ருத்ரமாதேவி - 33
அத்தியாயம் 33
உமையாள் கருவுற்ற செய்தி கேட்டு அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அனைவரும் உமையாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.
தன் மருமகள் கருவுற்றதில் மிகவும் மகிழ்ந்து போனார் சகாதேவனின் தாய்.
அவர் மனதில் இனி ராஜ்யமே என் கையில் தான் என்ற நினைப்பு உருவாகியது. ஆரம்பத்திலே தலைகனம் மிகுந்து இருந்தவர். இப்பொழுது சொல்லவா வேண்டும். தன் தலை மேல் கிரீடமே வந்து அமர்ந்தது போல் மிகவும் மகிழ்ந்து போனார். சேவகர்கள் முதற்கொண்டு சேனாதிபதி வரை அவரது அதிகாரங்கள் தூள் பறந்தது. இதை அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தனர் பெரியவர்களும் மகா தேவனும்.
தன் கட்டளையை நிறைவேற்ற சேவகர்கள் பலர் இருந்தாலும் தன் மருமகளுக்கு உரிய சின்ன சின்ன வேலைகளை செய்ய மயூரா தேவியை ஏவினார். மயூராவும் மனதில் எந்த விகல்பமும் இல்லாமல் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு என்னென்ன தேவை என்று உணர்ந்து, தன் அண்ணன் மனைவியை எவ்வாறு கவனித்துக் கொண்டார்களோ அப்படியே தன் கணவனின் தம்பியின் மனைவியையும் கவனித்துக் கொண்டாள்.
அவள் பாசமாக உமையாளை கவனித்துக் கொள்ள உமையாளும் அவள் மாமியாரும் அவளை தங்கள் அடிமையாகவே பாவித்தனர்.
மயூரா தேவியை அவர்கள் நடத்தும் விதத்தை உணர்ந்த மகாதேவனின் தாய் மிகவும் வருந்தினார். அவர் மயூராவை அழைத்து, "நீ ஏன் உமையாளுக்கு வேலை செய்கிறாய்? அவள் வேலையை அவளே பார்த்தால்தானே குழந்தை பிறப்பு சுலபமாக இருக்கும்" என்று இலை மறை காயாக அவளுக்கு வேலை செய்ய வேண்டாம் என்பதை தெரிவிக்க,
அவளோ, "இல்லை அத்தை எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் மாதங்கி அண்ணி எப்படியோ அப்படித்தான் அவளை நானும் பார்க்கிறேன். மேலும் என் கணவரின் அன்பு தம்பியின் குழந்தையை தாங்குபவள் அல்லவா" என்று புன்னகையுடன் கூறினார்.
மயூரா தன் மருமகளுக்கு செய்யும் வேலைகளை விரும்பியே செய்கிறாள். அதில் அவள் எந்த துன்பமும் எந்த வருத்தமும் அடையவில்லை என்பது உமையாள் மற்றும் சகா தேவனின் தாய்க்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. எப்படியாவது அவளை துன்புறுத்த வேண்டும் என்று நினைத்து இப்பொழுது எல்லாம் உமையாளின் அறைக்கு வருபவளை வார்த்தைகளால் பேசி துன்புறுத்த தொடங்கினார்கள்.
முதலில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த மயூரா, நாட்கள் நகர நகர அவர்கள் பேச்சின் வீரியம் அதிகரிப்பதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு தனக்கு குழந்தையே பிறக்காது என்ற எண்ணம் அவளுள் தோன்றும்படி செய்து விட்டனர் உமையாளும் அவளின் மாமியாரும்.
உனக்கு குழந்தை பிறக்காது. ஆகவே என் மகன் வாழ்க்கையில் இருந்து விலகினால், அவன் வேறு ஒரு நல்ல பெண்ணை மணந்து குழந்தையும் குட்டியுமாக இருப்பான் என்று நீலி கண்ணீர் வடித்தார்.
அவரின் கூற்றில் இருப்பது உண்மை என்று நம்பி தன் கணவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தாள் மயூரா.
மனைவியின் திடீர் விலகல் எதற்கு என்று தெரியாமல் குழம்பிய மகாதேவனின் கால்கள் அரண்மனை வைத்திய கூடத்தை அடைந்தது. அங்கு இருந்த தலைமை வைத்தியரை அணுகி, "என்ன வைத்தியரே, துண்டிக்கப்பட்ட அங்கங்களை மீண்டும் தேகத்தில் பொருத்தி செயல் பட வைக்கும் திறமை வாய்ந்த வைத்தியரான உங்களுக்கு என் மனைவியின் வயிற்றில் கரு உருவாகாமல் இருக்கும் காரணம் இன்னும் தெரியவில்லையா?" என்றான் வருத்தமாக.
உண்மை தான் அரசே. வெட்டப்பட்ட உடல் அங்கத்தை மீண்டும் உடலில் பொருத்தி இயங்க வைக்கும் திறமை வாய்ந்த வேங்கை நாட்டின் வைத்தியத்தை கண்டு அண்டை நாடுகளும் மிரண்டு தான் உள்ளார்கள். அப்படி இருக்கையில், யாரோ செய்த சூழ்ச்சியால் மகாராணியின் கருப்பை அடைபட்டுள்ளது. மூலிகையின் உதவியால் ஒவ்வொரு முறை சரிப்படுத்தினாலும் அவர்களின் உணவில் கலக்கப்படும் மருந்தால் மீண்டும் மீண்டும் கருப்பை பலகீனம் அடைகிறது. என்ன செய்வது. மகாராணி இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
சிறிது நாட்கள் ஓய்வாக வேறு எங்காவது சென்று இருந்து விட்டு வாருங்கள் இடம் மாற்றம் ஏதாவது நல்லது செய்கின்றதா என்பதை பார்ப்போம் என்றார் வைத்தியர்.
நாட்கள் கடக்க பிரசவ காலம் நெருங்க உமையாளும் தன் தாய் நாடு சென்றுவிட்டாள். இப்படியே நாட்கள் கடக்க மயூரா தன் கணவனை விட்டு விலகி தன் அத்தையுடன் அதிக நேரம் இருக்க ஆரம்பித்து விட்டாள்.
மகாதேவன் தன் மனைவியிடம் எவ்வளவு பேசி, புரிய வைக்க முயற்சித்தாலும், அவள், "நீங்கள் வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறி தன் அத்தை மடியில் படுத்துக்கொண்டாள்.
உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகம்பனன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஐந்தாம் மாதம் வேங்கை நாட்டிற்கு அழைத்து வந்தார்கள். வேங்கை நாடு முழுவதும் விழா கோலம் கொண்டது.
குழந்தையுடன் அரண்மனைக்கு வந்த உமையாளை ஆரத்தி எடுத்து வரவேற்க தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் மயூரா.
நீண்ட நாட்கள் கழித்து அன்று தான் அவளை காண்கின்றான் மகாதேவன். கண்களைச் சுற்றி கருவளையத்துடன் கன்னம் ஒட்டி, உடல் மெலிந்து காணப்படும் தன் மனைவியை கண்டு உள்ளம் வருந்தினான்.
அவன் மட்டுமல்ல அன்று அரண்மனைக்கு வந்த அனைவரும் மயூரா தேவியை கண்டு மனம் வருந்தினர். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று மகாதேவனுக்கும் புரியவில்லை.
முடிவாக வைத்தியரின் ஆலோசனைப்படி தன் மனைவியை அழைத்துக்கொண்டு மயூரா தேசத்திற்கு வந்தான். தங்கள் ராணி வந்ததில் மகிழ்ந்து அரண்மனைக்கு வந்து பார்த்த அமைச்சர்களும் அவளின் தோழிகளும் அவளின் நிலை கண்டு மிகவும் வருந்தினர்.
மகாதேவனிடம் என்னவென்று விசாரிக்க, அவனும் நடந்தது அனைத்தையும் கூறி, சிறிது காலம் ஓய்வெடுப்பதற்காக இங்கு வந்திருப்பதாக கூறினான்.
அவர்களின் வைத்தியரும் அவர் உடலை பரிசோதித்து சில மூலிகைகள் கொடுத்து நம்பகமான பெண்களை அவளின் பணிவிடைக்கு அமர்த்தினார்கள்.
நாட்கள் கடக்க சிறிது சிறிதாக உடல்நிலை தேறினாள் மயூரா. கொஞ்சம் கொஞ்சமாக மன நிலையும் மாறியது. தன் கணவன் தன் மேல் கொண்டுள்ள பாசத்தை கண்டு வியந்து அவனை இறுக அணைத்து மன்னிப்பு வேண்டினாள்.
அவளை இறுக்கமாக அணைத்து "என்னிடம் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை மயூரா. என் காதலை புரிந்து கொண்டால் போதும். நீ மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அது தான் என் காதலுக்கு வெற்றி" என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து முத்தமிட்டான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 4 Online
- 2,141 Members
