Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-4

Hello Miss எதிர்கட்சி-4

அத்தியாயம்-4

  ஆராவமுதன் தன் போனை
செயல் புரிய வைக்க போனின்
உதிரி பாகங்களை மீண்டும் இணைத்து ஆன் செய்ய இம்முறை உயிர் பெற்றது.  

நெட்வசதி உள்ளதா என்று ஆராய  நோட்டிபிகேஷன் வந்தது. சைலண்டில் போட்டிருந்த காரணத்தால் சுரபி அவனின் செய்கையை அறியவில்லை. அவளும் டிவியில் தன்னை பற்றி வரும் செய்தியை பார்த்து நிவாஸை பற்றி புரிந்துக்கொள்ள முயன்றாள். தன்னிடம் விசுவாசமாக உள்ளவன், என்ன காரணத்திற்காக தவறு செய்கின்றான் என்ற கோணத்தில் மூழ்கியிருந்தாள்.

  ஆராவமுதன் தொலைப்பேசி வேலை செய்வதாக அவளிடம் தெரிவித்தால் உடனடியாக அவளது தந்தைக்கு அழைத்து பேசி, அடுத்த நிமிடமே இங்கிருந்து சென்றிடுவாளோ என்று எண்ணியவனுக்கு, அவள் அவனை விட்டு செல்வதில் விருப்பமில்லை. அந்த நேரம் தான் தானும் அவளை விரும்ப ஆரம்பித்துவிட்டோமா? என்று சந்தேகம் பிறந்தது.

  ஏனெனில் சுரபி அவனிடம் காதலிப்பதாக கூறியப் பொழுது அதை விளையாட்டாக எண்ணி, ‘போ.. போய் படிக்கிற வழியை பாரு. ஒட்டடை குச்சி மாதிரி இருக்க. என் டேஸ்டுக்கு என் ரேஞ்சுக்கு, முதலமைச்சர் மகன் என்ற அந்தஸ்துக்கு, இன்னமும் அழகான பொண்ணை எதிர்பார்க்கறேன்.
   நீ எங்கப்பாவோட  பிரெண்ட்டோட பொண்ணு மட்டுமே. மத்தபடி உனக்கென்ன தகுதியிருக்கு?’ என்று கேலி செய்தவனே.

  அப்பொழுது அரும்பிய மீசை கல்லூரியில் பல பெண்கள் வரிசையாக காதலிப்பதாக கூறிய காலம். தனக்கு இந்த ஒடிசலான சின்ன பெண் காதலியா? என்ற கேலியில் அவமதித்தான். பள்ளிப்படிப்பில் இருப்பவள் ஒடிசலாக ஒல்லியாக தான் அவள் வயதிற்கு ஏற்ப இருந்தாள்‌.

  இன்று அப்படியா? சுரபியின் மனதைரியம், அவளது வாள் பேச்சு, புத்திக் கூர்மை, வயதிற்குண்டான அழகோடு அறிவானவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் தந்தைக்கு எதிராக எப்பொழுது அரசியல் களத்தில் குதித்த பொழுது, ஏளனமாய் நினைத்தான்.

  நாளாக நாளாக பற்பல மாநாட்டில் அவளது பேச்சும் தைரியமும் அவனை  அவள் பக்கம் ஆர்வம் தூண்டும் விதமாய் சாய்த்தது.

  ஏன்… இன்று, இங்கு வந்த நேரம் கூட ‘நீ எதிர்கட்சி அமைச்சரின் மகள் சுரபியை விரும்புகின்றாயா?’ என்று கேட்டிருந்தால் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்திருப்பான்.

  ஆனால் அவளை சந்திக்க வேண்டும் என்று புயல் மழை என்று பாராது, அவளிடம் பேச சென்றவனுக்குள் காதலென்ற புயலும் ஏதோவொரு நொடி ஆக்கிரமித்தது என்று அவனே அறியாதது. இன்னும் அறிந்தானா என்பதும் சந்தேகமே.

  ஏதோவொரு கோபம், அவளை மயக்கப்படுத்தியவர்களை வெறிக்கொண்டு அடித்து, அதே காரில் தள்ளி சுரபியை அவர்களிடமிருந்து காப்பாற்றி, தன் தோளில் தூக்கி சுமந்து வந்து, ஈரமான உடையை களைய சென்றப்பொழுது, ஒரு பெண்ணின் ஆடையை களைய போகின்றோம்னு என்ற பயமோ நடுக்கமோ இல்லாமல், ‘என் சுரபி தானே’ அவளுக்கு செய்யும் உதவியாக தோன்றிய மாய எண்ணத்தை கண்டு அதிர்ந்தான்‌.

  தன்னை விரும்பிய பெண் என்பதாலோ, என்னவோ அவளது தேகத்தை தழுவிய உடையை, சுரபி அனுமதியின்றி உரிமையாய் அகற்றினான்.

  லேசாக சலனம் உண்டாகும் மனதை அடக்கிட பெரும் பாடுபட்டான் ஆராவமுதன்.

  இதோ இப்பொழுதும் அவளது முகத்தை கண்டால் அவளது இதழை சுவைக்கும் ஆசை. தலைக்குள் பித்தமேறும் பேராசை எல்லாவற்றையும் அடக்கிவிட்டு, பழைய காதலை அவளிடம் எதிர்பார்த்து யாசித்து நிற்பதாக தோன்றியது. முன்பு மறுத்துவிட்டு இன்று அந்த காதலை தேடினால் அவளிடம் கிடைக்குமா?!

    அங்கே சுரபி முகமோ, தந்தை அழுவதை கண்டு சுணங்க, ‘பச் என் சுயநலத்துக்காக அவளை இங்க இருக்க சொல்ல முடியாது. அவங்க அப்பாவிடம் அவளை பேச வைக்கணும். அதோட இது காதல் இல்லை. அவ என்னை முன்ன விரும்பினா. அவளுக்கு மறுப்பு சொல்லியிருந்தேன். இப்ப ஆளை அசரடிக்கற மாதிரி அழகா வந்துயிருக்கா. ஆண் மனசு இல்லையா சலனப்படுது அவ்ளோ தான் மத்தபடி இது காதலா இருக்காது’ என்று தன் எண்ணத்திற்கு வேறு சாயம் பூசிக்கொண்டான்.

லேசாக தொண்டையை செருமியபடி, “சுரபி போன் ரெடியாகிடுச்சு. நெட் சிக்னல் கிடைக்குது. உங்கப்பாவிடம் நீ உயிரோட இருப்பதை முதல்ல தெரிவித்திடு. இங்க கார் அரேன்ஜ் செய்து, பிறகு உங்க அப்பாவிடம் நேர்ல போய் பாரு” என்று நீட்டினான்.

   சுரபி உடனடியாக வாங்காமல் போனை வெறித்து, “இல்ல… எனக்கு என்னை கிட்னாப் செய்தது
யாரு? எதுக்குனு தெரியணும்.

கிட்னாப் பண்ண மட்டும் ஆசைப்பட்டாங்களா? இல்ல கொலை செய்ய விரும்பினாங்களா? எல்லாம் தெரிஞ்சப்பிறகு அப்பாவிடம் பேசிக்கறேன். அம்மா தான் அபாய கட்டத்தை தாண்டியதாகவும் கண்முழிக்க காத்திருப்பதா சொல்லி நியூஸ் ஓடுதே. பொறுந்திருந்து பார்க்கறேன். இந்த சதுரங்கத்தை நான் யாரோட ஆடறேன்னு.” என்றதும் ஆராவமுதனுக்கு ஆனந்தம்.

  அப்படியென்றால் அவனோடு இங்கே உலாத்த போகின்றாள்.

   “தேங்க்ஸ்” என்று உதட்டுக்கடியில் சிரிப்பை ஒலித்து வைத்தான்.

   அவன் சிரிப்பை கண்டுவிட்ட சுரபியோ, “தேவையில்லாம கோணல்மாணலா யோசிக்காத. நான் ஒரு காரியத்திற்காக தான் தங்கறேன். தவிர, உன்னை விரும்பிய முட்டாள் பெண் கிடையாது நான்.” என்று வார்த்தையை கடித்து துப்பினாள்‌. பின்னே அவன் சிரிப்பு இவளை கொல்லாமல் கொல்கின்றதே. முன்பு காதலித்த இதயம் இன்றும் குறுகுறுக்காதா?!
  முன்பே கொள்ளை அழகு. இன்று அதை விட வாட்டசாட்டமாய், தேக்கு மரத்தூண் போல வளர்ந்து நிற்பவனை கண்டால் லேசாக இதயம் தாளம் தப்புகின்றதே. அதை இவன் அறிந்து விட்டால்..?
    என்னவோ இவனோடு ஆசையாக தங்குவதாக தப்பர்த்தம் புரிந்துக்கொண்டால் இவளுக்கு அவமானமாயிற்றே.

   ஆராவமுதனோ “என்னை விரும்பிய அதே இன்னோசண்ட்டான லிட்டில் கேர்ள் நீ இல்லைன்னு தெரியும். ஆக்சுவலி அந்த காரணத்தால் மட்டும் தான் உன் மேல செம கோபம் வருது.” என்று அவன் சலனமின்றி உரைத்தான். அவன் அந்த இன்னோசெண்ட்டான பெண்ணை அதிகமாக எதிர்பார்த்து ஆசைக்கொண்டான்.

  ஆனால் அவன் பேசியதை  கேட்டவளுக்கு தான் மிளகாய் கடித்தது போல காந்தியது.
   “வாட்… கோபமா? ஓ… இப்பவும் அதே தத்தியா, உலகம் தெரியாம இருப்பேன்னு நினைச்சிங்களா?” என்று முகம் திருப்பினாள்‌. ‘அதே கூமுட்டையா இருந்து காதல் பேத்தல்னு உலறுவேன் கேலி செய்ய வசதியா இருக்கும்.’ என்று முனங்கினாள்.

  “இன்னோசண்ட் கேர்ள் என்றதும் தத்தினு ஏன் நினைக்கற.  மேபீ… இன்னோசண்டா ஆக்டிங் பண்ணறவங்களை பார்க்கும் போது தத்தியா தான் தோணும். பட் நான் அந்த மீனிங்ல சொல்லலை‌. நீ என்னை விரும்பறதா சொல்லி என் விருப்பத்தை கேட்டப்ப, உன் மனதை, உன் முகபாவத்தை, நான் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனா எப்ப நீ அரசியலை கரைச்சி குடிச்சி மேடையேறி எங்கப்பாவை விளாசி தள்ளி பேசினியோ அப்ப அந்த செகண்ட் பீல் பண்ணிருக்கேன்.
   நீ எந்தளவு என்னை வெகுளித்தனமா விரும்பி சுத்தியிருந்த, அதை நான் அசட்டையா விட்டுட்டேன்னு. உன் வெகுளித்தனம் எல்லாம் மாயமா போயிடுச்சு.

இப்ப ஆக்ரோஷமான புயலா மாறி நிற்கறியே. உன் இயல்பை தொலைச்சிட்ட சுரபி.

ஆங்… அதுக்காக இப்ப உன் காதலை ஏற்றுப்பேன்னு நினைக்காத.  எங்கப்பாவை, என்னை, நீ மதிக்காத போது, உன்னிடம் இறைஞ்சு வளைய மாட்டேன். நீ இப்ப என்னை விரும்பறேன்னு சொல்லவும் மாட்டனு தெரியும்‌.” என்று திமிர் கலந்து உரைத்தான்.‌

  “நான் உன்னை திரும்ப விரும்ப மாட்டேன் என்ற வகையில், இந்தளவு உன் மூளைக்கு புரியுதே… தங்கள் புரிதலுக்கு நன்றி.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

  ஆராவமுதன் அவளது கையெடுத்து கும்பிடும் விதம் பார்த்து நகைத்து, “பழக்க தோஷமோ… எப்பபாரு கையெடுத்து கும்பிடற. நான் உன் நெஞ்சில் குடியிருக்கும் மக்கள் இல்லை.” என்று அவள் இதயமிருக்கும் பக்கம் கைநீட்டி சுட்டிக்காட்டி பேச, “அப்பப்பா கொஞ்சம் சும்மாயிருக்கியா.” என்று நகம் கடித்தவள் அங்கும் இங்கும் உலாத்தினாள்‌. அவன் தன்னை தீண்ட வந்த காட்சியை மாற்றி எழுந்துவிட்டாள்.

   ஆராவமுதன் அவளை விடாமல், தன் பங்கிற்கு ஒளிவுமறைவின்றி அவளை தரிசித்து ரசித்தான்.

   நிவாஸிற்கு நான் கட்சி வந்தப்போது அவன் தானே என்னை மேடையேற்றி அழகுப் பார்த்தது. அப்படியிருக்க நிவாஸை சந்தேகிப்பது சரியா? எனக்கு மேடையில் என்ன பேச ஏது பேச என்று சில நுணுக்கத்தை கற்றுத் தந்ததே நிவாஸ் தான். அப்படியிருக்க நிவாஸ் என்‌னை கடத்தும் அளவிற்கு செல்பவனா என்ன? என்று குறுக்கும் நெடுக்கும் அலைந்தாள்.
 
   அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நிவாஸுக்கு, தான் அரசியலுக்கு வர பிடிக்காமல் இருந்தால் அவன் ஏன் அவளை ஏற்றம் புரிவதாக மேடையில் என்ன பேச வேண்டும் பேசக்கூடாதுயென்ற அடிப்படையை சொல்லித் தருவானா?
  இது வேறு யாரோ.  

   ஒருவேளை தன்னை இங்கே கடத்தி காதல் நாடகம் நடத்தி, கட்சியை ஒன்று சேர்க்கும் திட்டமா? ஆராவமுதனுக்கு அவன் தந்தை இலக்கியனுக்கு அரசியலில் இருப்பதே பிடிக்காது. இதில் தன்னை கடத்துவானா? ஆனால் ஆராவமுதன் கூறுவதை அசட்டையாக விடுவித்திடவும் முடியாது.  

     மெதுவாக நிதானித்தாள் சுரபி. தாய் தந்தைக்கு நலமுற்றதை டிவி மூலமாக அறிந்தவள், தற்போது உயிரோடு இருப்பதை தெரிவிப்பதை தவிர்க்க நினைத்தாள். ஏனெனில் நிவாஸ் தான் இல்லாமல் சென்னை பறந்து விட்டது லேசாய் உறுத்தியது. எப்பொழுதும் தன்னை தன் கூட்டில் விட்டுவிட்டு செல்பவன். இன்று விமானத்தில் தான் ஏறிவிட்டோமா இல்லையா என்று காணாது சென்றது எப்படி?

  அதோடு, ஆராவமுதனின் தந்தை இலக்கியனிடம், எப்படியும் இதை வைத்து ஒரு அரசியல் செய்திடும் ராஜதந்திரம் அவள் கண்ணில் மிளிர்ந்தது. அதோடு தன் முன்னாள் காதலனோடு மீண்டும் பேச பழக கிடைத்த வாய்ப்பை நழுவ விட அவள் ஒன்றும் முட்டாள் இல்லை. அதுவும் முதலமைச்சரின் மகன்… ஆரவமுதன்.’ என்றதில் கூடுதலாக இலக்கியனை தரம் தாழ்த்திடும் தந்திரம் அவளுக்குள் உதித்தது.

   “அமுதன் நான் இங்க இருப்பதை இலக்கியனுக்கு சொல்லிட்டியா?” என்று கொஞ்சினாள். இந்த கொஞ்சல் எல்லாம் வித்தியாசம் தெரியாத பாமரன் அல்ல ஆராவமுதன். ஆனால் தானாக வந்து தலையை கொடுக்கும் ஆட்டை கொஞ்சி இலை தழையை கொடுத்து வருடிட அவனுக்கு விருப்பமே. அப்பொழுது தானே விருந்தாக சுவைக்கலாம்‌

 ஆராவமுதனும் காரியவாதியாக, “இலக்கியன்… ம்ம்ம்… தமிழ்நாட்டோட முதலமைச்சர், எங்கப்பா…

  இந்த ஆரவமுதனின்‌ அப்பா. உனக்கு இலக்கியன்.. நல்லது…அவர் தானே பெயர் வச்சார். அந்த திமிரில் நீ ரொம்ப தான் பேசற. அவரும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கறார்.” என்று மிதப்பாய் உரைத்தான்.

  ”பச் நான் இங்க இருப்பதை சொன்னியா?” என்றாள் காரியத்தில் கண்ணும் கருத்துமாய்..

  ”இல்லை… அவரிடம் சொன்னா… அடுத்த செகண்ட் நண்பன் நட்ராஜ் அழறதை பார்த்து மனசு தாங்காம உடனே போன் போட்டு, நட்ராஜ் உன் பொண்ணு என் பையன் கூட இருக்கா கவலைப்படாதனு சொல்வார். ஏன்னா.. அவருக்கு நண்பனிடம் அரசியலை தாண்டி,  ஏதாவது காரணத்தோட பேசி பழகணும். அந்த வாய்ப்புக்காக பாவம் தவம் கிடக்கார்” என்று கூறியவன், பெண்ணவளிடம் நெருக்கமாய் வந்து நின்றான்.

   சூடான மூச்சு காற்றை ஊதியவன், “நாம நினைச்சா அவங்க நட்பை மீண்டும் மலர வைக்கலாம்.” என்று சுரபியின் படபடக்கும் இமைகளையும், உதட்டையும் மார்க்கமாய் பார்த்து பெருமூச்சு விட்டான்.

  அவன் பார்வை சூட்டில் லேசாய் தன் மனதை அசைத்திட, அவனை தள்ளி விட்டு மறுபக்கம் சென்றாள்.

  ‘தன்னை நாசூக்காய் தவிர்த்து சென்றவளின் முகமாறுதல் அவள் மனதில் இன்னும் தன் நினைப்பு ஓடுவதை சொல்லாமல் சொல்ல, அக்கணமே அவளை கைக்குள் வைத்திடும் முடிவு தோன்றியது.

  தன் தந்தையை மேடையில் வைத்து கிழிகிழியென கிழிக்கும் சுரபியை இங்கே தன் கட்டுப்பாட்டில் ஆட்டுவிக்கும் பொம்மையாக மாற்றினால் என்ன? என்ற விபரீதமான எண்ணம் உதிக்க, ‘மாட்டிக்கிட்டியே சுரபி. இங்கிருந்து கிளம்பும் போது இந்த அமுதனை மறக்கவே முடியாத அளவுக்கு உன்னை மயக்கத்தில் தள்ள வைப்பேன்.’ என்று மனதிற்குள் சவாலிட்டு சிரித்தான்.

-தொடரும்.

யாராவது தொடர்ச்சியா வந்து உளவு பார்த்து கதையை காப்பி அடிக்காதிங்க காபி ரைட்டர்ஸ்.

அப்பறம் என்னைக்காவது போஸ்ட் போட்டு ஆதாரத்தோட வரிசையா உங்களை பற்றி விவரம் தர வேண்டியதாக மாறும்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது திருடறிங்க. கடுப்பா இருக்கு. சொந்த மூளையில் ஏதாவது யோசிங்க.

தலைப்பு திருடறது பாண்ட் ஷ்டைல் திருடறது. இப்ப கதை தீம். ஏன்…

10 thoughts on “Hello Miss எதிர்கட்சி-4”

  1. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    ஆஹா..! ரெண்டு பேருமே இப்படி சாம்பல் பூத்த நெருப்பா..
    ஒருத்தரோட எண்ணத்துல மற்றவர் மூழ்கி முத்தெடுக்கிறது தெரியாம, இப்படி ஒருத்தருக்கொருத்தர் ஏமாத்திக்கிறாங்களே…
    ஏன் ? இந்த நிலைமை…?
    ஆக மொத்தம், ரெண்டு பேருக்குமே மண்டை முழுக்க ஈகோ தான் நிறைஞ்சிருக்குங்கறது நல்லாவேத் தெரியுது.

    அது சரி, இது நிவாஸோட வேலையாத்தான் இருக்குமோ…? இதனால அவனுக்கு என்ன லாபம் ?
    அவனோட லாபத்துக்காக மட்டும் தானா..? இல்ல வேற யாருக்காவது விலை போயிட்டானா..? புரியலையே ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. அமுதன் சொல்றத பார்த்தா..நிவாஸ் மேல சந்தேகம் வர்து….ஆனா…🤔🤔அப்படியும் நினைக்க முடியல..,யாரா இருக்கும்….அமுதா,உன்னோட பிளான் தான் என்ன?….. அவளை ரொம்ப ரசிக்கிற….

  3. Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 unmaiyave nivas dhan ethellam pandrana Ella vera yaravadha parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *