Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-9

Hello Miss எதிர்கட்சி-9

அத்தியாயம்-9

  தந்தைக்கு போன் பேசி வைத்தவன், சுரபியை கண்டு நடந்து வர, “ப்ளீஸ் ஒவ்வொருத்தரா கேளுங்க” என்று தொலைக்காட்சிக்கு செய்தி சேகரிப்பவர்களை அமைதிப்படுத்த துவங்கினாள்‌.

  “மேடம் நீங்க காணாம போனதா சொன்னாங்க? இறந்துட்டதா நியூஸ் வந்துச்சு”

   “மேடம் உங்களை கிட்னாப் பண்ணியதா வதந்தி வந்ததே.”

“நிலசரிவு நேரத்தில் மக்களோட மக்களா உதவி செய்ததை எப்படி உணருறிங்க மேடம்”

“இந்த இக்கட்டில் கட்சி பணத்தில் உதவி செய்வதால் வர்ற தேர்தலில் உங்க கட்சி வெற்றி பெறும்னு நம்பறிங்களா?”

  “ஆளுங்கட்சி முதல்வரோட மகன் கூடவே நீங்க உதவி செய்யறிங்க. உங்களுக்குள் காதலா மேடம்?” என்று வரிசைக்கட்டி வந்தனர்.

  ஆராவமுதனை சுற்றி பவுன்ஸர் வந்து அவனை சாதாரண மக்கள் மற்றும் மீடியாவை அணுக விடாமல் காத்திட, அவனோ நிதானமாக போன் பேசி சுரபி அருகே வந்தான்.

“வெயிட் வெயிட் வெயிட். ஒவ்வொன்னா பதில் தர்றேன்.” என்று அமைதிப்படுத்தினாள்‌.

  “வணக்கம்… இந்த இடத்திலயும் உதவி செய்ய முன் வராம, உங்க சேனல் டிஆர்பிகாக சின்சியரா உழைக்கறிங்க. பாராட்டுக்கள்… வேலை என்று வந்துட்டா அடுத்தவங்க உயிர் கிள்ளு கீரை தான்.” என்றதும் “மேடம்… உதவ ஆட்கள் இருந்தாங்க… அதோட இந்த லைவ் போனா தானே மற்ற மக்களுக்கும் இங்க நிலசரிவு நடந்ததை பார்த்து உதவ ஆட்கள் ஓடிவந்தாங்க” என்று கூறினார்.

  ஒருவிதத்தில் நடப்பது மற்றவருக்கு தெரிந்தால் தானே உடனடியாக உதவ ஓடிவந்தது. அதனால் அதை மன்னித்து மறந்தாள்.

  “சபாஷ்.. அப்ப அவரவர் வேலை அவரவருக்கு வெல்லக்கட்டி தானே? என் வேலை என் மக்களுக்கு தொண்டு செய்யறது. நிலசரிவுல இருந்தவங்களை நேர்ல உதவ முடிந்தது உதவினேன்.

   இங்க மாநாட்டு முடிந்து திரும்பறப்ப சில ஆட்கள் வழிமறைச்சு வம்பு செய்தாங்க. ஆனா அவங்களிடமிருந்து தப்பிச்சிட்டேன். அவங்க கிட்னாப் செய்ய வந்தாங்களா, கொலை செய்ய வந்தாங்களா எனக்கு தெரியாது. உயிரோட இருந்திருந்தா கேட்டிருப்பேன். அவங்களும் முந்தாநாள் ஏற்பட்ட நிலசரிவுல கார்ல மாட்டிக்கிட்டதா நேத்து செய்தில பார்த்து தெரிந்துக்கிட்டேன். ஒருவேளை நான் அவர்களிடம் மாட்டியிருந்தா இறந்தும் போயிருக்கலாம். உங்க யூகங்கள் அடிப்படையில் வெளியான செய்திகள் உண்மையாகியிருக்கும்.” என்று கிட்னாப்-கொலை-இறந்துவிட்டார் என்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

  “முதலமைச்சர் மகனோட உங்களுக்கு என்ன சம்பந்தம்?” “விரும்பறிங்களோ?” என்ற குரல் மட்டும் கிணறறுக்கடியில் கேட்டது.

சுரபியோ “என்னை தாக்க வந்தப்ப ஆளுங்கட்சி முதலமைச்சரோட பையன் அந்தபக்கம் வந்தார். அவரால் காப்பாற்றபட்டேன். இந்த அரசியலில் இருப்பவர்களுக்கு நல்லா தெரியும் ஒரு காலத்துல அவர் எங்கப்பாவோட பேமிலி பிரெண்ட். அந்த நட்பு ரீதியாக அந்த நேரம் உதவினார். அதுக்கு காதல் என்று சாயம் பூசறிங்க? அவரால் காப்பாற்றப்பட்டு சிக்னல் இருக்கும் இடமாகவும் மக்கள் வாழற இடத்தை தேடி நடந்து வந்தோம். வர்ற வழியில் இந்த நிலசரிவு நிகழவும் உதவினோம்.

  அப்பறம் கட்சி பணம் என் தனிப்பட்ட பணம், எந்த பணமாக இருந்தாலும் நல்லதுக்கு தான் போகும். வர்ற தேர்தலுக்கு வாக்கு கிடைக்கும்னு இந்த உதவி செய்யப்படலை.” என்று காரமாய் உரைத்தாள்.

“நீங்க காதலிக்கறிங்களா மேடம்? எதிரெதிர் கட்சி இரண்டு பேரும் ஒன்னா இருக்கிங்க” என்று கேட்க, சுரபி பதில் தரும் முன், ஆராவமுதனோ அவள் கையை பிடித்து இழுத்து, “உங்கம்மா சீரியஸா இருக்காங்க உன்னை உடனே வரச்சொன்னாங்க” என்று பேசவிடாமல், அங்கு வந்த காரில் அவளை ஏற்றிவிட்டான்.

  காரில் ஏற்றியதும், “ரீச் ஆனதும் இந்த நம்பருக்கு கால் பண்ணு. சென்னை வந்ததும் மீட் பண்ணறேன்” என்று அனுப்பினான்.

  நொடியில் தனக்கு வந்த காரில் பாதுக்காப்புடன் அவளை அனுப்பிவிட்டான்.

  சிதம்பரமோ, “தம்பி நீங்க போகலையா? உங்களுக்காக தானே கார் வந்துச்சு” என்று கேட்டார்.

  “அங்கிள்… வொயிட் ஷர்ட் பிளாக் பேண்ட் அண்ட் லெதர் செருப்பு. உடனடியா வேண்டும். குளிச்சுட்டு இதே ஏரியால தான் இரண்டு நாள் இருக்க போறோம். ஆளுங்கட்சி முதலமைச்சரோட சார்பா நாம நிலசரிவு அடைந்த மக்களுக்கு பண உதவி, உடை எல்லாம் கொடுத்து அதை போட்டோ எடுத்து முதல் பக்கத்துல தலைப்பு செய்தியா மாத்தணும்.” என்று பக்கா அரசியல்வாதியாக பேசினான்.

  “புரிஞ்சிடுச்சு தம்பி” என்று அவர் தூரிதமானார். இத்தனை காலமாக இருப்பவருக்கு ஆராவமுதனின் திட்டம் புரியாமல் போகுமா?!

    திட்டங்கள் தீட்டியவனாக, அடுத்தடுத்து செயல்படுத்த துவங்கினான்.

  ஏதோ ஆளுங்கட்சியான ‘தமிழக எழுச்சி கழகம்’ நிலசரிவுக்காக பண உதவி, உணவு, உடை, தற்காலிக இருப்பிடம், சிலருக்கு உடனடியாக வீடும் கட்ட உத்தரவிட்டான்.
  வீடு கட்ட பணம் அரசாங்கம் தருவதாக அறிக்கைகள் பறந்தன.

இதில் எந்த பதவி பொறுப்பில் இல்லாத முதலமைச்சர் பையன் என்ற அடையாளத்தை ஒழித்து ஆராவமுதன் என்ற தனிமனிதன் இந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டான்.

    இத்தனை நாள் சுரபி மேடைபோட்டு, தொண்டை தண்ணீர் வற்ற பேசிய பேச்சை விட, மூன்று நாளில் ஆராவமுதன் பேசப்பட்டான்.

  சமூக வலைதளத்தில் அவன் முகம் அதிகளவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

  சுரபி இங்கே தன் தாய் தந்தையை பார்த்து, தன் நலத்தையும் தாயின் நலத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு, நிவாஸை சந்தேகத்திற்குள் நிறுத்தி, நிதானமாகும் முன், போஸ்டர் இன்றி, மேடைபேச்சுயின்றி, தன்னை விட ஆராவமுதன் பெயர் இந்த மூன்று நாளில் அதிகம் பரவியதை அறிந்தாலும் வேடிக்கை பார்த்தாள் சுரபி. அவளை பொறுத்தவரை ஆராவமுதன் அரசியலில் வரமாட்டான் என்ற எண்ணம்.

   தொலைக்காட்சியில் ஆராவமுதனின் செயல்களை பார்த்தபடி “நீ அங்கயே இருந்திருக்கணும் சுரபி. ஜனநாயக கட்சி சார்பில் நீ ஏதாவது செய்திருக்கணும்” என்று நட்ராஜ் உரைக்க, “பச் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. என்னை ஆல்ரெடி கிட்னாப் செய்ய வந்த கூட்டம் யாருனு தெரியணும், இதுல நானுமே நிலசரிவில் சிக்கிகிட்டேன். அமுதன் தான் காப்பாத்தினார்‌. பார்த்திங்கள்ல கைல கால்ல அடிப்பட்டு வந்திருக்கேன் 

அங்கயிருந்து நான் வந்துட்டா இப்ப என்ன? நம்ம கட்சி ஆட்கள் உதவியதை தொடர்ந்திருக்கலாமே? ஏன் அவங்க அப்படியே டிராப் பண்ணிட்டாங்க?” என்று சிடுசிடுத்தாள்.

  “மேடம் நம்ம கட்சி ஆட்களை உள்ளயே நுழைய விடாம சதி பண்ணிட்டாங்க. அதோட சேனல்காரங்க ஆராவமுதன் இருக்கும் போது நம்ம அணி தொண்டரை போட்டோ எடுப்பாங்களா?” என்று கூறினான்.

  நிவாஸ் கூறியதும் சரியாக இருந்தது. முதலமைச்சர் மகன் மண்ணில் நின்று உதவி செய்யும் போது சாதாரண ஆட்களை சேனல்காரன் போட்டோ எடுப்பானா?

இந்த நிவாஸ் தனக்கு சரியான மந்திரியாக தான் வேலை பார்க்கின்றான். பிறகு ஏன் சந்தேகப்படும் படியாக நடந்தது?

  என்னை கிட்னாப் செய்ய வந்தவர்கள் நம்ம ஆட்கள் தானே?! மனதில் குடைந்தது. 
 
  “நிவாஸ்… நான் வந்த காரை அடிச்சி நொறுக்கி கிட்னாப் பண்ண வந்தவங்க, அன்றைக்கு நிலசரிவுல மாட்டி காரோட இறந்தவங்க தான்.

   நம்ம கட்சி ஆட்கள். என்னை கிட்னாப் பண்ண மட்டுமா? அல்லது கொலை செய்யவும் நினைச்சாங்களா தெரியலை. நம்ம கட்சி ஆட்களுக்கு என் மேல ஏதாவது கோபம், அதிருப்தி இருக்கா?” என்று கேட்க நிவாஸ் சமாளிக்கும் விதமாக, “அப்படி யாரும் இல்லையே மேடம். நம்ம கட்சி ஆட்களே கடத்த முயன்றதா தெரியாது. அவங்க கூட நீங்க வந்துயிருப்பிங்க, நீங்க மட்டும் மிஸ்ஸிங், அவங்க நிலசரிவுல இறந்துட்டதா நினைச்சேனே” என்று கூறினான்.‌

  “அப்படின்னா கூட என்னை சென்னை போற விமானத்துல ஏற்றிவிட்டுட்டு தானே நீங்க கிளம்பியிருப்பிங்க. வழக்கமா அப்படி தானே நடக்கும்.
   அன்னைக்கு மட்டும் நான் விமான நிலையத்துக்கு வந்தேனா, இல்லையானு கூட பார்க்காம நீங்க கிளம்பிட்டிங்க .” என்று நிவாஸ் அருகே வந்து கேட்டாள்.
 
  “மேடம்… அன்னைக்கு புயல் மழை வருவதா செய்தி. அதனால் நீங்க முன்னரே  கிளம்பிட்டதா நினைச்சேன்.” என்றான் நிவாஸ்.

  “அப்ப என்னை விட உங்களுக்கு உங்க உயிர் முக்கியம்னு சரியா பார்க்காம ஓடியாச்சு. புயல் மழை வருதுன்னு ஓடியிருக்கிங்க. ஆனா நிவாஸ்… மேடம் மேடம்னு மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரித்த என்னுடைய நலனில் உங்களுக்கு அக்கறை இல்லை.

  அக்கறை இல்லையா… இல்…லை…. ஓவர் அக்கறையில் தான் என்னை சாகடிக்க திட்டம் தீட்டினாங்களா?” என்றாள்.
 
  “மேடம்.. நீங்க என் மேல சந்தேகப்படறிங்க” என்று பொங்கினான்.

   “சந்தேகப்படலை‌ ஊர்ஜிதமா நீங்க தான்னு சொல்லறேன். இதெல்லாம் என்ன?” என்று லேப்டாப்பில் புகைப்படத்தை காட்டினாள்.

   அதில் நிவாஸ் ரசனையாக, சுரபியை நோட்டமிடும் புகைப்படமாக இருந்தது.

  திருட்டு முழியில் நிவாஸ் அவள் புறம் திரும்பி, “மேடம் இதுக்கும் உங்களை கிட்னாப் பண்ணறதுக்கும் என்ன சம்பந்தம்? உங்களை எனக்கு பிடிக்கும் அதனால் பார்த்தேன். அதோட எதை எதோட முடிச்சி போடறிங்க.” என்றான்.‌

சுரபியோ “பிடிக்கும்னா?” என்று புருவம் தூக்கி கேட்டாள்.

  “பிடிக்கும்னா… தலைவன் தலைவி மீது வைக்கப்படும் உணர்வு மேடம். சங்க கால இலக்கியத்தில் சொல்லப்படுற காதல்” என்று கூறி தலைகவிழ்ந்தான்.

நட்ராஜோ ”நிவாஸ்” என்று கத்த, “சாரி சார்… காதல் தப்பில்லையே. ஏன் காதலிக்க கூடாதா” என்று பதிலுரைத்தான்.‌

“கெட்லாஸ்ட்… இனி உங்க உதவி இங்க தேவையில்லை.” என்று சுரபி கோபமாய் மொழிய, “மேடம் அது வந்து…” என்று பேச வரவும், “வேண்டாம்… எதுவும் சொல்ல வேண்டாம். என் மேல இருக்கற ஆர்வம் தான் நீங்க கட்சிக்கு உதவியது. இனி நீங்க இனி கட்சில எந்த துரும்பு தூக்கி போடவேண்டாம். போங்க” என்று கத்த, நிவாஸ் “நான் கிட்னாப் பண்ணலை மேடம்” என்று அழுத்தமாய் உரைத்து, அவ்விடமிருந்து அகன்றான்.‌

  நட்ராஜனோ “என்னம்மா இது, நிவாஸை அப்படியே விட்டுட்ட” என்றார்.‌

  “என்னப்பா சொல்ல சொல்லறிங்க? இவன் காதலிக்கறான். அதுக்கு கிட்னாப் செய்து என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினானா? இல்லை… கொலை செய்ய முடிவெடுத்தானோ, அன்னைக்கு என்ன கொல்லறதுக்கு வந்துட்டாங்க. ஜஸ்ட் மிஸ்…

  அதோட விமான நிலையத்தில் என்னை அனுப்பிட்டு தானே எப்பவும் போவான். அன்னைக்கு மட்டும் என்ன தலை போற வேலையா? அங்கிருந்தா மாட்டிப்போம்னு ஓடி வந்துயிருக்கான்.” என்று பொறுமினாள்.

   “அது சரி… நீ எப்படி டி இலக்கியன் அண்ணனோட பையன் கூட வந்து நின்ற?” என்று பல்லவி கேட்டார்.

  “அம்மா… இப்ப தானே உடம்பு தேறியிருக்கு. அதுக்குள்ள இங்க வந்துட்டிங்களா. டாக்டர் உங்களை பெட்ரெஸ்ட் எடுக்க சொன்னார்.” என்று அன்னையை அழைத்து சோபாவில் அமர வைத்தாள்.

  “நீ எப்ப கண் முன்ன வந்தியோ அப்பவே எனக்கு நோய் நொடி என்னை விட்டு ஓடிடுச்சுடி. இந்த போட்டோ எல்லாம் யார் கொடுத்தா?” என்று லேப்டாப்பை சுட்டிக்காட்டி கேட்க, மெயிலை மூட சென்றாள்.

  “ஆராவமுதன் மெயில்ல செண்ட் பண்ணினார்ப்பா” என்று குரலில் சிறு ஸ்ருதி குறைந்தது.

  பல்லவிக்கு ஆராவமுதன் என்று சுரபியின் வாயிலிருந்து பெயர் வந்ததும், கணவரை கேளுங்கள் என்றது போல ஒர் பார்வை பார்த்தார்.

   “அவன் காப்பாற்றியதா சொன்னியே.. எப்படிம்மா?” என்று கேட்க, அதே நேரம், தொலைக்காட்சியில், நமது வனத்துறை அதிகாரிகள் யானையின் நடமாட்டத்தை கண்கானிக்க வைத்த கேமிரா பதிவில், நம் ஆளுங்கட்சி முதலமைச்சர் இலக்கியனின் மைந்தர் ஆராவமுதனும், எதிர்கட்சி தலைவர் நட்ராஜனின் மகளும், இளைஞர் அணி தலைவியுமான சுரபி, இருவரும் சேர்ந்து பள்ளத்தில் விழுந்த யானையை மீட்க போராடும் காட்சிகள்” என்று ஒளிபரப்பப்பட்டது.

  அதில் நட்ராஜன் பல்லவி சுரபியின் கவனம் சென்றது. குட்டி யானைக்கு உதவியது அதில் பதிவாகி இருந்தது.  

  “இப்படி தான் நானும் நிலச்சரிவுல மாட்டி பள்ளத்தாக்குல விழறப்ப காப்பாத்தினான். அமுதன் கிட்னாப் செய்தவங்களை அடிச்சிட்டு என்னை காப்பாத்தினான். ஒல்ட் கெஸ்ட் ஹவுஸ் இருந்ததே.. லீவுக்கு கூட இரண்டு மூன்று முறை கூட்டிட்டு போனிங்களே… அங்க தான் தங்கினோம். அடுத்த நாள் காலையில் காபி குடிக்கறப்ப, நிலச்சரிவு ஆகிடுச்சு. என் கண் முன்ன சரிந்தது. கண் திறக்கறப்ப புதைக்குழி மாதிரி மாட்டிக்கிட்டேன். அப்பவும் ஆராவமுதன் தான் உதவியது. அதோட ஆட்கள் நடமாடும் இடத்துக்கு வரும்வழியில், இந்த இன்சிடெண்ட்.” என்றாள்.

    மனதிற்குள் நைட் ஸ்டே பண்ணின இடத்துல கேமிரா இருந்து இருக்குமா? சை.. வரவர எல்லாயிடத்திலும் கேமிரா.’ என்று பயந்தாள். தன் சேலையை அல்லவா அவனோடு போர்வையாக போர்த்திக் கொண்டு உறங்கியது.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா…

பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா…
நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா…

கேட்கும் ஒலியிலெல்லாம்
நந்தலாலா
நின்றன்
கீதம் இசைக்குதடா
நந்தலாலா…” என்று சுரபியின் புது போனில் பழைய ரிங்டோன் ஒலிக்க, அதில் ‘ஆராவமுதன்’ என்ற பெயர் ஒளிர்ந்தது.

   பல்லவி நட்ராஜனை பார்க்க, அவரோ மகளையும் போனையும் பார்த்து முடிக்க, சுரபியோ சங்கடமாய், போனை எடுத்து “பேசிட்டு வர்றேன்ப்பா” என்றாள்.

  மகள் போனை எடுத்துக்கொண்டு தனிமையை நாடி செல்ல, நட்ராஜனோ  அனுமதி தந்தவர் மனைவி பல்லவியோடு சோபாவில் அமர்ந்தார். மகள் ஆரவமுதனோடு உயிர் பிழைத்து வந்த பொழுது, பெரிதாக ஆரவமுதன் கூட இருந்தது கசக்கவில்லை. ஆனால் மகள் அவளது எண்ணை பகிர்ந்து விட்டு வந்ததும் இல்லாமல், அந்தக் ஆரவமுதன் எண்ணை பதிவு செய்து வைத்ததில் கசப்பை விழுங்கிய நிலையில் இருந்தார்.

-தொடரும்‌.

11 thoughts on “Hello Miss எதிர்கட்சி-9”

  1. அடுத்த epi la twist இருக்குமா சிஸ்….இந்த அமுதன் ….என்னமோ பண்றான்….🤔🤔🤔 Something wrong….🙄🤨🤨🤨

  2. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    ஏன் இந்த நட்ராஜ்க்கு இப்ப முகம் சுருங்குது…? எதிர்கட்சியணியா இருந்தா லவ் பண்ணக் கூடாதா என்ன…?
    இவரோட ஆருயிர் நண்பரோட மகன் தான் ஆரவமுதன்…
    அப்புறம் ஏன் பிடிக்கலை…?
    ஒருவேளை, அமுதனோட அப்பா முதலமைச்சரா இருக்கிறதால இருக்குமோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 appo ethellam aaravamudhan plan ah erukumo 🤨 parpom 🧐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *