ருத்ரமாதேவி - 49
அத்தியாயம் 49
யாழ் வேந்தனின் கதறலில் எல்லோருடைய மனதும் வேதனை அடைந்தது. வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் ருத்ரா தேவியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
துண்டிக்கப்பட்ட அங்கத்தை ஒட்ட வைக்கும் திறமை வாய்ந்த வைத்தியர் என்ற பெருமையில் இவ்வளவு காலம் இருந்த அரண்மனை வைத்தியர், தன்னால் இளவரசியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து குறுவாளை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார்.
அவரின் செய்கையை உணர்ந்து சற்றென்று அவரின் கைகளைப் பிடித்த யாழ் வேந்தன் வேண்டாம் என்று தலையாட்டி மறுத்து, உங்கள் வைத்தியம் உங்களுடனே முடிய கூடாது என்றான்.
வேங்கை நாடே துக்கத்தில் இருந்தது. ருத்ரா தேவியின் திருமணத்தைக் காண நாடு முழுவதிலிருந்தும் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களுக்கு, இன்று காலை கோட்டையில் நடந்த அசம்பாவிதங்களும் அதன் முடிவில் ருத்ரா தேவி இறந்துவிட்டார் என்ற செய்தியும் கிடைக்க நாடெங்கும் அழுகுரல் ஒலித்தது.
மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கோட்டையை நோக்கி பொதுமக்கள் அழுத வண்ணம் வந்து கொண்டிருந்தனர்.
கோட்டைக்குள் எதிரிகள் வந்து தன் மகளைக் கொன்ற செய்தி மகாதேவனை வெகுவாக பாதித்தது. கோட்டைக்குள்ளேயே என் மகளை காப்பாற்ற முடியவில்லை. நான் என்ன அரசன். நான் எப்படி மக்களை காப்பேன் என்று தனக்குள்ளே மறுதலித்துக் கொண்டிருந்த மகாதேவன் தன் அரச பதவியை துறக்க முடிவு செய்தான்.
ருத்ரா தேவியின் உடலுக்கு ஈமை சடங்குகள் செய்து இருந்தார் ராஜகுரு. கல்யாண மந்திரம் ஒலிக்க வேண்டிய நேரத்தில் அவளின் இறுதி சடங்கு மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. யாழ் வேந்தனின் நெஞ்சில் இந்த பூமியின் பாரம் முழுவதும் வந்து அமுக்குவது போல் வலி.
அனைத்து சடங்குகளும் முடிய யாழ் வேந்தன் தன் கையால் அவளுக்கு மங்கள நாண் சூட்டி யாழ் வேந்தனின் மனைவி என்ற அங்கீகாரத்தில் அவளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ருத்ரா தேவியின் இறுதி காரியங்கள் அனைத்தும் முடிய மூன்று நாட்கள் ஆனது. மூன்று நாள் கழித்து மகாதேவன் இனி இந்த வேங்கை நாட்டை நான் ஆளப் போவது இல்லை. எனக்கு பதிலாக யாழ் வேந்தனே வேங்கை நாட்டின் அரசனாக பொறுப்பேற்க வேண்டும் என்று அவையினர் முன்பு கேட்க, வேகமாக எழுந்த யாழ்வேந்தன் ருத்ரா இல்லா மாளிகையில் நான் இருக்க மாட்டேன்.
பட்டத்து ராணி இல்லாமல் அரியணை ஏற முடியாது. என்னால் ருத்ராவை நினைத்த மனதில் வேறு ஒரு பெண்ணை கனவில் கூட மனைவியாய் ஏற்க முடியாது. தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கூறி அமர்ந்தான் யாழ் வேந்தன்.
அவனின் கூற்றில் மாதங்கி மிகவும் வருந்தி தன் மகனின் கைப்பற்றி அழுத்தி ஆறுதல் செய்தார்.
இறுகிப்போய் அமர்ந்திருந்த யாழ் வேந்தன் தொடர்ந்து என் உயிர் தோழன் குகன் என்னைப் போலவே ஏன் என்னை விட வீரமான விவேகமானவன். ஆகவே இந்த வேங்கை நாட்டின் பொறுப்பை அவன் ஏற்க நான் விரும்புகிறேன் என்று மகாதேவனை பார்த்தான் யாழ் வேந்தன்.
குகனோ "வேண்டாம். நான் என் நண்பன் உடனே இருப்பேன்" என்று மறுத்துக் கூற, ராஜ குருவும் ஜோதிடரும் ராஜமாதாவிடம் "குகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் நாடு சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் ஓராண்டுக்குள் இந்த அரசு சீர்கெட்டு விடும்" என்று கூறினார்கள்.
தன் உயிர் பேத்தி இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் வெகுவாய் துவண்டு போயிருந்த ராஜமாதா அவையில் அனைவர் முன்னிலையில் "குகன் அரசாளட்டும். அவனுக்கு உறுதுணையாய் என் அரசவை அமைச்சர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.
அமைச்சர்கள் அனைவரும் அதற்கு ஏற்றுக்கொண்டதாய் தலையசைக்க, குகனோ வேண்டாம் என்று மறுத்து ராஜமாதாவை பார்க்க, அவர் இது எனது கட்டளை என்று கூறி அவரின் இருக்கையில் அமர்ந்து விட்டார்.
குகனால் ராஜமாதாவின் கட்டளையை மறுக்க இயலவில்லை. அப்படியே தன் நண்பனை பார்க்க அவனும் தலையாட்டி ஏற்றுக்கொள் என்று கூறினான்.
வேறு வழி இன்றி சம்மதம் என்று கூற, அடுத்து வந்த சுபயோக சுப தினத்தில் அத்வைதாவை மனம் முடித்து வேங்கை நாட்டின் பட்டத்து அரசனாக பொறுப்பேற்றான் குகன்.
குகன் அரசனாக பொறுப்பேற்ற பிறகு மகா தேவனும் மயூரா தேவியும் அரசு ஆடை ஆபரணங்களை துறந்து, வடக்கு நோக்கி சிவபெருமானை தரிசிக்க செல்வதாக கூறி வேங்கை நாட்டின் அரண்மனையை விட்டு வெளியேறினார்கள்.
அவர்களை தடுக்கும் வழி தெரியாமல் ராஜமாதா தனித்து அமர்ந்திருக்க, மாதங்கி ராஜமாதாவுக்கு துணையாக அவருக்கு ஆறுதலாக அவரின் கைப்பற்றி அமர்ந்திருந்தார். ராஜமாதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
வயதான காலத்தில் தனித்து இருப்பதை நினைத்து தன்னால் தன் மகனுடன் நடக்க முடியவில்லை என்றும் வருந்தி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். கோட்டையை தாண்டி வெளியே சென்ற மகாதேவன் மற்றும் மயூரா தேவியை மறித்து நின்றான் யாழ் வேந்தன்.
"உங்கள் மகள் இழந்த துக்கத்தில் நாட்டைத் துறந்து சிவ பணி செய்ய செல்கின்றீர்கள். ஆனால் உங்களைப் பிரிந்து உங்கள் தாய் இந்த அரண்மனையில் தனித்து இருப்பதில் உங்களுக்கு சம்மதமா?" என்றான்.
அவன் கூறிய பிறகு மகா தேவனுக்கு 'தான் தன் மகளை இழந்த துக்கத்தை அனுபவிக்கும் பொழுது, தன் தாய் தான் உயிரோடு இருந்தும் தன்னை காணாமல் இருப்பது கொடுமை அல்லவா?' என்று உணர்ந்து, ராஜமாதாவின் மாளிகை நோக்கி விரைந்து வந்து தன் தாயை அணைத்து தன்னை மன்னிக்கும் படி வேண்டி அவரின் காலடி பற்றி வணங்கினார்.
தன் மகனின் சிரசில் கை வைத்து அவனை தூக்கி அணைத்து "ருத்ரா இறந்தது எனக்கும் வருத்தம் தான். என்னை விடுத்து நீங்கள் இருவர் மட்டும் செல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேட்டு அழுதார்.
தன் தாய் அழுததில் மகாதேவனும் குலுங்கி அழுது "என்னை மன்னித்து விடுங்கள் தாயே" என்று அவரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான்.
அதன் பிறகு குகன் அரசாழ்வதற்கு ஏதுவாக ராஜமாதாவின் மாளிகையிலேயே இருவரும் இருந்து கொண்டார்கள்.
ராஜமாதா மகாதேவன் மற்றும் குகனின் பெற்றோர் இவர்களின் நல்லாசியுடன் குகன் வேங்கை நாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 1 Online
- 2,142 Members
