ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
இறுதி அத்தியாயம் 60
பசுவைக் கண்டு ஓடும் கன்று போல் தன் தாயைக் கண்டு விரைந்து ஓடி சென்று அவரை அணைத்து கொண்டார் சதாசிவம்.
வெகு ஆண்டுகள் கழித்து தன் பெரிய மகனை கண்டதில் அந்தத் தாயும் பூரித்து ஆனந்த கண்ணீர் வடிக்க, இருவரின் கண்களும் கண்ணீரோடு மௌனமாக நலன் விசாரித்துக் கொண்டு இருந்தது.
அவர்கள் இருவரும் அழுவதை கண்டு அங்கு வந்த சாந்தசிவமும் தன் தாயை அணைத்து அழுதார். "நான் என்ன பாவம் செய்தேன் அம்மா. என் வாழ்வில் எனக்காக வந்தவளும் சரியில்லை. என்னால் வந்த என் மகனும் சரியில்லை" என்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார்.
அவரின் கைகளைப் பிடித்து என்ன என்று கேட்க, அவர் தன் மனைவி இறந்ததை கூற, அந்த வயதான பெண்மணிக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
"என்ன சொல்கிறாய் சாந்தா?" என்று தன் மகனிடம் கேட்க, அவர் நடந்தவற்றை கூறினான். அவர் தள்ளாடியபடி தன் இளைய மருமகள் இருக்கும் இடத்தில் சென்று அமர, அவரின் அருகில் வந்து அமர்ந்தார் மகாதேவி.
தன் மூத்த மருமகளை முதல் முறை பார்க்கும் நேரத்தை நினைத்து கண்கள் கலங்கியபடி, அவரின் உச்சியில் கைவைத்து ஆசீர்வதித்து, "நாம் சந்திக்கும் நேரத்தை பார்த்தாயா?" என்று கட்டி அணைத்து அழுதார்.
தன் மகள் ருத்ராவை அழைத்து இதுதான் உங்கள் பேத்தி ருத்ரா என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் மகிழ்வுடன் அவளை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து அணைத்துக் கொண்டார். அதன் பின் விரைவாக கங்காவின் இறுதி வேலைகள் நடந்தது.
அனைத்து காரியங்களும் முடித்து நவீன சுடுகாட்டில் வைத்து தீ மூட்டி விட்டு தன் அண்ணனுடன் இல்லம் திரும்பினார் சாந்தசிவம்.
சோர்வாக தன் தாயின் காலடியில் அமர்ந்து, "எல்லாம் முடிந்து விட்டது அம்மா" என்று அவரின் மடியில் முகம் புதைத்து அழுதார்.
அவரின் தலையை தடவியபடி "என்ன செய்வது, நாம் வாங்கி வந்த வரம் அப்படி. இருபது வருடங்களாக நான் பெரியவனை பிரிந்ததை நினைத்து கவலையில் இருந்தேன். என் கண் முன்னே வாழும் உன் வாழ்க்கையிலும்ஒ ஒரு பேராசைகாரியால் நீ அனுபவித்த துன்பங்களை பார்த்து, அந்த கவலையிலுமே என் வாழ்க்கை இத்தனை காலம் கடந்து விட்டது."
"நம் வீட்டின் வாரிசு என்று இருந்த ஒரே பேரனும் இப்படி கீழ்த்தரமான செயலை செய்து நமது மானத்தை வாங்கி விட்டான்" என்று கூறும் போதே அவரது கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்தது.
நடந்து முடிந்ததை பற்றி பேசி இனி ஒரு பயனும் இல்லை என்று கண்களை துடைத்துக் கொண்டு "இனி நான் வாழும் கொஞ்ச நாட்களும் என் இரு மகன்களுடனும் வாழ ஆசைப்படுகிறேன். நீ என்ன சொல்கிறாய் சாந்தா" என்று தன் சின்ன மகனை ஏக்கமாக பார்த்தார்.
சாந்தசிவமும் "இனிமேல் நம் ஊரில் நாம் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பாதகச் செயலை செய்துள்ளான் என் மகன். சொத்துக்களை விற்றுவிட்டு இங்கே சென்னையிலேயே அண்ணனுடன் இருந்துவிடலாம்" என்று ஒத்துக் கொண்டார்.
தன் தம்பியும் தாயும் தன்னுடன் இருப்பதில் மகிழ்ந்தாலும் தன் தம்பி இதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்துள்ளான் அப்படிப்பட்டவனால் எப்படி சென்னையில் வாழ முடியும் என்று வருந்தி அவனிடம், "விவசாயம் செய்யாமல் உன்னால் இங்கு இருக்க முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு சாந்தசிவமும், "மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும் அண்ணா. பழகிக் கொள்கிறேன். இனிமேல் என்னால் நம் ஊருக்கு செல்ல இயலாது" என்று கண்ணீர் வடித்தார்.
அவரின் கண்ணீரைக் கண்டு வருந்திய சதாசிவம் "சரி தம்பி.. அழாதே.. நாம் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
பின்னர் தன் தாயிடம் ருத்ராவிற்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதை பற்றியும் கூற சாந்தசிவமும் மிகவும் மகிழ்ந்தார்.
ஊரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கு கூட ஊருக்கு செல்ல விரும்பவில்லை சாந்தசிவம். ஆகையால் தன் தம்பியை மட்டும் தனியாக அனுப்ப முடியாமல் சதாசிவமும் அவருடன் வருவதாக கூறி இருவரும் ஊருக்கு சென்று தங்கள் சொத்துக்களை விற்க முடிவு செய்தனர்.
அனைத்தையும் விற்க ஏற்பாடு செய்துவிட்டு தங்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை வந்தார்கள் சதாசிவமும் சாந்தசிவமும்.
அதற்குள் ஒரு வாரம் கடந்து இருக்க காமேஷ்வரை தூக்கிலிடும் நாள் வந்தது. அரசு தரப்பிலிருந்து அவனது உடலை பெற்றுக்கொள்ள கூறி வந்த கடிதத்திற்கு அவனின் உடலை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அனாதை பிணம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்களோ அப்படியே செய்து விடுங்கள் என்று உறுதியாக கூறிவிட்டார் சாந்தசிவம்.
அன்றுடன் காமேஷ்வர் என்ற அகம்பனனின் கதை முற்று பெற்றது.
திருமண வேலைகள் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். தினமும் ருத்ராவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வது சாந்தசிவத்தின் பொறுப்பானது. ருத்ராவிற்கும் தன் முன் ஜென்ம ஞாபகம் வந்ததால் தன் சித்தப்பாவுடன் நெருங்கி பழகினாள்.
கல்லூரிக்குப் போகும்போதும் வரும் பொழுதும் தன் சித்தப்பாவிடம் பேசிக்கொண்டே வருவாள் ருத்ரா. அவர்கள் இருவருக்குள்ளும் அருமையான பந்தம் உருவானது. சாந்தசிவத்திற்கும் தன் மகனின் நினைவை மறப்பதற்கு ருத்ரா பெரிதும் உதவினாள்.
ஊரில் சொத்து விற்ற பணத்தில் சென்னையில் விவசாயம் செய்ய வயல் வாங்கி தன் தம்பிக்கு கொடுத்தார் சதாசிவம். தன் மனதிற்கு பிடித்த வேலை செய்வதில் மகிழ்ந்தார் சாந்தசிவம்.
திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து தமிழ் வேந்தன் ருத்ராவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான்.
முன் ஜென்ம ஞாபகம் வந்ததில் இருந்து, அகம்பனனை பார்க்கும் வரை அவனுக்கு ருத்ரா மீது அளவில்லா காதல் மட்டுமே இருந்தது.
தன் அத்தை மகாதேவி ருத்ராவின் இருபத்தியோராம் பிறந்த நாளுக்கு பிறகு தான் திருமணம் என்று ஆணித்தரமாக கூறியதன் காரணம் அகம்பனனை பார்த்த பிறகு தான் விளங்கியது.
தான் அன்று எல்லை மீறாமல் இருந்திருந்தால் அத்தனை துன்பங்கள் நடந்திருக்காது. இத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
ஆகவே இனி திருமணம் முடிந்த பிறகு தான் அவளுடன் பேச வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான். ஆனால் அதில் அவன் பட்டபாடு...
அதோ இதோ என்று திருமண நாளும் வந்து விட்டது.
பட்டு வேட்டி சட்டையில் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தான் தமிழ் வேந்தன்.
வாய் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தாலும் கண்கள் மணமகள் அறை வாயிலை நோக்கி நொடிக்கு ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஐயர் பொறுமை இழந்து மாப்பிள்ளை இங்கே பாருங்கோ பொண்ணு நேரத்துக்கு வருவா நீங்க மந்திரத்தை ஒழுங்கா சொல்லுங்கோ என்று கிண்டல் செய்ய, மணமேடையில் நின்ற சொந்தங்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்க, அசடு வழிய சிரித்துக்கொண்டே ஐயரை பார்த்து விட்டு மீண்டும் அவன் கண்கள் மணமகள் அறையை நோக்கியது.
ஒரு வழியாக அவனை மேலும் காக்க வைக்காமல் ருத்ரா தோழிகளுடன் மணமேடை நோக்கி வந்தாள்.
தாமரை வண்ண புடவை தங்க ஜரிகையில் மின்ன தேவதை போல் அசைந்து நடந்து வரும் ருத்ராவை பார்த்த தமிழ் வேந்தன் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்து விட்டான்.
அவனின் அந்த மோனநிலையை கைகள் அசைத்து களைத்த ஐயர் மாப்பிள்ளை ஜலம் வழிகிறது என்று சொல்ல மணமேடையே மகிழ்ச்சியில் நிறைந்தது.
தமிழ் வேந்தன் ஐயரை முறைத்துக் கொண்டு மீண்டும் ருத்ரா மேல் பார்வை பதிக்க, அவளோ அசைந்து வந்து அவனின் அருகில் தலை கவிழ்ந்து அமர்ந்து விட்டாள்.
கடந்த ஒரு மாதமாக அவளை பார்க்காத தமிழ் வேந்தன் இன்று அவளை பார்த்த நொடியில் இருந்து கண்களை அகற்றவில்லை.
மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம். கெட்டி மேளம் என்று மங்கள வாத்தியங்கள் முழங்க, பெற்றோர், பெரியோரின் ஆசியுடன், நல்ல நேரத்தில் மங்களநாணை ருத்ராவின் சங்கு கழுத்தில் கட்டி, தன்னில் சரிபாதியாக, தன் மனைவியாக, தன்னவளாக மாற்றினான் தமிழ் வேந்தன்.
அதன்பின் மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிய கூடியிருந்த சொந்தங்கள் பரிசு கொடுத்து வாழ்த்திச் செல்ல நேரம் இனிமையாக கடந்தது காலை முதல் முகூர்த்தத்தில் தமிழ் வேந்தன் ருத்ரா திருமணம் இனிமையாக முடிவடைய அன்றே இரண்டாம் முகூர்த்தத்தில் ராஜசேகர் ஐஸ்வர்யா திருமணமும் இனிமையாக நடந்தேறியது.
பெற்றோர், பெரியவர், சொந்தம், பந்தம், நட்பு என்று அனைவரின் ஆசியுடன் ஜென்ம ஜென்மாக காத்திருந்த தமிழ் வேந்தன் ருத்ரா காதல் இந்த ஜென்மத்தில் இருவரின் திருமணத்தில் நிறைவேறியது.
அன்புடன் இருவரும் இல்லறம் தொடங்கி, நட்புக்கள் சொந்தங்களுடன் இனிமையாக வாழ பெற்றோர் பெரியவர்களுடன் நாமும் வாழ்த்துவோமே ....
சுபம்.
- அருள்மொழி மணவாளன்.
தொடர்ந்து கதை படித்த வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 😊 😊 🙏🙏
Leave a reply
-
ருத்ரமாதேவி - 591 week ago
-
ருத்ரமாதேவி - 582 weeks ago
-
ருத்ரமாதேவி - 572 weeks ago
-
ருத்ரமாதேவி - 562 weeks ago
-
ருத்ரமாதேவி - 552 weeks ago
- 143 Forums
- 2,622 Topics
- 3,131 Posts
- 5 Online
- 2,140 Members
