Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-32

அந்த வானம் எந்தன் வசம்-32

32

அவனை முற்றிலும் வெறுத்து அவனிடமிருந்து பிரிந்து மூன்று வருடங்களாக தனித்து இருந்து இப்போது தான் இங்கே வந்து கடந்த பத்து நாட்களில் அவன் மீது தான் மையலாகி போனோம் என்று சொன்னால் தன்னாலேயே அதை நம்ப முடியாது என்று அவள் மனதோடு  அவள்  வாதிட்டாள். 

அதற்கு அவள் மனம் தகுந்த பதிலை முன்னிறுத்தியது. பார்த்த மாத்திரத்தில் அவனை பிடிக்காமல் போனது எப்படி சாத்தியமோ, அதற்கு தோதாக காரண காரியங்களை மனம் தேடி கொண்டதோ, அது போல இன்று அவனை கண்டவுடன் அவன் புற தோற்றத்தை கண்டு வியந்த மனது அவனுடைய இன்றைய சமூக அந்தஸ்தை, அதை அடைய அவன் பட்ட பாடுகளை பார்த்து அவனுக்கு இளைஞர்களின் மத்தியில் இருக்கும் நன்மதிப்பை கண்டு  மிகவும் இம்ப்ரெஸ் ஆனது. அவனுடைய காதலும் தாபமும் நிறைந்த பார்வையும் அவன் அருகாமையும் தன்னை அவன் பால் காதல் கொள்ள தூண்டி இருந்திருக்கிறது.

காலம் கடந்த ஞானோதயம். என்ன பிரயோஜனம்? இன்று அவனுக்காக அவனை திருமணம் செய்யவென்று ஒருத்தி அவன் பின்னோடு திரிகிறாள். அதை இந்த சொந்தங்களும் பந்தங்களும் ஒப்பும். ஏன், நம்மையும் தான் அப்பா இங்கு வரும் வழியில் மறுமணம் செய்ய கேட்டார். என்னவோ அவளுக்கு முதலில் இருந்தே திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருந்தது. பிறகு சூழ்நிலையால் அருளை திருமணம் முடிக்க நேர்ந்தது. அதிலும் மனம் ஒப்பாமல் போனது. அத்தோடு திருமணம் என்ற நினைவை உதறி விட்டு நிம்மதியாக இருக்க வேண்டியது தானே. என்னமோ பதின்பருவத்தினள் போன்று முதன் முதலில் ஒருவன் மீது அதிலும் தான் வேண்டாம் என்று கழித்து போட்டவன் மீது தன் மனம் லயிக்கும் மடத்தனத்தை நினைத்து அதுவும் கைகூடாமல் போக கூடிய அவலத்தை நினைத்து தன்னை தானே நொந்து கொண்டு கண்களில் கண்ணீருடன்  இந்த இருட்டிற்குள் படுத்து கிடக்கிறாள்.

டொக் ………..டொக்.

வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. யாராக இருக்க கூடும்? என்று யோசித்து கொண்டே எழுந்து வந்து கதவை திறந்தவளுக்கு ஒரு நிமிடம் தான் காண்பது கனவா, இல்லை அவனையே நினைத்து கொண்டிருப்பதால் தோன்றிய காட்சி பிழையா என்று புரியாமல் எதிரே நின்றிருந்தவனை பார்த்தாள். அருள் கல்லூரியில் இருந்து அப்படியே நேரே வந்திருப்பான் போலும். ஆடை அப்படி தான் என்று சொல்லியது.

“என்ன நிவேதி, வீட்டில் யாரும் இல்லையா?”

பதிலே சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவள். அவளுடைய திகைத்த பார்வையை கண்டு அவளை வலது கரத்தால் சற்றே நகர்த்தி விட்டு உள்ளே வந்தான் அருள்.

“ஏன் வீடே இருட்டாக இருக்கிறது?” 

“கரென்ட் இல்லையா?” 

“படுத்திருந்தாயா?. வந்து எழுப்பி விட்டு விட்டேனா?”

“உடம்பு சரியில்லையா?” அருகில் வந்து கையை நீட்டி அவள் நெற்றியை தொட்டு பார்த்து விட்டு “சூடு ஒன்றும் இல்லையே” என்றான்.

அவளிடமிருந்து எதற்கும் பதில் இல்லாமல் போகவும் பேசுவதை நிறுத்தி விட்டு அவள் அருகில் நெருங்கி முகத்தை தன்னுடைய இரு கரங்களிலும் ஏந்தி ஆராய்ந்தான். அவள் முகத்தில் ஓடியிருந்த கண்ணீர் கரை அவள் அழுதிருக்கிறாள் என்றது.

“அழுதாயா?” அடிக்குரலில் மெதுவாக கேட்டான்.

அதற்கும் அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்கவும் அவள் பதில் அறியாமல் பரிதவித்து போனான். திரும்ப திரும்ப அவன் கேட்கவும் அவனுடைய அந்த பரிதவிப்பு அவளுக்கு மிகுந்த ஆறுதலை கொடுத்தது. ஓ, இவன் நமக்காக தவிக்கிறான் என்பது இதுகாறும் அவளுக்கு இருந்த  மனபாரத்தை அகற்றியது. அதன் விளைவாக அவனை பார்த்து மெல்லிய புன்னகை புரிந்தாள். அந்த சின்ன செய்கை அவனுக்கு போதுமானதாக இருந்தது.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கண்ணீர் கோடிட்டிருந்த கன்னங்களை மென்மையாக முத்தமிட்டான். அது படிப்படியாக முன்னேறி காது கண்கள் என்று தொடர்ந்தது கூடவே மிகவும் வேகமாக. அந்த நேரத்தில் அவளுக்கு செல்வி மறந்து போனாள். பிறகு ஆழ்ந்த ஒரு பெருமூச்சு விட்டு அவளை அவனிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

“சரி நான் போய் வருகிறேன்”

“எங்கே வந்தீங்க?”

“நீ தனியாக இருப்பது தெரிந்து தான் வந்தேன் என்று வாய்க்குள் முனகி கொண்டவன் வெளியே உரக்க சொன்னான்.

“இங்கே ஒரு வேலையாக வந்தேன். அப்படியே உன்னை பார்த்து செல்லலாம் என்று நினைத்தேன். வந்தது நல்லதாக போயிற்று. நீ என்னடாவென்றால் இப்படி அழுது கொண்டு படுத்திருக்கிறாய்.”

“அழவில்லை. சும்மா, தலைவலி. அதான்.”

“சரி விடு. சமாளிக்காதே. நீ காரணம் சொல்ல போவது இல்லை.”

அமைதியாக நின்றிருந்தவளை தலையை ஒரு முட்டு முட்டி விட்டு சென்றான். வாசல் வரை சென்றவன் அவள் புறமாக திரும்பி கேட்டான்..

“நிவேதி, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”

“நானா….நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? நான் கம்ப்யூட்டர் டீச்சர் கூட இல்லையே.” சொல்லி முடித்ததும் தான் ஏன் அது போல் சொன்னோம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவளாக உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“எனக்கு கம்ப்யூட்டரில் உதவி செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.” உன்னைத் தெரியும் என்ற பார்வையுடன்.

“பிறகு.?”

“நாங்கள் இங்கு நெல் பயிர் வைக்கும் விவசாயிகள், நெல்லை அரசாங்க நேரடி கொள்முதல் நிலையத்தில் போட்டு விடுவோம். ஆனால் விவசாய விளை  பொருட்களை இணையத்தில் விற்பதற்கு விளம்பரம் செய்கிறோம். அதன் மூலம் எங்களுக்கும் விலை கட்டுபடி ஆகிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் நல்ல தரமான  ஆர்கானிக் விளைபொருட்கள் நேரடியாக குறைந்த விலையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் இனி நோகாமல் சம்பாதிக்க வாய்ப்பிருக்காது.”

“அதில் எனக்கென்ன வேலை?”

“பொறுமையாக கேள். நாங்கள் விளம்பரம் செய்வது டெக்னிகலாக சரியாக இருக்கிறது. ஆனால் ப்ரோபசனலாக சரியாக இல்லை. இன்னும் மேம்படுத்தலாம் என்ற எண்ணம். நீ தான் மார்கெட்டிங்கில் இருக்கிறாய். அதனால் அதை உரிய முறையில் செய்து தர முடியுமா?”

“சரி. செய்து தருகிறேன்”

அவனுடைய அறையில் அவன் செய்து வைத்திருந்த வேலையில் உரிய பொருத்தமான திருத்தங்களை செய்து அதை இன்னும் மெருகூட்டினாள் நிவி.

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *