ருத்ரமாதேவி - 50
அத்தியாயம் 50
மகாதேவனின் ஆட்சி காலத்தில் வேங்கை நாடு எவ்வாறு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோ அதேபோல் பன்மடங்கு குகனின் ஆட்சிக்காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
அரண்மனை வைத்தியர் தன் வைத்திய ரகசியங்கள் அனைத்தையும் தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்து நேர்மையான முறையில் மட்டும் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.
அனைத்தும் சிறப்பாக நடக்க யாழ் வேந்தன் அந்த கானகமே கதி என்றும் தடாகமே தன் உயிர் என்றும் அத்தடாக கரையிலேயே குடில் அமைத்து, அக்கானகத்திலேயே வாழ்ந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் ருத்ரா தேவி உடன் தான் வாழ்வேன் என்று சங்கல்பம் எடுத்து தன் வாழ்நாள் முழுவதும் ருத்ரா தேவியின் நினைவுகளை சுமந்து கொண்டு வாழ்வின் இறுதி வரை வாழ்ந்து முடித்து உயிர் துறந்தான்.
அனைத்தும் கனவு போல் தமிழ் வேந்தன் கண்களில் ஓட, அவன் கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடிய படி இருந்தது.
தமிழ் வேந்தனின் கண்களிலிருந்து கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. இதை மேலும் பார்க்க இயலாமல் ராஜசேகர் அவனின் தோள்பற்றி உலுக்கி "வேந்தா" என்றான்.
ராஜசேகரின் உலுக்கலில் தலை நிமிர்த்தி கண் திறந்து பார்த்த தமிழ் வேந்தனின் கண்கள் பழைய நினைவுகளின் விளைவாக ரத்த சிவப்பாக சிவந்து இருந்தது.
இப்படியே விட்டால் அவன் இன்னும் இப்படியே அதையே நினைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பான் என்று உணர்ந்த ராஜசேகர் அவன் கையில் ஒரு டம்ளர் பாலை கொடுத்து குடித்துவிட்டு படுக்குமாறு கூறினான்.
பாலை குடித்ததும் அதில் கலந்து இருந்த தூக்க மாத்திரையின் உதவியால் கண்ணயர்ந்தான் தமிழ் வேந்தன்.
மறுநாள் வெகு நேரம் கழித்து கண் விழித்த தமிழ் வேந்தன் குளித்து தயாராகி நேராக ருத்ராவின் வீட்டிற்கு சென்றான்.
ருத்ராவின் வீட்டில் அவள் வழக்கம் போல் கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த தமிழ் வேந்தனை கண்டு வியந்து "என்ன காலையிலேயே வந்திருக்கின்றீர்கள்" என்று சாதாரணமாகவே பேசினாள்.
அவளின் பேச்சிலேயே அவளுக்கு எதுவும் நினைவு வரவில்லை. அவள் சாதாரணமாகத்தான் இருக்கின்றாள் என்பதை உணர்ந்த தமிழ் வேந்தன், சிறிது வருந்தினாலும் அவளுக்கு எப்பொழுது முழுவதும் ஞாபகம் வருகிறதோ அப்பொழுது வரட்டும் என்று நினைத்து புன்னகைத்துக் கொண்டே "உன் உடல் நிலை எப்படி இருக்கு என்று விசாரிக்கவே காலையில் இங்கு வந்தேன்" என்று கூறி தன் அத்தையை தேடி சமையலறை சென்றான்.
வழக்கம் போல் காலை ஜாகிங் சென்று வந்த சதாசிவம் சற்று வருத்தமான முகத்துடனே வீட்டிற்குள் நுழைந்தார்.
அவருக்கு காபி எடுத்துக்கொண்டு வந்த மகாதேவி "ஏன் கவலையாக இருக்கின்றீர்கள்?" என்று கேட்டு அவரின் அருகில் அமர்ந்தார்.
அவரின் பின்னாடியே வந்த தமிழ் வேந்தனை கண்டு 'வா' என்றவாறு தலையசைத்து, "ஒன்றும் இல்லை மகா நேற்று நம்ம ருத்ரா மயங்கியதை பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். மீண்டும் அப்படி மயக்கம் வந்தால் என்ன செய்வது என்று தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்று கூறி தன் மனைவியின் முகம் நோக்கினார்.
அதைப்பற்றி நீங்கள் கவலை படாதீர்கள் மாமா. கல்லூரியில் நான் அவளை கவனித்துக் கொள்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் கூறினான் தமிழ் வேந்தன்.
நேரமாக ருத்ரா கல்லூரி செல்ல கிளம்பினாள். தமிழ் வேந்தனும் கிளம்ப தன்னுடனே பைக்கில் வருமாறு அழைத்தான் தமிழ் வேந்தன். ஆனால் அவளோ மறுத்து விட்டு நான் ஐஸ்வர்யா உடனே வருகிறேன் என்று கூறி சென்று விட்டாள்.
சிறிது ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்பினான் தமிழ் வேந்தன். அதன்பிறகு நாட்கள் கடக்க மாதங்கள் ஓடியது. ருத்ராவிற்கு அதன் பிறகு எந்த ஒரு சிறு ஞாபகமும் வரவில்லை. கனவும் வரவில்லை. அதிலேயே அவள் நிம்மதியாக இருந்தாள்.
ஆனால் தமிழ் வேந்தன் அவளின் மேல் உள்ள காதலை அவள் எப்போது உணர்ந்து தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று அவளை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான்.
இந்த ஆண்டு கல்லூரியின் சுற்றுப்பயணமாக கேரளா செல்வதாக அறிவிப்பு வந்தது. அதில் மிகவும் மகிழ்ந்த தோழியர்கள் அவரவர் வீட்டில் கேட்க, ருத்ரா ஐஸ்வர்யா பெற்றோர்கள் சம்மதித்தனர்.
கலைச்செல்வியின் பெற்றோர் சிறிது தயங்கினார்கள். கண்டிப்பாக செல்ல வேண்டுமா? என்று கேட்க, ருத்ராவும் ஐஸ்வர்யாவும் அவர்களுடன் பேசி நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள் என்று கூறி அவளின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினர்.
இரண்டாம் வருட மாணவர்கள் மட்டும் என்பதால் அன்பரசு வராமல் போக ப்ரணவ் ப்ரணீத் இருவரும் அந்த சுற்றுலாவில் கலந்து கொண்டார்கள்.
சுற்றுலா நாளும் நெருங்க அனைவரும் பெற்றோரிடம் கூறிக்கொண்டு மகிழ்வாக கிளம்பினார்கள் கல்லூரியிலிருந்து அனைவரையும் சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பதால் அனைவரும் ஏழரை மணியளவில் ஒன்று கூடினர். சென்ட்ரல் ரயில் நிலையம் இவர்கள் கல்லூரி மாணவ மாணவியர்களாலும் அவர்களின் பெற்றோர்களாலும் நிரம்பி வழிந்தது. அனைவரையும் அவரவர் கோச் பார்த்து அமர வைத்தார்கள் பேராசிரியர்கள்.
நூற்றி இருபது மாணவ மாணவியர்கள் செல்ல மூன்று பெண் பேராசிரியர்களும் மூன்று ஆண் பேராசிரியர்களும் அவர்களுடன் கேரளாவை நோக்கி ரயில் வண்டியில் பயணித்தனர்.
தமிழ் வேந்தனும் ராஜசேகரும் அந்த பேராசிரியர்களுள் அடங்குவர். அவர்கள் இருவரும் வருவது ருத்ராவிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்ந்தாள்.
காலையில் கடவுளின் தேசமான கேரளாவை வந்தடைந்தார்கள்.
ஆலப்புழா
அந்தக் குழுமை அவர்களுக்கு புத்துணர்வாக இருந்தது. மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பேருந்துக்கு ஒரு ஆண் பேராசிரியரும் ஒரு பெண் பேராசிரியருமாக மாணவ மாணவியர்களை கவனித்துக் கொண்டார்கள்.
அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது பேரூந்துகள்.
அன்று காலை அந்த கல்லூரியில் அவர்கள் காலை கடன்களை முடித்து, குளித்து, காலை உணவை முடித்து போட் ஹவுஸ் செல்ல ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி மாணவர்கள் விரைவாக தங்கள் காலை வேலைகளை முடித்து உணவு ஏற்பாடு செய்திருந்த கூடத்திற்கு வந்தார்கள்.
கேரள உணவான புட்டு சென்னா கப்பக்கிழங்கு மற்றும் சுட்ட நேந்திரம் பழம் என்ற உணவுகளும், தமிழ்நாட்டிற்குரிய இட்லியும் சட்டினி சாம்பார் மற்றும் பொங்கல் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள் அந்த கல்லூரியில்.
அனைவரும் காலை உணவு உண்ட பிறகு பேருந்தில் ஏறி போட் ஹவுஸ் நோக்கி பயணித்தார்கள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்1 week ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,623 Topics
- 3,132 Posts
- 18 Online
- 2,142 Members
