Skip to content
Share:
Notifications
Clear all

ஹெலன் கெல்லர்

1 Posts
1 Users
0 Reactions
61 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 556
Member Admin
Topic starter
 

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்க பெண்மணி. அமெரிக்காவில் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார்

பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது. அப்பொழுது இவர் கண்பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். 

இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது. ஹெலன் கெல்லரின் பெற்றோர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தார்கள். 

அலெக்சாண்டர்,அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முதலில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.

கிரகாம்பெல் ஆன்சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகள் ஹெலன்கெல்லருக்கு சல்லிவன் உதவினார். 

பிறர் பேசும் பொழுது அவர்உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில்  முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், ஜெர்மன், லத்தீனம் என பல்வேறு மொழிகளைக் கற்றார்.

நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசி வரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல விரும்பினார். 1900 இல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது.

ஆல் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.

ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார்.[2] தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவைதவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.

அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.

1905 இல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். 

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. 

1914 இல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராகவும் வந்து சேர்ந்தார். ஹெலன் கெல்லர் 1961 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு ஹெலன் கெல்லர் ஒரு முன்உதாரணம். 

தொகுக்கப்பட்ட பகுதி. 


 
Posted : October 6, 2025 7:29 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved