👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 25

1 Posts
1 Users
0 Reactions
117 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 25

 

         தன் மகள் கொடூரமான முறையில் இறந்ததை நினைத்தும், அவள் இரண்டு நாட்கள் பட்ட வேதனையை நினைத்தும் மனம் துடித்த உமா, தன்னுள் நினைத்து நினைத்து சித்த பிரம்மை பிடித்தது போல் அமர்ந்து விட்டார். 

 

      தந்தையையும் மகளையும் ஒரே சமயத்தில் இழந்த தன் தந்தையை பார்ப்பதா, மகளின் மரணத்தில் மனம் உடைந்து நிற்கும் தன் தாயைப் பார்ப்பதா என்று ஒன்றும் புரியாமல் தவித்தான் தமிழ் வேந்தன்.

 

      அந்த சமயத்தில் அவனையும் அவன் குடும்பத்தையும் தாங்கியது உமாவின் பெற்றோரும் ஊர் மக்களுமே‌. அன்றுதான் உணர்ந்தார் சங்கரேஷ்வர் ஜாதி கௌரவம் என்று இத்தனை நாள் யாரையெல்லாம் அலட்சியப்படுத்தி ஒதுக்கினாரோ, அவர்கள் எல்லாம் தங்களுக்காக பாடுபட்டதை நினைத்து, அவனுக்குள் கொஞ்சம் மீதி இருந்த அகந்தையும் மொத்தமாக அழிந்தது. 

 

      இறந்தவர்களை நினைத்து கவலைப்படாமல் தன் மனைவியை காக்க வேண்டி அவளுடன் பேசப்பேச அவளோ தன் தோழியை நினைத்து அழ ஆரம்பித்து விட்டாள். 

 

      அதன் பிறகுதான் தமிழ்  வேந்தனுக்கு தன் தந்தைக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் தன் தாய் அவரின் மீது அதிக பாசம் வைத்துள்ளதும் தெரிய, அவரை சந்தித்தால் தன் தாய் தெளிவாக இருப்பார் என்று உணர்ந்து அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

 

      அவனது தேடுதல் ஒருபுறம் தொடர, தன் தாய் சிறிது மனம் தெளிந்து சகஜமாக மாறியதில் மகிழ்ந்து தன் படிப்பை தொடர்ந்தான். தன் தேடுதலின் பயனாக தன் அத்தையின் குடும்பம் சென்னையில் இருப்பது தெரிய வந்தது.

 

      அவர்கள் இருக்கும் இடம் தெரிந்த  நாளிலிருந்து அவர்களை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்து விட்டான். தான் அவர்களைத் தேடியது போல் அவர்கள் தங்களை தேடவில்லை என்பதை உணர்ந்தான். ஆகவே நேரடியாக அவர்களுடன் தொடர்பு கொள்ள தயங்கினான்.

 

      ருத்ரா கல்லூரிக்குச் சென்றதும் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தான். ருத்ராவை பார்த்த நாள் முதலே தன் அத்தையின் மகள் என்ற உரிமை அவன் மனதினுள் தோன்ற, கண்டதும் காதல் உண்டானது.

 

 

        ஆகவே அவளின் பிறந்த நாளன்று என்னுடைய காதலை அவளுக்கு தெரிவித்தேன் அத்தை" என்று, தன் தங்கையின் மரணம் பற்றிய பேச்சால் கண் கலங்கி கவலையாக அமர்ந்து இருந்த மகாதேவியை சகஜமாக மாற்றும் பொருட்டு கூறினான் தமிழ் வேந்தன். 

 

       இவ்வளவு நேரம் தன் அண்ணன் குடும்பம் பட்ட கஷ்டத்தை கேட்டுக் கொண்டிருந்த மகாதேவி, தன் மருமகன் தன் மகளை விரும்புவதை தன்னிடமே கூறியதில் புன்னகைத்துக் கொண்டே அவன் காதை திருகி, "எவ்வளவு தைரியம் இருந்தால் என் பெண்ணை காதலிப்பதாக என்னிடமே கூறுவாய்" என்றார்‌. 

 

         அதற்கு அவனும் சிரித்துக்கொண்டே, "உங்க பொண்ண காதலிப்பதை உங்களிடம் சொல்லாமல் ஊர்ல உள்ளவங்க கிட்ட எல்லாம் போய் சொல்லி, போஸ்டர் அடித்தா ஒட்டணும்?" என்று சினிமா டயலாக் விட்டான். 

 

         அந்த இடம் சகஜமாக மாற சதாசிவனும் அவனின் பேச்சில் புன்னகைத்து கொண்டு அவனின் தோளை தட்டி, "இப்பொழுது உன் அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடன் பேசலாமா?" என்று கேட்டார். 

 

"இருவரும் நலமாக இருக்காங்க. முதலில் நான் உங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லி விடுகிறேன். அதன் பிறகு சந்திக்கலாம்" என்றான்.  

 

அப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் கிளம்புவதாக கூறினான் தமிழ் வேந்தன். 

 

"முதன் முதலில் எங்க வீட்டுக்கு வந்து இருக்கிறாய். சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும்" என்று கூறிய மகாதேவி, உணவு தயாரிக்க சென்றார்.  

 

உணவு தயாரானதும் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டனர். உணவிற்குப்பின் கிளம்பினான் தமிழ் வேந்தன். 

 

அப்போது தான் ஊரில் இருந்து வீட்டிற்கு வந்தது ஐஸ்வர்யாவின் குடும்பம். அவர்களை கண்டதும் மகாதேவி ஐஸ்வர்யாவின் தாய் தந்தையரிடம் இதுதான் என் அண்ணன் மகன் என்று தமிழ் வேந்தனை அறிமுகப்படுத்தினார்.  

 

தமிழ் வேந்தனை அங்கு கண்டதும் அதிர்ந்து நின்ற ஐஸ்வரியா, அவன் ருத்ராவின் மாமன் மகன் என்பதில் மேலும் அதிர்ச்சி அடைந்து, 'ஆமாவா?' என்று ருத்ராவை பார்க்க, ருத்ராவும் 'ஆம்' என்றவாறு தலையை ஆட்டினாள். 

 

அதன் பிறகு சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு கிளம்பினான் தமிழ் வேந்தன். 

 

அவர்கள் அனைவரும் அவரவர் இருப்பிடம் சொல்ல, உள்ளமெல்லாம் மகிழ்ச்சியுடன் ருத்ராவும் படுக்கைக்கு சென்றாள்.  ஏதோ மனம் மிகவும் லேசாக இருப்பது போல் ஒரு உணர்வு. படுத்ததும் தூக்கத்திற்கு சென்று விட்டாள். 

 

அடர்ந்த கானகம். தன் தோழிகளுடன் வேகமாக அக்கானகத்தினுள் சென்று கொண்டிருக்கும் ருத்ராவின் முன் திடீரென்று குதித்து நின்றான் ஓர் ஆடவன். 

 

திடீரென்று தன் முன் குதித்து நிற்கும் ஆணை எதிர்க்கும் பொருட்டு அனிச்சையாக அவள் கை இடையில் இருக்கும் வாளை உருவி அவனை தாக்க, அதைவிட வேகமாக அவன் அவளை வாள் கொண்டு தடுத்தான். தன்னையே தடுக்கும் ஆணை வியந்து பார்த்து தன் வாளை சுழற்ற, அவளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அவனும் வாள் போர் புரிந்தான். 

 

இருவரும் சம பலத்துடன் வாள் வைத்து விளையாடிக் கொண்டிருக்க அந்த கானகத்தில் கிளிங்  கிளிங்  என்ற வாள் மோதும் சத்தம் மட்டும் கேட்டது. தோழிகள் மிரண்டு அமைதியாய் ஒதுங்கி நிற்க ருத்ராவின் கண்கள் தன்னை எதிர்த்து போரிடும் ஆடவனை அளவெடுக்க ஆரம்பித்தது. 

 

        தோள் வரை வளர்ந்த கூந்தல் அவனின் ஒவ்வொரு அசைவிற்கும்  நடனமாட, ஆறடிக்கு மேல் உயரமாக இருப்பவனின் அசைவுகள் ஒவ்வொன்றும் வெகு சாதாரணமாகவே அவளின் வாள் வீச்சை தடுத்துக் கொண்டு இருந்தது. 

 

       அதில் அவள் வியந்து ஒரு கனம் தடுமாற, அந்த கன நேரத்தில் அவள் வாளை தட்டிப் பறித்தான். தன் கையில் இருந்த வாள் தவறியதில் அதிர்ந்து அவ்வாடவனை காண, தமிழ் வேந்தன் அவள் கழுத்தில் வாள் வைத்திருந்தான்.  

 

        நீங்களா?  என்று விழித்து எழுந்து அமர்ந்தாள். ச்சே கனவு. என்ன இது எப்ப பார்த்தாலும் இதே மாதிரி கனவு வருதே என்று யோசித்தபடி நேரம் பார்க்க, மணி ஆறு ஆகி இருந்தது. இனி எங்கே தூங்க என்று எழுந்து கிளம்ப ஆரம்பித்தாள். 

 

       குளித்து முடித்து தயாராகி, ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றாள்.  அப்போது தான் எழுந்து இருந்த தன் தோழியிடம் நேற்று தமிழ் வேந்தன் தங்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அனைத்தையும் கூறினாள்.

 

        அனைத்தையும் கேட்ட ஐஸ்வர்யா தோழியின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து மகிழ்ந்து, "அதெல்லாம் சரி. உன் முகம் இவ்வளவு ப்ரைட்டா இருக்குதே என்ன காரணம் ஏதாவது சம்திங் சம்திங்" என்றாள் சிரித்துக்கொண்டே.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 8, 2025 4:47 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved