பிளாக் மார்க்லாம் வரும். யூ ஆர் ரைட்.” என்று கூறவும் பிரகதி எரிச்சலடைந்தாள்.

    எப்படியும் ஆர்ப்பாட்டம் செய்வான் நான் கட்டிய தாலியை கழட்டிட்டியே என்று கத்துவான், அவமதிப்படைந்தவனாக உணர்வான் சின்னதாய் சந்தோஷம் கொள்ள எண்ணினாள். ஆனால் அவன் இலகுவாய் அதை முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றதும் சப்பென்றானது.

     “ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் கையை கட்டி நின்றுட்டு உட்கார்” என்று மெத்தையில் தன் பக்கத்தை காட்டினான்.

     அவளோ திரும்பாது சமன் படுத்திருந்த நிலையில் சினத்தை அடக்கினாள்.

     “ஒவ்வொரு ஜிவல்ஸ் எத்தனை லட்சம் கோடினு தெரியாம இப்படி வீசியிருக்க. ஐ லைக் இட். ரொம்ப டயர்டா இருக்கு. இந்த வாரம் முழுக்க ஒரே ஓட்டமா போகுது. குட் நைட்” என்று உறங்கினான்.

   பிரகதி கை வளைவில் வைத்திருந்த கத்தி பளபளத்தது. அதற்கு வேலையே இல்லாமல் உறங்க போவதாக கூறியதும் அதன் பிடியை தளர்த்தினாள்.

     ஜன்னல் அருகே சோபா ஒன்றிருக்க அதில் படுக்க சென்றாள். கூடவே கத்தியையும் அணைத்து கொண்டாள்.

    தீபிகா இன்பாவுக்கு மேரேஜ் பண்ணி வச்சேனே.. தீபிகா இப்ப சசிதரனோட மனைவியா இருக்கா, குழந்தை வேற வயிற்றில் இருக்கு.

    இன்பாவுக்கு என்னாச்சு? ஓரு வேளை அவனை கொண்ணுட்டானா? என்று விதுரனை நோக்கினாள்.

     அம்மாவோட காலையே கட் செய்திருக்கான். இன்பாவை எதுவும் பண்ணாமலா இருப்பான்.

     ஒரு வருடமா பழியை மனசுல போட்டு என்னை தேடி வந்து இப்படி பிளாக்மெயில் பண்ணறானு அந்த தர்மா சொன்னானே… இவனிடம் அடங்கிபோகணும்னு தலைவிதியா… அம்மாவை காரணம் காட்டி என்னை பணிய வைக்க பார்க்கறான். இல்லை… இனி பணிய மாட்டேன். ஊரறிய உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிட்ட விதுரன். திருமணமான கொஞ்ச நாளிலேயே உன்னை உன் பேச்சை எதிர்த்து நான் செயல்பட்டா உன்னை தான் அசிங்கமா பேசுவாங்கனு புரியாம இருக்க. புரிய வைக்கிறேன்.’ என்றவள் அசதியில் தானாக உறங்கினாள்.

      உறக்கத்தில் கத்தி கையிலிருந்து கீழே விழ விதுரன் இமை திறந்தான்.

பிரகதி தான் கத்தியை வைத்து அவளையறியாது உறங்க கண்டவன் கத்தியை எடுத்து பழக்கூடையின் திசைக்கு வீசினான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *