Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

40

“அது போகட்டும். அந்த புகைப்படம் ஏன் அங்கே மாட்டபட்டிருக்கிறது என்று உன் காரணம் இல்லாமல் அருளுக்கு என்று ஒரு காரணம், உண்மை காரணம் இருந்திருக்கும் அல்லவா. அதையேனும் அவரை சொல்வதற்கு நீ அனுமதித்திருக்கனும் இல்லையா?”

“நானும் அதை ரொம்ப நாட்கள் யோசித்திருக்கிறேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நிமிடம் நின்று கேட்டிருக்கணும். அதை செய்ய தவறி விட்டேன். இனி அருளை பற்றி பேசியும் புண்ணியம் இல்லை. அவருக்கு திருமணம் நடக்க போகிறது”

“இப்போது ஒன்றும் குடி முழுகி போய் விடவில்லை. அவரை எப்படியேனும் தொடர்பு கொண்டு உண்மையை சொல்.”

“காலம் கடந்து போச்சு லலிதாக்கா. இனி பேசி புண்ணியம் இல்லை”

“அப்படியானால் உன் எதிர்காலம்?”

“எதிர்காலம் என்ன..? எப்போதும் போல வேலை செய்து கொண்டு என் சொந்த காலில் நின்று அவ்வப்போது லலிதாக்காவை டார்சர் செய்து கொண்டு ஹாப்பி ஆக இருப்பேன்.”

விரக்தியாக ஆரம்பித்து கேலி போல பேசி முடித்தவளை அனுதாபத்துடன் பார்த்தாள் லலிதா.

ராம் மனோகருக்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது. போட்டியில் பங்கு பெற்ற அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு முற்றும் முடிய திறமையில் அவனுக்கு இந்த நம்பர் ஓன் பதவி கிடைத்தே கிடைத்து விட்டது. அதற்காக தில்லியின் நட்ச்சத்திர விடுதியில் பார்ட்டி கொடுத்தான் ராம்.

அவர்கள் கம்பனியின் கஸ்டமர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்று அனைவருமே ஏகதேசம் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். நட்சத்திர விடுதியின் மெல்லிய வெளிச்சத்தில் இனிமையான பாடல்களின் பின்னணியில் எல்லோருமே நேரம் போவது தெரியாமல் விருந்தில் மெய்மறந்து போய் இருந்தார்கள். மறுநாள் ஞாயிறு என்பதால் யாரும் அவசரபடாமல் நிதானமாகவே விருந்தை ரசித்தார்கள்.

தனித்து வந்திருந்ததால் சாப்பிட்டதும் நிவேதிதா கிளம்ப முற்பட்டாள். ஆனால் ராம் அவளை அவளுடைய இருப்பிடத்தில் அவனே கொண்டு விட்டு விடுவதாக சொல்லவும் அதற்கு மேல் மறுத்து சொல்வதற்கு இயலாமல் தங்கி விட்டாள். இரவு ஏறியதும் அனைவரும் கிளம்பி சென்று விட நிவேதிதா மட்டும் தனித்து  ராம் மனோகருடன் காரில் சென்றாள்.

அந்த அமைதியான இரவும் ஜனவரி மாத குளிர் காற்றும் வானத்தின் உச்சியில் உடன் வரும் பௌர்ணமிக்கு முந்தைய நாள் நிலாவட்டமும் இருவரையும் பேசவிடாமல் அமைதியாக்கி இருந்தது. அவளுடைய அபார்ட்மெண்டின் நூறடிக்கு முன் வண்டியை நிறுத்தினான் ராம்.

“நிவேதிதா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். ரொம்ப நாட்களாக நினைத்து கொண்டிருந்தது”

“ம். சொல்லுங்கள் ராம்”

“என்னுடைய இன்றைய வெற்றிக்கு உன் உழைப்பும் நீயும் கூட ஒரு காரணம் நிவேதிதா”

“நானா.. நான் என்ன செய்தேன்?. எல்லாம் முழுக்க முழுக்க உங்கள் திறமை.”

“தன்னடக்கத்தோடு சொல்கிறாய். உனக்கே உண்மை தெரியும்”

“அப்படி சொல்லி கொள்வது உங்கள் பெருந்தன்மை.”

“உன் திறமையை நான் சரியான நேரத்தில் பயன்படுத்தி கொள்வேன்”

“ஓ, நன்றி ராம்.”

“நான் சொல்ல வந்தது இதுவல்ல நிவேதிதா.”

அவன் குரல் திடீரென்று மென்மையாக ரகசியம் பேசுவது போல அடிக்குரலில் உணர்ச்சியுடன் இருந்தது. அவனின் கண்களும் முகமும் அவளுக்கு எதையோ சொல்ல முயன்றது. அவளுக்குமே திடீரென்று அவன் முற்றிலும் மாறுபட்டவனாக தென்பட்டான். என்ன சொல்ல போகிறானோ என்று உள்ளுர எண்ணம் ஓடியது. அவன் சொல்ல வந்ததை அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். அவ்வளவு பெரிய கம்பனியின் தலைமை பொறுப்பை அனாயசமாக கைபற்றிய அவன் அவளிடம் பேசுவதற்கு என்ன காரணத்தினாலோ தயங்கி நின்றது அவளுக்கே  வேடிக்கையாக தான் இருந்தது.

“நிவேதிதா கடந்த மூன்று வருடங்களாக நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்”

“ஆம். ஆரம்ப நாட்களை மறக்க முடியுமா?” என்றாள் இலகுவாக. அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்கு உதவியாக இருக்கட்டுமே என்று. 

உண்மையில் அவனுக்குமே அது பேருதவியாக இருந்தது. ஆதி நாட்களில் இருவரும் வேலை செய்த நாட்களின் நினைவில் சற்று நேரம் தடையற்று பேசி கொண்டிருந்தார்கள். இறுதியாக தைரியம் பெற்று அவன் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்தான்.

“நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். என்னை மணப்பாயா?”

“அது……….!” அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு இந்த கேள்வியின் பதில் நன்கு தெரிந்தது தானே. ஆனால் அவன் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருந்த வலது கையை தடுப்பது போன்று நீட்டி உடலை அவள் புறம் நன்றாக திருப்பி அவள் முகத்தை பார்த்து சொன்னான்.

“சம்மதம் என்பதை உடனே சொல். அப்படி இல்லாவிட்டால் இல்லை என்பதை ஒரு வாரம் எடுத்து கொண்டு யோசித்து சொல் நிவேதிதா.”

அவள் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. அவளுடைய மறு உத்தரவிற்காக ஒரு நிமிடம் நிதானித்தவன் அவள் மேல் கொண்டு ஒன்றும் சொல்ல போவதில்லை என்று உணர்ந்து வண்டியை எடுத்தான்.          

கதவை திறந்து  கொண்டு உள்ளே வந்த நிவேதிதா இருட்டாக இருந்த பிளாட்டின் விளக்கை 

போட்டாள். மனம் ரொம்ப சூன்யமாக இருந்தது. 

ராம் மனோகர் மிகவும் நல்லவன். தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்கிறான். இந்த மூன்று வருட காலகட்டத்தில் அவள் தனியாளாக இருப்பதை அறிந்து, பின் தொடர்ந்த எத்தனையோ பார்வைகள், கேள்விகள், ஜாடைகள், அக்கறை போன்ற நடிப்புகள். ஒரு சின்ன சிரிப்பின் மூலம் எல்லாவற்றையும் புறந்தள்ள முடிந்த அவளால் ராமின் உணர்ச்சி கொந்தளித்த முகத்தை அலட்சிய படுத்த முடியவில்லை.. 

ஒருவேளை இடையில் நேர்ந்த அந்த பதினைந்து நாட்களை மறக்க முடிந்தால் ராமை மணக்க சம்மதித்திருப்பாளோ?. மனம் உடனே மறுப்பு சொல்லியது. மீண்டும் அருளை சந்திக்காமலே இருந்திருந்தால்  கூட மீண்டும் ஒரு திருமணத்தில் அவளுக்கு நாட்டம் இல்லை. அதன் காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை. ஒருவேளை அருளை மணப்பதற்கு முன்பும் அவளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்ததே. அதுவாக இருக்குமோ. இல்லை. அப்படி இல்லை. அப்பா சொல்லியது போல சரியான நபரை தான் சந்திக்காதது தான் காரணம் என்று நம்பினாளே, இப்போது ஒருகாலத்தில் எவனை நினைத்தால் மனதிற்குள் பனி பெய்யுமோ இன்று அவனே மணம் முடிக்க கேட்கும் போதும் ஏன் மறுக்கிறாள்.

அருள்..!

அருள் தான் மனம் பூரா வியாபித்திருந்தான். ஆனால் அவனோ இன்னொருத்தியை திருமணம் முடிக்க போகிறான். எதிர்காலம் இல்லாத தன்னுடைய காதலை நினைத்து அவளுக்கே அவள் மேல் பரிதாபமாக இருந்தது. 

விளைவு..!

கண்ணீர் தான். படுக்கையில் படுத்திருந்தவள் கண்களை உயர்த்தி எதிரே இருந்த காலண்டரில் தேதி பார்த்தாள். இன்று தான் அவனுக்கு செல்வியுடன் திருமணம். அதற்கு மேல் அவளால் படுக்கையில் படுக்க இயலவில்லை. எழுந்து தண்ணீர் குடிக்க சமயலறைக்கு வந்தவள் கேட்பாரும் கொள்வாரும்  இல்லாமல் கண்ணீர் விட்டபடி டைனிங் டேபிளில் தலையை கவிழ்த்து கிடந்தாள்.         

ஒருநாள் புதுக்குடியில் தான் மட்டும் தனித்திருக்கையில் அழுது கொண்டிருந்த போது அருள் வந்து தன்னை ஆசுவாசபடுத்தியது அசந்தர்ப்பமாக அவளுக்கு நினைவிற்கு வந்தது. அது போல் இன்றும் அருள் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்று மனதிற்குள் ஏக்கமாக இருந்தது. இது போல் இன்னும் எத்தனை நாட்கள் இல்லை இல்லை வருடங்களுக்கு அவனை நினைத்து உருகி கொண்டிருக்க போகிறோமோ என்று உள்ளூர எழுந்த நினைவில் மீண்டும் அழ தொடங்கினாள்.

டொக், டொக்…!

வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டு போய் செயின் லாக் போட்டு கொண்டு கதவை  திறந்தாள். 

அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.    

அருள். 

உண்மையில் அருள் தான்.

41

கனவு நிலையா அன்றி காட்சி பிழையா என்று கண்களை தட்டி ஒருமுறை விழித்தவள் நன்றாக பார்த்தாள். அருளே தான். கோட் போட்டு கையில் ஒரு சூட்கேசை இழுத்து கொண்டு நின்றிந்தான். அவள் செயின் லாக்கை விடுவித்து  கதவை திறந்தாள். அன்று போலவே வலது கையால் அவள் இடது தோளை பின்னுக்கு தள்ளி உள்ளே நுழைந்தவன் கேட்டான்.

“வீட்டிற்கு வருபவர்களை வா என்று அழைக்க மாட்டாயா?”

அவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே வந்து கோட்டை கழற்றி சோபாவில் போட்டு விட்டு திரும்பி அவளை பார்த்தான். கண்களின் கண்ணீர் கோடுகள் கன்னத்தில் வழிந்திருந்தது நன்கு தெரிந்தது.

“அழுதாயா.?”

அவள் பதில் சொல்லவில்லை. 

அவன் அங்கே இருந்தே அவளை நோக்கி இருகரங்களையும் விரித்து தலையை அசைத்து வா என்பது போல சைகை செய்தான். 

அவ்வளவு தான். அதுகாறும் இருந்த சூனியம் மறைந்து அவனை நோக்கி விரைந்து விரித்திருந்த இரு கரங்களுக்குள் ஐக்கியமானாள். கண்ணீர் கோட்டின் மீது மென்மையாக முத்தமிட்டவன் அப்படியே காது கண்கள் என்று தொடர்ந்தான். அவளின் பிரதிபலிப்பு அவனை மென்மேலும் முன்னேற தூண்டியது. அது போல எவ்வளவு நேரம் மெய் மறந்து நின்றிருந்தார்களோ. அவள் சட்டென்று உயிர்ப் பெற்றது போன்று அவனை பின்னுக்கு தள்ளினாள். காரணம் விளங்காமலே அவளை பார்த்து கேட்டான்.

“ஏன்..?”

“வெட்கமாக இல்லை உங்களுக்கு?”

“புரியவில்லை. எதற்கு நான் வெட்கப்பட வேண்டும்?”

“இன்று தேதி என்ன?”

“என்ன.? ஜனவரி இருபது. அதற்கென்ன..?” 

“அதற்கென்னவா.? இன்று தானே உங்களுக்கு செல்வியுடன் திருமணம்.`

“திருமணமா.? எனக்கா.? யார் சொன்னது?”

“ஆமாம். உங்களுக்கு தான். செல்வி தான் சொன்னாள்.”

“ஓஹோ, அது தான் அம்மையார் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் தில்லிக்கு ஓடி வந்து 

ஒளிந்து கொண்டதா?”

“ஓடி வந்து ஒளிந்து கொள்ளவில்லை. எனக்கு லீவ் முடிந்து விட்டது. அது தான் திரும்பி விட்டேன்.”

“ம். அப்படியா. அது சரி, எங்களுக்கு கல்யாணம் என்று உன்னிடம் சொன்ன செல்வி உன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லையா?” கேலி இருந்தது அவன் குரலில்.

“ஏன் அழைக்காமல்.?”

“பின்னே வந்திருக்க வேண்டியது தானே”

“அது வந்து………….”

“அதான் வந்திருக்க வேண்டியது தானே…….! முடியாது. ஏனென்றால் எனக்கு செல்வியுடன் கல்யாணம் என்பதை உன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.”

அவன் உண்மையின் விளிம்பில் நின்று கேட்கவும் அவளுக்கு மறுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள். அவன் அவள் அருகில் வந்து அவள் முகவாயை பிடித்து கண்களுக்குள் ஊன்றி பார்த்தான். அவன் கண்களில் அதீத பரிவும் காதலும் நிரம்பி இருந்தது.

“பூனை கண்ணை மூடி கொண்டால் பூலோகம் இருண்டு விடுமாமா?. நீ என்னை விட்டு ஓடி வந்தால் மட்டும் நான் உன்னை அறிய மாட்டேனா?”

“என்ன தெரியும்?”

“நீ என்னை விரும்புவதை”

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே. நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொண்டால்  அதற்கு நான் பொறுப்பில்லை.”

“நான் கற்பனை செய்து கொண்டேன்..ம்ம்..!”

“ஆமாம்..” கெத்தாக சொன்னாள். 

அவன் தலையை ஆட்டி கொண்டான். “என்னை விரும்பாமல் தான் அன்று என் படுக்கையில் வந்து அமர்ந்தாயா?”

“ஏய், எவ்வளவு திமிர்..?” 

அவனை அடிக்க ஓங்கிய கையை பிடித்து இழுத்து அவளை தன்னுடன் இறுக்க அணைத்து அதே கையின் புறத்தில் முத்தமிட்டான். “நான் உன்னை காயபடுத்தவென்று இதை சொல்லவில்லை. உன்னை எனக்கு நன்றாக தெரியும் நிவேதி. நான் உன் கணவனாக இருந்த போது கூட உனக்கு விருப்பமில்லாமல் உன்னை தொட என்னை நீ அனுமதிக்கவில்லை. அப்படி பட்டவள் இன்று என்னை தொடுவதற்கு அனுமதித்தது நீ என்னை விரும்பியதால் அல்லவா.”

“ஆமாம். நான் உங்களை விரும்பினேன். அதனால் தான்..!” திடீரென்று நினைத்து கொண்டவளாக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தாள். “அது போகட்டும். உண்மையை சொல்லுங்கள். இன்று உங்களுக்கு செல்வியுடன் திருமணம் ஆச்சே.”

”அப்படி என்று செல்வி தானே சொன்னாள். நானில்லையே. நீ கடைசியாக என் அறையிலிருந்து ஓடிய போது அங்கே வந்த செல்வியிடம் அன்றே அப்பொழுதே உண்மையை சொன்னேனே. அதற்கு பிறகும் செல்வி உன்னிடம் அப்படி சொன்னதற்கு நான் பொறுப்பில்லை.”

“நீங்கள் செல்வியிடம் என்ன சொன்னீர்கள்?” தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது அவள் குரலில். 

அதை புரிந்து கொண்டவன் அவள் தலையை ஆசையுடன் ஒரு முட்டு முட்டி சொன்னான். “நிவேதிதா என் மனைவி என்று”

“நமக்கு தான் மணவிலக்கு ஆகி இருக்கிறதே”

“ஆனாலும் இன்னும் நீ தான் என் மனைவி.”

“நான் ஒப்பு கொள்ளாவிடில்?”

“அப்பவுமே. இந்த ஜென்மம் முழுவதுமே.  நீ தான் என் மனைவி”

“அப்படியா…!”

“பெண்களுக்கு மட்டும் தான் கற்பு நிலை உண்டா? ஆண்களுக்கும் கற்பு உண்டு நிவேதி. மஞ்சள் கயிற்றின் மகிமை என்று நான் சொன்ன போது நீ கேலி செய்தாயே. உனக்கு நான் கட்டிய மஞ்சள் கயிறு எனக்குமே வேலியாக இருந்து என்னை பாதுகாத்தது”

அவனுடைய பிடிவாதமான குரல் அதில் இருந்த உணர்வு அவளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.        

“அதனால் தான் உடனே கிளம்பி என்னை பார்க்க வந்தீர்களா?” கேலி இருந்தது அவள் கேள்வியில். இத்தனை நாட்களாக அவள் பட்ட மனவேதனை அவளுக்கு அல்லவா தெரியும். தான் கோபித்து கொண்டு வந்ததை வசதியாக மறந்து போயிருந்தாள் அவள்.

42

“உடனே கிளம்பி வரத்தான் நினைத்தேன். ஆனால் உனக்கே தெரியும் எனக்கு இஸ்ரேலில் அக்ரி கான்பிரேன்ஸ் இருந்தது என்று. அதை முடித்து விட்டு நேரே நான் இங்கே தான் வருகிறேன். ஊருக்கு கூட போகவில்லை”

நினைத்து கொண்டவளாக கேட்டாள். 

“நான் இங்கே இருக்கும் முகவரி யார் தந்தார்கள்?”

“வேறு யார்.? உன் வீட்டில் தான்.”

“அப்படியானால் என் வீட்டாருக்கு தெரியுமா நாம் பழகியது?”

“பழகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்களே அவர்கள் தானே.”

“இது என்ன புது கதை.?”

“ஹேய், உனக்கு பின்னால் என்னவெல்லாம் நடந்தது என்பது உனக்கு தெரியுமா?. நமக்கு எதிராக இருந்த செல்வி ஒருத்தியை தான் உனக்கு தெரியும். ஆனால் உனக்காக பார்த்து பார்த்து செய்த உன் வீட்டாரின் நடவடிக்கைகள் உனக்கு தெரியாது”

“அடப்பாவிகளா. ம். யாருக்கும் நம் விஷயம் தெரியாது என்று நினைத்திருந்தேனே.”

“அதற்கு தான் சொன்னேன். பூனை கண்ணை….”

“போதும். போதும். உடனே பழமொழி சொல்ல கிளம்பிடுவீங்ககளே. முதலில் இருந்து எல்லாவறையும் சொல்லுங்கள்”

“சொல்கிறேன். அதை இங்கே வந்து அருகில் அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்”

அப்போது அருளின் கைப்பேசி அழைத்தது.

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி. உனக்கென வாழ்கிறேன் நானடி. விழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி. உயிருடன் சாகிறேன் பாரடி.

“ஹல்லோ.”

“…….”

“ஆமாம். சரியாக கண்டு பிடித்து விட்டேன்”

“………………………..”

“பேசி கொண்டிருக்கிறோம். சரி அத்தை. ஆங். கேட்டதாக சொல்கிறேன்.”

“யார் உங்கள் அத்தையா?”

“இல்லை. என் மாமியார்”

முறைத்தாள்.“சரி மேல் கொண்டு சொல்லுங்கள்.”

அவன் கைவளைவில் நன்றாக தன்னை பொருத்தி கொண்டவள் கேட்டாள்.

“உன் சித்தப்பா வீட்டு நிச்சயதார்த்ததிற்கு வந்திருந்த உன் பெற்றோர் என்னை கண்டதும் அதிசயித்து போய் என்னிடமே உன்னை கரெக்ட் பண்ண சொல்லி சொன்னார்கள்.”

“உங்களை…! அப்படியா சொன்னார்கள்?” பொய் கோபத்துடன் அவனை அடிக்க செய்தாள்.

“லிட்ரலா அப்படி இல்லை. ஆனால் கிட்டத்தட்ட அப்படி தான்” என்று வாய் சுழித்து கண்களை சிமிட்டினான்.  

அவன் குறுகுறுத்தப் பார்வை அவளை என்னவோ செய்ய அவனிடமிருந்து நகர்ந்தாள். “உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்”

“எனக்கு என்ன எப்போது எதை எப்படி சாப்பிடணும்னு தெரியும்” என்று அவளை இழுத்து அணைத்து கொண்டான். 

என்ன இவன் இப்படி வெக்கம் கெட்டு பேசுகிறான் என்று அவனுக்கில்லாத நாணம் இவள் கொண்டாலும் அவனுடைய வலிய கரங்கள் அணைத்துக் கொள்ளவும் அதன் பாதுகாப்பை உணர்ந்து கொண்டவள் அதையே வேண்டவும் ஒரு நிமிடம் அவன் கரங்களில் நெகிழந்தவள் அதை மறைத்து, “கதை சொல்லிக் கொண்டிருந்தவர் பேச்சை மாற்றுவானேன்?” என்றாள். 

“ஹேய் நான் சொல்வது கதையா?”

“சறி. உண்மை தான். நான் நம்பரேன். சொல்லுங்க”

“உன்னை ஊருக்கு வரவழைத்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்றேன். அதனால் தான் நீ வந்ததும் உன்னை திருமண சடங்குகளில் அதிகமாக பங்கேற்க விடாமல் வெளியே கோயில் குளம் பாறை என்று சுற்ற அனுமதித்தார்கள். அதை எனக்கு தெரியப்படுத்தவும் செய்தார்கள். அதற்கு என்னிடம் எப்பவும் விசுவாசமாக இருக்கும் ரம்யா உடந்தை. நாம் தனித்து இருக்கும் சந்தர்பங்களை உண்டாக்கி கொடுத்தார்கள்.”

“ஓ, அப்படியா, எனக்கு இப்போது புரிகிறது. ரம்யா சரியாக நம்மை தனிமையில் விட்டு விட்டு எங்கேனும் போய் விடுவது ஏன் என்று.”

“இப்போது தான் புரிந்ததா?”

“சரி. எனக்கொரு சந்தேகம். எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“அப்படியானால் நீ ஒப்பு கொள்கிறாய் நீ என்னை விரும்புவது உண்மை தான் என்று”

“ஒப்பு கொள்கிறேன். ஒப்பு கொள்கிறேன்”

“ஒருநாள் இரவில் கனவு கண்டு அழுதியே அப்போதே தெரியும்.”

“அதையும் என் அம்மா சொல்லி விட்டார்களா?”

‘அதை மட்டுமா சொன்னார்கள். கடைசி நாள் நீ அழுது கொண்டே இருந்ததையும் அந்த அழுகையுடனே தில்லிக்கு கிளம்பியதையும் சொன்னார்கள். மிகவும் மனசு ஒடிந்து போகிறாள் என்று வேதனைப்  பட்டார்கள். இப்போது தான் தெரிகிறது அதெல்லாம் செல்வியின் உபயம் என்று”

“உண்மை தான். எல்லாம் முடிந்து போனது போல வெறுமையுடன் தான் கிளம்பினேன். நீங்கள் புலம்பியதை போலவே தோற்று போய் விட்டேன் என்று புலம்பி கொண்டே தான் இருந்தேன்.”

“தோற்று போவதை போன்ற வலி வேறு எதுவுமே இல்லை” உணர்ந்து அனுபவித்து சொன்னவன் 

திடீரென்று ஞாபகம் வந்தவனாய் மிகுந்த கோவத்துடனே கேட்டான். “அன்று ஆனமட்டும் கெஞ்சினேன் ஒரு நிமிடம் நின்று நான் சொல்வதை கேட்டு செல் என்று. நான் கெஞ்சியது உன் மண்டையில் ஏறவில்லை. ஆனால் செல்வி சொன்னதை மட்டும் நம்பினாய்.”

“சாரி.”

“ம்.” அவளை மீண்டும் இறுக்கி கொண்டான்.

“இப்போது கேட்கிறேன் சொல்லுங்கள். அந்த புகைப்படத்தை ஏன் அங்கே மாட்டி இருக்கிறீர்கள்?”

இதற்கு உடனே பதில் சொல்லவில்லை அவன். அவள் முகத்தை கைகளில் ஏந்தி சிந்தனையை பின்னோக்கி செலுத்தி அந்த சிந்தனையின் போதையில் கண்கள் செருக சொன்னான். 

“ஒருநாள் ஒரு பெண்ணை பெண் பார்க்க போய் இருந்தேன். அவள் மாடியிலிருந்து இறங்கி வந்தாள். நீல நிற ஜீன்ஸில் வெள்ளை குர்த்தா போட்டு வலது கையில் கைபேசியை பிடித்து கொண்டு மிகுந்த ஒய்யாரமாக. அப்படியே நீல வானமே இறங்கி வந்தது போலிருந்தது. நான் சோபாவில் அமர்ந்து இருந்தேன். அவள் என்னை பார்க்கவே இல்லை. என் மனது அவளை கண்ட மாத்திரத்தில் அவள் வசம் ஆயிற்று.  ஆனால் நான் கண்டு மனம் இழந்த அந்த நீல வானம் என் வசப்படுமா என்று ஏங்கி இருந்தேன். அதனால் தான் அந்த படத்தை அங்கே மாட்டி இருக்கிறேன். இந்த மூன்று வருட காலங்களில் இன்றைய இந்த நிலையை, உயர்வை அடைய நான் எடுத்த முயற்சியில் நான் தளர்ந்து போகும் போதெல்லாம் என்னை தட்டி எழுப்பி என் இலட்சியத்தை நோக்கி உந்தும் சக்தியே அந்த படம் தான்.”

அவன் குரல் அவளுள் ஒரு உணர்ச்சி கொந்தளிப்பையே உண்டாக்கி இருந்தது. அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்டாள். மிகுந்த காதலுடன் கேட்டாள். அவளுடைய கரம் தன்னிச்சையாக அவன் முகத்தை வருடி கொண்டிருந்தது.

“உங்கள் நீல வானம் வசப்பட்டு விட்டதா?”

அருள்மொழி வர்மன் மிகுந்த காதலுடன் நிவேதிதாவின் முகத்தை நிமிர்த்தி கண்களில் மென்மையாக முத்தமிட்டு சொன்னான்.

“எந்த நீல வானத்தை கண்டு நான் என் வசம் இழந்து நின்றேனோ அந்த வானம் இன்று எந்தன் வசம்”

அந்த வானம் அவன் வசம் ஆன பின்பு அங்கே வேறு வசனங்களுக்கு தான் இடமேது?

சுபம்.

-G. Shyamala Gopu

கதைகள் வாசிக்கும் ரீடர்ஸ் உங்க கருத்தை விமர்சனத்தை, தளத்தில் முடிவுற்ற விமர்சன பகுதியிலும், நம் தளத்தின் முகநூல் குழுவிலும் பகிரலாம்.

கீப் சப்போர்டிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *