ருத்ரமாதேவி - 59
அத்தியாயம் 59
'தன் தம்பிக்கு பெண் பிள்ளை இருந்திருக்குமோ? அந்த பிள்ளையை இந்த கயவர்கள் கொன்று இருப்பார்களோ? என்ற பயத்துடன் என்ன ஆயிற்று? ஏன் இப்படி பேசுகிறான்' என்று நினைத்துக் கொண்டு இருந்த சதாசிவம் காதில் சாந்தசிவத்தின் பதில் வார்த்தையை கேட்டு, அதிர்ந்து தன் காதில் விழுந்தது உண்மைதானா? என்று மீண்டும் அவனைப் பார்த்தார்.
அவரும் 'ஆம்' என்று தலையாட்டி "இந்த பாதக செயல அனைத்தையும் செய்தது என் மகன் காமேஷ்வர் தான்" என்று மீண்டும் கூறி விட்டு முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார்.
"என்ன சொல்கிறாய்? உண்மையாகவா?" என்று மீண்டும் சந்தேகமாகவே கேட்க, அவர் 'ஆம்' என்று தலையாட்டி விட்டு, "எல்லாம் இவளால் தான். ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லிக் கொண்டிருந்தேன். செல்லம் கொடுக்காதே. செய்யும் தவறை உடனே கண்டித்து அவனுக்கு புரியவைத்து திருத்து என்று. ஆனால் அவள் கேட்கவே இல்லை.
இன்று எத்தனை பெண்கள் வாழ்க்கையை அழித்து இருக்கின்றான். இப்படிப்பட்டவன் எனக்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்" என்று ஏதேதோ சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டார்.
அவரின் மனைவி கங்காவோ முகத்தை மூடி அழுது கொண்டே இருந்தார். இங்கு வர மறுத்தவரை இழுத்து வந்திருக்கின்றார் சாந்தசிவம். உன் மகன் செய்த வேலையால் எத்தனை குடும்பங்கள் கதறுகிறது என்பதை கண்கூடாக பார். உன் மகனுக்கு கிடைக்கும் தண்டனையை பார்த்து எத்தனை பேர் மகிழ்ச்சியாக கொண்டாட போகிறார்கள் என்பதை பார். என்பதை காண்பிப்பதற்காகவே அவரை அழைத்து வந்துள்ளார்.
அங்கு வந்ததிலிருந்து தன் மகனை ஊரார் தூற்றுவதை கேட்டு உள்ளம் வெதும்பி அழுது கொண்டு உள்ளார். காலம் கடந்து, தான் தவறு செய்ததை உணர்ந்து வருந்துகிறார் இருந்தும் என்ன பயன்.
நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு தவறு செய்துள்ளான் தன் மகன் என்பதை நினைக்கும் பொழுதே அவரது இதயத்தில் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அங்கு நின்ற தமிழ் வேந்தன், ராஜசேகர், அன்பரசு அனைவரும் சதாசிவத்தின் தம்பி மகனா இப்படி என்று அதிர்ந்து நின்று, நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அந்த நேரம் காவல்துறை வண்டி அந்த கயவர்களை அழைத்துக் கொண்டு நீதிமன்றம் வந்தது. ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே அழைத்துச் செல்ல ராஜசேகரின் வாய் "அகம்பனன்" என்று முனங்கியது.
அகம்பனன் என்ற சொல்லில் சட்டென்று தமிழ் வேந்தன் ராஜசேகரை பார்க்க, அவனுடைய பார்வை சென்ற திசை நோக்கினான். அங்கு கை விலங்கிட்டு காமேஷை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவனைப் பார்த்ததும் தமிழ் வேந்தனுக்கு ஒவ்வொன்றும் புரிய ஆரம்பித்தது. அந்த ஜென்மத்தில் பிறந்த அனைவரும் இப்போதும் பிறந்து ஒன்று கூடி இருக்கின்றார்கள்.
அகம்பனன் தான் காமேஷ்வர். அவனால், தன் தங்கை உட்பட பல பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுதே அவன் ரத்தம் கொதித்தது. அவனுள் யாழ் வேந்தனின் வீரம் வெளிப்பட, அவனை இன்றே கொன்றுவிடும் நோக்கில் வேகமாக நீதிமன்றம் நோக்கி நடந்தான்.
அவனின் திடீரென்ற இந்த வேகத்தை கண்ட ராஜசேகர் அவனிடம் விரைந்து சென்று அவன் கைகளை பிடித்து, "எங்கே செல்கிறாய்?" என்றான்.
"விடு குகா. அவனை கொன்று விடுகிறேன்" என்று அவன் கையை உதற பார்க்க, அவனின் 'குகா' என்ற அழைப்பிலேயே அவனின் கோபத்தை உணர்ந்து கையை இறுக்கிப்பிடித்து, "தயவுசெய்து அமைதியாக இரு வேந்தா" என்றான்.
அதற்குள் தீர்ப்பு வழங்கும் நேரம் வர நீதிமன்றமே அமைதியாக நீதிபதியின் தீர்ப்பை கேட்க காத்திருந்தது. நீதிபதியும் தன் தொண்டையை செருமி வழக்குகளைப் பற்றி கூறி, முக்கிய குற்றவாளியான காமேஷ்வர் உட்பட நால்வரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று மரண தண்டனையை விதித்தார்.
அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த மற்ற குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது என்றும் அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் சிறைச்சாலையிலேயே இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு எழுதினார்.
அந்த நால்வருக்கும் மரண தண்டனை என்றதும் அங்கு கூட்டி இருந்த பொதுமக்கள் மகிழ்ந்து கை தட்டினார்கள்.
அதைக் கண்ட சாந்தசிவம் தன் மனைவியிடம், 'பார்த்தாயா! உன் மகனுக்கு கிடைத்த தண்டனைக்கு இந்த ஊரே மகிழ்கிறது. இப்படிப்பட்ட பையனை தான் நீ பெற்று வளர்த்துள்ளாய்!" என்றார்.
தன் மகனுக்கு மரண தண்டனை என்றதும் தன் மார்பில் அடித்து அழ ஆரம்பித்த காமேஷ்வரின் தாய் அப்படியே மயங்கி சரிந்தார்.
அதைக் கண்டு அவரிடம் வேகமாக நெருங்கினான் அன்பரசு. அவன் அவரை தாங்கிப் பிடிக்க சாந்தசிவம் எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே நின்றார்.
ராஜசேகரும் அன்பரசுவின் அருகில் வந்து அவரை தூக்கி விரைவில் மருத்துவமனை செல்ல வேண்டும் என்று தங்கள் காரில் ஏற்ற முயற்சித்தான்.
அவனை தடுத்த சாந்தசிவம் வேண்டாம் தம்பி அப்படியே விட்டு விடுங்கள். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை பெற்றதற்கு அவள் இங்கேயே விழுந்து சாகட்டும் என்றார் கோபமாக.
அவரின் கோபத்தை கண்டு சதாசிவம், "என்ன பேசுகிறாய் தம்பி? என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி. தவறு அவள் மேல் மட்டும் உள்ளது என்பது போல் பேசுகிறாய். அவளையும் கண்டித்து மகனையும் கண்டித்து வளர்த்திருக்கலாம் அல்லவா! இப்பொழுது இதைப் பற்றி பேச நேரமில்லை. முதலில் மருத்துவமனை செல்வோம்" என்று அவனையும் இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனைக்கு வந்ததும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள். அங்கு ஒரு இறுக்கமான நிலை உருவாக சாந்தசிவம் சிறிதும் கலங்காமல், "இவளை தூக்கிக்கொண்டு என்னால் ஊருக்கு செல்ல முடியாது அண்ணா. ஊரில் எல்லாம் எங்களை கேவலமாக பேசுகிறார்கள். இங்கேயே இப்பொழுது எரித்து விடலாம்" என்று உணர்வற்ற குரலில் கூறினார்.
அவரின் கூற்றில் அதிர்ந்து நின்றார் சதாசிவம். அந்த இடம் சிறிது நேரம் அமைதியாக இருந்தது. பின்னர் சதாசிவம் தன் தம்பியை பார்த்து நம் அம்மா அப்பா என்று தயங்கினார்.
உடனே நினைவு வந்தது போல், "ஐயோ அண்ணா அம்மா அங்கு தனியாக இருக்கிறார்கள்" என்று பதட்டமானார். தந்தையை பற்றி கேட்க, நல்லவேளை அவர் இந்த கொடுமையை எல்லாம் பார்க்காமல் இறந்துவிட்டார் என்றார்.
அவர்கள் நிலையை கவனித்துக் கொண்டிருந்த அன்பரசு, "அங்கிள் நீங்க இங்கே பார்த்துக்கோங்க. நான் போய் பாட்டியை அழைத்து வருகிறேன்" என்று கூறி அவர்களிடம் விலாசம் வாங்கி கிளம்பினான்.
மருத்துவமனையின் அனைத்து வரைமுறைகளையும் முறையாக முடித்துவிட்டு கங்காவின் உடலை வாங்கி கொண்டு சதாசிவம் வீட்டிற்கு சென்றார்கள்.
அவரது இறுதி காரியங்கள் விரைவாக நடந்தது. மறுநாள் காலை அங்கு வந்த தன் தாயை கண்ட சதாசிவம் எழுந்து விரைந்து அவரிடம் ஓடினார். தன்னை நோக்கி தன் பெரிய மகன் ஓடி வருவதை கண்டு மகிழ்ந்து அவனை இறுக கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார். இத்தனை கால பிரிவை இருவரும் அழுது தீர்க்க, அங்கு வந்த சாந்தசிவமும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்7 days ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
-
ருத்ரமாதேவி - 552 weeks ago
- 143 Forums
- 2,622 Topics
- 3,131 Posts
- 1 Online
- 2,140 Members
