Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10

துஷ்யந்தா-10

     விதுரன் பார்வை உறங்கும் பிரகதி மேல் விழுந்தது.

     ‘என்னடா எதுவும் பேசாம கையை கட்டி நிற்கறாளேனு டவுட் பட்டேன். இப்ப தான் தெரியுது. கத்தியை மறைச்சி  வச்சிருக்கியா’ என்று எண்ணியவாறு அவளை அள்ளினான்.

    பூக்குவியலாக தான் பிரகதி அவனுக்கு தோன்றிருக்க வேண்டும். முகத்தில் சின்ன சுணக்கமின்றி சுகமாக தூக்கியதாக உணர்வேற்பட அவளை மெத்தையில் கிடத்தினான்.

    நீ இல்லாதப்ப உன்னை அருகே வச்சி பழி தீர்க்க என்னவென்னவோ திட்டம் போட்டேன். ஆனா நேர்ல வேடிக்கை பார்க்கறேன். விதி என் கையால தூக்கி தூங்க வைக்கறேன். அவளை திட்டி அர்ச்சித்து விட்டு அவள் படுத்த படுக்கையில் இருந்த அவனது பணிக்கான கோப்புகள் மறைத்து வைத்ததை எடுத்து முதலில் பதுக்கினான். 

     கோப்புகளை எடுத்து வைத்தப்பின் அவளை மீண்டும் அதே போல சோபாவிலேயே படுக்க வைக்க எண்ணினான். ஆனால் முதலில் தூக்கியது கோப்புகளுக்காக என்பதால் தூக்கிய கைகள் தற்போது அவளை அள்ளி எடுக்க முரண்டு செய்தது.

     எதிரியை உள்ளயே விட்டுட்டு எப்படி தான் நிம்மதியா இருக்க போறேனோ’ என்று புலம்பி தன் அறையிலேயே சோபாவில் படுக்க பிடிக்காது வெளியே செல்லவும் மனம் வராது அவளை அந்தப்பக்கம் கிடத்தி அவன் நீட்டி நிமிர்ந்தான்.

    ‘எங்கயாவது அசையுதா பாரு. எப்படி நிம்மதியா தூங்கறா.’ என்று திட்டிவிட்டு மறுபக்கம் படுத்தான்.

     அதிகாலை இருவரும் ஒரு சேர எழவும் பிரகதி விதுரனை கண்டு வேகமாக தள்ளி விட அவள் முட்டை கண் பெரிதாகும் போதே என்னவோ செய்ய போகின்றாளென அறிந்து எழ முயன்றவனை தள்ளி விடவும் தொப்பென்று கீழே விழுந்தான்.
   
    “அடிப்பாவி இடுப்பை உடைச்சிட்டியே.” என்றவன் எழுந்து அவள் புறம் வந்து “டேஞ்சர் தான். உன்னை பக்கத்துல வச்சிட்டு தூங்கறது. கத்தியை எடுத்து பக்கத்துல வச்சிட்டு தூங்கினவதானே. உன்னை….” என்று இழுத்து சென்று பாத் ரூமில் ஷவர் தண்ணீர் திறந்துவிட்டான்.

     காலையென்றாலும் எழுந்ததும் குளிரில் இப்படி தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பானென அறிந்தளா பிரகதி. சற்று நேரத்தில் எல்லாம் தொப்பலாய் நனைந்து விட, “இதான் லாஸ்ட். என்னை சீண்டின. பிறகு ஆசிட்டில் குளிப்பாட்டிடுவேன்” என்றான்.

      அறைக்குள் அடங்கவும் முடியாது உடை மாற்றினாள். அதற்குள் அவனுமே குளிக்க சென்றான். இம்முறை சுடிதார் அணிந்த சொர்க்கமாக நின்றாள்.

வெளியே வந்து இடத்தை நோட்டமிட்டாள். விக்னேஷ் இருந்தால் அவனிடம் தாயை எப்பொழுது தன்னிடம் ஒப்படைப்பார்களென கேட்க எண்ணி தேடினாள்.

    ஆனால் ஹாலில் ஆதித்யா தான் அமர்ந்திருந்தார்.

      “வாமா… உட்காரு” என்று வரவேற்கவும் அவரை மதிக்க தோன்றாமல் தலையை தாங்கி வேறொரு சோபாவில் அமர்ந்தாள்.

     காபி எடுத்து ஆதித்யா பிரகதி முன் நீட்டினார்.

   பிரகதியோ இருக்கின்ற கடுப்பில் அதனை தட்டிவிட வீடெங்கும் காபி ரங்கோலி கோலமாய் சிதறியது.

     “யார் நீங்க… மிரட்டி உருட்டி ஒருத்தன் கல்யாணம் பண்ணியிருக்கான். பொறுப்பா திட்டி வளர்க்காம சப்போர்ட் பண்ணறிங்க. என்ன மனுஷங்களோ நீங்களாம்.” என்று பேச அடுத்த நொடி தரையில் இருந்தாள்.

     “இவர் என் தாத்ரு. இவரை எதிர்த்து பேச நீ யாருடி. மிரட்டி உருட்டி தான் கல்யாணம் செய்தேன். இன்னமும் மிரட்டுவேன். நான் மனுஷன் கேட்டகிரில சேர மாட்டேன். உனக்கு எப்படி தோன்றுதோ அப்படியே எண்ணிக்கோ. ஆனா இந்த பேச்சு இங்க இருக்க கூடாது. இது என் வீடு. இங்க நான் வைக்கிறது தான் சட்டம்.” என்று முடித்தான்.

     “தப்பு விதுரன். அந்த பொண்ணு நிலைமையில அவள் செய்யறது சரி.” என்று கூறவும் “தாத்ரு… உங்களுக்கும் தான் இங்க தப்பு சரி எதுவும் நான் தான் முடிவு பண்ணுவேன்.” என்று கர்ஜித்தான்.

    “அதுக்கு வேறயாராவது திருமணம் செய்யணும். என்னிடம் இப்படி அடுத்த முறை நடந்த வேடிக்கை பார்க்க மாட்டேன்.” என்று பிரகதி பதிலுக்கு கர்ஜித்தாள்.

     “என்ன பண்ணுவ? ஆப்ட்ரால் நீ ஒரு பொண்ணு.” என்று முடித்தான்.

     “பொண்ணு.” என்று பூ ஜாடியை எடுத்தாள். எப்படியும் அதை உடைப்பாலென என்று மிதப்பில் இருக்க, அதை டிவியின் முன் தூக்கியெறிந்தாள்.

      விதுரன் தலையிலடித்து உடனே ஒரு போனை எடுத்து தர்மா வீட்ல இருந்த டிவி உடைஞ்ச்டுச்சு. வேற டிவி ஊதே மாடல் பிட் பண்ணிடு” என்று வைத்து பிரேக் பஸ்ட் உண்ண ஆரம்பித்தான்.

    பிரெட் ஆம்லேட் ஜூஸ் என்று பருகி முடிக்க பிரகதி சினம் அடங்கியதாக தோன்றவில்லை. பிரகதி வேகமாக வெளியேறி சென்றாள்.

     “போடி…” என்று ஆதித்யாவிடம் தாத்ரு இவளுக்கு நீங்க அட்வான்டேஜ் தராதிங்க.” என்று கூறவும் வெளியே உடையும் சத்தம் கேட்டது.

     விதுரன் ஆதித்யா வந்து பார்க்க, அங்கே… விதுரனின் ராசியான பென்ஸ் காரை அங்கே இருந்த கல் கொண்டு உடைத்து கொண்டிருந்தாள்.

     விக்னேஷ் ஓடிவந்து “சார் விதுரனுக்கு பிடித்த கார் எதுனு கேட்டாங்க. கையை காட்டியதும் உடைச்சிட்டாங்க” என்று அதிர்ந்து பதில் தந்தான்.
  
     விதுரன் கோபமாக பிரகதியை நெருங்க, ஆதித்யா பிரகதி முன் வந்து தடுத்து நிறுத்தினார்.

     “என்னடா ஏதோ புது விளம்பரம் கம்பெனிக்காக எடுக்க போறாங்க. அதோட சூட்டிங் பேமண்ட் பத்தி பேசணும் சொன்ன. போகலையா… உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை வந்து போடுங்க” என்றார்.

     “தாத்ரு… நான் ஆசையா வாங்கியது… உடைச்சிட்டு எப்படி நிற்கறா பாருங்க” என்று பிடிக்க வர, கல்லை மீண்டும் காரில் வீசினாள். நடுநாயகமாக ஒலி எழுப்பி உடைந்தது.

     “எங்கம்மா காலை வெட்டியதுக்கும் என்னை கல்யாணம் பண்ணியதுக்கும் உன் தலையில போட்டிருக்கணும்.” என்றாள் சிலிர்த்து கொண்டு.

    வேலையாட்களும் விக்னேஷோடு இன்னும் சிலர் பாதுகாப்பு வருபவர்களும் இருக்க அடக்கப்பட்ட சினத்தோடு தற்போது பணியை காரணம் காட்டி வெய்யோனின் சில்லியாக கடந்தான்.

     பிரகதியிடம் ஆதித்யா பேச வர, “எனக்கு எந்த அறிவுரை மண்ணாங்கட்டியும் வேண்டாம். பேரனை ஒழுங்கா வளர்க்கலை. என்னிடம் பேச வர்றிங்க.” என்று கத்தி விக்னேஷிடம் “எங்கம்மாவை என்னோட இருக்க விடுங்க.” என்று கேட்டாள். விக்னேஷ் மற்றொரு காரில் ஏற செல்லும் விதுரனை காண அவனோ இரண்டடி ஆதித்யா முன் வந்து “தாத்ரு இவளிடம் பேசி உங்க டைம் வேஸ்ட் பண்ணாதிங்க. இதெல்லாம் அடங்காது.” என்று சென்றான்.

   அன்னையை பற்றி ஒன்றும் கூறாது போக விக்னேஷை தவிப்பாய் பார்த்தாள்.

     “அவங்களை ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருக்கணும் மேம். சாரே விட்டாரும் டாக்டர் தயவு கண்டிப்பா வேண்டும். நீங்க இந்த வொயிட் கார்ல எங்க போகணும்னாலும் போகலாம். வர்றேன் மேம்.” என்று விதுரன் பின்னால் சென்ற காரில் ஏறினான்.

     ஆதித்யா சிரித்து கொண்டே “இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.” என்று கூற செவிமடுக்காது கையை பிசைந்து ஹாலில் அமர்ந்தாள்.

     சாப்பிட வாமா” என்று அழைக்க, “இந்த வீட்ல பச்சை தண்ணி குடிக்க மாட்டேன்” என்றவள் கை கடிகாரத்தை அடிக்கடி பார்த்தாள்.

     சரியாக பத்து நிமிடத்தில் ஸ்விகியில் சப்பாத்தி பன்னீர் மசாலா வந்து சேர ருசித்தாள்.

     சாப்பிட்டு முடிக்கும் வரை விதுரன் பற்றி பேச்சை எடுக்கவில்லை. எங்கே எழுந்து சென்றிடுவாளோயென பொறுமை காத்தார். பெரியவர் பொறுமையாக இருப்பார். பிரகதி இருப்பாளா… எழுந்து கையலம்பி விறுவிறுவென நடையிட்டாள்.

     நேராக அந்த வெள்ளை காரில் ஏறி “தீபிகாவோட வீட்டுக்கு போகணும்” என்றாள். விளக்கை தேய்த்தால் பணியை செய்யும் பூதமாக காரை எடுத்தான் ஓட்டுனர்.

     ‘நல்ல வேளை எங்க போற எதுக்கு போற என்று அடைச்சி வைக்கலை. அம்மாவை பார்க்க போகறதுக்கு முன்ன இன்பாவுக்கு என்னாச்சுனு தெரிந்துக்கணும்.’ என்று பட்டுவுக்கு போனை போட்டு தாயின் நலனை கேட்டுக் கொண்டாள்.

     கூடவே இருக்க வேண்டியது பிரகதி தான். ஆனால் இதுவரை விதுரன் விடவில்லை. காலையில் தீபிகாவை பார்த்துவிட்டு இன்பா நலனை அறிந்து கொண்டு தாயை காண கவனித்து கொள்ள மருத்துவமனையை தேடி ஓடவேண்டும் என்று மனதிலே வகுத்து சென்றாள்.

     செல்லும் திசையை காணாது இமை மூடி தியானித்தாள்.

     “மேடம்… மேடம்.. வீடு வந்துடுச்சு” என்று ஓட்டுனர் மெதுவாக கூறி முடித்தான்.
  
     பிரகதி கீழே இறங்கி வீட்டை காண இடம் மாறி வந்தவளாக விழித்தாள்.

      “நா… நான் தீபிகாவோட வீட்டுக்கு போக சொன்னேன். இங்க யார் வீடு..? ” என்று கேட்டாள்.

     “இதான் மேம் தீபிகா அம்மா வீடு.” என்றார் அவர். அதற்குள் மேலிருந்து கோமதி எட்டி பார்த்து வரவேற்க தடுமாறினாள்.

     சசியும் “வா.. வா..வாங்க.. நீ…நீங்க வரு… விங்கனு தீ..தீபி கா சொ…ல்லல.. விது வும் சொ..ல்லல..” என்று திக்கினான்.

     பிரகதிக்கு சங்கடமாய் உணர்ந்து நிற்க கோமதி “அடடே புது பொண்ணு வாங்க வாங்க. விதுரன் வந்திருக்கானா…” என்றதும் இல்லையென தலையாட்டினாள்.

     “முதல் முறை சேர்ந்து வந்திருக்கலாம். விதுரனுக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் பிடிக்காது. நல்லா தெரியும்… இருந்தும் மனசு கேட்கலை. உட்காரு மா.” என்றார்.

     “தீபிகாவை பார்க்கணும்” என்று பிரகதி நேரிடையாக தயக்கமின்றி கேட்டு விட்டாள்.

    “தீபிகாவை பார்க்க வந்தியா… ஓ… ஆமால… நீ தீபிகாவோட பிரெண்ட். இங்க வந்ததும் பிரெண்டை பார்க்க பேச ஆசையா வந்திருப்ப. தீபிகா அவளோட அம்மா வீட்ல போயிருக்கா. வளைகாப்பு முடிந்ததா… ஆசையா கேட்டா. சசி முதல்ல மறுக்க பார்த்தான். தீபிகாவோ அழுது அடம்பிடிச்சி போயிட்டா. எல்லாம் குழந்தை சுமக்கறப்ப அம்மா வீட்டை தேடுவாங்க தானே” என்று பேச வேலைக்காரி அதற்குள் மாதுளை பழரசத்தை போட்டு எடுத்து வந்திட கோமதி எடுத்து கொடுத்தார்.

    பாதி பருகி முடித்து வீட்டை கவனிக்க வித்ரன் வீட்டை விட பிரமாண்டமாய் காட்சியளித்தது.

     வீடே ஒருவித அந்நியதன்மையை பறைசாற்றியது.

     “நான் அப்ப கிளம்பறேன் ஆன்டி” என்று எழுந்திட, “ஒரு நிமிஷம் மா.” என்று அறைக்கு சென்றார். சசிதரன் தான் அமர்ந்திருந்தான்.

    விதுரனை போல இல்லை. அன்று ஒரமாய் ஒதுங்கி வலியோடு தலைதாழ்த்தி நின்றவனா இவன் என்பதாக தெரிய பேசவும் தயங்கினாள்.

     “நா… நான் பேசினா.. தி..திக்கும். அத.. அதனாலேயே பேச..மாட்டேன். இரு…ங்க..” என்று பேப்பரை எடுத்து வேகமாக மனதில் சொல்ல வந்ததை எழுதினான்.

     “எனக்கு தீபிகாவை ரொம்ப பிடிக்கும்ங்க. விதுரனிடம் சொன்னதும் தீபிகாவை கட்டி வச்சான்.

    உங்களை எங்க மேரேஜிலிருந்து தேடினான். இப்ப மேரேஜ் பண்ணிட்டான். கொஞ்சம் கோபக்காரன் யார் சொல்லுக்கும் செவிமடுக்க மாட்டான். ஆனா என்னை விட நல்ல புத்திசாலி.” என்று கொடுத்தான்.

       “தேங்க்ஸ்… பட் நான் உங்க விதுரனை விரும்பி மணந்துக்கலை.” என்று கூறினாள்.

     சசிதரனுக்கு பதில் சற்றே ஆட்டம் தர, படிகளில் இருந்து கோமதி பழம் பூ அடங்கிய குங்குமசிமிழோடு பட்டுபுடவை எடுத்து வந்து கொடுக்க, மறுக்க பார்த்தாள்.

     திருமணமாகி முதல் முறை குங்குமசிமிழ் வச்சி தர்றேன் அப்படி சொல்ல கூடாது வாங்கிக்கோ” என்று கூற பிரகதி தயக்கமாய் வாங்கினாள்.

     “இந்த செல்வம் எல்லாம் காலம் காலமா வருது. அடுத்து ஒரு வாரிசை பெற்று தந்தேனா இந்த குடும்பம் மரமா தழைக்கும்” என்று ஆசிர்வதித்தார்.

   பிரகதிக்கு எங்கயாவது முட்டிக்கொள்ளலாம் என்றதொரு வெறுப்பு. அமைதியாய் வாங்கி புறப்பட்டாள்.

    காரில் அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கம் வைத்து விட்டு தீபிகா அம்மா வீட்டுக்கு போங்க” என்று எரிந்து விழுந்தாள்.

     தீபிகா அங்கேயில்லையென தெரிந்தும் அழைத்து வந்த ஓட்டுநனரை திட்டியபடி கருவினாள்.

      தீபிகா அம்மா வீட்டை அடைந்த நேரம் ஒரு பக்கம் ஆரேஞ்சு ஜூஸ் மறு பக்கம் ஆப்பிள் பழத்துண்டு என்று நடுநாயகமாக அமர்ந்து டிவியில் புது படம் பார்த்து கொண்டிருந்தாள்.

பணியாட்கள் மதியம் என்ன சமைக்க என்று கேட்டு நிற்கவும்

    “இறால் பண்ணிடுங்க” என்று வாசலில் நிழலாட தெரிந்தும் திரும்பினாள்.

      “பிரகதி?” என்று எழுந்தாள்.

      “எப்படியிருக்க தீபிகா” என்று வழமையான நலன் விசாரிப்பை கேட்டாள்.

      “எங்க நல்லாயிருக்க. உன் புருஷன் அந்த அரக்கன் என் வாழ்க்கையை மாற்றி அமைச்சி சூனியமா ஆகிட்டான். இங்க நான் அல்லல்படறேன்.” என்று வெடித்தாள்.

   விதுரனை பேச முடியாத கோபம்… இன்பா பேசிய விதம்… சசி மேல் இருந்த வெறுப்பு என்று அனைத்தும் சேர்த்து பிரகதி வந்ததும் கொட்ட நினைத்தாள்.

    “இன்பாவுக்கு என்னாச்சு? அவன் எங்கே?” என்றதும் தீபிகா சீற்றத்துடன் “அவனா… அவன் எல்லாம் வீர வசனம் பேச தான் லாயிக்கு. நீ போனதும் நாங்க இன்பா வீட்டுக்கு போய் சேருவதற்குள்ள அந்த எமகாதகன் தர்மாவை அனுப்பி எங்களை திரும்ப அதே மேரேஜ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்து, இன்பாவை அடிச்சி என் கையால இன்பா கட்டிய தாலியை கழட்ட வைத்து சசி மூலமா தாலியை அணிவிக்க வச்சிட்டான்.

    இன்பா ஹாஸ்பிடலில் வச்சி அவனே சிகிச்சை கொடுத்து ஒரு மாசம் அவனோட பிடியிலேயே வச்சிட்டான். நான் எதுவும் செய்ய முடியாத நிலையில இதோ இந்த பாவத்தை சுமக்கிறேன்.” என்று வயிற்றை சுட்டிக் காட்டினாள்.

    பிரகதிக்கு குழந்தையை சுமப்பது பாவமா? என்ற அதிர்வே தாக்கியது.

    ஏன் பிரகதி தீபிகா லைப்பை பார்த்து விதுரனை கல்யாணம் பண்ணிக்கிட்டியா… சசி மாதிரி விதுரன் கிடையாது. பாவம் நீ… அந்த விதுரன் மனசாட்சியே இல்லாத ஆளு. தீபிகா வளைகாப்பு முடிந்து வந்ததும் அவ வயிற்றுல கத்தியை வச்சி உன்னோட வீட்டை கேட்டு தெரிந்துக் கொண்டான். படுபாவி வாயும் வயிறும் இருக்கற பிள்ளைனு கூட பார்க்கலை.” என்று கீதா மறுபக்கம் கொட்டி தீர்த்தார்.

     பிரகதிக்கு தலைவலி விண்ணென்று தாக்கியது.

    இன்பா என்னாச்சு? உயிரோட இருக்கானா என்ன பண்ணினான்? என்று பயந்து கேட்டாள். வயிற்றில் கத்தியை வைத்து மசக்கையிடம் இப்படி நடந்தவன் இன்பாவை சும்மா விட்டிருப்பானா என்ற அச்சமே சூழ்ந்தது.

   “அதெல்லாம் உயிரோட இருக்கான். எவளையோ கல்யாணம் பண்ணிட்டு ஜம்முனு. என்னை கண்டா இப்ப கசக்குது. அவனுக்காக என்னை மாற்றிக்க முயற்சி பண்ணி கஷ்டப்பட்டு வாழறது நான். அவன் சந்தோஷமா இருக்கான். காரணம் விதுரன் தான். என்ன சொல்லி மனசை கலக்கி வச்சானோ.” என்று மூக்கு உறிந்து கண்ணீர் வடித்தாள்.

    “இன்பா அட்ரஸ் தர முடியுமா? விதுரனிடம் என்னால கேட்க முடியாது.” என்று கேட்டாள். பிரகதிக்கு சும்மா இருந்த இன்பாவை தான் தானே வரவழைத்து திருமணம் செய்து வைத்தோமென்ற கவலை தாக்கியது.

    அட்ரஸை பெற்றுக் கொண்டு செல்ல, வாசலில் பரமகுரு நின்றார்.

    “எப்படிம்மா இருக்க? கீதா பிரகதிக்கு சாப்பிட வச்சியா?” என்றார். பிரகதிக்கு கசந்த முறுவல் வந்தது. வா என்றோ நீரோ கூட இங்கே அருந்தவில்லை… இத்தனைக்கும் தீபிகா என் தோழி என்ற எண்ணம் உதிக்க இன்பாவை காண ஆவல் வந்தது. பரவாயில்லை அங்கிள் நான் அப்பறமா வர்றேன்” என்று கையெடுத்து கும்பிட்டு இன்பாவை சந்திக்க நகர்ந்தாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *