Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-3

அந்த வானம் எந்தன் வசம்-3

3

நிவேதிதா. நீல வர்ணத்தில் ஜீன்ஸ் பான்ட்டும் மேலே  வெள்ளை நிறத்தில் குர்தாவும் போட்டிருந்தாள். கழுத்தில் மெலியதாக ஒரு செயின். அதை விட மெலியதாக வலது கரத்தில் விரலில் ஒரு மோதிரம். மேற் கொண்டு ஒரு நகை நட்டு என்று இல்லாமல்  நன்றாக உரித்த கோழி போல இருந்தாள். 

ஆனாலும் அநியாயத்திற்கு மிகவும் அழகாகவே இருந்தாள். 

நம்ரூவிற்கே எப்போதும் தோன்றும் எண்ணம் இப்போதும் உண்டாயிற்று.

இவள், இந்த நிவேதிதா எத்தகைய ஆடை அலங்காரத்திலும் எவ்வளவு அழகாக பளிச்சென்று இருக்கிறாள். 

நிவியின் அழகில் மயங்கி நின்ற மனதை சட்டென்று தட்டி எழுப்பியவள் மீண்டும் விட்ட இடத்தில் கேட்டாள். “என்ன நிவி, விளையாடுகிறாயா? உனக்கே நீ செய்வது சரி என்று தோன்றுகிறதா?”

“பாரு நம்ரூ, வருகிறவர்கள் என்னை பார்க்க வருகிறார்களா? அல்லது நான் என்ன நகை போட்டிருக்கிறேன். எப்படி டிரஸ் செய்திருக்கிறேன் என்று பார்க்க வருகிறார்களா?”

“ஏய், அதுக்காக.!”

மேல் கொண்டு வாதம் தொடரும் முன் மணி வந்து அழைத்தான். “அக்கா உங்களை தேடி விசிட்டர்ஸ் வந்திருக்காங்க”

சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு எழுந்து முகம் கழுவ சென்றாள் நிவி.

அம்மா காலையில் போனில் பேசும் போதே இந்த வரனை பற்றிய சகல விவரங்களையும் சொல்லி இருந்தார்கள். பையனின் அப்பா மாணிக்கவாசகம் தமிழ் ஆர்வலர். பொன்னியின் செல்வன் படித்ததினால் மகனுக்கு அருள் மொழி வர்மன் என்றும் மூத்த மகளுக்கு குந்தவை நாச்சியார் என்றும் தங்கைக்கு வானதி என்றும் பெயர் வைத்துள்ளார். அருளின் தாய் அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள் ஆதலால் அவளுடைய பிறந்த ஊரிலேயே அவர்கள் வசிக்கிறார்கள் என்றும் வீட்டோடு மாப்பிள்ளையாக மாணிக்கவாசகமும் இருந்து விட்டார் என்றும் சொன்னார்கள். அருளின் தாய் சரோஜா நல்ல திறமைசாலி. விவசாயம் பார்ப்பதாகட்டும் வட்டி தொழிலாகட்டும் அவர் தான் திறம்பட நடத்துகிறார். அவர் சொல்லும் வேலையை மட்டும் கணவன் செய்து முடிப்பார். சரோஜா நல்ல உழைப்பாளி. அதனால் தோற்றத்தில் எப்போதுமே கொஞ்சம் கெத்தாகவே நிறையவே மிடுக்காக இருப்பார். 

மூத்த மகளை சென்னையில் கட்டி கொடுத்திருப்பதாகவும் சின்ன மகள் வானதியை உள்ளூரிலேயே கொடுத்திருப்பதாகவும் தகவல். பையன் அருள்மொழி திருவண்ணாமலையில் இன்ஜினியரிங் கல்லூரியில் போஸ்ட் கிராசுவேசன் முடித்து தற்போது சென்னையில் கல்லூரியில் பணி  புரிந்து கொண்டே பி.ஹெச்டி பண்ணி கொண்டிருக்கிறான். தாய் வழி சொத்து ஏராளம். வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்கு தேறும். ஆனாலும் படிப்பதில் ஆர்வம் அதிகம். நல்ல ஒழுக்கமான பையன். 

ஒரு பெண்ணுக்கு இதை விட என்ன வேண்டும்? ஆகையினால் நிவி எப்படியும் இந்த சம்பந்தத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும். அப்படி சம்மதிக்கும் பட்சத்தில் திருமணம் ஒரே மாதத்தில் இருக்கும். திருமணத்திற்கு முந்தைய நாளில் நிச்சயதார்த்தம்.

இதற்கிடையில், இந்த வரனுக்கு எப்படியாவது சம்மதிக்க வேண்டி தங்கை சாருவின் கெஞ்சல் தான் அவளை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சரி பார்ப்போம். பையன் பார்க்க நன்றாக இருந்தால் நிவிக்கும் கல்யாணத்தில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. சார். பார்ப்போம்.

படியில் இறங்கி வரும் போதே எதிரே நின்று கொண்டிருந்தவனை பார்த்தாள்.

ஆறடி உயரமாக தலையை போலீஸ் கட் அடித்து நிமிர்வாக இருந்தான் அவன். 

அவனும் அவள் படியில் இறங்கி வரும் போதே பார்த்து விட்டான். இவளை பார்த்து மிகவும் சிநேகமாக சிரித்தான்.

நிவேதிதாவின் வீட்டினரை பற்றி சொல்ல வேண்டும் என்றால்  அவள் தந்தை ராஜமாணிக்கம். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரிவு அதிகாரியாக இருக்கும் ராஜமாணிக்கம் வசந்தா  தம்பதிக்கு மூத்தவன் கலையரசன். மூத்த மகள் மணிமாலா அவள் கணவர் சந்திரன் அவர்களுடைய ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள் சேலத்திலேயே அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலேயே வசிக்கிறார்கள். மாமியார் மட்டும் அவர்களுடன் தான் இருக்கிறார்கள். இரண்டாவது மகள் தான் நிவேதிதா. அவள் தங்கை சாருலதா.எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு பெங்களூருவில் வேலையில் இருக்கிறாள். 

கலையரசன் மனைவி காஞ்சனா அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். ஆத்தூரில் நிலம் நீச்சு சொந்த வியாபாரம் என்று நல்ல வசதி. மருமகனையும் அவர்களுடனே வந்து விடும் படி அழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். ஆதலால் அவன் பெற்றோருடன் சேலத்தில் தான் இருக்கிறான். அங்கேயே மின்வாரியத்தில் வேலை. அவன் மகனையும் அங்கேயே இருத்தி கொண்டு விட்டான். அதற்கேற்றார் போல திருமணம் முடிந்து கொஞ்ச வருடங்களிலேயே வசந்தாவிற்கும் காஞ்சனாவிற்கும் ஒரு சின்ன மனகசப்பு. எல்லோர் வீட்டிலும் மாமியார் மருமகளுக்கு இடையே இருக்கும் பனிப்போர் தான். பெரிதாக  ஒன்றும் இல்லை. 

வார்த்தை போட்டு வார்த்தை போட்டு கடைசியில் சொன்னாள்.“உங்க அம்மா அப்பாவிற்கும் உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும் ஆக்கி போடவா நான் உங்களை கல்யாணம் கட்டி வந்தேன்”

அதோடு அவளுடைய பிறந்த ஊருக்கு போனவள் தான். சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் கலையரசனும் அவன் மகனும் மட்டும் ஆத்தூருக்கு போய் காஞ்சனாவுடன் இருந்து விட்டு வருவார்கள். தவிர்க்க முடியாத நேரங்களில் அவளும் கடமை தவறாமல் இங்கே வந்து போவாள். 

மணிமாலாவும் சாருலதாவும் காஞ்சனா பேசியதை மனதில் கொள்ளாமல் அவளுடன் சகஜமாக பேசி கொள்வார்கள். ஆனால் பெற்றோர்களை இப்படி பேசி விட்டாளே என்று நிவி மட்டும் அவளுடன் பேச மாட்டாள். அவளுடைய தந்தையோ சகோதரிகளோ சமாதானம் சொன்னாலும் பிடிவாதமாக ஏற்க மறுத்து விட்டவள் நிவி.

நிவேதிதா ஒல்லியாக உயரமாக அழகாக ஸ்டைலாக இருப்பாள். இடை வரை நீண்ட  முடியை சென்னையில் வேலைக்கு போனதும் பாதி முதுகிற்கு வெட்டி அலங்காரம் செய்து  கொண்டாள்.சுடிதாரிளிருந்து ஜீன்ஸ குர்தாவிற்கு மாறி போனாள்.வேலையும் மார்கெட்டிங் என்று ஆகி போனதால் அதுவே அவளுக்கு சௌகரியமாகி போய் இருந்தது. வட்டமான சிறிய விழிகள் கத்தி போன்று எதிரே இருப்பவரை உயிரின் ஆழம் வரை சென்று அசைத்து பார்க்கும் வீச்சு கொண்டது. கூரான மோவாய் அவள் பிடிவாதக்காரி என்று பறை சாற்றும். மிகவும் பொருத்தமான நறுவிசான நவநாகரீகமாக ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வாள். மொத்தத்தில் அவளை பார்க்கும் யாருக்குமே முதல் பார்வையிலேயே அவளை பிடித்து விடும் வசீகர சக்தி அவளிடம் உண்டு.

2 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *