ருத்ரமாதேவி - 39
அத்தியாயம் 39
தோழியர்களுடன் கானகத்திற்கு வேட்டைக்கு வந்த ருத்ரா, கானகத்தின் நடுவில் இருந்த தடாகத்தில் தோழியர்களுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்நேரம் அந்தக் குளத்தின் நடுவே ஏதோ சலசலப்பு கேட்டது.
அச்சலசலப்பு சத்தத்தில் அனைவரும் அமைதியாகி தங்களை காக்க கைகளில் ஆயுதம் ஏந்தி தயாராகினர்.
அங்கு நடு குளத்தில் இவர்களுக்கு முதுகை காட்டி ஒரு ஆண் தண்ணீரில் இருந்து வெளியே வந்தான்.
தன்முகத்தை மறைத்த முடியை தலை குனிந்து இரு கைகளாலும் முன் இருந்து பின் நோக்கி தலையை நிமிர்த்தி முடியை தள்ள, தோளை தாண்டி வளர்ந்த அவனின் கேசமானது தண்ணீரை வாரி இறைத்து விசிறி போல் அவனின் முதுகில் விழுந்தது.
அவனின் கேசத்தில் இருந்த தண்ணீர் அங்கிருந்த பெண்கள் மேல் பட, அவர்கள் எழுப்பிய சத்தத்தில் அவர்களை நோக்கி திரும்பினான் அவ்வாடவன்.
திடீரென்று அங்கு இத்தனை பெண்களை கண்டு அவ்வாடவன் சிறிது திகைத்து பின்னர் தன்னை சமாளித்து "ஒரு ஆண் தனியாக குளித்துக் கொண்டிருக்கும் இடத்தில் இப்படித்தான் இத்தனை பெண்கள் வந்து குளிப்பீர்களா? தனியாக இருக்கும் ஒரு ஆடவனுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பே கிடையாதா?" என்றான்.
அவன் கேட்ட விதத்தில் ருத்ரா தேவிக்கு சிறிது சிரிப்பு வந்துவிட, புன்னகைத்துக் கொண்டே கரையில் நிற்கும் தன் தோழியை காண, அவள் கொடுத்த உடையை தன் மீது பொருத்திக்கொண்டு நீரை விட்டு வெளியே வந்து, "தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? எப்படி இந்த கானகத்திற்குள் வந்தீர்கள்?" என்று கேட்டாள்.
அதற்கு அவ்வாடவன், "நான் ஒரு நாடோடி. தெற்கிலிருந்து வந்து கொண்டிருக்கின்றேன். இவ்வழியாகச் சென்றால் வேங்கை நாட்டிற்கு செல்ல முடியும் என்றார்கள்" என்றான்.
"வேங்கை நாட்டிற்கா? என்ன காரணமாக செல்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?" என்று அடுத்தடுத்த கேள்விகளை அவ்வாடவனை பார்த்து கேட்டாள் ருத்ரா தேவி.
"நீங்கள் என்ன வேங்கை நாட்டின் காவலாளியா? என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?" என்றான் ருத்ராவை பார்த்து.
அவளும் புன்னகைத்துக் கொண்டே, "இன்னும் உங்கள் பெயரை கூறவில்லையே!" என்றாள்.
"என் பெயரை தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்? பெயர் பொருத்தம் பார்த்து மணமுடித்துக் கொள்வீர்களா?" என்றான் எள்ளலாக.
"மனம் முடிக்க மட்டும் பெயர் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு உதவலாம் என்று தான் கேட்டேன்" என்றாள்.
அவன் அப்படி பேசிக் கொண்டிருக்க ருத்ராவின் தோழி ஒருத்தி பொறுமை இழந்து தன் வாள் கொண்டு அவனை தாக்க முயன்றாள்.
எங்கிருந்தோ வந்த அம்பு அந்த வாளில் பட, அந்த பெண்ணின் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது.
ஒரு கணம் திகைத்த ருத்ரா, அம்பு வந்த திசை நோக்க அங்கு வெள்ளை குதிரையில் ஒருவன் கையில் வில்லுடன் நின்றான். அவனின் அருகே அடர் சாம்பல் நிறத்தில் ஒரு குதிரை நின்றது. அதிலேயே தெரிந்தது அந்த சாம்பல் குதிரை தன் முன்னிற்கும் ஆடவனின் குதிரை என்று.
அவளுக்கு அந்த குதிரையின் மீது ஓர் ஈர்ப்பு. குதிரையின் அருகில் சென்று அதன் தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட அக்குதிரை அவளிடம் திமிராமல் அமைதியாக நின்றது.
அதில் அவ்விரு ஆடவர்களுக்குமே அதிர்ச்சி. அக்குதிரை அவ்விருவர்களைத் தவிர வேறு எவருக்கும் அடங்காது. எவரையும் தன்னை தொட அனுமதிக்காது. அப்படி இருக்கையில் ருத்ரா அருகில் சென்று தடவி கொடுத்தும் அமைதியாக நின்ற குதிரையை கண்டு இருவருக்குமே அதிர்ச்சி தான்.
குதிரையை ரசித்து விட்டு அவ்வாடகன் புறம் திரும்பி உங்கள் பெயர் என்றாள். அவனும் அவளின் குரலில் இருந்த நிமிர்வில் "யாழ் வேந்தன்" என்றான்.
யாழ் வேந்தன் என்று தனக்குள்ளே ஒரு முறை சொல்லிக்கொண்டு அவனிடம், "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றாள்.
அவனுக்கோ சலிப்பு. "அதை ஏன் நான் உங்களிடம் சொல்ல வேண்டும்?" என்றான் அதே சலிப்புடன்.
ருத்ராவின் தோழிகள் ருத்ராவின் பேச்சில் அவளை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவள் எந்த ஆடவரிடமும் இவ்வளவு இறங்கி பேசியதில்லை. எதிரே நிற்கும் ஆண் அவளை அலட்சியமாக பேசினாலும் அவளோ அவனிடம் மீண்டும் தன்மையாகவே பேசுவதில் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ருத்ராவிற்குமே தன் செயலில் சிறிது வியப்பாகத்தான் இருந்தது. ஏன் நாம் அவரிடம் மீண்டும் மீண்டும் பேசுகிறோம் என்று. அவளுக்கு அவனை புதிதாய் பார்ப்பது போல் தோன்றவில்லை. எங்கோ பார்த்திருப்பது போல் தோன்றியது. அதை தெரிந்து கொள்ளவே அவளும் அவனுடன் அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்.
முடிவில் யாழ் வேந்தன் நான் தெற்கே கானகத்தில் இருந்து வருகிறேன். அக்கானகத்தில் எங்களுக்கு விலங்குகளாலும் வேட்டைக்கு வரும் மனிதர்களாலும் ஆபத்து நேர்கிறது.
எங்கள் கை கால்களை இழக்க நேரிடுகிறது. அப்பொழுது தான் நாங்கள் வேங்கை நாட்டின் மருத்துவ முறையை கேள்விப்பட்டோம். அதில் கை கால்கள் துண்டானால் அவற்றை மீண்டும் ஒட்ட வைக்கும் அளவிற்கு மருத்துவ வளர்ச்சி அடைந்துள்ளதாம். அதை கற்றுக் கொண்டால் எங்களுக்கு உதவும் என்று வேங்கை நாட்டை தேடி வந்துள்ளோம்.
அப்படி வரும் வழியில் மிகவும் களைப்பாக இருந்ததால் இந்த தடாகத்தில் குளிக்க இறங்கினேன். என் தோழன் குதிரைகளுக்கு உணவு அளித்துவிட்டு வருகிறான். என் பெயர் யாழ் வேந்தன். இவன் எனது உயிர் தோழன் குகன் என்று முழுமூச்சாக அனைத்தையும் கூறி முடித்தான்.
அனைத்தையும் கவனமாக கேட்ட ருத்ரா, "நாங்கள் இரண்டு நாள் இங்கு தங்கி வேட்டை ஆடிவிட்டு வேங்கை நாட்டிற்கு தான் சொல்வோம். நீங்களும் வெகு தூரத்தில் இருந்து பயணித்து வந்துள்ளீர்கள். சிறிது உணவு அருந்தி ஓய்வெடுத்து விட்டு வேங்கை நாட்டை நோக்கி செல்லுங்கள் அல்லது இரண்டு நாட்கள் இங்கிருந்து ஓய்வெடுத்து விட்டு வேங்கை நாட்டிற்கு எங்களுடன் வாருங்கள்" என்றாள்.
அவள் கூறியதை கேட்டு அவளின் தோழிகள் அனைவரும் வியந்து அவளை பார்த்தனர்.
யாழ் வேந்தன், "இல்லை இரண்டு நாட்கள் தாமதிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இப்பொழுதே கிளம்புகிறோம். அப்பொழுது தான் வைத்தியரை சந்தித்து வைத்தியத்தை கற்றுக் கொள்ள முடியும். இரண்டு நாள் தாமதித்தால் அங்கே எங்கள் ஆட்களுக்கு உதவ இரண்டு நாள் தாமதம் ஆகும் அல்லவா?" என்று தன் சாம்பல் நிற குதிரையில் ஏறி அமர்ந்தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 17 Online
- 2,142 Members
