9
“அவனும் அவங்க அப்பனை போலவே ஒழுக்க கேடானவனாக தானே இருப்பான்.”
“இல்லைம்மா. இவன் நல்லவன் அம்மா. இவனுக்கே அவங்க அப்பா செய்தது பிடிக்காது”
“விடும்மா. அவங்க அப்பன் தான் செத்து போய் விட்டானே” மணிமாலா அம்மா அழுவதை பார்த்து இரக்கம் தாங்காமல் சொன்னாள்.
ஆனால் அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் கல்யாணம் கட்டி வந்த கொஞ்ச வருடங்கள் சிவகாமியிடம் பட்ட பாடுகளை அவள் இன்னும் மறக்கவில்லை. இப்போது அதே ராட்சசியிடம் சாரு வலிய போய் மாட்டி கொண்டாளே.
அத்தை சிவகாமியை நினைத்து நிவியின் அம்மா பதறினாள். எத்தனை நாட்கள் அவளுடைய கணவர் ஊர் பக்கம் போக மாட்டாமல் ஏங்கி தவித்திருப்பார். பிள்ளைகளுக்கு காது குத்து மொட்டை அடிக்க ஒரு நல்லது கெட்டதற்கு குடும்பத்துடன் போக முடியாமல், பெற்ற தாயை தன்னுடன் கொண்டு வைத்து கொள்ள விரும்பியும் மகளுக்கு பயந்து தன்னுடன் வர மறுத்த தாயை நினைத்து புலம்பி, தான் மட்டும் போய் தாயை மட்டும் எப்போதேனும் போய் பார்த்து, வீட்டுக்கு மூத்த பேரன் கலையரசனை நினைத்து ஏங்கும் தாய்க்கு பதில் சொல்ல முடியாமல் என்று எத்தனை அவஸ்தை. மறக்க முடியுமா?
அத்தனையும் கூட பிறந்து கொல்லும் விஷமான தங்கையால் அல்லவா. மறக்க முடியுமா. இப்போது நல்லவள் போல அழுது புலம்பினாலும் அவள் நம்பிக்கைக்கு உரியவள் இல்லையே.
“ஆனால் அதற்காக இப்போது என்ன செய்ய முடியும்? அவனுக்கு தானே சாருவை கட்டி கொடுத்தாக வேண்டும்.”
“அது பார்ப்போம். முதலில் உன் கல்யாணம் முடியட்டும். விடிந்தால் கல்யாணம்.”
“அம்மா, என்னம்மா அதையே திரும்ப திரும்ப பேசுகிறாய்.”
“இப்போ என்னை என்ன செய்ய சொல்கிறாய்”
“இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை”
“நான் இப்போது இந்த நடு ராத்திரியில் எல்லோரையும் எழுப்பி உன் விஷயத்தை சொல்ல வேண்டுமா?”
“அதற்காக நான் அந்த தொம்மையை கட்டி கொள்ள தான் வேண்டுமா?”
“தொம்மையோ, தொப்பையோ, இனி பேசி பிரயோஜனம் இல்லை.”
“கல்யாணத்தை நிறுத்தவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன்”
“நல்லது. அப்படியே செய். அதில் மீதியை எனக்கும் அப்பாவுக்கும் கொடுத்து விடு”
தாங்க மாட்டாமல் தரையில் உட்கார்ந்து சப்தம் இல்லாமல் அழும் தாயை கண்டு பரிதாபம் மேலிட மணியும் நிவியும் இருவரும் இரு தோளை பிடித்து கொண்டு சமாதான படுத்த முற்பட்டார்கள். சாரு தாயின் கண்களை துடைத்து கொண்டே சொன்னாள்.
“அம்மா. எனக்காக அக்காவை நிர்பந்திக்க வேண்டாம்மா. அக்கா பாவம்மா.”
அழுத கண்களை புடவை தலைப்பில் துடைத்து மூக்கை உறிஞ்சி கொண்டே அவிழ்ந்திருந்த தலை முடியை மீண்டும் நன்றாக முடிந்து கொண்டு சொன்னாள் அம்மா.
“என் கவலை, முதலில் நிவி நீ தான்”
“நானா, நான் என்ன செய்தேன்?”
“மாப்பிள்ளையை பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு பிறகு தான் கல்யாண ஏற்பாடு
செய்தோம். இப்போது கல்யாணம் பிடிக்கவில்லை என்றால் உன் ஒழுக்கத்தை தான் எல்லோரும் சந்தேகப்படுவார்கள்.”
“பிடிக்கவில்லை என்பது ஒழுக்கம் கெட்ட செயலா?”
“நிச்சயமாக, கல்யாணத்திற்கு முன் தின இரவில் கல்யாண பெண் அப்படி சொன்னால் வேறு என்ன சொல்வார்கள்?”
“வேறு என்ன சொல்வார்கள்?”
“இதை விட நல்ல மாப்பிள்ளையை கணக்கு பண்ணி விட்டாள் என்பார்கள்”
“ஓஹோ..!”
“நீயே யோசி நிவி, உன்னை விட்டு விட்டு முதலில் சாருவுக்கு கல்யாணம் செய்தால் அப்போதும் அக்கா இருக்கும் போதே தங்கைக்கு கல்யாணம் செய்கிறார்களே, அப்படி என்ன தங்கைக்கு அவசரமோ என்பார்கள்”
“அம்மா, அப்படி கூட யோசிப்பார்களா?””
“ஏன் யோசிக்காமல்?. நாம் இன்னும் இந்த சமூகத்தில் தான் வாழ வேண்டும்”
“சாருவிற்கு தான் மாப்பிள்ளை வந்தது என்று சொன்னால்?””
“சொந்த நாத்தனார் மகன் தானே. ஏன் நிவிக்கு முடிக்காமல் சின்னவளுக்கு முடிக்கிறீர்கள் என்பார்கள்”
“ஏன்மா, நம்மை பேசுவதை தவிர அவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லாதது போல ரொம்ப பில்ட் அப் பண்ணுகிறாயே”
“உண்மையை சொன்னால் உனக்கு பில்ட் அப் ஆ?”
“யாரும்மா நம்மை அப்படி எல்லாம் பேச கூடும்?”
“வேறு யார்.? எல்லாம் நம் சம்பந்திகள் தான்”
“அக்கா மாமியாரா?”
“அவள் மட்டுமல்ல. உன் அண்ணன் மாமியாரும் தான். முக்கியமாக உன் அண்ணி காஞ்சனா ஒருத்தி இருக்கிறாளே. அவளுக்கு நல்ல நாளே நிவியை கண்டால் ஆகாது. இப்போது அல்வா தின்பது போல அல்லவா இருக்கும்”
“உனக்காக கொஞ்சம் யோசித்து பார் நிவி”
மணிமாலா அக்காவே அம்மா சொன்ன பின்புலத்தில் யோசித்து பார்த்து பயந்து விட்டாள்.
உண்மையில் அம்மா சொன்னது நிஜம் தான். நாம் தான் இதை யோசித்து பார்க்க தவறி விட்டோம். என்ன இருந்தாலும் அம்மா நல்ல அனுபவசாலி ஆயிற்றே. மணிமாலா அவள் கணவனை மறந்து போனாளே. ஏன் நிவிக்கு இந்த பையனை பிடிக்காமல் போய் விட்டது. இவனை விட வேறு யாரேனும் பெரிய புளியம் கொம்பாக பிடித்து விட்டாளோ? என்று கேள்வி கேட்டே கொன்று விடுவான். உங்கள் வீட்டில் அவள் மட்டும் தான் அப்படியா? இல்லையென்றால் உனக்கும் ஏதேனும் முன்கதை சுருக்கம் இருக்கிறதா? என்று தன்னையும் சேர்த்து வெள்ளாவியில் வைத்து வெளுப்பான்.
“ஆமாம் நிவி, அம்மா சொல்வது உண்மை தான். கொஞ்சம் சமாளித்து கொள்ள பாரு”
“நிவி அக்கா, எனக்காக நான் கவலைப்பட்டு கொள்கிறேன். முதலில் நீ உன்னை பாரக்கா.”
இப்போது சாருவின் பிரச்சினை முக்கியம் இல்லை. நிவேதிதாவின் திருமணம் தான் முக்கியம் என்று எல்லோரும் சொன்ன விதத்தில் நிவிக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.
“சாரு விஷயம் இன்னும் இரண்டு மாதம் சமாளிக்கலாம். அதற்குள் அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாள் பார்த்து அவள் கல்யாணத்தை முடித்து விடுவோம்.”
“உன் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது? அதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?”
“ஏன் நிவி, நீ வேறு யாரையேனும் மனதில் நினைத்து வைத்திருக்கிறாயா?”
“என்னக்கா, நீயே இப்படி கேட்கிறாய்?” அழுது விடுவாள் போல நிவி.
“இவள் கேட்டதையே உன்னால் தாங்க முடியவில்லையே. இந்த கல்யாணத்தை நிறுத்தினால் ஆளாளுக்கு விதவிதமாக கேள்வி கேட்பார்களே. என்ன செய்வாய்?”
யோசிக்க யோசிக்க நிவிக்கு மூளை குழம்பியது. எல்லா வழிகளும் அடைபட்டார் போல இருந்தது. வேறு வழியே இல்லை.
விடிந்ததும் கல்யாண கோலத்தில் அவனருகில் உட்கார்ந்த போது அப்படியே பூமி பிளந்து நாம் உள்ள்ளே போய் விட மாட்டோமா என்று இருந்தது நிவிக்கு.
கெட்டிமேளம், கெட்டிமேளம்.
உரத்த சப்தத்தில், அவன் கையால் தாலியை கட்டி கொள்ள குனிந்திருந்த போது கண்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைக்கும் வழி தெரியாது அமர்ந்து இருந்தாள் நிவி என்கின்ற நிவேதிதா.
💜💜💜💜💜வேற வழி இல்லைல காலம் காலமா பொண்ணுங்களுக்கு ஒரே ஸ்டேட்மண்ட் மட்டும்தான்
ippadi solliye ponnungala adakiduranga