Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-15

Hello Miss எதிர்கட்சி-15

அத்தியாயம்-15

     ஆராவமுதன் பேசிவிட்டு வந்த நாள் முதல் நட்ராஜன் மகளிடம் எதுவும் அதிகம் பேசவில்லை.

   ‘ஜனநாயக விடியல்’ கட்சி ஆட்களும் மீடியாவும் மட்டும் பிச்சி எடுக்காத குறையாக எங்கு திரும்பினாலும் பேசி பேசியே எரிச்சலை கிளப்பினார்கள்.

  தனக்கு ஒவ்வாத விதம் போல, இலக்கியனுக்கு எப்படி இருக்குமோ? என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது. அதோடு மகள் என்ன கண்டிஷன் போட்டு வைத்திருப்பாள் என்ற ஆவலும் இருந்தது.

அதை கேட்க தயங்கினார். என்னயிருந்தாலும் அது அவர்களுக்குள் உண்டான பேச்சுவார்த்தையாக நினைத்தார்.

     அதன் பின் தினமும் தலைமைசெயலகத்துக்குள் இலக்கியனை நேரெதிரே பார்த்து பேசவும் சுரபிக்கு வாய்ப்பு இருந்தது. எப்பவும் போல கட்சி சம்பந்தப்பட்ட வாதம், விவாதம் எல்லாம் மக்கள் நலனுக்காக பேச, அவள் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் இருந்தவர்கள் கூட சுரபியின் செயலால் கவரப்பட்டனர்.

  இலக்கியனுமே, எப்பொழுதும் போல பேசி பதில் தந்தாரே தவிர, மகனது காதலி என்ற கண்ணோட்டத்தில் காணவில்லை.

  இவ்வாறு நாட்கள் செல்ல, ஆராவமுதன் அவன் எண்ணியது போலவே அமுதன் ஃபிலீம் இன்டஸ்டரிஸ் வைத்து நடத்தினான். அதுகூட பல இன்டஸ்ட்ரி பேக்டரி என்று தனிராஜ்ஜியம் உண்டு அவனுக்கு.

  பலரும் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு, “ஏங்க” என்று சிரித்து கடந்தான். பதில் ஆம் என்றோ,  இல்லை என்றும் கூறவில்லை. 

  நட்ராஜனுக்கு இருப்பதை போலவே, இலக்கியனுக்கும் மகன் இன்னமும் அரசியலில் கால் பதிப்பதாக கூறாமல் சுற்றுவதில் ஏன் தாமதம் என்று கேட்டிடவில்லை. சுரபியிடம் ஊரறிய காதலை மைக் முன் சொல்லி புரட்சி செய்ததில் அவளே பதில் கூறாமல் இருப்பதில் அவருமே பொறுமை காத்தார்.

  ஒரு மாதம் கடந்திருக்கும். இலக்கியனும் நட்ராஜும் எதிரெதிரே இருந்து தமிழக சட்டமன்றம் பேரவையில் கடந்து சென்றனர். சந்திப்புகள் எல்லாம் அரசியல் சார்ந்த இடத்தில் என்பதில் யாரும் தனிப்பட்டதை பேசவில்லை. கழுகு போல கொத்துவதற்கு எல்லா பக்கமும் ஆட்கள் இருந்தனர்.

  தனிப்பட்டவன் வாழ்க்கையை எட்டி பார்க்க தான் எத்தனை கூட்டம்? இதில் புதிதாக யூடூயுப் சேனல்கள் என்று அவனவன் ஒன்றை உருவாக்கி கொள்கின்றான்.‌ இன்ஸ்டா பேஜில் மற்றவரின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி தான் அத்தனை விவாதம்.
   ஒரு தனிமனிதனின் புகைப்படம், அவனை சார்ந்த விஷயங்கள், அவனது அனுமதியின்றி மற்றவர் உபயோகிப்பதற்கு பெரிய தண்டனை வழங்கினால் மட்டுமே, அவரவர் மற்றவர் வாழ்வில் தலையீடாமல் வாழ்வார்கள். இல்லையேல் செலிபிரெட்டி வாழ்வில் காதல் முதல் கல்யாணம் வரை என்று நிறுத்தாமல், கட்டிலறை வரை சென்று, குழந்தை பெறுவது முதல் லேபர் வார்டு எல்லாமே பொதுவெளியில் பேசும் பொருளாக மாறும். இப்பொழுதே அப்படி தான் நிறைய பேர் சுற்றுகின்றார்கள். அவரவர் வாழ்வை அவர்களாகவே சிதைப்பது வேறு. அடுத்தவர் சிதைப்பு பெரிய தவறு.

   அதனால் இலக்கியன் சிதம்பரத்தை அழைத்து, நட்ராஜிடம் தனக்கு அப்பாயின்மெண்ட் வாங்க கூறினார்.

“ஐயா… நீங்க போய் அவரிடம்… நீங்க முதலமைச்சர் ஐயா. அதோட அவர் எதிர்கட்சி ஆளு” என்று சிதம்பரம் தலைசொரிந்து கேட்டார்.

  இலக்கியனோ சிதம்பரத்தின் தோளை தட்டி, “ஒரு காலத்துல என் பால்ய நண்பன். அவனோட ஒரே தட்டில சாப்பிட்டுயிருக்கேன். ஒரே சட்டையை மாத்தி போட்டு சைக்கிளில் சுத்திய காலமெல்லாம் இருக்கு. சில நேரம் இப்ப நாம எந்த இடத்துல, என்ன பதவில இருக்கோம் என்றெல்லாம் யோசிக்க கூடாது சிதம்பரம்.

  உங்க வருங்கால முதல்வர், எதிர்கட்சி அம்மினியை தான் விரும்பியிருக்கார். என்னயிருந்தாலும் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள், பொண்ணு வீட்டை தேடி பொண்ணு கேட்கறது தானே முறை. ஒரு வேளை நட்ராஜ் அதனால கூட அவனோட முடிவை சொல்லாம காலம் கடத்தலாம் இல்லையா?

  அடுத்து கொஞ்ச மாசத்துல தேர்தல் வேற வருது. ஆராவமுதனும் கட்சில சேர்வதை பத்தி மூச்சு காட்டாம இருக்கான்.
   நம்ம பக்கம் ஒரெட்டு நட்ராஜனோட பேசி வைப்போம். சுரபியும் ஆராவமுதனை விரும்பலைன்னு எங்கயும் மறுக்கலையே.” என்று பேசவும் சிதம்பரம் “சரிங்க ஐயா” என்று நட்ராஜனிடம் இலக்கியன் சந்திப்பு நிகழ்வதற்கு நேரம் காலம் ஒதுக்க தொலைப்பேசி வாயிலாக கேட்டான்.

நட்ராஜ் சில நொடி அமைதி காத்து, “நாளைக்கு இரவு உணவோட சந்திக்கலாம்னு சொல்லிடு திவாகர்” என்றார்.

நிவாஸ் சென்ற இடத்தில் திவாகர் அதனை சிதம்பரத்திடம் தெரிவித்தான்.  ‘டின்னர் அரேஜ்மெண்டா?’ என்று தலை சுற்றியது.

  தமிழகத்தில் நேர்எதிரில் இருக்கும் இரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்தால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்குள் ஒரிரு நொடி சென்று வந்தான்.

  இலக்கியனிடமும் அதை தெரிவித்தான் சிதம்பரம்.

  இலக்கியனோ “ரொம்ப நாள் ஆச்சு நட்ராஜ் வீட்டு சாப்பாடு சாப்பிட்டே” என்று சிலாகித்து நகர்ந்தார். மற்றபடி கட்சி சார்த்து எதையும் வார்த்தை விடவில்லை.

  உணவருந்தும் நாளும் வந்தது. நட்ராஜ் மதியத்திலிருந்து வீட்டில் தான் நடமாடினார்.

  உணவெல்லாம் வியக்க வைக்கும் அளவிற்கு நண்பனுக்கு பிடித்த மெனுவை கூறிவிட்டார். சமைத்து முடித்த கையோடு வீட்டில் வேலை செய்யும் அத்தனை பேரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

  கார் டிரைவர், தோட்டக்காரன், கட்சி ஆட்கள், தொண்டர்கள், என்று அனைவரையும் அனுப்பிவிட்டார்.

  சுரபி மட்டும் கட்சி வேலையாக அவளது அலுவலகத்தில் சென்று விட்டு வந்தாள்.

  கேட்டில் செக்கியூரிட்டியை தவிர தோட்டத்திலும், டிரைவரும் யாருமில்லை. வந்ததும் தண்ணி, பழச்சாறு கொண்டு வரும் வேலைக்கார பெண்மணியும் இல்லை என்றதால் பல்லவியிடம் விசாரித்தாள்.

“உங்கப்பா யாரையோ வீட்டுக்கு சாப்பிட அழைச்சிருக்கார். யாருனு கேட்டப்ப ‘நம்ம பொண்ணை பார்க்க  மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வரட்டுமானு கேட்டாங்க, அவங்களை வரச்சொல்லிட்டேன்னு சொல்லறார்” என்று கையை பிசைந்தார்.

  “நான் அமுதனை விரும்பறேன்னு அப்பாவுக்கு தெரியும்ல… ஏன் இப்படி பண்ணறார்” என்று கோபமாக எழுந்து, “நானா ஆராவமுதனை விரும்பறேன்னு சொல்லாததுக்கு தப்பர்த்தம் பண்ணிட்டாரா?’ என்று கோபமாக தந்தை முன் வந்தாள். ஆனால் தன் ஆசைக்கு குறுக்கே நிற்காதவர் அப்படி செய்வாரா? என்று யோசித்து தந்தையிடம், “யாருப்பா வர்றாங்க?” என்று கேட்டாள்.

  “ஆராவமுதன் சொல்லலையாம்மா?” என்று கேட்டதும் “அமுதன் மீண்டும் வர்றாரா?” என்று ஆர்வமாய் வெட்கமும் கலந்து கேட்டாள்.

  நட்ராஜனோ, “ஆராவமுதனோட அப்பாவை நம்ம வீட்டுக்கு வர்றார். கூடவே பையனை அழைச்சிட்டு வருவார்னு நினைக்கறேன். எதுக்கோ போன்ல கேளு.” என்று கூற, அவளது போன் மின்னியது.

“அவர் தான் அப்பா” என்று எடுத்து காதில் வைத்து, “சொல்லு அமுதா” என்றாள்.

“சுரபி அப்பா என்னை இன்னிக்கு அப்பாயிமெண்ட் கேன்சல் பண்ணு, டின்னர் ஒருத்தங்க வீட்டுக்கு வருவதா சொல்லிருக்கேன்னார். இப்ப பார்த்தா உங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். எங்கப்பா உங்கப்பாவோட பேச நேர்லயே வர்றார். நீ வீட்ல இருக்கியா?” என்று கூறியவனின் வார்த்தையில் துள்ளல் இருந்தது.

  “ஆஹ்.. இருக்கேன்” என்றாள்.

   “உனக்கு இந்த மீட்டிங் அரேன்ஜ்மெண்ட் தெரியுமா? முதல்லயே சொல்லமாட்டியா?” என்று கடிய, “அமுதா எனக்கே இப்ப தான் இரண்டு நிமிஷத்துக்கு முன்ன தெரியும்.” என்றாள்.

“ஓ… இட்ஸ் ஒகே. ஆன்தி வே… ஏஹ்.. இந்த காட்டன் சேரி எல்லாம் வேண்டாம்” என்று கோரிக்கை வைக்க, “ம்ம் ட்ரை பண்ணறேன்” என்றாள்‌.

   சுரபி தந்தையிடம் “தேங்க்யூப்பா” என்று கூறிவிட்டு அவளது அறைக்கு ஓடினாள். தன்னை தயார்படுத்திக் கொள்ள, உடைகளை ஆராய்ந்தாள்.

   பீச் வண்ண சுடிதார், மிக எளிமையாக இருக்க அதனை எடுத்து அணிந்தாள்.

  கொண்டையிட்ட தலை அலங்காரத்திற்கு, விடுதலை அளித்து தோளில் புரளவிட்டாள்.

உதட்டில் இளஞ்சிவப்பு வண்ணமும், காதொட்டிய அணியை கழட்டி வைத்து நீண்டதாக ஹியரிங் அணிந்தாள். வாட்ச் பிரேஸ்லைட் என்று அணிந்தவள் கண்டு பல்லவி கதவை திறந்து வந்தார்.

   “மேக்கப் ஐயிட்டம் எல்லாம் உன்கிட்ட இருக்கா சுரபி. இன்னைக்கு தான் நீ இதை உபயோகப்படுத்தி பார்க்கறேன். வண்ணங்களையும் அழகையும் ஒளிச்சி வச்சிட்டு தேர்தல் அரசியல்னு ஒடியிருக்க. இப்ப அந்த தம்பி ஆராவமுதனை பார்த்ததும் உதட்டு சாயம் எல்லாம் இருப்பது நினைவு வந்திருக்கு” என்று கேலி செய்ய, “அம்மா.‌..” என்று சிணுங்கினாள் சுரபி.

  சுரபியின் கன்னத்தை பற்றி, “சாதாரணமா காதலிக்கறப்ப, சாதி பார்க்காத மதம் பார்க்காத, பணம் வசதி கலர் பார்க்காம உனக்கு பிடிச்சவனோட வாழுன்னு பிரெண்ட்ஸ் எல்லாம் பின்னாடி நின்று ஆதரவா சொல்வாங்க. உன் அம்மா நான் சொல்லறேன். இந்த அரசியலை எல்லாம் தூக்கி போட்டுட்டு ஆராவமுதனோட வாழு. நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தினமும் அலங்காரம் செய்து, கணவரோட சந்தோஷமா வாழணும்” என்று கண்ணீர் துளிகள் உதிர்க்க வாழ்த்தாகவே கூறினார்.

  இத்தனை ஆண்டுகள் திருமணத்தை ஒதுக்கி வைத்தவளுக்கு இனியாவது விடிவு உண்டாக வேண்டுமென பல்லவி கூறினார்.‌
 
  “அம்மா… நான் அரசியலை விட்டுட்டு  ஆராவமுதனை காதலிக்கலை. எனக்கு முதல்ல அரசியல். அடுத்து தான் ஆராவமுதன். இது எந்த காலத்துக்கும் மாறாது. கல்யாணம் எங்களுக்குள் முடிவானா மறுக்காம  செய்துப்பேன். ஆனா அரசியலை விட்டுடுனு அமுதன் வாயிலயிருந்து வந்தா அடுத்த நொடி பிரிஞ்சிடுவேன்.” என்றவள் வெகுயியல்பாய் கூறிவிட்டு செல்ல, அவள் பேச்சை கேட்டு பல்லவி ஆடிப்போனார்.

  “கார் சத்தம் வந்துடுச்சு… நான் அவரை வெல்கம் பண்ண போறேன். நீங்களும் வாங்க” என்று பறந்தாள்.‌

  ‘இதென்ன வகையான பேச்சு. நாளைப்பின் ஆராவமுதனுடன் இவளுக்கு சண்டை வலுத்தால்? என்ற எண்ணத்தில் சுள்ளென்ற வலி. கடவுளே… ஆரம்பிக்கும் முன்ன அபத்தமான எண்ணத்தை விதைக்காதே, எல்லாம் நல்லபடியாக வரவேண்டும்’ என்று வேண்டுதல் வைத்தார்.

   கார் உள்ளே வந்து நின்றது. சிதம்பரம் கதவை திறந்து முதலில் வெளிவந்து, முதல்வர் இலக்கியன் இருக்குமிடம் வந்து கதவை திறந்தான். “ஐயா… நான் கார்ல இருக்கேன் நீங்க போயிட்டு வாங்க” என்றதும், “சரி சிதம்பரம்” என்று முடித்துக்கொண்டார்.

  ஆராவமுதன் அவனே கதவை திறந்து இறங்கி, தனது ஜோடியை தேடினான்.

    “அப்பா… அவங்க வந்துட்டாங்க” என்று கூற, “அதுக்கு தான்மா வாசல் வரை வரவேற்க வந்துட்டேன்” என்றார் நட்ராஜ்.

  “வாங்க” என்று நட்ராஜ் அழைக்க, “வீட்ல நிறைய மாற்றம் இருக்கு.” என்று இலக்கியனும் வந்தார்.

“இங்க வந்து பல வருடமாகுதுல” என்று கூறி “வாங்க தம்பி” என்று ஆராவமுதனையும் அழைத்தார் நட்ராஜ்.

  சிதம்பரம் ஒரு நாகரிகத்திற்காக தான் காரில் இருப்பதாக உரைத்தான். இலக்கியன் ‘அதெல்லாம் பரவாயில்லை சிதம்பரம் நீயும் கூடவா’ என்பார் என்று எண்ணியிருக்க பலத்த ஏமாற்றம் கொண்டான். 

   அவ்வீட்டின் பெரிய ஹாலில் யாரும் இல்லை. இவர்களுக்காக அனைவரையும் அனுப்பி வைத்திருப்பதை இலக்கியன் யூகித்துக் கொண்டார்.

   சோபாவில் அமர கூற, “நீ எப்படிம்மா இருக்க?” என்று பல்லவியை பார்த்து கேட்டார்.‌

  “நல்லாயிருக்கேன் அண்ணா” என்று கூறினார் பல்லவியும்.

  வெல்கம் ட்ரிக் எடுத்து வர பல்லலி கூறவும், சுரபி எடுத்து வந்து இலக்கியனுக்கு வழங்கினாள்.

  அடுத்து ஆராவமுதனுக்கு சிறு சிரிப்புடன் உபசரித்தாள்.

     ‘ஹே… சுடிதார் நல்லாயிருக்கு.” என்று ஆராவமுதன் தான் பேச்சை ஆரம்பித்தான்.

  சுரபி அதற்கும் புன்னகைக்க, பல்லவியோ “எங்க தம்பி பதினெட்டு வயசுல எல்லாரும் கலர் கலர் சுடிதாரா மாடர்ன் டிரஸ்ல வலம் வருவாங்க, ஆனா இவ கட்சி ஆட்கள் கண்ணுல மாடர்ன் டிரஸ்ல உலாவந்தா அவங்க அப்பாவுக்கு அவப்பெயர் உண்டாகும்னு நினைச்சேன். ஆனா பதினெட்டு வயசுலயிருந்து இந்த காட்டன் சேலை தான். அத்திபூத்தாற் போல சுடிதார் போடுவா. ஆனா இந்த அளவு அலங்காரம் எல்லாம் நீங்க வந்ததால” என்று கூறவும் நட்ராஜன் மகளை உன்னிப்பாக கவனித்தார். மனைவி சொன்னது போல ஆராவமுதனுக்காக மகள் மெனக்கெடுவது புரிந்தது.

   “அங்கிள்… கல்யாணம் எப்படி பண்ணலாம்னு ஐடியா” என்றதும் நட்ராஜ் போன் மின்னி மறந்து ரிங்டோன் எழும்பவும், “ஒரு நிமிஷம்” என்று போனை எடுத்தார்.

    கிசுகிசுப்பாய் ஏதோ யாரிடம் பேச, சுரபி அடிக்கடி தந்தையை கவனித்தாள்.

  “என்னம்மா… அரசியல் அறிக்கை எல்லாம் தினமும் மீடியாவுல அனல் தெறிக்க வருது. கல்யாண அறிக்கை பற்றி ஒன்னும் வரமாட்டேங்குது.” என்று இலக்கியனே சுரபியிடம் கேட்டார்.

  “என் கண்டிஷனுக்கு ஓகேன்னா ஆராவமுதனிடம் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிருக்கேன் அங்கிள். அப்படியிருக்க அமுதன் எந்த முடிவும் சொல்லலை. சட்டுனு காலவாறிட்டா, அதுவரை கல்யாண அறிக்கையை விடமாட்டேன்.” என்றுரைத்தாள்.

  “என்ன கண்டிஷன்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

  “உங்க பையனிடம் கேளுங்க அங்கிள்.” என்றாள்.

   இலக்கியனோ மகன் புறம் திரும்ப, “கல்யாணம் பண்ணலாம்னு வீடு தேடி வந்திருக்கேன். போதத குறைக்கு அப்பாவே வந்துட்டார். இதுக்கு மேல உன் கண்டிஷனுக்கு என்ன பதில் சொல்லணும். நானா வாயை திறந்து அறிக்கை விடணுமா? லுக்… நான் ஒன்னும் அரசியலுக்குள் உன்னை மாதிரி இருந்தா இந்நேரம் அறிக்கை விட்டுயிருப்பேன். இல்லாத இடத்துல இருந்துட்டு என்னத்த சொல்லணும்.?
  இங்க வந்தது கல்யாண தேதி குறிக்க.” என்று குரலுயர்த்தினான்.

தந்தையை வைத்துவிட்டு நட்ராஜ் போனில் யாரிடமோ குழைந்து பேசுவது பிடிக்கவில்லை. ஏனோ அவமரிமாதையை போல உணர துவங்கினான்.

   “தப்பா எடுத்துக்காதிங்க தம்பி. அவ என்ன கண்டிஷன் போட்டானு எனக்கு தெரியாது. ஆனா உங்க மேல உயிரே வச்சிருக்கா. அது மட்டும் உங்களுக்கு புரிந்தா போதும்.  நிதானமா முடிவெடுத்து பேசுங்க.” என்றார் பல்லவி.

   நட்ராஜ் அவசரமாய் பேசி முடித்து, இலக்கியனிடம் “சாப்பிட்டுட்டே பேசலாமா?” என்று அழைத்து வந்தார்.  

உணவு வகையினை எல்லாம் கண்டதும் நடராஜிற்கு சுரபியை அமுதனுக்கு மணக்க முடிவெடுத்து உள்ளதை பறை சாற்றியதாக எண்ணினார். கல்யாணம் தேர்தலுக்கு பிறகு வைக்கலாம்’ என்ற பேச்சு மட்டும் பேசினார்கள். அதுவும் சரி தான். தேர்தல் வேலை தலைக்கு மேல இருக்கு” என்று இலக்கியன் ஒப்புக் கொண்டார். ஆராவமுதனுக்கு தேர்தல் முடிந்த பிறகா? என்று தோன்றினாலும், அவன் மனம் வேறு விதமாக கணித்து முடித்தான். உணவுகள் இறங்கி நீரை அருந்த, அதே நேரம் கேரள முதலமைச்சரின் மகன் உன்னிகிருஷ்ணன் வந்திருந்தான்.

  இலக்கியனை பார்த்து நமஸ்கரித்து முடிக்க, “உட்காருங்க தம்பி” என்றார் நட்ராஜ்.

ஆராவமுதனுக்கு எங்களை அழைத்துவிட்டு இவன் யார்?’ என்ற ஊடுருவல் புரிந்தான்.

-தொடரும்.

11 thoughts on “Hello Miss எதிர்கட்சி-15”

  1. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 15)

    ஒருவேளை, நட்ராஜ் உன்னிகிருஷ்ணனுக்கு ரூட்டை போடுறாரோ…? அதெப்படி, அவரோட பொண்ணை மீறி எதுவும் பண்ண முடியாது தானே…? இந்த அமுதன் அரசியலை அத்தைன சீக்கிரம் விட்டுக்கொடுத்துடுவானான்னு தோணுது. ஆகமொத்தம், என்ன நடக்குதுன்னே புரியலையே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 amudhan manasula yetho plan oda dhan erukan ennava erukum parpom 🧐

  3. முதல்வரும் , அமுதனும் மனசுக்குள்ள என்னமோ திட்டத்தோட வந்திருக்காங்க ??ஆனா இது என்ன புது வரவு உன்னி கிருஷ்ணன்? இலக்கியனுக்கு ஏற்றார் போல் நடராஜர் ஒரு திட்டம் வைத்திருப்பார் போல .
    சுரபி உன்னை பகடையா யூஸ் பண்ண போறாங்க போல இருக்குது .
    இருக்காதே நடராஜர் மகள் மேல் அதிக பாசம் கொண்டவர் ஆச்சே

  4. Natraj unnikrishnan surabi ku jodi ah mathanum nu nenaikiraro .surabi first politics next than amudhan nu sollura athuvum arasiyal ah amudhan ah na arasiyal than choose pannuven nu sollura illakiyan avar amudhan arasiyal ku varanum nu nenaikiraru ithu la amudhan oda thought enna nu theriyala aana ithula pallavi mattum than amudhan surabi ivanga marriage pathi mattumae yosikiraga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *