ருத்ரமாதேவி - 34
அத்தியாயம் 34
மயூரா தேவியும் மகாதேவனும் மயூரா தேசம் வந்து ஆண்டு ஒன்று கடந்தது. மயூராவின் உடலும் மனமும் நன்கு தேறியதும் தங்களின் வேங்கை நாட்டிற்கு செல்லலாமா? என்று மயூராவிடம் கேட்டான் மகாதேவன்.
அவளும் மகிழ்ச்சியாக செல்லலாம் என்று கூறி, "அத்தையை பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. அகம்பனன் நன்கு வளர்ந்து இருப்பான் அல்லவா? அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா? என்று கேள்வி மேல் கேள்வி அவனை பார்த்து கேட்டாள்.
அவனும் புன்னகைத்துக் கொண்டே, "நான் நமது நாட்டிற்கு செல்லலாமா என்று கேட்ட பிறகு தான் உனக்கு புகுந்த வீட்டின் ஞாபகம் வருகிறது அல்லவா? என்று கேட்க, அவளும் சிரித்துக்கொண்டே, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை" என்றாள்.
ஒரு நல்ல நாள் பார்த்து அவளின் தாய் நாட்டிலிருந்து பெரியவர்கள் ஆசியுடன் அவர்களின் வேங்கை நாட்டிற்கு கிளம்பினார்கள் இருவரும். வேங்கை நாட்டின் கோட்டை வாயிலிலேயே ராஜமாதா தன் மகனையும் மருமகளையும் வரவேற்று, நேராக ருத்ரமாதேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜைகள் அனைத்தும் முடிந்ததும், மலையின் அடிவாரத்தில் புதிய உருவாக்கப்பட்டு இருந்த மாளிகைக்கு இருவரையும் அழைத்துச் சென்றார் ராஜமாதா.
அம்மாளிகையை கண்டதும் என்ன என்று பார்வையில் வினவினான் மகாதேவன். மயூரா தேவியோ குழப்பமாக தன் மாமியாரை காண, இருவரையும் பார்த்து புன்னகைத்து, "நமது ராஜ குருவும் அரண்மனை ஜோசியரும் நாற்பத்தி எட்டு நாட்கள் ருத்ரமாதேவிக்கு மயூரா தேவி பூஜை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்காக உங்கள் இருவருக்கும் தங்குவதற்கு இங்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்கள் உணவுகளை கவனித்துக் கொள்ள அரசு வைத்தியரும் ராஜ குருவும் பிரத்யேகமாக ஆட்களை ஏற்பாடு செய்து, அவர்களை, தாங்களே மேற்பார்வை இடுவதாக முடிவு செய்துள்ளார்கள்.
"நீங்கள் இருவரும் பூஜை முடியும் காலம் வரை இங்கே இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். அதுகாலம் வரை அரண்மனையில் இருந்து யாரையும் சந்திக்க வேண்டாம் என்று ராஜகுரு கூறியுள்ளார்".
"இன்னும் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து தான் நானும் உங்களை அழைத்துச் செல்ல வருவேன். அதன் பிறகு தான் நீங்கள் அரண்மனைக்கு வந்து அனைவரையும் சந்திக்க வேண்டும்" என்றார்.
ஒரு ஆண்டுக்கு மேல் தன்னை பார்க்காத தன் மாமியார், இப்போது அருகில் இருக்கும் போதும் தன்னை அரண்மனை வர வேண்டாம் என்று சொல்கிறார் என்றால், ஏதோ காரணத்தால் தான் தங்களை தனியாக இருக்கச் சொல்லி இருப்பார் என்று உணர்ந்து சரி என்றாள்.
நாற்பத்தி எட்டு நாட்கள் காலை மாலை இரு வேளையும் மயூரா தேவி பூஜை செய்ய ருத்ரமாதேவி கோயிலுக்கு செல்வாள். மற்ற நேரம் இந்த மாளிகையிலேயே இருவரும் இருப்பார்கள். உணவு நேரம் ராஜகுருவும் வைத்தியரும் வருவார்கள். உணவு உண்டு பின் சிறிது நேரம் அரசாங்க நிகழ்வுகள் பற்றி மகாதேவன் ராஜகுருவுடன் விவாதித்து கொண்டு இருப்பான். பின்னர் இருவரும் உறங்க அவர்கள் அறைக்குச் சென்ற பிறகு, வேலை செய்ய ஆட்கள் வந்து மாளிகையை சுத்தப்படுத்திவிட்டு செல்வார்கள். அதன் பிறகு ராஜகுருவும் வைத்தியரும் அங்கிருந்து சென்று விடுவார்கள். இப்படியாக மயூரா தேவியை பாதுகாக்க மகாதேவனும் அவனுடன் சேர்ந்து அவனின் தாய், தந்தை ராஜகுரு மற்றும் வைத்தியர்கள் வேலை செய்தனர்.
அவர்களின் பாதுகாப்பும் ருத்ரமாதேவியின் அருளாலும் மயூராவின் மணி வயிற்றில் மகாதேவனின் வாரிசு உருவாகியது.
பூஜை முடியும் நாளில் ராஜமாதாவும் வர, அவரிடம் வைத்தியர் மயூரா தேவியின் வயிற்றில் நம் அரசரின் குழந்தை உருவாகிவிட்டது என்று கூற, மிகவும் மகிழ்ந்த ராஜமாதா விரைந்து சென்று மயூரா தேவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன் பின் சிறப்பு பூஜை ருத்ரமாதேவிக்கு செய்து தன் மருமகளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
வெகு காலம் கழித்து அரண்மனைக்கு வரும் மயூரா தேவியை உமையாள் தன் மகன் அகம்பனன் உடன் வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
ஒன்றரை வயது அகம்பனனை கண்டதும் அவனை தூக்குவதற்கு குனிந்த மயூராவை, மகாதேவன் தடுத்து நிறுத்தி அகம்பனனை தூக்கி அணைத்து உச்சி முகர்ந்து மயூராவிடம் காட்டினான்.
உமையாளும் சகாதேவனும், ஏன் அவனின் தாயும், ஏன் என்று புரியாமல் பார்க்க, அகம்பனனை உமையாளிடம் கொடுத்துவிட்டு, தன் இளவளை அணைத்து, "நீ அன்று கூறியது போல் இன்று உன் அண்ணி எனது குழந்தையை சுமந்து கொண்டிருக்கின்றாள்" என்றான்.
தன் தமையனின் கூற்றில் மகிழ்ந்து அவனை இறுக்கி அணைத்து, "மிகவும் மகிழ்ச்சி அண்ணா. வாழ்த்துகள். வாழ்த்துகள் அண்ணி" என்று இருவரிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.
நீண்ட நாட்கள் கழித்து தன் மாமியாரை காண்பதால் மயூரா தேவி அவரிடம் பேசிக்கொண்டே இருந்தாள். தன் அருகில் அகம்பனனை வைத்துக் கொண்டு அவனின் சேட்டைகளை ரசித்துக்கொண்டும் அவனின் மழலை சொல் கேட்டுக் கொண்டும் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாள்.
அவளின் மகிழ்ச்சியான முகத்தை காண உமையாளுக்கும் அவளின் மாமியாருக்கும் வயிறு எரிந்தது. எப்படியாவது இந்த குழந்தையை அழித்துவிட வேண்டும் என்று சகாதேவனின் தாய் நினைத்துக் கொண்டிருக்க அவரின் எதிரில் வந்து நின்றான் சகாதேவன்.
"என்ன யோசனைத் தாயே. இந்தக் குழந்தையை எப்படி அழிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?" என்றான் வெறுமையாக.
அவன் முகத்தை வைத்து அவன் கோபமாக கேட்கின்றானா? இல்லை சாதாரணமாக கேட்கின்றானா? இல்லை எதுவும் தெரிந்து கொண்டு கேட்கின்றானா? என்று புரிந்து கொள்ள முடியாமல், "என்ன கேட்கின்றாய் மகனே. எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று பொய் புன்னகையுடன் கேட்டார்.
சகாதேவனின் பேச்சும் அதற்கு தன் சிற்றன்னையின் திணறலான முகபாவமும் மகாதேவனுக்கு ஏதோ உணர்த்த, தன் தாயிடம் "மயூராவை ஓய்வெடுக்க அனுப்புங்கள்" என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மயூரா தேவியை அப்புறப்படுத்தினான்.
மயூரா அங்கிருந்து அகன்றதும் உமையாளை நோக்கி, "அகம்பனனை அழைத்துக் கொண்டு உன் அறைக்குச் செல்" என்று அவன் கூற உமையாளுக்கு அவனின் பேச்சு கட்டளையாக தோன்ற விரைந்து தன் மகனை தூக்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்று விட்டாள்.
உமையாள் சென்ற பிறகு அவ்விடத்தில் இரு அன்னனைகளும் இரு புதல்வர்கள் மட்டும் இருந்தார்கள்.
சகாதேவனை நோக்கி, "இப்பொழுது சொல். என்ன கேட்டாய் சிற்றன்னை இடம்" என்றான் மகாதேவன் தன் சிம்மக் குரலில்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
