ருத்ரமாதேவி - 40
அத்தியாயம் 40
யாழ் வேந்தன் குதிரையில் ஏறி அமர்ந்ததும் குதிரையின் குறுக்கே வந்து நின்றாள் ருத்ரா தேவி.
என்ன என்ற விதமாய் அவன் அவளை பார்க்க அவளோ "உங்கள் தாய் தந்தையரை பற்றி கூறவில்லை? அவர்களின் பெயர் என்ன?" என்றாள்.
அவனும் பெருமூச்சு விட்டு "என் குலம் கோத்திரம் எல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று தெரியவில்லை? என்று விட்டு, எனது தந்தை நான் பிறக்கும் முன்பே இறந்து விட்டார். எனது தாயை பாதுகாத்தது என் நண்பன் குகனின் தாய் தந்தையர் அவர்கள் தென்கானகத்தில் வசிக்கும் கானகவாசிகள். அவர்களின் தலைவர் பகலவன். அவரின் மனைவி பெயர் தேமா. இவர்களின் மகன் தான் என் நண்பன் குகன். என் தாயார் பெயர் மாதங் என்று கூற வந்து மாதவி" என்று கூறிவிட்டு, இதுதான் என் முழு குடும்ப விவரம். இதற்கு மேல் என்னைப் பற்றிக் கூற எதுவும் இல்லை. தயவு செய்து இப்பொழுதாவது நான் என் இலக்கு நோக்கி செல்லலாமா?" என்றான்.
அவளும் சரி எனும் விதமாக அவனின் வழியில் இருந்து விலக அவன் பார்வை அவளை மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு தூரத்தில் யாருக்கோ சமிக்கை செய்துவிட்டு மின்னலென பறந்தது அந்தப் புரவி. அவனுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் குகனும் குதிரையில் பறந்தான்.
அவன் கண்கள் சென்ற திசையில் இரு ஆண்கள் அவன் சமிக்கைக்கு பிறகு உடனே திரும்பினார். அவர்கள் நேராக சென்றது தங்கள் இருப்பிடமான தென்கானகத்திற்கு அங்கு சென்று யாழ் வேந்தன் ருத்ராவிடம் கூறிய அனைத்தையும் கூறி தாயார் பெயர் மாதவி என்று உரைத்துள்ளான் என்று தெரிவித்தார்கள்.
அவர்கள் சென்ற பிறகு ருத்ரா அமைதியாகி விட்டாள். தோழிகள் வேட்டைக்கு கிளம்பலாமா? என்று கேட்க, அவளோ இல்லை நாம் கோட்டைக்கு செல்லலாம்" என்று கூறி விட்டாள்.
அவளின் கூற்றுக்கு மறுபேச்சு பேசாமல் தோழியர்கள் கோட்டை நோக்கி கிளம்ப தயாரானார்கள். வழக்கமாக வேட்டைக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு வரும் மகள் இன்று, அன்று இரவே வந்து விட்டாள் என்ற செய்தி பெற்றோருக்கு வந்தது.
காலையில் தன் மகளைக் காண வந்த மயூரா தேவி, என்ன என்று விசாரிக்க, அவளும் நேற்று நடந்ததை கூறி, என்னவென்று தெரியவில்லை அம்மா. எனக்கு அந்த யாழ் வேந்தனை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது. அதுதான் யோசனையாகவே இருந்தது. அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க இயலாமல் இங்கே வந்து விட்டேன்" என்று உரைத்தாள்.
மயூரா தேவியும் யோசிக்க தொடங்கினார். தன் மகளிடம் "பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டு தன் கணவனை காணச் சென்றார். மகாதேவனிடம் ருத்ரா தேவி கூறியதை பற்றி உரைக்க, அதேநேரம் வைத்தியரிடம் இருந்து சேவகன் வந்து, "தெற்கே கானகத்தில் இருந்து இரு இளைஞர்கள் நம் வைத்திய முறையை கற்றுக் கொள்ள வந்துள்ளார்கள் என்பதை வைத்தியர் தங்களிடம் தெரிவிக்க கூறினார்" என்றான்.
அரசரும் வைத்தியரை காண தான் வருவதாக கூறி அனுப்பிவிட்டு தன் மனைவியிடமும் நான் "என்னவென்று விசாரித்து வருகிறேன்" என்று கூறிச் சென்றார்.
அதே நேரம் உமையாள் மாளிகையில் இருந்து காவலாளி வந்து உமையாள் தேவி இறந்துவிட்டார் என்ற செய்தியை கூறினான். ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்ட மகாதேவன் அடுத்து அவரின் ஈம காரியங்களை செய்ய குல குருவிடம் ஆலோசனை பெறுமாறு அந்த சேவகனை அனுப்பி வைத்தார்.
சேவகர்கள் சென்றதும் மயூரா தேவி தன் கணவனிடம், "என்ன ஆயிற்று" என்று கேட்க நேற்று ருத்ரா தேவிக்கு உமையாள் மருந்து கொடுத்து கொள்ள முயற்சி செய்தார் என்பதை தெரிவிக்க, மயூரா தேவி அதிர்ச்சியில் கீழே விழ பார்க்க, அவரை தாங்கி பிடித்து ஆசனத்தில் அமர வைத்தார் மகாதேவன்.
சமநிலைக்கு வந்த மயூரா தேவி, "அப்படி என்றால் நீங்கள் தான் உமையாளை கொன்று விட்டீர்களா?" என்று கோபமாக கேட்க,
'இல்லை' என்று மறுப்பாக தலையாட்டி, "நான் அவளை கண்டிக்க மட்டும் தான் செய்தேன்" என்றார்.
"என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்ட மயூரா தேவிக்கு, "நேற்று ருத்ரா வந்து என்னிடம் கூறிச் சென்ற பிறகு கோபமாக நான் உமையாளின் அறைக்குச் சென்று, "இதுதான் உனக்கு கடைசி முறை மற்றொரு முறை இப்படி முயன்றால் என் கோபத்தை முழுமையாக நீ காண்பாய் என்று எச்சரித்து விட்டு தான் வந்தேன்" இது தான் எனக்குத் தெரியும்" என்றார்.
வைத்தியரின் அறைக்குச் சென்ற மகாதேவன் அங்கு இருக்கும் இருவரையும் கண்டு என்ன என்று விசாரிக்க, ருத்ராவிடன் கூறிய அதே விஷயங்களை அவர்கள் மீண்டும் கூற மகாதேவன் இந்த வைத்திய முறை எங்கள் வைத்தியரால் எங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை நாங்கள் பிற தேசத்திற்கு கற்றுக் கொடுக்க விரும்பவில்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.
யாழ் வேந்தன் அவரிடம் கெஞ்சி கேட்க அவரோ இன்று எங்கள் அரண்மனையில் ஒரு இழப்பு நேர்ந்து விட்டது. இதைப் பற்றி பிறகு யோசிக்கிறேன் என்று கூறிச் சென்றார்.
ருத்ராவிற்கு தான் கொடுத்த இனிப்பை அவள் எடுத்துக்கொண்டு சென்றதில் இருந்தே பயந்து இருந்த உமையாள் மகாதேவன் வந்து எச்சரிக்கை செய்ததில் மிகவும் பயந்துவிட்டார். தன் மகனின் உதவி நாடி மகனை காண அவனின் அறைக்கு செல்ல அங்கோ அவன் இரு பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை கண்டார். ஒரு தாய் பார்க்கக் கூடாதவையை கண்டு முகம் திருப்பி நின்றார்.
அவரை கண்டதும் பெண்கள் இருவரும் எழுந்து செல்ல தன் தாயை முறைத்த அகம்பனன், "அறிவு என்று சிறிதும் உமக்கு இல்லையா? இப்படித்தான் அறைக்குள் அனுமதி இன்றி வருவாயா? என்று ஒருமையில் பேசினான். அதில் மனம் நொந்த உமையாள் தன் மகனிடம், இப்படி செய்வது மிக தவறு என்றும் திருமணம் செய்து கொள் என்றும் அறிவுரை கூறினார்.
காலம் தாழ்த்திய அறிவுரை அவன் எப்படி கேட்பான். அவனும் கோபமாக, "என் கண் முன் நிற்காதே. வெளியே போ. இனி என் அனுமதி இன்றி என்னை காண இங்கு வராதே" என்றும் மேலும் சில தரக்குறைவான வார்த்தைகளையும் தன் தாயைப் பார்த்து பேசி விட்டான்.
மகன் அரசாள வேண்டும் நினைத்தவள் அவனின் ஒழுக்கத்தில் கவனம் செலுத்தாமல் விட்டதை நினைத்து இன்று வருந்தினார். ஒரு மகனால் தன் தாயைப் பார்த்து இவ்வளவு தரக்குறைவான வார்த்தைகளை பேச முடியுமா என்று நினைத்து நினைத்து வருந்தினார்.
அந்த வருத்தத்தில் தன் உயிரை துறக்க முடிவு செய்தார்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 4 Online
- 2,141 Members
