வழி நெடுகிலும் மனத்தோடு கிளத்தல் செய்தவாறே வந்துகொண்டிருந்தான் திவாகர்.
தனது புதிய மாற்றங்கள் எதனால் வந்தன? அதன் காரணம் யாது? எப்போதிருந்து இத்தகைய எண்ணம்?
வானதியோ ஆய்வாளரின் அறிவையும் ஈடுபாட்டையும் மனதில் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள். இருட்டடித்து மூடி வைக்கப்பட்ட தங்கள் வழக்கு விசாரணைக்கு, ஒரு விடிவெள்ளியாக அவர் வந்ததாகவே கருதினாள் அவள். அவரை நினைத்தபோது அவளறியாமலே முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.
திவாகருக்கு இவள் முகத்தின் மாற்றங்கள் திரைப்படம் ஓடுவதுபோலத் தெளிவாகப் புரிந்தது. அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
‘பாத்து மூணு நாள்தான் ஆச்சு… ஆனா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் பல வருஷம் பேசிப் பழகின மாதிரி இருக்கு. தினம் தினம் உன்கிட்ட எதையாவது புதுசா பார்த்து அதிசயப்பட்டுப் போறேன்.. இவ்வளவு தான்னு நினைக்கும் போதெல்லாம், அதைவிட புதுசா எதையாவது காட்டி, என்னை ஆச்சரியப்பட வைக்கற நீ.
உன் பேச்சு, திமிரு… எல்லாமே புதுசா இருக்கு… பிடிச்சிருக்கு. யார்கிட்டவும் தானா வலியப் போயி பேசாத என்னையவே நீ பேச வைக்கற, கத்திப் பேசி சண்டை போட வைக்கற… வீட்டை விட்டு வாசலுக்குக் கூட வெளியே வராத என்னை, உன் கூட சேர்ந்து வயக்காட்டு வரைக்கும் கூட்டிட்டுப் போற. நம்மை விட அறிவாளி இந்த ஊருல இல்லைங்கற நினைப்புல இருந்தேன்… நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு அடிக்கடி புரிய வைக்கற.
உன்கிட்ட நிறைய கத்துக்கணும்னு தோணுது. உன்கூட நிறைய பேசி, நிறைய கோபப்பட்டு, நிறைய சண்டை போடணும்னு எல்லாம் ஆசையா இருக்கு. எப்படிடீ என்னை இப்படிப் புரட்டிப் போட்ட நீ? நீ யார் எனக்கு? அதைவிட, நான் யார் உனக்கு?’
இந்தக் கேள்விக்கெல்லாம் விடையளிக்க வேண்டியவளிடம்தானே முன்பு சண்டையிட்டிருந்தான்!
இப்போதைக்கு ஒரு மன்னிப்போடு பேச்சை ஆரம்பிப்போம் என்று நினைத்தவன், மெதுவாக, “ஐம் சாரி..” என்றான் பொதுவாக.
அவள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தன்பாட்டில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் கையை மெல்லத் தீண்டி அவளை அழைத்தான் அவன். அவன் தொட்டதும் தனது எண்ணங்களில் லயித்திருந்தவள் தன்னிலை திரும்பினாள். எனவே அரைக் கண இடைவேளை கழித்தே அவன் பக்கம் திரும்பினாள் அவள். பார்வையாலேயே என்னவென வினவினாள்.
‘நான் பேசாம இவளும் பேசமாட்டாளோ..??’
“ஐம் சாரி.. நான் என்ன செஞ்சிருந்தாலும்.”
திவாகரின் மிக அருமையான குணங்களில் இதுவும் ஒன்று. ஈகோ எனப்படும் அகந்தை அறவே கிடையாது அவனுக்கு. அவனது குறுகிய நண்பர் வட்டத்துக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணமே அதுதான். சுயமரியாதைக்கும், அகம்பாவத்துக்கும் வேற்றுமையை அறிந்தவன் அவன்.
வானதிக்கும் அது பிடித்திருந்தது போலும். சன்னமாய்ப் புன்னகைத்தாள்.
“நானும் ஓவர் ரியாக்ட் பண்ணியிருக்கக் கூடாது. I’m sorry too”
அந்த மாலைக் கருக்கலிலும் வெளிச்சமாக முறுவலித்தான் அவன்.
வானதிக்கு அவன் சிரிப்பே ஆயிரமாயிரம் நினைவுகளை மனதின் மூலைகளில் இருந்தெல்லாம் இழுத்து வர, கண்கொட்டாமல் அவன் சிரிப்பதை சில கணங்கள் பார்த்தாள் அவள்.
சிக்னலில் கார் நிற்க, சாலையோரம் இருந்த ஐஸ் வண்டியைப் பார்த்துவிட்டாள் வானதி.
“ஐஸ் கோலா சாப்பிடலாமா?”
அவன் தயங்கினான்.
“அது.. என்ன தண்ணியால செய்வாங்களோ…”
வானதி முகம்சுழித்தாள்.
“மத்தாப்பூ…! ஐஸ் வண்டி வந்திருக்கு!! ஓடி வா சீக்கரம்!! எனக்கு ஐஸ் கோலா வேணும்!!”
“உனக்கு வேணாம்னா போ!” என்று அலட்சியமாக் கையசைத்தவள், பட்டென கார் கதவைத் திறந்துகொண்டு சாலையில் இறங்கி ஐஸ் வண்டிக்காரனிடம் சென்றாள். வேறு வழியின்றி ஓட்டுனரிடம் காரை ஓரங்கட்டச் சொல்லிவிட்டு, அவனும் இறங்கிச் சென்றான்.
கண்ணில் ஆர்வத்தோடு பெயர் பலகையை ஆராய்ந்தவள், “அண்ணே, ஒரு நன்னாரி, ஒரு ஆரஞ்ச்!” என்றாள் உற்சாகமாய்.
கடைக்காரரும் தலையசைத்துவிட்டு, ஐஸ் கட்டியை மெஷினில் செதுக்கத் தொடங்கினார். விழுந்த ஐஸ் துருவல்களை கப்பில் எடுத்து அழுத்தி, குச்சி வைத்து, அதன்மீது சக்கரைப் பாகும் அவள்கேட்ட சுவையையும் இட்டவர், அவளிடம் நீட்ட, சின்னப் பிள்ளை போலப் பூரிப்புடன் இரு கைகளையும் நீட்டி அவற்றை வாங்கிக்கொண்டாள் அவள்.
ஏதேனும் ஒன்றைத் தன்னிடம் கொடுப்பாள் எனப் பார்த்து நின்றான் திவாகர். அவனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், ரசனையின் வெளிப்பாடாய்த் தன் உதட்டை நாவால் ஈரப்படுத்தியவள், அப்படியே இரண்டு ஐஸ்களையும் மாறிமாறி ருசிபார்க்கத் தொடங்க, திவாகர் தேமே என்று நின்றான்.
தனது ஐஸ் வேட்டைக்கு நடுவே அவனைத் திரும்பிப் பார்த்தவள், புருவத்தை உயர்த்தி என்னவென வினவ, அவன் முகத்தை சுழித்துக்கொண்டு திரும்பி நின்றான்.
“செம்மையா இருக்கு… அப்றம் வருத்தப்படுவ…”
அவள் இச்சையூட்டும் குரலில் சொல்ல, அவனுக்கும் ஆசையாகவும் இருந்தது; ஆசையளவுக்கு பயமும் இருந்தது. ஆவது ஆகட்டும் என நினைத்தவன், “ஒரு ஸ்ட்ராபெரி” என்றான் ஐஸ்காரரிடம்.
பஞ்சுமிட்டாய் நிறத்தில் ஐஸ் கோலாவை சப்பத் தெரியாமல் சப்பும் சிறுவன் வானதியின் மனக் கண்ணில் வந்துபோனான்.
தனக்குள் சிரித்துக்கொண்டே ஐஸை உறிஞ்சினாள் அவள்.
திவாகர் தயக்கமாகவே முதல்முறை ஐஸ்கோலாவை உறிஞ்சினான். ஆனால் நாவில் அதன் சுவை பட்ட மறுநொடியே வியப்பில் கண்கள் விரிய, ஆர்வத்துடன் அதை ருசித்தான் அவன். பிங்க் நிறத் துளிகள் அவனது வெள்ளை சட்டையில் கறையாகிட, வானதி நகைப்புடன் அவன் கையிலிருந்த கப்பை அவன் வாய்க்கு நேராக வைத்துத்தந்தாள்.
அவன் முகத்தில் மட்டற்ற மகிழ்வோடு, “இந்தியாக்கு வந்து நான் செஞ்ச ஒரே நல்ல விஷயம் இது தான்னு நினைக்கறேன்!” என்க, அவள் சிரித்தாள்.
அவன் ஒன்றை உண்டு முடிக்கும் நேரத்தில் இவள் இரண்டு ஐஸ்களைத் தீர்த்திருந்தாள். சாப்பிட்டுவிட்டுத் திருப்தியாக உதட்டைத் துப்பட்டாவில் துடைத்துக்கொண்டவள், மீண்டும், “ஒரு ஆரஞ்ச்” என்க, திவாகர் அதிர்ச்சியுடன் நிமிர, “அட, எனக்கு இல்ல.. ஹரிணிக்கு!” என்று சிரித்தாள் அவள்.
பின் ஏதோ யோசனையானவள், “மூணா குடுங்க. பையில போட்டுத் தாங்க.” என்றாள்.
“மூணா??”
“ப்ச், அத்தை, அக்கா, ஹரிணி.”
விரல் விட்டு எண்ணிக் காட்டி அவனுக்கு விளக்கம் கூற, திவாகர் கண்ணை விரித்துப் பார்த்துவிட்டு தலையசைத்தான். அதற்குள் ஐஸும் தயாராகிவிட, வானதி காசைக் கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ள, வேகமாக வந்து காரில் ஏறினர் இருவரும்.
ஓட்டுனரிடம், “ஐஸ் உருகறதுக்குள்ள வீட்டுக்குப் போயிட்டா, மாமாகிட்ட உங்க அலவண்சை அதிகப்படுத்த சொல்றேன்..” என்றாள் வானதி. அவரும் சிரித்துக்கொண்டே, “அதுக்கென்னம்மா.. போயிடலாம்!” என்றபடி விரைந்து காரை செலுத்தினார்.
பத்தே நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிட, “செம்ம அண்ணே!” என ஓட்டுனருக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்குள் விரைந்தாள் அவள், அத்தையையும் பானுவையும் சத்தமிட்டு அழைத்தபடியே.
பெரிய பரிசு போல பீடிகையுடன் அவள் ஐஸை எடுத்து இருவரிடமும் நீட்ட, கண்ணில் குதூகலத்துடன் அதை வாங்கி ருசித்தனர் பெண்கள் இருவரும். இத்தனை வருடத்தில், ஒருமுறை கூட தனக்காக எதுவும் வாங்கி வந்திராத மகனை மீனாட்சி அர்த்தமாகப் பார்க்க, அவன் சட்டையில் துளித்துளியாய்ப் பட்டிருந்த இளஞ்சிவப்பு நிறக் கறைகளே பல கதைகள் சொல்லியது அவருக்கு.
கூடத்தில் நால்வரும் நின்று பேச்சும் சிரிப்புமாய் இருக்கையில், “இதெல்லாம் போங்கு!! என்னை விட்டுட்டு ஐஸா சாப்டறீங்க?” என சிணுங்கலாக வந்த குரலில் நால்வரும் திரும்பினர். ஹரிணி புத்தகப் பையைக் கூடக் கழற்றாமல் இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்துக்கொண்டு நின்றாள்.
வானதி தன் கையிலிருந்த ஐஸை அவளிடம் நீட்டியபடி, “நானெல்லாம் ஏற்கனவே ரெண்டு சாப்ட்டாச்சு. இது உனக்குத்தான்! வா ஹரி..” என்றழைக்க, முறைப்பைத் தொலைத்து சிரிப்போடு வந்து ஐஸை வாங்கிக்கொண்டு அவளைக் கட்டிக்கொண்டாள் அவள்.
“சின்ன அண்ணிதான் என் செல்ல அண்ணி!! என் டார்லிங்!”
“அடிப்பாவி… அப்ப இவ்ளோ நாள் என்னை டார்லிங்னு சொல்லுவியே, அதெல்லாம்??”
பானு போலிக் கோபத்துடன் கேட்க, ஹரிணி, “நீங்க பழைய டார்லிங், வானி அண்ணி புது டார்லிங்!” என்று பழிப்புக் காட்டினாள். வீட்டுப் பெண்கள் இவ்வளவு சமத்காரமாய் சிரித்துப் பேசுவதை இன்றுதான் முதல்முறையாக நின்று கவனிக்கிறான் திவாகர்.
பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் அவன் வாய்பிளந்து இவர்களைப் பார்ப்பதைக் கண்ட ஹரிணி, “என்ன அண்ணா…? ஏதோ காணாததைக் கண்ட மாதிரி பாத்துட்டு நிக்கற? எங்களைப் பாத்தா ஏலியன்ஸ் மாதிரித் தெரியுதா என்ன?” என வம்பிழுக்க, அவன் கைகளை உயர்த்தி சரணடைந்து, “தாய்க்குலங்களே… நான் உத்தரவு வாங்கிக்கறேன்! நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றுவிட்டு நழுவினான்.
வானதியும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குள் வந்தாள். வரும்போது கையில் இளம் சூடான நீரில் உப்பைப் போட்டு எடுத்து வந்து திவாகரிடம் நீட்டினாள்.
“சளிப் பிடிக்காம இருக்கறதுக்கு. Prophylaxis. “
சாதாரணமாகத் தான் அவள் தந்துவிட்டுச் சென்றாள்.
ஆனால் திவாகர், அந்த கணத்திலேயே, அவளது பரிவில், அன்பில், அக்கறையில், தன் மனதை அவளிடம் தொலைத்திருந்தான்!
Super😍😍
super vanathi
💜💜💜💜