Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-20

அந்த வானம் எந்தன் வசம்-20

20

“குட மார்னிங் நிவி”

கதவை திறந்து விட்டவன் அவள் பின்னோடு வந்தான். 

“சாயங்காலமே வந்து விட்டேன். படித்து கொண்டு இருந்தேனா. அப்படியே தூங்கிட்டேன். நடு ராத்திரி தான் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தால்  மணி பன்னிரண்டரை. இந்நேரம் எங்கே இருக்கிறாயோ என்று நினைத்து பயந்து போய் விட்டேன்.”

“பயந்து என்ன பண்ணினே?”

தீவிரமாக இருந்தது அவள் குரல். அதில் அவளுடைய மனநிலையை அவனால் ஊகிக்க முடியவில்லை அவனால்.

“என்ன பண்ண முடியும்? உன் வீட்டுக்கு போன் பண்ணி கேட்கலாம் என்றால் இந்த அர்த்த ராத்திரியில் அவர்களை காபரா பண்ணி விட கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன்.”

மார்பின் இடையே கரங்களை கட்டிக் கொண்டு அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

“உன் பிரெண்ட் நம்ரதாவிற்கு போன் பண்ணலாம் என்றாலோ ராத்திரியில் அதுவும் அந்த நேரத்தில் வயசு பெண்ணை எப்படி கூப்பிடுவது என்று யோசனை.”

“சரி நான் என்ன ஆனேன் என்று யோசிக்கவில்லையா?”

“யோசித்தேன். ஆனால் நீ கெட்டிக்காரி. எப்படியும் பத்திரமாக தான் இருப்பாய் என்று  நம்பினேன்.”

அவளை பார்த்து முறுவலித்தவனை நன்றாக ஒரு அறை விடலாம் போன்று எரிச்சல் ஏற்பட்டது. இவனால் நம் வாழ்க்கையும் போச்சு. நம் காரியரும் போச்சு. இதில் இவனுக்கு இளிப்பு வேறு. பத்திரமாக இருப்போம் என்று நம்பினானாம். நம்மை தேடுவதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் எப்படி சால்ஜாப்பு சொல்றான். சோம்பேறி. அவனை ஒரு நிமிடம் நன்றாக உருத்து விழித்து பார்த்தாள். 

“என்ன நிவி ” இதில் சிணுங்கள் வேறு. 

இரு கையையும் கூப்பி அவனை ஒரு கும்பிடு போட்டு சொன்னாள். “தயவு செய்து வெளியே போய் 

விடு”

“வெளியே போணுமா?”

“ஆம். போய்விடு”

“நிவி.! தெரியாமல் தூங்கி போய் விட்டேன். இனி இதுமாதிரி நடக்காது. என்னை நம்பு.”

“ஏன் கஷ்டப்படறே? உன்  வீட்டில் போய் நல்லா ஆயுசுக்கும் தின்னுட்டு தின்னுட்டு தூங்கு.”

“என்ன நிவி, இந்த ஒருதடவை என்னை மன்னிக்க கூடாதா?”

“உன்னை மன்னிக்க நான் யாரு?”

“நீ என் மனைவி இல்லையா? நீ என்னை மன்னிக்காமல் வேறு யாரு என்னை மன்னிக்க முடியும்?”

“நான் செய்த மிக பெரிய தவறு அது தான்.”

“நிவி.!”

“உன்னை கல்யாணம் செய்தததை தான் சொல்றேன்”

“எனக்கு படிப்பு முடிந்து போய் விட்டது. இனி வேலைக்கு போய் விட்டால் இந்த மாதிரி இருக்க முடியாது. அதனால் இந்த ஒரு தடவை தயவு செய்.”

“நீ வேலைக்கு போனாலும் உன் வீட்டார் இம்சை என்னைக்கும் அப்படியே தான் இருக்கும்”

“ஆடி சீர் வைப்பதை பற்றி சொல்கிறாயா?”

“உனக்கு அது மட்டும் தான் தெரியும்.வேறு என்ன நடந்தது என்பது தெரியுமா?”

உண்மையான அக்கறையுடன் தான் கேட்டான். “என்ன நிவி நடந்தது?”

மீண்டும் சொன்னாள். அவனுடைய அம்மாவின் பேச்சை. அவனுடைய இம்சையை. அந்த எரிச்சலில் ரிபோர்ட் தப்பானதை. அதன் பின் விளைவை. இறுதியாக வீட்டு வாசலில் பசியுடன் இருட்டில் பயந்து நின்றதையும். நம்ரூவிடம் தங்கியதையும். நேற்றைய அவளுடைய அநாதரவான நிலையை சொல்லி வரும் போது நம்ரூ மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த ராத்திரியில் அவள் கதி என்னவாகி இருந்திருக்கும்? 

அதீத கோபமாகி போனவள் மீண்டும் சொன்னாள்.

“வெளியே போ.”

“வெளியே போகனுமா?”

“வெளியே மட்டுமல்ல. என் வாழ்க்கையிலிருந்தும் கூட”

மறுபேச்சு பேசாமல் கடந்த ஆறு மாதமாக அவள் வாழ்க்கையில் இடம் பெற்றிருந்த அருள்மொழிவர்மன் அந்த நிமிடம் அவளிடமிருந்து முற்றிலுமாக  வெளியேறினான்.    

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *