28
பேசி கொண்டே கோயிலுக்கு வந்ததும் செருப்பை கழட்டி விட்டு வாயிலில் நின்று கண்களை மூடி ஒருநிமிடம் பிரார்த்தனை செய்தவனை ரம்யா தான் கலாய்த்தாள்
“என்ன சார், இவ்வளவு நேரம் சாமி கும்புடறீங்க. கட்டிக்க நல்ல பொண்ணு வேணும்னு கேட்டீங்களா?”
“என்னை எல்லாம் எந்த பெண்ணிற்கு பிடிக்கும்?”
“ஏன் சார் அப்படி சொல்றீங்க?. உங்களுக்கு என்ன சார் குறைச்சல்?”
“அது உனக்கு தெரியுது.”
“வேறு யாருக்கு தெரியனும்?”
அனிச்சையாக அருளின் பார்வை நிவேதிதாவை தீண்டி மீண்டது. அவளுமே அவன் பார்வையின் சூட்டை பொறுத்து கொள்ள மாட்டாமல் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
“நானெல்லாம் தொம்மை. என்னை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது”
விழுந்து விழுந்து சிரித்தாள் ரம்யா. அவள் சிரிப்பதையே பார்த்து கொண்டு இருந்த நிவிக்குமே தொம்மை என்ற வார்த்தையை கேட்டதும் புன்சிரிப்பு வந்தது.
“சார், அது என்ன சார் தொம்மை? கேள்விபட்டதே இல்லையே”
“அது…! எனக்கு தொப்பை இருக்கிறதா அதில் தொ.! தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல இருக்கிறேனா அதில் உள்ள ம்மை.! இரண்டும் சேர்ந்து தொம்மை.”
“அடடா! நல்ல விளக்கம் தான். ஆனால் எந்த கண்ணு தெரியாதவள் சொன்னது நீங்கள் தொம்மை என்று?”
ரம்யாவின் ஆக்ரோஷத்தை கண்டு வாய்க்குள் சிரித்து கொண்டான் அருள். நிவியை பார்த்து கொண்டே ரம்யாவிடம். “சொல்லி விடட்டுமா சொல்லி விடட்டுமா” என்று கேட்டான்.
இவன் என்ன இப்படி வம்பு இழுக்கிறான் என்று மனதிற்குள் டென்சன் ஆகி போனவள் ரம்யாவிடம் “ஏய் சும்மா இரு” என்றாள்.
“பின்ன என்னக்கா, இவரை போய் எவளோ ஒருத்தி எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறாள்? சார் அந்த குரங்கை விடுங்க சார். நல்லா அம்மனை கும்பிடுங்க சார். இந்த தடவை உங்களுக்கு நிஜமாகவே நல்ல பொண்ணு கிடைப்பாள்.”
“வேண்டாம் ரம்யா”
“ஏன் சார்?”
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. யாராவது ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்வார்களா?”
“சார் இதில் சூடு என்பது.?”
“என்னுடைய கல்யாணம்”
“ஓஹோ.!”
“ஏன் ரம்யா, இவரை கட்டியவளை சூடு என்று சொன்னதன் மூலம் இவர் தன்னை மாடு என்று ஒப்பு கொள்கிறார் இல்லையா?”
ஒன்றுமே தெரியாதவள் போல முகத்தை வைத்து கொண்டு கேட்ட நிவியை முறைத்தான் அருள்.
இப்போ என்ன பண்ணுவே என்பது போல இடது புருவத்தை உயர்த்தி ரம்யா அறியாத வண்ணம் அருளை கேட்டாள் நிவேதிதா.
மூவரும் ஒரு சேர நடக்க முடியாமல் பாதை ஒற்றை அடி பாதையாக இருந்தது. ரம்யா முன்னாலும் இடையில் நிவியும் அவள் பின்னால் அருளும் நடந்து வந்தார்கள். நிவி எதிர்பாராத வகையில் பின்னால் இருந்து சட்டென்று அவளை அணைத்து தன்னுடன் இறுக்கி கொண்டான். எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை குலைந்து போனவள் அவன் கையை விலக்க முயற்சித்தாள். முடியாத படி அவன் பிடி இறுகி இருந்தது. அவள் தலையை திருப்ப முடியாமல் மொத்த உடலையும் திருக்கி அவனை நோக்கி முறைத்தாள்.
அவனோ புன்னகையுடன் “அப்பா, பயமாக இருக்கிறது. கத்தி போன்ற இருவிழிகள் அப்படியே பாய்ந்து என் நெஞ்சை துளைக்கிறது”
அவளுடைய காதருகில் சொன்னவன் ரொம்பவே பயந்தவன் போல தோளை குலுக்கி கொண்டான். எந்நேரமும் முன்னால் சென்று கொண்டிருக்கும் ரம்யா திரும்பி விட கூடும். இவன் பயப்படுகிறனவனாக தெரியவில்லை. இந்த ஊரும் இன்றைய அவனுடைய உயர்வும் அவனுக்கு அதீத தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அவனை தன்னிடம் இது போல நடந்து கொள்ள தூண்டி இருக்கிறது. இந்த கிராமத்து மைனர் தன்னிடம் பயந்து இருந்ததை மறந்து விட்டான். இவன் சரிப்பட மாட்டான். இந்த விளையாட்டை எல்லாம் இதே ஊரில் இவன் பார்வைக்கு ஏங்கி கொண்டிருக்கும், அப்படி எவளாவது இருந்தால், அவளிடம் வைத்து கொள்ளட்டும்.
அவனை போலவே மிக மெதுவாக அவன் காதுகளில் மட்டும் கேட்கும் வகையில் சொன்னாள். “கழுதை தன் உடலில் வரிகளை போட்டு கொண்டால் அது வரி குதிரை ஆகி விடுமா?”
ச்சை..! கோபம் தலைக்கேற கண்கள் சிவக்க அவளை உதறி விட்டு விரைந்து சென்று விட்டான். அவன் உதறிய வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழ போனவள் சுதாரித்து கொண்டு அவன் போவதையே பார்த்து கொண்டிருந்த நிவேதிதாவிற்கு தன் மேலேயே கோபம் வந்தது. ஆசையுடன் தன்னை நெருங்கியவனை ஒரு வார்த்தையால் அடித்து நொறுக்கி அனுப்பி விட்டோம்.
தனக்கு என்ன தான் ஆயிற்று? யாரிடமும் மரியாதை குறைவாகவோ பண்பாடு அற்றோ தான் நடந்து கொள்வதில்லை. அப்படி இருக்க ஏன் தான் இவனை இப்படி செய்கிறோம் என்பது புரியவில்லை. அன்றேனும் அவன் உடல் அமைப்பு தனக்கு வெறுப்பை கொடுத்தது. இன்று ஆள் நன்றாகவே இருக்கிறான். நன்றாக என்ன நன்றாக. உண்மையில் கிரேக்க சிலை போன்று விரைத்த உடலும் நிமிர்ந்த நடையும் கூர்மையான பார்வையும் பிரகாசமான முகமும் எந்த பெண்ணையும் இன்னொரு முறை திரும்பி பார்க்க வைப்பதற்கு போதுமானது. ஒருவேளை இதை எல்லாம் கண்டு தான் அவனிடம் மயக்கம் கொண்டு விடுவோமோ என்று உள்ளூர பயம் போலும்.
ச்சே,எனக்காவது அவனிடம் பயமாவது? என்று தன்னை தானே கேட்டு கொண்டவளுக்கு சற்று முன்பு அவன் ரம்யாவை அதட்டிய போது தன்னை அறியாமல் உள்ளூர ஒரு நடுக்கம் பரவியதை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.
போனவாரம் இந்நேரம் தன்னிடம் யாரேனும் அருளை பார்த்து அவள் பயப்படக்கூடும் என்று சொல்லி இருந்தால் நம்பி இருந்திருக்க மாட்டாள். ஆனால் உண்மையில் தன்னுடைய பயம் தான் அவனை இப்போது இவ்வாறு பேச தூண்டியது என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
அவனை பார்ப்பதும் அவனுடன் இந்த மண்ணின் பெருமைகளை பேசி கொண்டிருப்பதும் பிடித்து தான் இருக்கிறது. ஆனால் அவன் எல்லையை மீறி தன்னுடைய இதய கோட்டைக்குள் நுழைய முற்படுவதை தான் ஏற்க முடியாமல் இருக்கிறது.
Nice epi👍👍
💜💜💜💜💜💜
Super