11
ஒரு வீட்டின் முன் வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மைக் செட் வைத்து பாடல்கள் வேறு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக புது மணப்பெண் மணமகனின் வீட்டில் காலெடுத்து வைக்கும் போது பாடப்படும் பாடல் தான்.
“மணமகளே, மணமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா”
ஆரத்தி சுற்றி நெற்றியில் திலகமிட்டு அழைத்து கொள்ளப்பட்டார்கள்.
“பார்த்து வாங்க.”
“படி தட்டிடாமல் பார்த்து காலை எடுத்து வைத்து வாங்க”
“வலது காலை எடுத்து வைத்து வாங்க”
ஆளாளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கூவி கொண்டே இருந்தார்கள். அவரவர்கள் அவர்களுடைய முக்கியத்தை பறைசாற்றி கொள்கிறார்களாமாம்.
வீட்டிற்குள் வந்தவர்கள் அமர வைக்கப்பட்டு அருளின் கையில் பால் பழம் அருந்துவதற்கு கொடுக்கப்பட்டது.
“மாப்பிள்ளை. நீ குடித்து விட்டு மீதி பாலை உன் பொண்டாட்டிக்கு குடு”
“டேய், நீயே எல்லாவற்றையும் குடித்து விடாதே”
அருள் ஒரு மடக்கு குடித்து விட்டு மீதியை அவளிடம் நீட்டினான்.
அப்பா.!பார்வையில் என்ன ஒரு தீட்சண்யம். நெருப்பாக தகிக்கிறாளே. காரணம் புரியவில்லையே.
அவள் அதே பார்வையை தாய் வசந்தாவை பார்த்தாள். சட்டென்று சுதாரித்து கொண்ட வசந்தா பொத்தாம் பொதுவாக சொன்னாள். “ஹி,ஹி, எங்க நிவிக்கு பால் என்றாலே பிடிக்காது. குடிக்கமாட்டாள்.”
“சரி அருள், அந்த வாழை பழத்தையாவது கடித்து விட்டு மீதியை குடு. சாப்பிடட்டும்”
அவன் தயங்கி தயங்கி அவளுடைய அம்மாவை பார்ப்பதும் நிவியை பார்வையால் தயவு செய்து சாப்பிட்டு விடேன் என்று கெஞ்சுவதுமாக இருந்தான். அதற்கும் வசந்தா தான் முன் வந்தாள். நாம் ஏதும் சொல்லாவிட்டால் நிவியே முந்தி கொண்டு ஏதேனும் கடாபுடாவென்று சொல்லி விட்டால் முதல் நாளே ரசாபாசமாகி விடும்.
“ஹி, ஹி, அவளுக்கு வாழை பழமே பிடிக்காது. வெயிட் போட்டு விடும் என்று சாப்பிட மாட்டாள்.”
“இது என்னாடி அம்மா அதிசயமாக இருக்கிறது. அப்போ இது என்ன தான் சாப்பிடுமாம்?”
யாரோ ஒரு வயதான மூதாட்டி ரொம்பவே சப்தமாக அலுத்து கொண்டாள். அதானே என்றது அங்கிருந்த மற்ற பெரியவர்களின் பார்வை.
சுற்றும் முற்றும் பார்த்தவளை வானதி அருகில் வந்து கேட்டாள்.“என்ன அண்ணி? டாய்லட் போணுமா?”
“ஆமாம்”
“வாங்க.”
வசந்தா நிவியுடன் வந்தாள். வீட்டிற்கு பின்புறம் சுமார் நூற்றி ஐம்பது அடி தூரத்தில் இருந்தது டாய்லட். முதலில் வெளியே வந்ததும் ஒரே கும்மிருட்டாக இருந்தது. சற்று மெல்லமாக தடவி தடவி நடந்ததில் இருட்டிற்கு கண்கள் பழகி கொண்டது. ஓய்வறையிலும் கூட மங்கலான விளக்கு வெளிச்சமே இருந்தது.
“உனக்கு சந்தோஷமா அம்மா. இங்கே கொண்டாந்து தள்ளியதில் பரம திருப்தியா உனக்கு.”
அம்மாவிற்கே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. அவர்கள் வீடு நன்றாக டைல்ஸ் போட்டு நவீன மோஸ்தரில் தான் இருக்கும். ஆனால் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த அன்று நாம் சாவடியிலேயே உட்கார்ந்திருந்து விட்டு அப்படியே போய் விட்டோம் என்று சொன்னால் இவள் நம்பவா போகிறாள்.
ஏன் உங்களுக்கு வீட்டை சுற்றி பார்க்க தோணவில்லை? அதே போல இவர்களை பற்றி நன்றாக விசாரித்தீர்களா? இல்லை அதுவும் இதே போல் தானா? மொத்தத்தில் எப்படியாவது என்னை தள்ளி விட்டு விட தானே நினைத்தீர்கள் என்பாள். இப்போதைக்கு நாம் எது சொன்னாலும் இவள் ஒப்புக் கொள்ளப் போவது இல்லை. வாயை மூடி கொண்டிருப்பது உத்தமம்.
கடவுளே இவள் விரும்பியது போல இவளுக்கு நல்ல வாழ்க்கையை தா என்று வேண்டி கொள்ளத் தான் முடிந்தது அவளால்.
அன்றிரவு, ஆகி வந்த அறை என்று ஒரு சின்ன அறையில் அழைத்து கொண்டு விடப் பட்டார்கள். உள்ளே நுழையும் போதே நிலைப்படியில் நங் என்று இடித்து கொண்டாள்.
“பார்த்து வா” என்றவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாளே.
“வா நிவேதிதா. உன் வரவு நல் வரவாகட்டும்”
“ம். நான் வருவது இருக்கட்டும். முதலில் நீ கொஞ்சம் வெளியே போ”
“என்னது?”
“வெளியே போ என்று சொன்னேன். எனக்கு உடை மாற்றி கொள்ள வேண்டும்”
அப்பாடா இவ்வளவு தானே என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாரே வெளியே போய் நின்றான்.
அவள் மிகவும் நிதானமாக உடை மாற்றி நைட்டியில் கதவை திறந்தாள். உள்ளே வந்தவனிடம் ஒரு தலையனையும் போர்வையும் தூக்கி போட்டு விட்டு கட்டிலில் ஏறி திரும்பி படுத்து விட்டாள்.
“நிவி.”
……..
“நிவி.”
சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவனை பார்த்து சீறினாள்.
“என்ன?”
“இன்றைக்கு நம் முதலிரவு.”
“அது ஒன்று தான் குறைச்சல்”
“நான் என்ன தப்பு செய்தேன் என்று புரியவில்லையே.”
“என்னை கட்டி கொண்டது தான் தப்பு”
“ஏன், நீ சம்மதித்து தானே கல்யாணம் செய்து கொண்டாய்?”
“அது..”
பெண்களுக்கே உரிய பண்பாடு அப்போது அவள் வாயை அடைத்தது. சொல்ல முடியுமா? உன் அக்காவின் கணவனை தான் மாப்பிள்ளை என்று நினைத்து இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தேன் என்று.
“பார், தொண தொணவென்று பேசாதே. படு”
அப்புறம் அவளிடம் அரவம் இல்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு வேறு வழியில்லாமல் அவன் கீழே படுத்தான்.
காலையில் சூரிய வெளிச்சம் அந்த சின்ன ஜன்னல் வழியாக அவள் முகத்தில் அடித்து கண்களை கூசச் செய்தது. இரவு சரியான உறக்கம் இல்லை. ஏசி தான் இல்லை என்றாலும் கொஞ்சம் காற்று வருமாறு இருந்திருந்தால் பரவாயில்லாமல் இருந்திருக்கும். காற்றும் போதவில்லை. விடியக்காலையில் தான் கண் அசந்தாள்.
💜
Interesting sis