Skip to content
Home » Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-44

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-44

அகரவரிசையில் இருந்த அந்த ப்ளேலிஸ்ட்டைத் திருத்தி, ‘custom order’ என்று மாற்றியபோது, பாடல்கள் வேறொரு விசேஷமான வரிசையில் அடுக்கப்பட்டன. மூச்சை அடக்கிக்கொண்டு அதுவே விக்கி அடுக்கிய வரிசையாக இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டு, பாடல்களை நன்றாக உற்றுப் பார்த்தாள் வானதி. அதில் முதல் எழுத்துக்களை எல்லாம் எடுத்துத் தனியாக எழுதிப்பார்த்தாள். அதிலும் ஒன்றும் கிடைக்கவில்லை.

“H M B T T.. இதுல எதுவும் புரியலையே..”

திவாகர் அப்போதும் எரிச்சலாகவே இருந்தான்.

“இதெல்லாம் வேஸ்ட் வானி.. ஏதோ random orderல இருக்கற பாட்டுக்களை வச்சு என்ன கண்டுபுடிக்கப் போற?”

“கன்னாபின்னான்னு இல்ல, இதுல ஏதோ மெசேஜ் இருக்கு. விக்கிக்கு, வயலுக்கு அடுத்ததா பிடிச்சது அவனோட இந்த பாட்டு கலெக்சன் தான். இதுல கண்டிப்பா அவன் எதையோ வச்சிருப்பான். என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு.”

அந்தப் பாடல்களை ஆரம்பத்திலிருந்து பாடவிட்டாள் அவள். முதல் பாடல் அழகான மெல்லிசையில் தொடங்கி,

வேறே கொத்த பூமிபை உன்னானா..

ஏதோ விந்த்த ராகமே வின்னானா..” எனப் பாடிடத் தொடங்கியது. அது முடிந்ததும், சற்றே வித்தியாசமான கிட்டார் இசையுடன்,

மதுரமே ஈக்ஷனமே.. செலீ..” என்று பெண்குரலில் பாடியது.

ஏதோ கிடைத்துவிட்டதைப் போல விரலை சொடக்கினாள் அவள். கேள்வியாக ஏறிட்டான் அவன்.

“பாட்டோட முதல் எழுத்தையெல்லாம் சேர்த்தோம்ல, இப்ப பேரோட எழுத்தை சேர்த்தாம, பாட்டு வரியோட முதலெழுத்தை எல்லாம் சேர்த்திப் பாக்கலாம்!!”

மறுபடி ஒரு தாளில் ‘V M..’ என்று அவள் எழுதப்போக, தடுத்து, “இங்கிலீஷ்ல இல்ல, தமிழ்ல எழுதிப்பாரு” என்றான் அவன். அவள் தலையை அசைத்து சம்மதித்தாள்.

‘வே ம ப த த ஊ ர.. வி ன ஞா னி’

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவள் கையிலிருந்த பென்சிலை வாங்கியவன் தாளில் சில திருத்தங்கள் செய்தான். புள்ளிகளும் கொக்கிகளும் இட்ட பின்னர் மாறிய எழுத்துக்களை இருவருமே திகைப்போடு பார்த்தனர்.

‘வே ம் ப த் தூ ர் வி ஞ் ஞா னி’

“வாவ் வானி! நீ ஒரு ஜீனியஸ்!!”

அவன் அப்படியே அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு ஆர்ப்பரிக்க, அதிர்விலிருந்து மீளாமல் அவளோ அந்தத் தாளைப் பார்த்தபடியே நின்றாள்.

“இது.. எதுவா வேணா இருக்கலாம்ல? பாஸ்வேர்ட்? லாக்கர் ஐடி? அவனோட ஆல்டர் ப்ரொஃபைல்?”

காற்றுப் போல வார்த்தைகள் ஓசையின்றி வந்தது. கண்கள் கலங்கியிருந்தன. திவாகருக்கே இது சற்றே அதிர்ச்சிகரமானதாகத் தான் இருந்தது. விக்கி எப்போதும் புத்திக்கூர்மை உள்ளவன்தான். ஆனால் இத்தனை நுட்பமாக அவன் தங்களுக்கு ஏதோ செய்தியை விட்டுச் சென்றிருப்பான் என்பதை நம்பக் கடினமாக இருந்தது.

இருவரும் ஒரு உத்வேகத்தில் வேகமாக வெளியே கிளம்ப, மீனாட்சி ஓடிவந்து தடுத்தார்.

“ராத்திரி வேளைல, எங்க இப்படி கிளம்பிட்டீங்க? அப்பா இப்ப வந்துடுவாரு, ஒழுங்கா உள்ள போங்க ரெண்டு பேரும்!! எதுவா இருந்தாலும் நாளைக்கு விசேஷம் முடிஞ்சு பாத்துக்கலாம்.”

“அம்மா ப்ளீஸ்.. முக்கியமான விஷயம்மா.”

“உங்க அப்பாகிட்ட கேட்டுக்கிட்டு எங்கவேணா போடா.”

அந்த அஸ்திரம் வேலை செய்தது. இருவரும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் வந்தனர்.

சுதாகர் எழுந்துவந்து, “என்னாச்சுடா? இவ்வளவு நேரம் வெளிய சுத்தனது பத்தலையா? மறுபடியும் அவுட்டிங்கா? எங்க ரெண்டு பேரையும் பாத்தாக் கூட உங்களுக்கு பாவமா இல்லையா? எங்க கண்ணு முன்னாடியே இப்படி சுத்தறீங்களே..” என்றான் கிண்டலாக.

ஆனால் இருவருமே சிரிக்காமல் சோர்ந்த முகத்தோடு நிற்பதைக் கண்டதும் அவன் கரிசனமானான்.

“என்ன ஆச்சு?”

நடுங்கிய குரலில் வானதி சொன்னாள்.

“விக்கியோட ப்ளேலிஸ்ட்ல இருந்து ஒரு பெரிய க்ளூ கிடைச்சிருக்கு. எனக்குத் தெரிஞ்சு, இந்த பஸிலோட, அந்த முக்கியமான பீஸ் இதுவாத்தான் இருக்க முடியும். ஆதிகேசவனுக்கும், நம்ம குடும்பத்துக்கும், வேம்பத்தூர் நிலத்துக்கும் என்ன சம்பந்தம்னு கண்டுபிடிக்க, அண்ணன் விட்டுட்டுப் போன இந்த க்ளூவை சரியான எடத்துல பொருத்தணும். நாங்க உடனே வேம்பத்தூர் போயாகணும்..”

சுதாகர் சற்றே வியந்தாலும், சமனான முகத்துடன், “அது எங்கயும் ஓடிப் போகப் போறதில்லையே… வானி, இன்னிக்கு ஒரு நைட் தான். நாளைக்கு பங்ஷன் முடிஞ்சதும் போலாம். அம்மாவும் அப்பாவும் இந்த விசேஷத்துக்காக நிறைய பண்ணியிருக்காங்க. அட்லீஸ்ட் நீங்க ரெண்டு பேரும், கொஞ்சமாச்சும் அதுல ஈடுபாடு காட்டினா நல்லா இருக்கும். அப்பாவோட மரியாதை, கவுரவம் சம்பந்தப்பட்டது இந்த வரவேற்பு. உங்க ரெண்டுபேரோட கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடாம விட்டதை, இங்க ஈடு செய்ய பாக்கறார் அப்பா. இதுவும் நம்ம வீட்டுல இன்னொரு கல்யாணம் மாதிரித் தான். நீங்க அதுல இப்படி ஒட்டாம இருந்நா எப்படி?” என்றான்.

திவாகர் புரிந்துகொண்டு தலையசைக்க, வானியும் தலைகுனிந்தாள்.

“அத்தை.. நைட் டிபனுக்கு எதாவது ஹெல்ப் வேணுமா?” எனக் கேட்டபடி கிச்சனுக்குள் செல்பவளை சந்தோஷமாகப் பார்த்தான் சுதாகர். திவாகரிடம் திரும்பி, “ஷெர்லாக் வேலையெல்லாம் நாளைக்குப் பாக்கலாம். இப்ப போயி, மாப்பிள்ளை மாதிரி இரு!” என்று அனுப்பிவைத்தான்.

________________________________________

வீட்டை ஒட்டியிருந்த பெரிய மண்டபம் ஒன்றில் வானதி-திவாகர் வரவேற்பு வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹரிணி வருவோற்கெல்லாம் சந்தனம் தந்து பன்னீர் தெளித்துக்கொண்டிருக்க, வேதாசலமும் மீனாட்சியும் கரம்கூப்பி அனைவரையும் வரவேற்றனர்.

சொந்தபந்தங்கள் வெகுசிலரே என்றாலும், வேதாசலத்தின் தொழில் சம்பந்தமான நண்பர்கள், பிரமுகர்கள் என நிறையவே ஆட்கள் வந்திருந்தனர்.

அடர்பச்சை நிறத்தில் மெல்லிய பட்டுப் புடவை அணிந்து, அளவான அலங்காரத்தோடு அவள் வர, அவளுக்குக் குறையாத அழகோடு பட்டு வேட்டி சட்டையில் அவனும் மிடுக்காக வந்து நிற்க, பானுவும் மீனாட்சியும் இவர்களது ஜோடிப் பொருத்தத்துக்கு திருஷ்டி கழித்தனர்.

சம்பிரதாயமாக ஒரு தங்கச் சங்கிலியை வானதிக்கு அணிவிக்கச் செய்தனர் திவாகரை. அதன்பின் மேடையில் தம்பதி சமேதராக இருவரும் நின்று, வந்திருந்தவர்களுடன் கை குலுக்கிப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளத் தொடங்கினர்.

மனம் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது வானதிக்கு. ஆயினும் முகத்தில் எதையும் காட்டாமல் புன்னகையுடனே இருந்தாள் அவள். திவாகர் அவ்வப்போது சலித்துக்கொண்டாலும், அடிக்கடி சுதாகர் மேடைக்கு வந்து சிரிக்கும்படி நினைவூட்டிக்கொண்டே இருந்தான்.

மாலை வரை இதுவே தொடர, நான்கு மணிக்கு ஒருவழியாக விசேஷத்தை முடித்துவிட்டு அயர்ச்சியாக வீடுதிரும்பினர் அனைவரும். உடை மாற்றிவிட்டு வானதி வந்தபோது, திவாகர் அலுப்பாக சோபாவில் படுத்திருந்தான்.

“சரி, பங்ஷன் முடிஞ்சிடுச்சு, இப்ப கிளம்பலாமா?”

வானதி சற்றே தயக்கமாகக் கேட்க, திவாகர் தலையசைத்துவிட்டு எழுந்தான்.

“உனக்கு டையர்டா இருந்தா, நீ தூங்கு திவா.. நான் கார்ல வேணா போயிட்டு வரேன். விக்கியோட கம்ப்யூட்டர்ல தேடணும். அப்பறம் ஸ்டேஷனுக்குப் போயி அவனோட செல்போன்ல எதாவது பாஸ்வர்ட் போட்ட பைல் இருக்கான்னு தேடணும்.”

“ஒண்ணும் பிரச்சினையில்ல, வா போலாம்.”

இருவரும் கூடத்துக்கு வந்தபோது, சுதாகர் அங்கே அமர்ந்திருக்க, அவர்கள் நோக்கம் புரிந்து யோசனையான பார்வை பார்த்தான் அவன். வானதியும் திவாகரும் தயக்கமாக நின்றனர்.

“சரி, நீங்க கெளம்புங்க.. அப்பாகிட்ட நான் சொல்லிக்கறேன்.”

அவனை நன்றியாகப் பார்த்துவிட்டு இருவரும் கிளம்ப எத்தனிக்க, அப்போது திடீரென, “தம்பி, உங்க ரெண்டு பேரையும் பாக்க வெளியூர்ல இருந்து யாரோ வந்திருக்காங்க.” எனக் குரல் கொடுத்தார் வேதாசலம்.

சோர்வாக, எரிச்சலாக இருந்தாலும், தந்தையின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து திவாகர் வானதியை அழைத்துக்கொண்டு வெளியே முன்னறைக்கு வந்தான்.

அங்கே வந்திருந்தவளைக் கண்டு இருவருமே அதிசயித்தனர்.

“ரூபா.. நீ எங்க.. இங்க?”

திவாகர் வியப்பாகக் கேட்க, அவளோ மெல்லிய சிரிப்போடு வானதியிடம் வந்து அன்பாக அணைத்துக்கொண்டாள்.

“கன்கிராட்ஸ் ஃபார் தி ரிசெப்ஷன் வானதி.. உங்க மண வாழ்க்கை சந்தோஷமா அமைய வாழ்த்துக்கள்.”

திவாகருக்கும் கை குலுக்கி வாழ்த்துச் சொல்லிவிட்டு, தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தாள் அவள். வளையல்கள் வைக்கும் மரப் பெட்டி போல இருந்தது அது.

“உங்க திருமணப் பரிசா இதை வச்சுக்கங்க. கண்டிப்பா அது உங்களோட பெஸ்ட் கிப்ட்டா இருக்கும். வரேன்.”

அதைத் தந்துவிட்டு இருவரையும் பார்த்துத் தலையசைத்துவிட்டு அவள் கிளம்ப முற்பட, எதுவும் செய்யத் தோன்றாமல் இருவரும் ஒருவித அதிசயத்துடனே நின்றனர். அவள் சென்றதும் ஹரிணி ஓடிவந்து, “இதென்ன, குட்டி டப்பாவா இருக்கு? எதாவது மோதிரம், கம்மல்னு இருக்குமோ.. அதுசரி, யாரு அண்ணா அது?” என்றவாறு அதை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினாள். வானதியும் சற்றே ஆர்வத்துடன் அதை எதிர்நோக்கினாள்.

உள்ளிருந்து அவள் எடுத்ததை மூவருமே வினோதமாகப் பார்த்தனர்.

4 thoughts on “Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-44”

  1. I think .. ரூபா….ஏதோ ஒன்னை கொடுத்துட்டு போய் இருக்கா….😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *