Skip to content
Home » ஆலகால விஷம்-11

ஆலகால விஷம்-11

அத்தியாயம்-11

    மகிழனிடமிருந்து ரிங் வந்த கொஞ்ச நேரத்துலயே வேற நம்பர் என்றதும் உஷார் ஆகியிருக்கணும். இப்ப போன் எடுத்தது தப்பா போச்சு‌ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சாஹிர் தலையை தாங்கினான்.

   இந்நேரம் மகிழனுக்கு லேசாய் சந்தேகம் உதிர்க்கலாம். இல்லையேல் சாஹிரோடு சென்னை வந்ததாக நீஷாவை நினைத்து, அவள் ஏன் தன்னை காண வரவில்லையென்று குழம்பலாம்.

  அப்படி அவன் குழம்பி ஒரு கட்டத்தில், வீட்டில் நீஷாவை பற்றி கூறி, யாராவது வநீஷாவை தேட ஆரம்பித்தால் தன் கதி அவ்வளவு தான்.

  வநீஷா இனி இல்லை என்றதை மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திடும். வருணிக்கு தெரிந்துவிட்டால் தன் திட்டம் மொத்தமும் வீணாகி போகும்‌. இதை தடுக்க அதிவேகமாய் சிந்தித்தான்.

    சற்று நேரம் கழித்து மகிழன் போன் போட்டதை மயிராக நினைத்து அடுத்த கட்ட திட்டத்தை தயார் செய்தான். அதில் பிசிரின்றி மனதில் ஓட்டி பார்த்தான்.‌

   பெரும்பாலும் வருணியை காதலிக்க வைப்பது மலைப்பான விஷயமென்றாலும், மகிழனையும் மாப்பிள்ளை இடத்திலிருந்து தூக்க வேண்டும்‌. ஏற்கனவே போட்ட திட்டமென்றாலும், முன்பு அவனை இல்லாமல் மறைத்து நினைக்கவில்லை. இன்று வேறு வழியில்லை. நீஷாவை போல மகிழனும் இந்த உலகில் இருந்தும் இல்லாதது போல காட்ட வேண்டும்.

   சாதாரணமான காரியமாக தெரியவில்லை. கணினியில் மகிழன்-வருணி புகைப்படத்திலும், நேரிலும் இருந்த நெருக்கம் சற்று யோசிக்க வைத்தது.

   மகிழன் மருத்துவ முத்தமாக உதட்டை உறிஞ்சுவிட்டான்.‌ வருணி போல ஒரு வட்டத்திற்குள் வாழும் பொண்ணுக்கு காதல், கற்பு, முத்தம் எல்லாமே புனிதமே. அப்படியிருக்க முதல் முத்தமிட்ட மகிழை வருணி மனதில் ஆழத்தில் இருப்பது உறுதி.
 
  அந்த உள்ளத்தில் இருந்து வேரோடா வெளியேற்ற எந்த முயற்சி எடுத்தாலும் வீண்‌. மகிழன் என்பவன் இல்லாமல் போனால் ஒரு வேளை வருணி பார்வை தன்‌மீது விழும். என்றவனுக்குள் மகிழனை சாகடிக்க போறியா? என்று கேட்டது உள்ளம்.
 
  அதற்கும் ஒரு விஷமத்தனமான  சிரிப்பை உதிர்த்து மகிழனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.‌

   ஒரு இடத்தில் வரவைக்கும் விதமாக குறுஞ்செய்தியை நீஷா அலைப்பேசியிலிருந்து அனுப்பினான்.

   “உனக்காக காத்திருக்கேன் மகிழ். உன் கூட நிறைய பேசணும். நான் சென்னையில் இருக்கேன்” என்று கூறி இடத்தையும் நேரத்தையும் சந்திப்பிற்காக போட்டான்.
  
  மகிழனும் “நான் உன்னை பார்க்கணும். கண்டிப்பா வருவேன் வநீ. நீயும் வந்துடு. கடைசி முறை போல என்னை ஏமாத்திட்டு காணாம போயிடாத வநீ” என்று பதிலுக்கு அனுப்பினான்.

   ஒரு திட்டம் உதிர்க்க, சாஹிர் வலைக்குள் மகிழன் விழ தயாரானான்.

   குறிப்பிட்ட இடத்திற்கு முன்னதாகவே சென்று காத்திருந்தான் சாஹிர்.

   மகிழன் வருகைக்கு காத்திருந்து நகம் கடித்தான்.

  சொன்ன நேரத்துக்கு சரியாக வரும் கொள்கையை உடையவனாக மகிழன் பைக்கில் வந்து சேர்ந்தான்.
 
   காரில் வீற்றிருந்த சாஹிரோ விளக்கை அணைத்து அணைத்து போட, கடந்த முறை சந்திக்க உபயோகித்த கார் என்று மகிழனும் காரை நெருங்கி வந்தான்.
  
   ஆனால் அவன் சாஹிரை கண்டதும் திகைத்தவனாய், அதிர்ச்சி அடைய, சாஹிரோ காரில் மயக்க மருந்தை எடுத்து அலுங்காமல், மகிழன் முகத்தில் ஸ்பிரோ செய்தான்.

எதிர்பாராத விதமாக சுவாசித்து மயங்கி சரிந்தான் மகிழன். அவனுக்கு இப்படி நடக்குமென்று துளியும் எண்ணவில்லை. தன் மாமன் மகள் வநீஷாவை காண வந்தவனுக்கு, இங்கு ஒரு குறும்படமாக மர்மம் தன்னை சுற்றி நடக்குமென்றா சிந்தித்தான்?

  “நீ…நீ.. நீ.” என்று மகிழ் மயக்கத்திற்கு செல்லும் முன் சாஹிரை பார்த்து, கையை சுட்டி காட்டி பேச, “நான்… நானே தான்.” என்று கண் சிமிட்டி யாரும் காணும் முன் காரில் உள்ளே மகிழனை தள்ளி ஏற்றினான்.

     தான் முன்பு திட்டமிட்டபடியே அமைத்த வீட்டிற்கு மகிழனை கூட்டி சென்று காரை தரிப்பிடத்தில் நிறுத்தினான்.‌ அதற்கு பின் ஒரு விசை கொண்ட பொத்தனை அழுத்த, கீழே படிகள் நீண்டது.
  
   படியிலிருந்து வந்தப்பின் ஒரு சுவிட்சை தட்ட அந்த படிகள் சமதளமாக மாறியது.

   மகிழன் கண் திறக்கும் முன் வேகமாக அவனை க்ரவுண்ட் ப்ளோரில் யாரும் அறியாத வகையில் மர்மமாய், அந்த அறையிலிருக்கும் மெத்தையில் படுக்க வைத்து கட்டி போட்டு, நரம்பில் துண்டிக்கப்பட்ட கோமாவிற்கு மகிழனை ஆழ்ந்த மயக்க நிலைக்கு இட்டு சென்றான்.

மருத்துவ பெயராக ‘இன்டியூஸ்ட் கோமா'(induced coma) என்பார்கள். அதாவது மனித உடல் ஆழ்ந்த மயக்க நிலையில் இருக்கும். தற்காலிகமாக மருந்தின் வீரியத்தால் கோமாவிற்கு கொண்டு செல்வது. இது மருத்துவரின் உதவியின்றி முடியாது. கிரணிடம் தனக்கு தேவையான விதத்தில் பலதும் கேட்டு அறிந்து வந்தான் அந்த சாஹிர். அதனால் இந்த அசம்பாவிதம் சாத்தியமானது.

பெரும்பாலும் இது பெரிய நரம்பியல் சிகிச்சைக்கு பயன்படுத்துவது‌. கைகால் வலிப்பு அல்லது பெரிய மண்டையோட்டின் பாதிப்பு என்றபோது இந்த மருந்துகள் பயன்படுத்தி ஆழ்ந்தநிலைக்கு கோமாவிற்கு நோயாளியை செல்ல வைப்பார்கள்.

  இந்த மருந்து சிகிச்சைக்கு பலன் அளிக்கவில்லை என்றால் சுவாச பிரச்சனையை உண்டாக்கி மரணத்தை சம்பவிக்கும்.

   அதெல்லாம் தெரிந்தே சாஹிர் மகிழனை இவ்வாறு செய்தான்.

  சொல்லப் போனால் ஒவ்வொரு நாளுக்கும் பத்து சதம் இறப்பு நேரும் என்பார்கள். ஒருவேளை இறப்புக்கு பதிலாக பிழைத்தார்கள் என்றால் நினைவாற்றல் பெருமளவு பாதிக்கப்படும்.
எப்படியும் மகிழனை கொல்லலாமா? இருக்கட்டுமா? என்று மதில் மேல் பூனையாக இருந்தான். அதனால் மட்டுமே மகிழன் இந்த நிமிடம் உயிரோடு இருக்கின்றான். ஆனால் induced comaவில் இருக்கின்றான்‌.

    அங்கே சிசிடிவி இணைக்கப்பட்டு அது நேரலையாக சாஹிர் போனில் ஒளிபரப்பாகும் விதமாக அமைந்துவிட்டு ஒரு பணியாட்களை வேலைக்கு நியமித்தான். அதாவது சாஹிருக்கு இவன் தம்பி என்ற ரீதியில் உடல்நிலை காரணமாக இப்படி வசதி செய்து பார்ப்பதாக கூறி ஒப்படைத்தான். அதிகம் படிப்பறிவுயில்லாத ஆண் வேலையாள், கிடைக்கும் பணத்தில் தாராளமாக பார்த்துக்க முன் வந்தார்‌.

”சாரி மகிழன். எனக்கு வேற வழி தெரியலை. எனக்கு வருணி வேண்டும். நீயிருந்தா வருணி என்னை திரும்பி கூட பார்க்க மாட்டா. நீ இல்லைன்னா நான் அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மனசுல நுழைந்து, ஆறுதலா பேசி உன் காதலை மறக்கடிக்க வச்சி, என் காதலை அவமனசுல பதிய வைப்பேன்” என்று முடிவோடு வேலையாளிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

  மயக்கத்தில் இருக்கும் மகிழனுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கின்றதென்று இந்த நொடி கூட அறிய வாய்ப்பில்லை.

  பக்கத்தில் இருந்த வீட்டின் உள்ளறையில் காலாட்டி சாஹிர் மகிழ்ந்தான்.

   ‘வருணி… மகிழன் காணாம போனதா இரண்டு மூன்று நாள்ல புரியும்‌. அதுக்கு பிறகு தேடோ தேடு தேடுவாங்க.

   ஒரு கட்டத்தில் போலீஸை அணுகுவாங்க மகிழன் பேரண்ட்ஸ்.
   போலீஸ் இன்வஸ்டிகேஸன் ஆரம்பிச்சி, போனை தான் முதல்ல தேடுவாங்க.
அவன் போன் நான் கடைசியா சந்திக்க வரச்சொன்ன இடத்துலே  காட்டும்‌ அதுக்கு பிறகு சிக்னல் லாஸ்.

   வநீஷா தான் வரச் சொல்லியிருக்கான்னு போன் ஹிஸ்ட்ரி மூலமாக தெரிய வரும். வநீஷா மேல சந்தேகம் திரும்பும். வநீ-மகிழன் காதலிச்சத பேசுவாங்க.
வருணியோட நடக்கயிருக்க கல்யாணம் பிடிக்காம காதலிச்சவளையே கல்யாணம் பண்ணி ஓடிட்டதா கேஸ் முடியும்‌.‌ போலீஸ் ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை பொறுமையா தேடுவாங்க. ஒரு கட்டத்துல சலிச்சிப் போய் கல்யாணம் ஆனவங்க இரண்டு மூன்று வருஷம் கழிச்சு புள்ளக்குட்டியோட வருவாங்க’ என்று வீட்லயிருக்கறவங்களிடம் அட்வைஸ் பண்ணிட்டு போயிடுவாங்க.

  போலீஸுக்கு ஆயிரம் கேஸ். இந்த மகிழன்-வநீஷா மிஸ்ஸிங் கேஸ் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. பிகாஸ் இவங்க காதலர்கள். அப்பா அம்மா காதலை ஒத்துக்க மாட்டாங்கன்னு தங்கையை பிடிக்காம அக்காவோட போய்விட்டதா சொல்வாங்க.

  என்ன மகிழன் வீட்ல அவன் வநீயை மணந்து ஓடியதை நினைச்சு கதறிகதறி அழுவாங்க.
  அப்பறம் இழப்பு நமக்கு புதுசான்னு பழகிடுவாங்க. ஏற்கனவே ஒருத்தி இறந்தப்பிறகு மீண்டு வந்தவங்க தானே?!

   இங்க என் வருணி காதல் தோல்வில இருப்பா. நான் சாஹிரா அறிமுகமாகி அவளோடு மனசுல இடம் பிடிப்பேன்‌.

  ‘பெத்தவங்க வேண்டாம் நீ மட்டும் போதும் சாஹிர்’ என்று வருணி வாயால சொல்ல வச்சி, வருணியை நானே கல்யாணம் பண்ணுவேன்.

எத்தனை கொலைகள், எத்தனை தடங்கல், எத்தனை சூழ்நிலையை கடந்து வந்து நிற்பேன். வருணி கையை பிடிச்சி சந்தோஷமா இருப்பேன். வருணியை பெத்தவங்களை கூட அதுக்கு பிறகு ஒட்ட விடமாட்டேன். வருணிகா மட்டும் போதும். அவளை அழைச்சிட்டு எங்கயாவது போய் அவளோட வாழ்வேன்‌.

  இந்த பிளான்ல எந்த சொதப்பலும் வரக்கூடாது. வந்தா….. நான் மனித தன்மையோடு நடக்க மாட்டேன். என் சுயரூபத்தை இந்த உலகம் பார்க்கும்’ என்று கனவுகள் விரிவாக சாஹிர் மகிழ்ந்தான்.

   அவன் சந்தோஷத்தை அடைய கூடாதென்று டாக்டர் கிரண் போன் செய்ய ஆரம்பித்தார். அவர்களுக்குள் இருந்த உடன்படிக்கை அப்படி.

  எரிச்சலோடு போனை எடுத்து, “சொல்லுங்க டாக்டர்?” என்றான் சாஹிர்.

   “சாஹிர் போய் ரொம்ப நாளாகுது. என்ன பெரிய பெரிய இன்ஞெக்ஷன் எல்லாம் கேட்டு வாங்கியிருக்க. யாருக்கு?” என்றார்.

  “யாராயிருந்தா உனக்கென்ன? எப்ப மருத்துவ உதவி கேட்டாலும் நீ செய்யணும்‌ அதான் நமக்குள்ள டீலிங்” என்றான் சாஹிர்.

  “டீலிங் பத்தி என்னிடமே பேசற சாஹிர். இங்க வந்து உன் முகம் காட்டிட்டு போ. எனக்கு தேவையானதை தந்துட்டு போனா நான் ஏன் மேன் உன்னை தேடப் போறேன்.” என்று பேச பேச, சாஹிருக்கு வெறியேறியது.

     ஒருவன் கொலை செய்ய அஞ்சுவது முதல் கொலைக்கு மட்டும் தான். அடுத்தடுத்து நிகழப்படுமாயின் அவனுக்கு கொலைகள் அத்துபடியாகிவிடும்‌. இன்று சாஹிர் மனநிலை அப்படி தான் மாறியது.

   ‘கிழவா.. உனக்கு எப்ப சமாதி கட்டணும்னு காத்திருக்கேன்’ என்று பல்லைக் கடித்து பழச்சாற்றை வயிற்றில் நிறைத்தான்.‌

   ”டாக்டர் கிரண் இரண்டு நாள்ல அங்க வந்துடுவேன்” என்று துண்டித்தான்.

     அடுத்த நாள் சொன்னது போலவே மகிழனுக்கு மயக்கம் கொடுத்ததால் பாவம் மகிழன் பட்டினியிலும் மயக்க மருந்தாலும் மயங்கி இருந்தான். அதற்கான மற்ற ஏற்பாடு செய்து விட்டு வேலையாளிடம் ‘அவனை எதுவும் தொந்தரவு செய்யாத. இந்தயிந்த மருந்து நீ எப்ப எப்ப செலுத்தணும்னு நான் வீடியோ கால்ல செல்லறேன் நீ அப்ப அதை சொல்லி கொடுத்தது போல செய்யணும்” என்று விலாவரியாக சொல்லிவிட்டு மும்பை கிளம்பினான். 

   நீஷா போனையும், மகிழன் போனையும் செல்லும் வழியில் கோவாவில் வைத்து அடிக்கடி ஆன் செய்து விட்டு மொத்தமாய் கடலில் தூக்கியெறிந்தான் சாஹிர்.

   ‘இனி இந்த இரண்டு போன் எனக்கு தேவைப்படாது.’ என்றவன் மும்பை நோக்கி சென்றான்.

   அங்கு சென்றவன் டாக்டர் கிரணை போட்டு தள்ளும் முடிவோடு மருந்தற்ற ஊசியை கிரணின் கவனம் சிதறிய நேரம் செலுத்தினான். கிரண் வயதானவர் அதனால் சாஹிரிடம் போராடி தோற்று ஒரு கட்டத்தில் தளர்ந்தார்.

  சுவாசிக்கும் காற்று ஊசி மூலமாக உடலில் சென்று ‘பப்பிள்ஸாக’ மாறி இதய அடைப்பை உண்டாக்கி, இயற்கை மரணம் உண்டாக்கியது‌ கிரணுக்கு.

  அடுத்த நாளே வயதானவர், கொலைக்கு உண்டான எந்த அடையாளமின்றி இயற்கையாக இறந்துகிடக்க, சொந்தமும் சுற்றமும், கிரண் மரணத்தை, இயற்கை மரணமாகவே பாவித்தார்கள்‌.

    யாருக்கும் சந்தேகமின்றி டாக்டர் கிரணின் இறுதி ஊர்வலத்தை தொலைவிலிருந்து பார்த்துவிட்டு மும்பைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு, மீண்டும் சென்னைக்கு பயணமானான் சாஹிர்.

     இடைப்பட்ட நாட்கள் மகிழனை  காணாதது அவர்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டனரோ? தன்னவளாக பாவிக்கும் வருணி எப்படி எடுத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கின்றாளோ என்று ஆர்வமாய் காண சாஹிர் சென்னைக்கு பிளைட்டில் திரும்பினான்.

      எப்பொழுதும் போல மகிழன் குடும்பத்தை தூரமாக இருந்து காண நேர்ந்தது.

  மகிழனின் அன்னை ஷீலா வாடி வதங்கிய கொடியாக இருந்தார். இதில் நடராஜனும் தளர்ந்து இருந்தார்.

‌ ‘இது இது தான் எனக்கு வேண்டும்.’ என்றவன் ஆர்பாட்டத்தோடு வருணி வீட்டின்‌ முன் செல்ல வேகமெடுத்தான்.

  அப்பொழுது தான் ஒரு லேடி போலீஸ் வருணியை அழைத்து செல்வதை கண்டான்.

   கூடவே மகேஸ்வரன் பின் தொடர்ந்தார். வருணியின் அன்னை ரேணுகா மட்டும் சேலை கொண்டு வாய் பொத்தி அழுதார்.
  
   சாஹிர் வருணியை பின் தொடர்ந்தான்.

  நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகேயிருந்த ‘டீ-டைம்’ என்ற சின்ன கடையிருந்த இடத்தில் அந்த பெண் போலீஸ் அழைத்து செல்ல, அங்கே ஸ்டேஷன் அதிகாரி ஒருவர் வீற்றிருந்தார்.

    சாஹிருக்கு காவல் நிலையம் என்றால் காரணமின்றி அவன் செல்ல இயலாது. ஆனால் டீ-டைம் என்னும் சிறு டீக்கடை என்பதால் டீ குடிக்க செல்வது போல, மகேஸ்வரன் பின்னால் நடுக்கமின்றி சென்று ஒருயிடத்தில் அவர்கள் பேசினால் கேட்கும் விதமாக உட்கார்ந்து கொண்டான்‌.

-தொடரும்.


5 thoughts on “ஆலகால விஷம்-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *