ருத்ரமாதேவி - 55
அத்தியாயம் 55
சதாசிவம் தன் நண்பன் ஒருவரை சந்திக்க மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். இருவரும் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்ப, அங்கு கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை கண்டார்.
ருத்ராவும் அங்கு இருப்பாள் என்று தேட, அங்கு ருத்ரா இல்லை. ஓர் ஆணின் கையை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.
யார் என்று சற்று அருகில் சென்று பார்த்தார். அது ராஜசேகர். சற்று அதிர்ந்து அவர்களை நோக்கி நடந்தார்.
அவர்களின் அருகே வந்து ஐஸ்வர்யா என்று அழைக்க, டக் என்று திரும்பினாள் ஐஸ்வர்யா. சதாசிவத்தை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை.
அவளின் முகம் பயத்தில் வெளிறியது. "அங்கிள்... அங்கிள்..." என்று திணற ராஜசேகர் செய்வதறியாது திகைத்து நின்றான்.
சதாசிவம் கோவமாக ஐஸ்வர்யாவை பார்த்து "என்ன ஐஸ்வர்யா இதெல்லாம்? எத்தனை நாளாக இந்த பழக்கம்?" என்றார்.
அவளும் "இல்லை.. எனக்கு.." என்று திணற, ராஜசேகர் "அங்கிள், நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம்" என்றான்.
சதாசிவமும் "காதலிக்கிறீர்களா? காதலித்தால் இப்படித்தான் தனியாக பீச்சுக்கு வருவீர்களா? இதுதான் காதலா? உனக்கு ஒரு தங்கை இருந்து அவள் ஒரு ஆணுடன் இப்படி பீச்சுக்கு சென்றால் அதை நீ ஏற்றுக் கொள்வாயா?" என்று கோபமாக கேட்டார்.
அவரின் கோபத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்த ராஜசேகர் தலை கவிழ்ந்து, "சாரி அங்கிள்" என்க
அவர் ஐஸ்வர்யாவை முறைத்து பார்த்து "உன் அப்பா அம்மாவிற்கு தெரியாமல் இப்படி வருவது சரியா? என்றார்.
அவளும் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.
அவளை முறைத்து கொண்டே "ருத்ராவிற்கு உங்கள் காதல் விவகாரம் தெரியுமா?" என்று கேட்க, அவளும் 'இல்லை' என்று மறுத்து தலையாட்டினாள்.
"அவளிடம் என்ன சொல்லி விட்டு வந்தாய்" என்றார்.
"நான் வந்தது அவளுக்கு தெரியாது" என்று கூறி தலை கவிழ்ந்தாள்.
'காதல் வந்ததும் கள்ளத்தனமும் வந்து விடுமோ! என்ற எண்ணம் அவருக்குள் வந்ததுமே 'ருத்ராவும் நம்மிடம் எதையும் மறைத்திருப்பாளோ?' என்று தோன்ற உடனே அவருக்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது.
பதற்றத்துடனே ருத்ராவிற்கு ஃபோன் செய்தார். அதுவோ சுட்ச் ஆஃப் என்று வர, பதட்டத்தில் வியர்த்து விட்டது.
அவரை பார்த்த ராஜசேகர் அவர் தங்களை பற்றி கவலை கொள்கிறார் என்று நினைத்து "நான் அப்பா அம்மாவை அழைத்து வந்து ஐஸ்வர்யா வீட்டில் பேசுகிறேன் அங்கிள்" என்றான்.
இருந்தும் அவர் யோசனையாகவே இருக்கவே "அங்கிள்" என்று அவரின் தோளை தொட்டான்.
அதில் அவனை அவர் வெறுமையாக பார்க்க அவன் குழப்பமாக "என்ன ஆச்சு அங்கிள்?" என்றான்.
அவர் குழப்பமாக "ருத்ரா ஃபோன் சுட்ச் ஆஃப் என்று வருகிறது" என்று கூறி, தன் மனைவிக்கு ஃபோன் செய்து "ருத்ரா வந்து வந்து விட்டாளா?" என்று கேட்டார்.
அவரின் இல்லை என்ற பதிலில் மேலும் பதட்டம் அடைந்தார்.
அவரின் பதட்டத்தை கண்ட ராஜசேகர் "அங்கிள் இன்று தமிழ் வேந்தனுக்கு பிறந்த நாள். ருத்ரா கூட செலபரேட் பண்ணணும் என்று சொல்லி இருந்தான். ருத்ரா அவன் கூட தான் இருப்பாள். கவலை படாதீங்க" என்று சொல்லிக் கொண்டே தமிழ் வேந்தனுக்கு ஃபோன் செய்தான்.
அவனின் ஃபோனும் ஆஃப் என்றே வந்தது. இருவரின் ஃபோனும் சுட்ச் ஆஃப் என்றதும் ராஜசேகருக்கும் சிறிது பயம் தோன்ற கவலையாக சதாசிவத்தை பார்த்தான்.
அவருக்கு மனதில் ஒரு வித பயம் தோன்ற மீண்டும் மீண்டும் ருத்ராவிற்கு ஃபோன் செய்து கொண்டே இருந்தார்.
அவரின் கவலையை உணர்ந்த ஐஸ்வர்யா அங்கிள் "அவள் தமிழ் சார் கூட போயிருக்கா என்று தானே இவர் சொல்கிறார். கவலை படாதீங்க. பத்திரமா வந்து விடுவாள்" என்று அவரின் கையை பிடித்து ஆறுதல் கூறினாள்.
அந்த நேரம் அன்பரசு மகாதேவனுக்கு ஃபோன் செய்தான். "இப்பொழுதுதான் ஆன்ட்டி ருத்ரா வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னதாகவும், நீங்கள் விசாரித்ததாகவும் கூறினார்கள்" என்றான்.
அவருக்கு பதட்டத்தில் பேச்சு வராமல் இருக்க அவரது போனை வாங்கிய ராஜசேகர் அவனிடம் "தமிழ் வேந்தன் ருத்ரா இருவரது ஃபோனும் ஆஃபில் இருக்கிறது. கலைச்செல்வியிடம் ருத்ரா ஏதாவது சொன்னாளா?" என்றான்.
அன்பரசு இல்லை என்று கூறிவிட்டு, ஒரு ஐந்து நிமிடத்தில் உங்களை மீண்டும் அழைக்கிறேன் என்று தன் நண்பனுக்கு போன் செய்து ருத்ரா தமிழ் வேந்தன் இருவர் நம்பரையும் கூறி அந்த அலைபேசி இப்பொழுது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கேட்டான். அவனும் சிறிது நேரத்தில் அவர்கள் நெட்வொர்க் திருவான்மியூரை தாண்டிய பிறகு ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது என்று கண்டுபிடித்து கூறினான்.
அவன் மீண்டும் ராஜசேகருக்கு போன் செய்து "அவர்களது போன் திருவான்மியூரை தாண்டி ஒரு பீச் ரெசார்ட் வரை காட்டுகிறது. அதன் பிறகு எங்கு என்று தெரியவில்லை" என்றான்.
நேரம் தாழ்த்தாமல் உடனே அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து, ஐஸ்வர்யாவை பத்திரமாக வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு, சதாசிவம் மற்றும் ராஜசேகர் அங்கிருந்தே திருவான்மியூர் நோக்கி பயணித்தனர்.
கலைச்செல்வியை ருத்ராவின் வீட்டில் விட்டுவிட்டு அன்பரசுவும் அவனது வண்டியில் திருவான்மியூர் நோக்கி சென்றான்.
அவர்கள் மூவரும் அந்த ரெசார்ட்டில் தமிழ்வேந்தன் புக் செய்திருக்கும் அறை பற்றி ரிசப்ஷனில் விசாரிக்க, முதலில் விவரம் கூற மறுத்தார்கள். பின்னர் ராஜசேகர் மற்றும் அன்பரசு இருவரின் மிரட்டலிலும் சதாசிவம் அங்கு இருப்பது தன் மகள் என்று கூறியதாலும் அவர்கள் அறையை கூற, அங்கு வேகமாக சென்று கதவைத் தட்டினார்கள்.
எந்த பதிலும் வராததால் சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்ட அப்பொழுதும் அமைதியாகவே இருப்பதால் ராஜசேகர் கதவை வேகமாக தள்ள இரண்டடி பின்னால் செல்ல, சரியாக கதவு திறந்தது. அங்கு நிற்கும் மூவரைக் கண்டு தமிழ் வேந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் தலை ஏதோ பாரமாக இருப்பது போல் இருக்க தலையை பிடித்துக் கொண்டே, அறைக்குள் நுழைய தடுத்த படி தன் நண்பனின் மார்பில் கை வைத்து, "இங்கு என்னடா செய்கிறாய்?" என்று கேட்க, அதேக் கேள்வியை ராஜசேகர் அவனிடம் கேட்டான்.
அதற்குள் சதாசிவம் அறைக்குள் செல்ல, அங்கு தரையில் தன் மகள் அலங்கோலமாக மயங்கிய நிலையில் படுத்திருப்பதை கண்டு உள்ளம் வலிக்க அவளின் புடவையை சரி செய்து அவளை தூக்கி மயக்கம் தெளிவிக்க முயற்சி செய்தார்.
அவள் வாயில் இருந்து "வேந்தே வேந்தே" என்று முணங்கள் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
அருகில் இருந்த ஜாடியில் இருந்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான் அன்பரசு. முகத்தில் ஜில்லென்று தண்ணீர் பட்டதும் சிறிது முகம் சுருக்கி கண் திறக்க முயன்றாள் ருத்ரா.
ராஜசேகரும் தமிழ் வேந்தனை இழுத்துக் கொண்டு உள்ளே வந்து, ருத்ராவின் நிலையறிந்து கதவை சாற்றி விட்டு அவனிடம் தண்ணீர் பருக கொடுத்து என்ன நடந்தது என்று கேட்டான்.
ஒன்றும் புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் தமிழ் வேந்தன்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்7 days ago
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
- 143 Forums
- 2,622 Topics
- 3,131 Posts
- 5 Online
- 2,140 Members
