வானதி ஏதோ சிந்தனையில் இருப்பதை திவாகர் கரிசனமாகப் பார்த்தான்.
“என்னாச்சு வானி?”
அவள் திவாகரின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஆரம்பிச்ச இடம்… கரெக்ட்.. ஆரம்பிச்ச இடம்..” என வாய்க்குள் முனக, மற்றவர்கள் குழப்பமாக ஏறிட்டனர்.
“ஆரம்பிச்ச இடம்னா, ஆக்ஸிடெண்ட் ஆன இடம்தான?”
“ம்ஹூம்.. இது எல்லாமே ஆரம்பிச்ச இடம். அப்பாவோட விவசாயிகள் சங்கம். மற்ற ஊர்கள்ல காட்டுக்காரங்க தனித்தனியே விவசாயம் பாக்கறதுனால தான், லாபமோ நஷ்டமோ அவங்க மட்டுமே அனுபவிச்சு, கடன்கள் வாங்கிக் கட்ட முடியாமப் போயி, நிலத்தை விடவேண்டிய சூழ்நிலை வருது. ஆனா அப்பா இதுமாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தான் சங்கம் ஆரம்பிச்சு, லாபமோ நஷ்டமோ, எல்லாத்தையும் சரிசமமா பிரிச்சிகிட்டாங்க. அப்படி இருந்தும் விவசாயிக பிளவுபட்டு போயிருக்காங்க… அங்க ஏதோ இடிக்குது. நாம மறுபடி அந்த சங்கத்தைப் பத்தி விசாரிக்கணும்.”
சுதாகர் சற்றே தெளிவடைந்த முகத்துடன், “ஓகே.. இப்ப ரெண்டு பாதைகள்… ஒண்ணு மாமா, இன்னொன்னு விக்கி. மாமாவோட சங்கம், விக்கியோட ஆராய்ச்சி. ரெண்டுல ஏதோ ஒண்ணுகூட தான் அந்த எக்ஸ் மினிஸ்டருக்கு தொடர்பு இருக்கு. வானதி, நீயே ரெண்டையும் கவனிக்கறது கஷ்டம். திவா, நீங்க ரெண்டு பேரும் விக்கி கோணத்துல விசாரிங்க. நாங்க மாமாவோட சங்கம், காடு, அதைப்பத்தி விசாரிக்கறோம்.” என்றான்.
அதுவரை அமைதியாக இருந்த பானு ‘நாங்க’ என்ற விளிப்பில் சற்றே திகைத்துச் சிவந்தாள். வானதி அதையும் கடைக்கண்ணால் கவனித்துச் சிரித்துக்கொண்டாள்.
மாலை ஹரிணி வந்ததும், சுதாகரைப் பார்த்ததும் ஆர்ப்பரித்து, “உடன்பிறப்பே!!” என்று கத்திக்கொண்டு அவனிடம் செல்ல, அவனோ வாயைப் பிளந்தான்.
“எப்படி வளர்ந்துட்டா இவ!?”
“ஆங்.. உரம் போட்டு வளர்த்தாங்க! கேள்வியப் பாரு! என்ன வாங்கிட்டு வந்த எனக்காக?”
“ரெண்டு பாட்டில் செண்ட் வாங்கிட்டு வந்தேன், குடிக்கறயா?”
“ஓ.. வாயேன் ஆளுக்கு ஒண்ணு குடிக்கலாம்!”
இப்படியே மாறி மாறி இருவரும் வம்பளந்து கொண்டிருக்க, மீனாட்சி வந்து ஹரிணியின் காதைத் திருகினார்.
“ஆரம்பிச்சுட்டயா? சும்மா வெட்டிப் பேச்சு பேசிட்டே இருக்காம, உன் துணிமணியெல்லாம் எடுத்துட்டு அண்ணனுக்கு இடம் பண்ணிக் குடு. இனி அண்ணி கூட அண்ணன் இருந்துப்பான். நீ மாடி ரூமுக்குப் போயிக்க.”
“இதென்ன அநியாயம்? நடுவுல வந்த அரேபிய ஒட்டகத்துக்காக, நானும் என் டார்லிங் அண்ணியும் பிரியணுமா? என்னால போக முடியாது!!”
சுதாகரும் பானுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மீனாட்சியை பரிதாபமாகப் பார்க்க, அவரும் ஹரிணியை தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகப் பார்த்து, “அறிவுகெட்டத்தனமா பண்ணாதடி. அண்ணன் ஊருக்கு வந்தா அண்ணியோட தான் தங்கணும். ஒழுங்கா சொன்ன பேச்சுக் கேளு” என அதட்ட, அவள் சிணுங்கினான்.
“ம்மா? தனியா எப்படிம்மா நான் தூங்கறது? எல்லாரும் செட்டு செட்டா இருக்கீங்க.. நான் மட்டும் தனியா படுக்கணுமா?”
அதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் மீனாட்சி விழிக்க, வானதி சிரித்துக்கொண்டே வந்து ஹரிணியைத் தோளோடு அணைத்துக்கொண்டு, “நீ கவலைப் படாதடி செல்லம்.. பானு டார்லிங் போனா என்ன? வானி டார்லிங் இருக்கேன்ல? வா.. நம்ம ஃபன் பண்லாம்!! மாடி ரூம்ல செம்மையா காத்து வரும்.. ஜாலியா இருக்கும்..” என்றபடி கூட்டி வர, திவாகர் அதைப் பார்த்து அதிர்ச்சியானான்.
“என்னது? மாடி ரூமுக்குப் போறயா? அப்ப நான் தனியா தூங்கணுமா?”
“ஐயே.. உன் ரூமுக்கு சாப்பிட வான்னு கூப்புட வந்தாலே விரட்டுவ.. வேடிக்கை பாக்கக் கூட உள்ள விடமாட்ட.. இப்பமட்டும் தனியா இருக்கக் கஷ்டமோ? நம்பாதீங்க அண்ணி! எல்லாம் ஆக்டிங்!”
ஹரிணி நன்றாக வாரிவிட, திவாகர் முறைக்க, வானதி வாய்விட்டுச் சிரித்தபடி அவளுடன் சென்றாள்.
மாடியறையை ஒழுங்குபடுத்தி, கட்டிலில் விரிப்புக்களை விரித்து, அதில் தலையணைகளை வானதி அடுக்கிக்கொண்டிருக்க, திவாகர் சோகமே உருவாக வாசலருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்துவிட்டவள் திரும்பினாள்.
“என்ன ஆச்சு?”
அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவனருகில் வந்து முகத்தைப் பிடித்துத் தன்னிடம் திருப்பினாள் அவள்.
“என்ன ஆனதுன்னு இப்ப மூஞ்சிய உம்முனு வச்சிருக்க நீ?”
“ஹரிணி உன் கூடத்தான் தூங்கணுமா? அம்மாகூட படுத்துக்கக் கூடாதா?”
“ஹ்ம்.. இதுதான் உன் பிரச்சனையா? ஜஸ்ட் ஒரு.. ரெண்டு வாரம் தானே? ஹரிணியோட பேச்சுத் துணைக்காச்சும் யாராவது இருக்கணும்ல? அத்தை எப்படி மாடி ஏறி வந்து இங்க தூங்குவாங்க? யாராவது ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்ல?”
அவன் சிணுங்கிக்கொண்டே முகத்தை சுருக்கியவாறு கீழே சென்றுவிட, தலையணையோடு வந்துகொண்டிருந்த ஹரிணி அவன் போவதைப் பார்த்ததும், “இவன் ஏன் இந்த அலப்பறை பண்றான்? தனியாத் தூங்கறதுக்குத் தான் அவனுக்குப் பிடிக்குமே.. அப்பறம் என்ன?” எனக் கேட்டுக்கொண்டே வானதியிடம் வந்தாள்.
அவள் தனக்குள் சிரித்தவாறு தலையசைத்தாள்.
“ஒண்ணுமில்ல.. வா.”
இரவு இருவரும் படுத்துக்கொண்டபோது, ஹரிணி அவள்பாட்டில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். வானதி ஓரளவு புரிந்தும் புரியாமல் தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு எமினெம் தெரியுமா? அமெரிக்கன் ராப்பர். அவன் பாட்டெல்லாம் செம்மையா இருக்கும். அண்ணனோட ஐபாட்ல கேப்பேன்.. எனக்கும் ஃபோன் வாங்கித் தந்தா அதுல பாட்டு ஏத்திவச்சு கேப்பேன்.. அப்பா என்னடான்னா, காலேஜ் போனா தான் ஃபோன் வாங்கித் தருவேன்னு சொல்லிட்டாரு..”
“அதனால என்ன? இன்னும் ஒரு வருஷம் தான.. வாங்கிக்கலாம். இல்லைன்னா, பாட்டுக் கேக்கறதுக்கு மட்டும் ஒரு வாக்மேன், இல்ல ஆம்ப் மாதிரி எதாச்சும் வாங்கிக்கலாம்ல?”
“ம்ஹூம்.. அதுல எதுலயும் டிஸ்ப்ளே இருக்காதே அண்ணி… எனக்கு பாட்டுக் கேக்கறத விட, அதோட பேரும், போட்டோவும் பாக்கப் புடிக்கும். எமினெமோட எல்லாப் பாட்டுக்கும் ஒரு தனி பேர் இருக்கும்.. அது எல்லாமே அந்த ஆல்பத்தோட பேரோட மேட்ச் ஆகும்… அது ஜீனியஸ் இல்ல?”
அதுவரை தூக்கக் கலக்கத்தில் தலையாட்டிக் கொண்டிருந்த வானதி சட்டென எழுந்து அமர்ந்தாள்.
“என்ன சொன்ன?”
“பாட்டுக்கு.. பேர் தனியா இருக்கும்.. அதெல்லாம்.. ஆல்பத்தோடு மேட்ச் ஆகும்… அப்டினு சொன்னேன்.. ஏன்.. என்ன ஆச்சு அண்ணி?”
எதையோ யோசிப்பது போல் நெற்றியை சுருக்கினாள் வானதி. அந்த ஒரு நொடியில் தனக்கு எதுவோ கிடைத்தது போலத் தோன்றி, மறுகணமே மறைந்துவிட்டது போல் இருந்தது. ஹரிணி கரிசனமாகப் பார்க்க, அவளிடம் “ஒண்ணுமில்ல” என்றுவிட்டு விளக்கை நிறுத்திவிட்டுக் கண்களை மூடினாள் அவள்.
______________________________________
வரவேற்பு வேலைகள் வீட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. வானதி வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆட்கள் அங்குமிங்கும் வாழை மரங்களையும் தோரணங்களையும் எடுத்துக்கொண்டு நடந்தனர். தென்னந் தடுக்குகளும் பந்தல் போடுவதற்காகப் பின்னப்பட்டுக் கொண்டிருந்தன.
நேற்றைய தேர்வே கடைசித் தேர்வென்பதால், எழுதி முடித்துவிட்டு அப்படியே மேரியட் விடுதிக்கு அழைத்துச் சென்றிருந்தான் திவாகர். நேற்றைய நினைவுகளை அசைபோட்டாள் அவள்.
“ரூபா.. இது வானதி. வானதி, மீட் ரூபா.”
“ஹலோ வானதி..”
கொஞ்சம் சினேகமாகப் புன்னகைத்தபடி கைநீட்டினாள் ரூபா. முழங்காலளவு வரும் சிவப்பு ஸ்கர்ட் ஒன்றும், தளர்வான சட்டை ஒன்றும் அணிந்திருந்தாள் அவள். அவளது வெள்ளை நிறத்துக்கு, சிவப்பும் கருப்பும் கச்சிதமாகப் பொருந்த, ஒரு வளர்ந்த மிக்கிமவுஸ் போல அழகாக இருந்தாள் ரூபா.
வானதி எப்போதும்போல, முழுக்கை சல்வாரும், முடிக்கு கேட்ச் க்ளிப்பும் அணிந்திருந்தாள். புன்னகையின்றிக் கை நீட்டினாள்.
“வணக்கம் மிஸ் ரூபா மல்ஹோத்ரா.”
திவாகரும் ரூபாவும் ஒரேமாதிரித் திகைப்புடன் அவளைப் பார்க்க, அவளோ, “திவாகரோட இன்ஸ்டாகிராமில பாத்தேன்.” என்றாள் சாதாரணமாக.
அவர்கள் இருவரும் தலையசைத்து, “ஓ..” என்றனர். அதற்குள் ஆர்டர் செய்திருந்த காபியும் கேக்கும் வந்துவிட, ரூபா அவள் கையால் ஒரு கோப்பையை எடுத்து வானதியிடம் நீட்டினாள்.
திவாகர் இருவருக்கும் எதிரில் பொதுவானதொரு நாற்காலியில் அமர்ந்து இருவரையும் பார்த்தான். ஒப்பிடத் தோன்றாத இருவேறு சிகரங்களாக இருந்தனர் இருவருமே. இருப்பினும் வானதியை மட்டும் மீண்டும் மீண்டும் தொட்டன விழிகள்.
வானதி அவளிடமிருந்து இயல்பாகக் காபிக் கோப்பையை வாங்கிக்கொண்டு, சரளமான ஹிந்தியில், “அப்பறம், நீங்க அமெரிக்காவுல என்ன வேலை பாக்கறீங்க? எங்க தங்கியிருக்கீங்க?” என வினவ, ரூபா ஆச்சரியமாகப் பார்த்தாள் அவளை. திவாகரிடம் திரும்பி, “You never told she speaks hindi!” என்றாள் மகிழ்வும் வியப்புமாய்.
“எத்தனை நாள் கழிச்சு இந்த பாஷையைக் கேட்கறேன்! எனக்கே ஹிந்தி மறந்துடும் போல இருக்கும் அமெரிக்காவுல. மதுரையில இதுக்காகவே நான் எல்லிஸ் நகருக்குப் போயி மார்வாரி யாரும் இருக்காங்களான்னு தேடுனேன், தெரியுமா?”
வானதி அவளது வெகுளியான பேச்சில் புன்னகைத்தாள்.
“உங்களால ஒரு உதவி ஆகணுமே ரூபா…”