Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

வானதியை விட்டுவிட்டு அறைக்குள் வந்த திவாகரின் மனதும் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

இங்கே ஆனந்தமாய் நாட்களைக் கழித்ததால் என் கடமைகளை மறந்துவிட்டேனா? மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமல்லவா?

செல்ல வேண்டுமா? செல்லாமல் இருந்துவிடக் கூடாதா…?’

மனதின் ஓரத்தில் ஏக்கமாக ஒரு குரல் கேட்டதும் திகைத்தான் அவன். இங்கிருந்து போகவே மனது ஏன் தயங்குகிறதெனப் புரியவில்லை அவனுக்கு. வருடா வருடம் வந்து செல்லும் வழக்கம் தான்.. ஆனால் இம்முறை ஊரை விட்டுப் போவதற்கே மனம் கலங்கி நொந்தது.

தனக்குத் தெரிந்து முத்துப்பட்டியை ஒரு ஊராக மதித்ததே இல்லை அவன். ஏன், இந்தியாவையே அவன் தாய்நாடாக மதித்ததில்லை. எப்போது எதைப் பார்த்தாலும் மனதில் உதிக்கும் முதல் எண்ணம், ‘அமெரிக்காவுல எல்லாம் இந்த மாதிரி இருக்காது… இந்தியா மட்டும்தான் இன்னும் முன்னேறவே இல்ல’ என்பதுதான். ஆனால் இந்தத் தடவை, தன் ஊரோடு மனதளவில் நெருங்கியிருந்தான் அவன். ஊரோடு மட்டுமா…

வானதியை நினைத்தபோதும், அவளைவிட்டுச் செல்லவேண்டும் என நினைத்தபோதும் மனதில் ஏக்கம் கூடிக் கனத்தது. இருக்கப் போகும் கொஞ்ச நாட்களில் அவளோடு சண்டைகள் போடாமல், வம்புகள் செய்யாமல், அழகாகச் செலவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, அதனோடு உறங்கியும் போனான்.

வானதியோ, பால்கனியில் தரையில் அமர்ந்தபடி, கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலைசாய்த்துக்கொண்டாள். மனது யாருக்காக அழ வேண்டும் எனப் புரியாமல் இருந்தாலும், கண்ணீரைக் கச்சிதமாய் அனுப்பிவைத்தது.

எல்லோரும் போன பின்பும் எனக்காக நீயேனும் இருக்கிறாய் என்று ஆறுதல் கொண்டேனேநீயும் போகிறாயா? நீயன்றி வேறில்லை என்று நம்பும் என்னைத் தவிக்கவிட்டு, தூரமாய்ப் போகிறாயா? இன்னும் எத்தனை தொலைவு செல்வாய்? எத்தனை முறைகள் என் இதயத்தை உடைப்பாய்? ஏன் திவா..? ஏன் என்னை மறந்தாய்? ஏன் சென்றாய்? ஏன் மீண்டும் என் வாழ்வில் வந்த போதும், அதனை துச்சமாக நினைத்துத் துண்டாக்கிச் செல்கிறாய்? உன் அருகில் இருந்தாலும் வேதனை, தொலைவில் இருந்தாலும் வேதனை. பேசினாலும் வலி, மௌனமாய் இருந்தாலும் வலி. இன்னும் என்ன?

பானுவைப் போல நானும் ஒரு சராசரி செட்டிநாட்டு மருமகளாக, வருடம் ஒருமுறை வீட்டுக்கு வரும் தன் கணவனுக்காகக் காத்திருந்து, அவனுக்குப் பணிவிடை செய்து பார்த்துக் கொண்டு என் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா? திருமணம் என்ற ஒன்று நடந்திருந்தாலும், மனதால் நான் உனக்கு அந்நியம் தானே? கணவன்மனைவி என்றெல்லாம் நம்மை நீ நினைத்திருக்கிறாயா? எந்த ஒட்டுறவும் இல்லாத போது, உன் மனைவி என்ற பட்டம் மட்டும் எதற்காக எனக்கு?

எனக்கு அது வேண்டாம். நான் வானதி நஞ்சேசன். வேம்பத்தூர் வானதி நஞ்சேசன். வானதி நஞ்சேசன் ஐஏஎஸ். ஆம், நீ எதை நினைத்துச் சொன்னாயோ தெரியவில்லை, ஆனால் என் கனவைத் தொடர்வேன் நான். என் கவலைகளை, உன்னைப் பற்றிய என் கவலைகளை மறப்பதற்காகவே, நான் தேர்வுகளைத் தொடர்வேன். இனி அது மட்டுமே என் கவனமாக இருக்கும்.’

இரவின் இருளில் அவள் அறைக்குள் வந்து சோபாவில் படுத்தபோது, ஒற்றை நிலவொளிக் கீற்றில் திவாகரின் முகம் மட்டும் ஒளிர்ந்து. தூங்கும்பொழுது குழந்தை போல சலனமற்று இருந்த அவனது பால்வெள்ளை முகத்தை இரு கணங்களுக்கு மேல் பார்க்கத் தாங்காமல், சோபாவின் வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனாள் அவள்.

__________________________

அங்கே ஆய்வாளர் அழகேசன் அவரது அறையில் தூங்காமல் அமர்ந்து இவ்வழக்கின் விபரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். சைபர் ஆபிசிலிருந்து விக்கியின் மொபைல் திறக்கப்பட்டு வந்துவிட்டிருந்தது. அதில் ஒரு செயலி விடாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அதில் தெரிந்தவற்றை எல்லாம் தனது கணினிக்கு மாற்றிக்கொண்டு, ஒரு வெற்றிப் புன்னகையுடன் கைபேசியை அவரது மேசை அலமாரியில் வைத்துப் பூட்டினார்.

வானதியின் கைபேசி எண்ணுக்கு, காலை முதல் வேலையாகத் தன்னை வந்து பார்க்குமாறு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அலுவலகத்திலிருந்து கிளம்பி, தன் குடியிருப்பிற்குச் செல்லக் காரில் ஏறினார். நடுநிசி ஆகியிருந்ததால் சாலைகள் இருள் பூசிக் காணப்பட்டன. மெதுவாக வண்டியைச் செலுத்தினார் அவர்.

திடீரென எங்கிருந்தோ பறந்துவந்த கருங்கல் ஒன்று காரின் கண்ணாடியைப்  பதம் பார்க்க, சுக்கலாக நொறுங்கிய கண்ணாடித் துண்டுகள் முகத்தில், கையில் பட்டுக் கிழிக்க, வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டார் அழகேசன்.

மோதிய அதிர்ச்சியில் அவர் மயங்க, தூரத்திலிருந்து அதை இரண்டு ஜோடிக் கண்கள் பார்த்துச் சென்றன.

_____________________________

மறுநாள் காலையில் அவன் எழுந்தபோது, வானதி கத்திரிப்பூ வண்ணச் சுடிதாரில் தயாராகி, தலையைப் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். விழித்ததும் முதலில் அவள் முகத்தினைக் கண்ட மகிழ்ச்சியில், திவாகர் முறுவல் பூத்தான். அவளோ, கண்ணாடி வழியே அவன் பிம்பத்தைப் பார்த்து, “இன்ஸ்பெக்டர் அழகேசன் கூப்பிட்டார். உடனே வந்து பார்க்கச் சொன்னார்” என்றாள் ஒரு வெறுமையான குரலில்.

‘காலைல எழுந்ததும் அந்த ஆள் பேரைத் தான் கேட்கணுமா…’ என சலித்துக்கொண்டே எழுந்து சென்று குளியலறைக்குள் சரண்புகுந்தான் அவன். இருவரும் காலை உணவை முடித்துவிட்டு, பைக்கில் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கே அழகேசன் இல்லாததைப் பார்த்து வானதி அங்குமிங்கும் பார்த்தபடி செய்வதறியாது நிற்க, ஒரு கான்ஸ்டபிள் வந்து, “அழகேசன் சாருக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சும்மா. ஜிஹெச்சுல அட்மிட் பண்ணியிருக்காங்க.” என சொல்லிவிட்டுச் சென்றார்.

விபத்து என்று கேட்டதுமே வானதியின் கண்கள் தன்னிச்சையாகக் கலங்க, திவகருக்கு அந்த சோக சூழலிலும் பொறாமையாக இருந்தது. கையை முறுக்கிக்கொண்டு சுவற்றில் குத்தியபடி, “இப்ப என்ன? ஹாஸ்பிடலுக்கா?” என்று அவன் வினவ, அவன் குரலில் தொனித்த அலட்சியத்தை இனங்கண்டுகொண்ட வானதி, “உனக்கு கஷ்டமா இருந்தா நீ கெளம்பு. நானே போயிக்கறேன்” என்றவாறு பைக் சாவியைப் பிடுங்க முயல, பட்டெனக் கையைப் பின்னிழுத்தபடியே, “சேச்சே… எனக்கென்ன கஷ்டம். நானே ஓட்டறேன்.” என்று சாவியைக் கெட்டியாக வைத்துக்கொண்டான் அவன்.

அவனை முறைத்தபடியே வந்து பைக்கில் ஏறினாள் அவள். அரசு மருத்துவமனையை அடைந்தபோது, இம்முறை ஜெனரல் வார்டுக்குப் போக வேண்டியிருந்தது. சென்ற முறை வெளிப்பகுதிக்கே வருவதற்குத் தயங்கிய திவாகர், இப்போது வானதிக்கு முன்னால் நடந்து சென்று ஜெனரல் வார்டுக்குள் நுழைந்தான்.

ஒரு கம்பவுண்டரிடம் வழி கேட்டுக்கொண்டு அழகேசனை அடைந்தபோது, தலையில் ஒரு கட்டும், கைகளில் ஓரிரு ப்ளாஸ்திரியும், ஒரு ட்ரிப்ஸ் ஊசியும் போட்டு களைப்பாகப் படுத்திருந்தார் அவர். திவாகருக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனாலும் வானதி அவரைப் பார்த்துக் கண்கலங்கவும் அவனது கருணை மறைந்தது.

அருகில் நின்ற காவலரிடம், “எப்படி நடந்தது?” என விசாரித்தான் அவன்.

“நைட் ஒருமணி அளவில ஐயா க்வார்ட்டர்சுக்கு போயிட்டிருந்திருக்கார். நடுவுல ஏதோ கல்லு வந்து கண்ணாடியில விழ, கண்ணாடி உடைஞ்சிடுச்சு. அதுல காரை சடார்னு திருப்பி, கரண்ட் கம்பத்துல அடிச்சிட்டார்னு நினைக்கறேன். பவர் ஷார்ட் ஆகவும், அந்தப் பக்கத்துல இருந்த வீட்டு ஆளுங்க என்னன்னு பாத்து, இவரை ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. காலைல ஆறு மணிக்குத் தான் கண்ணு முழிச்சார். முழிச்சதும் உங்களைத் தான் கேட்டாரும்மா..”

அவன் கேட்ட கேள்விக்கு வானதியிடம் பதில் கூறினார் அந்தக் காவலர்.

வானதிக்கு சற்றே கலவரமாகவும், சந்தேகமாகவும் இருந்தது.

இந்த விபத்துக்கும் நம் வழக்குக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?’

காவலர் அழகேசனை மெல்ல எழுப்ப, அவர் கண் விழித்து இவர்களிருவரையும் பார்த்தார். எழுந்திரிக்கச் சிரமப்பட்ட அவரை, வானதி தூக்குவதற்கு முன் திவாகர் கைகொடுத்துத் தூக்கி அமர வைத்தான்.

“இப்ப எப்டி இருக்கு இன்ஸ்பெக்டர்?”

அவன் வரவழைத்த புன்னகையுடன் கேட்க, அவர் தலையசைத்தார்.

“பெட்டர்.”

வானதியைப் பார்த்தவர், “உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.” என்க, அருகிலிருந்த காவலர் வெளியேறினார். அழகேசன் திவாகரைப் பார்க்க, அவன் வானதியைத் திரும்பிப் பார்த்தான்.

“சொல்லுங்க சார்”  என்றாள் அவள்.

தன்னை வெளியே போகச் சொல்லாமல் அவள் கூறச் சொன்னதையே ஒரு வெற்றியாக எடுத்துக்கொண்டான் திவாகர்.

“உங்க கேஸை உடனே க்ளோஸ் பண்ணியாகணும்”

வானதி அதிர்ந்தாள். திவாகரும் முகம் சுழித்தான்.

“என்ன சொல்றீங்க? ஏன்? கேஸ்ல என்ன இருக்கு? எதுக்காக அதை க்ளோஸ் பண்ணனும்? இதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டோம்? ஒரு வாரமா அலைஞ்சதெல்லாம்–“

அவள் படபடவெனப் பேச, அழகேசன் சிரமப்பட்டு அவளைக் கையமர்த்தினார்.

“இங்க பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க. உங்க உயிருக்கு ஆபத்து ஏற்படாம இருக்கணும்னா, இந்த வழக்கைப் பத்தி நீங்க இத்தோட மறந்துடணும்.”

அவர் அத்தனை உறுதியாகச் சொல்ல, அது ஏனெனப் புரியாமல் திவாகரும் வானதியும் குழம்பினர்.

3 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *