👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 48

1 Posts
1 Users
0 Reactions
125 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 48

 

     போர் வலுப்பெற, சூரியன் உதித்து ஒரு நாழிகை ஆகியும் அரண்மனை வாயிலை ருத்ராவால் நெருங்க முடியவில்லை. 

 

        விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்த யாழ் வேந்தன் அங்கு நடக்கும் சண்டையைக் கண்டு விபரீதத்தை உணர்ந்து தன் வீரர்களுடன் விரைவாக செயல்பட ஆரம்பித்தான். கோட்டைக்குள் இருக்கும் ராஜமாதா தன் அத்தை மயூரா தேவி இவர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று விரைந்து அரண்மனையை நோக்கி முன்னேற முனைந்தான். 

 

கொஞ்சம் கொஞ்சமாக போர் தீவிரம் அடைந்தது. அகம்பனன் மகாராஜா மகாதேவன் இருக்கும் இடத்தை நோக்கி போரிட்டு முன்னேறி சென்றான். 

 

மகாதேவனுக்கு முன்பு மயூரா தேவி போரிட்டுக் கொண்டிருந்தார். அவரைத் தாண்டி தான் மகாதேவனை அடைய முடியும் என்ற சூழ்நிலை. வேங்கை நாட்டு பெண் வேங்கையென மயூரா தேவி போரிடுவதை கண்டு இந்த வயதிலும் இவ்வளவு வேகமாக சண்டையிடும் மயூரா தேவியை கண்டு வியந்து அவரை வெல்வது கடினம் என்று உணர்ந்தான். 

 

ஆகையால் அவனின் கவனம் இப்பொழுது ருத்ரா தேவியை நோக்கிச் சென்றது. ருத்ரா தேவி தன் தாய் தந்தையரை எப்படியும் காக்க வேண்டும் என்று போரிட்டுக் கொண்டு அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். 

 

அவள் சண்டையிடுவதை கண்டு யாழ் வேந்தன் வியந்தே போனான். என்ன ஒரு வேகம் என்று அவளைப் பார்த்து  அவனுக்குள்ளும் ஒரு வேகம் பிறந்து சண்டையின் வேகம் கூடியது. 

 

ருத்ரா தேவியை சுற்றி தலைமை போர் வீரர்களும் சேனாதிபதி குகன், யாழ்வேந்தன் என்று ஒவ்வொரு திசையிலும் போரிட்டுக் கொண்டே அவளை நெருங்க முயன்று கொண்டிருந்தார்கள். 

 

எல்லா திசைகளிலும் ஆயுதங்கள் மோதல் சத்தம்.  போர் வீரர்கள் தங்கள் வீரத்தை எதிரியை அழிப்பதில் காட்டிக் கொண்டு இருந்தனர். எங்கு நோக்கிலும் ரத்த வெள்ளம்.

 

இதுவரை எத்தனை உயிர் பலியானது, எத்தனை பேர் அங்கம் இழந்தனர் என்று கணக்கில்லாமல்  தன் கையில் உள்ள வாளை மின்னலென  சுழற்றியபடி முன்னேறிச் சென்று கொண்டிருந்த ருத்ராவை, ருத்ராஆஆ தேவீஈஈ இளவரசிஈஈ என்ற குரல்கள் நாலாபுறமும் ஒலிக்க, தன்னை தாக்க பின்னால் ஒருவன் வருகிறான் என்று உணர்ந்த நொடி பொழுதில் திரும்பி அவன் கழுத்தில்  வாளை இறக்க, இத்துனை நேரம் நடந்த சண்டையில் பல உடல்களை தாக்கியதால் அவள் வாளின் கூர் மழுங்கி அவனின் கழுத்து முழுவதும் விழாமல் தொங்க, முட்டிபோட்டு மடங்கி கீழே விழுந்து, தலையில்லா அவளை பார்த்தவாறே   வெற்றிச் சிரிப்புடன் உயிர் துறந்தான் அகம்பனன். 

 

அவள் கழுத்தை நோக்கி அகம்பனன் வாளை வீச எத்தனிக்கும் போதே அவளை நோக்கி விரைந்து ஓடி வந்த யாழ் வேந்தனின் கையில் ருத்ரா தேவியின் தலை வந்து விழுந்தது. 

 

தன் கையில் விழுந்த ருத்ரா தேவியின் தலையை ஏந்தி அவள் முகத்தை காண, அவளின் விழிகளும் அவனை பார்த்த வண்ணம் இருந்தது. அவனது விழிகள் அவள் விழியை நோக்க அவனைப் பார்த்து புன்னகைத்து விழி மூடினாள் ருத்ரா தேவி. 

 

அந்த வினாடி புவி அசையாமல் நின்றது போல் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றது. 

 

"ருத்ராஆஆஆ" என்ற யாழ் வேந்தனின் சப்தத்தில் வேங்கை நாட்டின் அரண்மனையே அதிர்ந்தது. அவனின் குரலில் சுயம் பெற்ற அனைவரும் ருத்ராவின் தலை இல்லா உடலை கண்டு அதிர்ந்தனர். 

 

உடனே வைத்தியர்கள் யாழ் வேந்தனின் கையில் இருந்த ருத்ராவின் சிரசை வாங்கி ருத்ராவின் உடலுடன் வைத்து, தைத்து வைத்தியம் செய்ய ஆரம்பித்தனர். அவன் கையில் இருந்து ருத்ராவின் சிரசை வைத்தியர் பெற்ற அடுத்த நொடி யாழ்வேந்தன் என்ற சிலைக்கு உயிர் வந்தது. ஏற்கனவே சீறும் புலியாய் இருப்பவன் தன் உயிரினும் மேலான மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை  கண்டதில் வெறிபிடித்த வேங்கை என சீறிப்பாயத் தயாரானான். 

 

எதிரில் பார்ப்பவர் தலையெல்லாம் பூமி நோக்கி தரையில் உருள, அவர்களின் உயிர் விண்ணோக்கி மேலே சென்றது. 

 

அவனின் வெறி கண்டு குகன் ஒரு நிமிடம் ஆடியே விட்டான். அகம்பனன் இறந்தவுடன் அவனின் கருப்பு படையினர் சற்று பின் வாங்க தொடங்க, அவர்களால் ஒரு அடி கூட பின் நகரம் முடியாமல் யாழ் வேந்தனின் வேகம் அவர்கள் தலையை அவர்கள் உடலில் இருந்து பிரித்து எறிந்தது. 

 

கருப்பு படையினர் முழுவதும் அழிந்து அகம்பனனின் பாட்டனார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டு சிற்றரசர்களின் தலையும் இப்புவியில் விழுந்து உருண்டது. எங்கு நோக்கினும் தலையில்லா உடல்களே ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. இந்த சூழ்ச்சி போரில் வேங்கை நாட்டின் கடைசி உயிராக ருத்ரா தேவியின் உயிர் மட்டுமே போயிருந்தது. 

 

எதிரி ஒருவன் கூட உயிருடன் இல்லை என்றதும் ருத்ரா தேவியை நோக்கி விரைந்து சென்றான் யாழ் வேந்தன். 

 

யாழ் வேந்தனின் ருத்ராஆஆஆ என்ற சப்தத்திலேயே அரண்மனை முழுவதும் உள்ளவர்களுக்கு ருத்ரா தேவிக்கு ஏதோ ஆபத்து என்று ராஜமாதா, மயூரா தேவி, மகாதேவன், மாதங்கி மற்றும் குகனின் பெற்றோர் அனைவரும் ருத்ரா தேவியை காண அவளை சுற்றி நிற்க, வைத்தியர்கள் தீவிரமாக அவளைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். 

 

வெறுமனே துண்டிக்கப்பட்ட தலை என்றால் இந்நேரம் பொருந்தியிருக்கும். ஆனால் அகம்பனன் அவளை காப்பாற்ற கூடாது என்ற முடிவுடன் விஷம் தடவிய வாளால் அவள் தலையை கொய்திருந்தான். 

 

அங்கு வந்த யாழ் வேந்தன், ருத்ரா தேவியின் அருகில் வந்து அவள் கைப்பற்றி, "தேவி என்னை கண் திறந்து பாருங்கள்" என்று கலங்கிய குரலில் உரைத்தான். 

 

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மெதுவாய் கண் திறந்த ருத்ரா, அவனைப் பார்த்து புன்னகைத்தாள். சுற்றி அனைவரையும் பார்த்து கண்களால் வணங்கி  விடைபெற்றாள்.  

 

அவனின் கையை பற்றி அவளின் வயிற்றில் வைத்து அவனின் விழி பார்த்து புன்னகைக்க, அவளின் பார்வையிலேயே தெரிந்தது அவர்களின் புதல்வன் அவளின் வயிற்றில் உள்ளான் என்று.   

 

அந்த நொடி அவன் உயிர் அவனை விட்டு பிரிவது போல் வலித்தது. அங்கிருந்த அனைவருக்கும் அவளின் செயலில் உள்ள செய்தி புரிய, அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. 

 

யாழ் வேந்தனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவன் கண்களில் வழிந்த கண்ணீரை மெதுவாய் துடைத்த அவள் கை மெதுவாய் அவனின் மார்பில் விழுந்தது. அவனைக் கண்டு புன்னகைத்தவறே அவளின் உயிர் பிரிய, கண்கள் மெதுவாய் மூட, அவளின் கை பொத்தென்று கீழே விழ, அதை கீழே விழாமல் யாழ் வேந்தன் பிடித்து தன் மார்பில் வைத்து விண்ணை நோக்கி ஆஆஆஆஆ என்று கத்தி தன் துக்கத்தை வெளியேற்றிக் கொண்டான் யாழ்வேந்தன். 

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...

 

 


 
Posted : December 24, 2025 10:42 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved