ருத்ரமாதேவி - 41
அத்தியாயம் 41
தன் மகனே தன்னை வெறுத்து பேசிய பிறகு நான் பூமியில் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று அவரே மருந்தை உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார் உமையாள்.
அவரின் இறுதி காரியங்கள் முறைப்படி நடந்தது. அகம்பனன் தன் அன்னையின் இறுதி காரியங்களில் கலந்து கொள்ளவில்லை.
அவன் அவனின் மாளிகையை விட்டு வெளியே வரவே இல்லை. எத்தனையோ முறை சேவகர்கள் சென்று அழைத்தாலும் வர முடியாது என்று கூறி விட்டான். இறுதியாக மகாதேவனே சென்றார்.
அதுவரை அறையில் இருந்து வெளிவராமல் பதிலுரைத்துக் கொண்டிருந்த அகம்பனன் மகாதேவன் வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அறையிலிருந்து வெளியே வந்தான்.
அவனைக் கண்ட மகாதேவனுக்கு உள்ளமெல்லாம் வருத்தத்தை தந்தது. இருபத்தி இரண்டு வயது இளைஞன் போதைக்கு அடிமையாகி எந்நேரமும் மது மாது என்று இருப்பது அவரை வருத்தம் அடையச் செய்தது. தங்கள் வளர்ப்பு எங்கோ தவறி விட்டதில் வருத்தம் கொண்டார். அவரின் முகத்தில் அந்த வேதனை பிரதிபலிக்க அகம்பனனின் தலையை வருடி, "உன் தாய் இறந்துவிட்டார். அவருக்கு இறுதி காரியம் செய்ய வா" என்று அழைக்க, அவரின் கையை தட்டி விட்டு, "நான் எங்கும் வரப் போவது இல்லை" என்று கூறி மீண்டும் அறைக்குள் செல்ல முயன்றான்.
அவன் கையை பற்றி இழுத்த மகாதேவன் "தந்தைக்கு தான் நீ எந்த இறுதி காரியமும் செய்யவில்லை. தாயையும் அப்படி விட்டு விடாதே இந்தப் பாவம் நம் தலையில்தான் விழும்" என்றார்.
அவனும் உரக்கச் சிரித்துக் கொண்டு "பாவம் புண்ணியம் இதையெல்லாம் பார்க்க நான் சாதாரண மனிதன் அல்ல. நான் அகம்பனன். எனக்கு பாவ புண்ணியம் எதுவும் கிடையாது" என்று மீண்டும் உரக்க சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து விட்டான்.
இனி அவனிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று உணர்ந்து, இறுதி காரியங்கள் அனைத்தையும் அரசு முறைப்படியே நடந்தேறியது.
உமையாளின் இறுதி காரியங்களும் மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களும் நடந்து முடிய மூன்று நாட்கள் கடந்தது.
அந்த மூன்று நாட்களும் யாழ் வேந்தனும் குகனும் வேங்கை நாட்டின் கோட்டை முழுவதும் சுற்றி வேடிக்கை பார்த்தனர்.
அக்கோட்டையை சுற்றி வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை யாழ் வேந்தன். அவன் விசாரணை முழுவதும் மயூரா தேவியை பற்றியே இருந்தது.
இந்த மூன்று நாட்களில் அவன் தெரிந்து கொண்டது மயூரா தேவியை மகாதேவன் தன் கண்ணின் மணி போல் பார்த்துக் கொண்டார் என்பதே. மேலும் மயூரா தேவி ஒரு வருடம் தன் கணவனை எதிர்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டான். அதைக் கேள்விப்படும் பொழுது அவன் உதட்டிற்குள் ஓர் சிரிப்பு உண்டானது. அதன் பிறகு ருத்ரா பிறக்கும் வரை மயூரா தேவி பட்ட இன்னல்களை அறிந்து வருந்தினான்.
பின்னர் ருத்ரா பிறந்தது மேலும் மகா தேவனின் ஆட்சி என்று அனைத்தும் அவனுக்கு கேட்க கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தது.
ஏற்கனவே மயூரா தேவி இங்கு வந்த பிறகு மயூரா தேசத்தை மகாதேவன் தன் சொந்த நாடு போல் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டதை அறிந்திருந்தான். இங்கு வந்த பிறகு மயூரா தேவியையும் அவன் நன்றாகவே கவனித்துக் கொண்டுள்ளான். மேலும் அவரின் மேல் அளவில்லா காதலில் தான் திருமணமும் முடித்துள்ளார் என்பதையும் அறிந்ததில் யாழ் வேந்தனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
இப்படியாக அந்த மூன்று நாட்களும் யாழ் வேந்தன் மகாதேவன் மயூரா தேவி ருத்ரா தேவி ஆகியோரை பற்றி நன்கு அறிந்து கொண்டான். ராஜமாதா இவர்களுக்கு உறுதுணையாக இன்று வரை இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தான்.
உமையாளின் சூழ்ச்சி குணத்தினால், தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு இணங்க அவளே அவளின் முடிவை தேடிக் கொண்டதில் அவனுக்கு சிறிதும் வருத்தம் இல்லை. மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அரண்மனை வைத்தியரை காண சென்றனர் நண்பர்கள் இருவரும்.
வைத்தியரோ முடிவாக நீ என்னிடம் வைத்திய முறைகளை நன்கு கற்றுக் கொள்ளலாம். ஆனால் உன் பணி எங்கள் வேங்கை நாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும். அதில் உறுதி கொண்டால் மட்டுமே வைத்திய முறைகளை கற்றுத் தர இயலும் என்று கூறிவிட்டார்.
அதற்கு யாழ் வேந்தன், "கல்வி அனைவருக்கும் பொதுவல்லவா? நீங்கள் இப்படி கூறுவது முறையல்லவே!" என்று கூறினான்.
அச்சமயம் அங்கு வந்த மகாதேவன் அவன் தோள்களை தட்டி, "கல்வி அனைவருக்கும் பொது தான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆனால் சில வைத்திய முறைகள் அவர்கள் கண்டறிந்த வைத்திய முறைகள். அவற்றை அவர்கள் விரும்புவர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவார்கள் அது உண்மை தானே?" என்று அவனிடமே கேட்க, அவரின் கம்பீர தோற்றமும் அன்பான பேச்சும் அவரை மறுத்து பேச அவனுக்கு இயலாமல் 'ஆம்' என்று தலையை ஆட்டினான்.
அவன் தலையாட்டலில் புன்னகைத்து, "அப்படி என்றால் அவர் எப்படி உனக்கு கற்றுக் கொடுப்பார்?" என்று கேட்டார் மகாதேவன்.
"மேலும் அவரே தொடர்ந்து உனக்கு வைத்திய முறையை கற்றுக் கொடுப்பதற்கு தான் என்னால் உதவ முடியாது. ஆனால் உங்கள் கானகத்தை காக்க என்னால் முடிந்த அளவு முயல்கிறேன். வேண்டுமென்றால் எங்களது சிறுபடையை உங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறேன்" என்றார் தன்மையாக.
அதில் யாழ் வேந்தன் அது அவர்களது வீரத்தை மட்டு படுத்துவதாக நினைக்க சட்டென்று, "எங்களைக் காத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். காக்கும் பொருட்டு உதவி நாடி நாங்கள் இங்கு வரவில்லை. அடிபடுதலில் இருந்து எங்களுக்கு நாங்களே வைத்தியம் செய்ய வைத்திய முறை கற்றுக்கொள்ள இங்கு வந்தோம்" என்று ரோசமாக உரைத்தான்.
அவனின் கோவமான கூற்றில் ஏனோ மகாதேவனுக்கு சிறிதும் கோபம் வராமல் புன்னகைத்துக் கொண்டே, "வேறு எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் நீ தாராளமாக கேட்கலாம்" என்றார்.
அவனும் பிடிவாதமாக "வைத்தியம் கற்றுத் தருவது தவிர வேறு எந்த உதவியும் உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறிவிட்டு அவரை வணங்கி "நான் விடைபெறுகிறேன்" என்று தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் வெளியே செல்ல எதிரிலே ஒற்றன் அரசரை காண உள்ளே வந்தான். அந்த ஒற்றனை உதட்டினுள் மறைத்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டே வெளியே சென்றான் யாழ் வேந்தன்.
தொடரும்....
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
