Skip to content
Home » Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-23

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-23

அறைக்குள் அமர்ந்து விக்கியின் கைபேசியை உயிர்ப்பித்தான் திவாகர்.

நால்வரும் குடும்பமாக நிற்கும் ஒரு புகைப்படத்தைத் தான் வால்பேப்பராக அதில் பதிவேற்றி வைத்திருக்க, குடும்பத்தோடு நிற்கும் வானதியின் முகத்தை அனுதாபமாக ஒருமுறை பார்த்தான் அவன்.

அழகேசன் அப்படி இந்தக் கைபேசியில் என்ன கண்டுபிடித்தார் எனப் பார்க்கும் ஆர்வத்தில் அதைத் திறந்தால், அவரோ, விவரமாக அதில் கடவுச் சொற்கள் இட்டுப் பாதுகாப்பாகப் பூட்டியிருந்தார். எவ்வளவோ முயன்றும் அவனால் கைபேசியைத் திறக்க முடியாமல் போக, சோர்ந்தான் திவாகர். வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு அதை முதுகுக்குப் பின் மறைத்தான் பட்டென. கைபேசியை பத்திரப்படுத்திவிட்டுக் கதவைத் திறந்தான்.

வானதி தான் நின்றிருந்தாள். அவனை வினோதமாகப் பார்த்தபடி, “என்ன பண்ணிட்டு இருந்த??” என வினவினாள் அவள். அவன் லேசாகத் தடுமாறினான்.

“அ.. அது.. கொஞ்சம் வேலை விஷயம்..”

அவன் அமெரிக்கா செல்லப் போவதை மீண்டும் நினைவுபடுத்திட, வானதி முகம் கன்றியது. அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டவள், “ஆதிகேசவனைப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கணும். நான் வெளியே போறேன்… வர்றதுன்னா வா” என்றுவிட்டு வெளியேற, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவளை எங்கும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்று அழகேசன் கூறியது நினைவிருந்தது அவனுக்கு. தான் வராவிட்டால் அவள் தனியாகவே கிளம்பிவிடுவாள் என்பதும் தெரியும் அவனுக்கு. அவளைத் தனியே விடுவது ஆபத்து என்பதால் அவளுடன் செல்வதற்காக எழுந்து வெளியே சென்றான்.

மணி ஆறாகியிருக்க, வானதியின் புத்தகத்தை ஹரிணியும் பானுவும் புரட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். வானதி அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டே மீனாட்சியுடன் சேர்ந்து கூடத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தாள். திவாகர் வருவதைப் பார்த்ததும், “என்ன அண்ணா, பைக் ஓட்டக் கத்துக்கிட்டதுல இருந்து அண்ணிக்கு நீ தான் டிரைவரா?” என ஹரிணி நகைக்க, பானுவும் வானியும்கூட சிரித்துவிட, மீனாட்சி அவளை அதட்டினார். “அவன் என்ன யாருக்கோவா ஓட்டறான்? அவன் பொண்டாட்டிய தானே கூட்டிட்டுப் போறான்? உங்க அண்ணியை  அவன் பாத்துக்காம வேற யாரு பாத்துக்குவா?”

பானுவும் ஹரிணியும் தங்களுக்குள் சிரித்துக்கொள்ள, வானதி அமைதியாக அவனுடன் கிளம்பினாள். கருக்கல் தொடங்கிய நேரமென்பதால் ஓரிரு தெரு விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. திவாகர் அளவான வேகத்தில் பைக்கை செலுத்த, தெருமுனையைத் தாண்டும் வரை வானதியும் அமைதி காத்தாள். நெடுஞ்சாலைக்கு வந்தபிறகு, “எந்தப் பக்கம் போகணும்?” என அவன் வினவ, ஒருகணம் தாமதித்து, “வேம்பத்தூர்” என்றாள் அவள்.

அவனோ எதிர்த் திசையில் வண்டியைத் திருப்பினான். குழப்பமாக அவள் பார்க்க, அவனோ, “வேற ஷார்ட்கட்ல போலாம்..” என்க, வானதி சினந்தாள்.

“எதிர் திசையில என்ன ஷார்ட்கட்? உங்க வீட்டுக்கே உனக்கு வழி தெரியாது… இதுல எங்க வீட்டுக்கு குறுக்கு வழியா?”

“அட.. கூகுள்ல வேணா நீயே பாரும்மா.. என்னைத் தான் நம்பமாட்ட, அதை நம்புவ தானே?”

அவள் கைபேசியை எடுத்து கூகுளில் பார்க்கும் நேரத்திற்குள் ஏதேதோ திருப்பங்களில் நுழைந்தவன், வழியில் தெரிந்த ஒரு மலைக் கோயிலின் அடிவாரத்தில் பைக்கை நிறுத்தினான். வானதி இறங்காமல் அவனைக் கண்ணாடி வழி முறைத்தாள்.

“அட, கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு அப்றம் ஊருக்குப் போலாம்..”

“பைத்தியமா உனக்கு? நான் எப்படி கோவிலுக்குப் போக முடியும்? அதுவும் மலைக் கோயிலுக்கு? ஏன் இப்டி லூசுத்தனமா பிகேவ் பண்ற திவா?”

துக்க நிகழ்வு நடந்த தோஷத்தை அப்போது தான் நினைவு கூர்ந்தவன் சற்றே தடுமாறினான். ஆயினும், பைக்கை சாய்த்து நிறுத்துவிட்டு, அவளையும் அழைத்துக்கொண்டு, “சரி, கோயிலுக்கு வேணாம்.. இந்த மடு மேல ஏறி ஊரைப் பாக்கலாம் வா” என்றபடி சுற்றுப்பாதையில் ஏறத் தொடங்கினான்.

இவன் ஏன் இதையெல்லாம் செய்கிறான் என்று புரியாத வானதியும், உள்ளுக்குள் குமுறலுடன் அவனுடன் சென்றாள். குன்றின்மீது ஏறியபோது, நன்றாக இருட்டிவிட, சிவகங்கை நகரம் இரவு விளக்கொளியில் ஜொலித்தது. வாகன வெளிச்சமும், மின்விளக்குகளின் ஒளியும் மின்னிமின்னி மறையும் மின்மினி போல ஜாலம் காட்ட, அப்போதைய இறுக்கத்தை மறந்து கொஞ்சம் இயல்பானாள் வானதி. திவாகர் புன்னகையுடன் அவளையும் நகரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றான்.

அவனிடம் திரும்பி, “இது என்ன இடம்னு தெரியுமா?” என வினவினாள் அவள். அவன் இல்லை என்று தலையசைத்திட, அவளே விளக்கினாள்.

“அந்தக் கோயில் ஒரு முருகன் கோயில். கூட இருக்கறது பாம்பாட்டிச் சித்தர் குகை. தமிழ்நாட்டுல, ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’னு ஒரு பழமொழி இருக்கு. அதுபடி, இந்தமாதிரி எல்லா இடங்கள்லயும், ஒரு முருகன் கோயில் கட்டியிருப்பாங்க. அந்தக்காலத்து ராஜாவெல்லாம் இந்த மலைக் கோயில்களுக்கு மானியங்கள் நிறையத் தருவாங்க. மூட நம்பிக்கை கிடையாது. ஒருவேளை மழை அதிகமாகி, ஆத்துல வெள்ளம் வந்தாலோ, கண்மாய்கள் உடைஞ்சு வேளாண் பூமில தண்ணி வந்தாலோ, ஊர் மக்கள் எல்லாரும் ரொம்ப நாளைக்கு இந்த மலைக் கோயில் மண்டபத்துல தங்கிக்கலாம். கோவில் கிடங்குல இருக்க தானியங்களை உணவாக்கிக்கலாம். கோவில் மானியத்தை வச்சு மறுபடி அவங்க வாழ்க்கையை தொடங்கலாம். வேளாண் நிலத்துக்கு, அதாவது வயல் நிலத்துக்கு முருகன் தான் கடவுள். அது ஏன்னு புரியுதா இப்ப?”

அவன் புரிந்தது போல் தலையசைத்தான். வானதி அவனையும் அழைத்து ஒரு பாறையில் அமர்ந்தாள். சிறிது நேரம் அமைதியாகக் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தவள், கண்களை மூடியபடி, அவன் தோளில் சாய்ந்தாள். அவனும் எதுவும் கூறாமல் அவளைத் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“திவா.. உனக்கு எங்கிட்ட எதையாச்சும் மறைக்கணும்னு தோணுமா?”

திடீரென்று அவள் கேட்கவும் உள்ளுக்குள் பக்கென்றது அவனுக்கு. இருப்பினும் சுதாரித்துக்கொண்டு, “இ.. இல்லையே.. ஏன் அப்டிக் கேக்கற?” என்றான் அவன்.

“ஒண்ணுமில்ல… காலைல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க… எப்பவும் என் கூட அதிகமா பேசமாட்ட, இன்னிக்கு என்னடான்னா, எங்கெங்கயோ கூட்டிட்டு வர்ற… எப்பவும் நான் சொல்றபடி தான் நாம போவோம், இன்னிக்கு நீயா ஒரு இடத்துக்கு வர்ற… வீட்டுலயும் நாலு மணி நேரமா ரூமுக்குள்ளவே இருந்த… எதாவது பிரச்சனையா? நீ அமெரிக்கா கிளம்பற விஷயமா?”

அவள் தன்னை அம்மாதிரி சந்தேகிக்கவில்லை என்பது புரிந்து ஆசுவாசமானான் அவன். லேசாக சிரித்து மழுப்பியபடி, “அ.. ஆமா.. நான் கிளம்பறதுக்கு முன்ன, உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு நினைக்கறேன். தெரிஞ்சோ தெரியாமலோ, we are tied in this destiny. So, let’s try to live with it” என்றுவிட்டுத் தோளைக் குலுக்கினான்.

வானதி அவன் முகத்தை ஒரு நொடி உற்றுப் பார்த்தாள். அதில் தெரிந்தது சோகமா, சந்தேகமா, ஏக்கமா, விரக்தியா எனப் பகுத்தறிய முடியவில்லை அவனால். ஆயினும், அவள் கண்களில் நீர் துளிர்க்கத் தொடங்கியதுமே அவசரமாய் அதைத் துடைத்துவிட்டான் அவன்.

“ஹேய்.. ரிலாக்ஸ். கொஞ்ச நாளாவே நாம கால்ல சக்கரத்தைக் கட்டுன மாதிரி ஓடிட்டு இருக்கோம். சில நிமிஷங்களையாச்சும் நமக்காக எடுத்துப்போமே… நடந்ததையே நினைச்சு நினைச்சு அழுதுட்டு இருந்தா, நடக்கப்போறதை யாரு பாக்கறது? உன் எக்ஸாம்ஸ்ல முழு கவனத்தையும் வச்சுப் படி. மத்ததை அப்றம் யோசிக்கலாம். இப்ப லேட்டாச்சு… வீட்டுக்குப் போலாமா?”

அவன் விழிகளையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்த வானதியும், அவன் பேச்சை நிறுத்தியதும் தன்னிலை திரும்பினாள். கண்களை அவளாகத் துடைத்துக்கொண்டு, அவனுடன் எழுந்தாள் அவள். ஏறும் போது வேகமாக ஏறிவிட்டவர்கள், இப்போது இறங்கும்போது இருட்டில் விழுந்து விடாமல் இருக்க, பொறுமையாக அடிமேல் அடி வைத்து இறங்கினர். திவாகரின் கையைக் கெட்டியாகப் பிடித்திருந்தாள் அவள்.

பைக்கில் ஏறியதும் திவாகர் அசட்டுத்தனமாய் தலையைத் தடவியபடி, “வீட்டுக்கு வழி சொல்றயா??” எனக்கேட்க, வானதி சிரித்துவிட்டாள். எப்படியோ வழிபிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மணி எட்டாகியிருக்க, கை கால்களைக் கழுவித் துடைத்துக்கொண்டு, இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். முன்னறையில் அமர்ந்திருந்த வேதாசலம், அவர்களிருவரையும் கண்டதும் எழுந்து வந்தார்.

“என்னாச்சும்மா? கேசை திருப்பி வாங்கியாச்சுன்னு ஸ்டேஷன்ல சொன்னாங்க? ஏன்ம்மா?”

அவள் பதிலளிப்பதற்குள் அவன் முந்திக்கொண்டு, “இல்லப்பா, வானிக்கு எக்ஸாம் வருது. கேஸ் விசாரணைல அவ அலைஞ்சிட்டு இருந்தா அப்றம் படிக்க முடியாது.. அதான், இப்போதைக்கு அதை மூடி வைக்கலாம்னு…” என இழுத்தான்.

அவனை அதிருப்தியாகப் பார்த்தவர், வானதியிடம் திரும்பினார்.

“உனக்கு அதுல வருத்தமில்லையா வானி? யாராவது உன்னைக் கட்டாயப் படுத்தினாங்களா?”

“ஐயோ.. அதெல்லாம் இல்ல மாமா… நான் சம்மதிச்சுதான் கேசை வாபஸ் வாங்குனோம்”

அவர் தலையசைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

சாப்பிட்ட பின்னர் வானதி தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பால்கனியில் நடந்தபடி படித்துக்கொண்டிருக்க, திவாகர் மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரமானதும், தூக்கம் கண்களைத் தழுவ, அறைக்குள் வந்தபோது, திவாகர் கட்டிலில் இல்லாமல் அவள் படுக்கும் சோபாவில் சாய்ந்து கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டுக்கொண்டு படுத்திருந்தான்.

அவள் அதட்டினாள்.

“எனக்குத் தூக்கம் வருது. எழுந்து அங்கிட்டுப் போ”

அவனோ விஷமச் சிரிப்புடன் நிமிர்ந்தான்.

“மாட்டேன்.”

3 thoughts on “Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *