Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

வேதாசலமும் நஞ்சேசனும் சிறுபிராயம் முதலே நண்பர்கள். நடுத்தரக் குடும்பங்கள். நஞ்சேசன் தனது வயலிலேயே விவசாயம் பார்த்தார். வேதாசலம் கூலிவேலைகள் எது கிடைத்தாலும் செய்துகொண்டிருந்தார். வேம்பத்தூரில் இரண்டு குடும்பமும் எதிரெதிர் வீட்டில் வாசம். சுதாகர், விக்னேஷ், திவாகர், வானதி என வரிசையாக ஒவ்வொரு வருட இடைவெளியில் பிறந்த குழந்தைகள். மீனாட்சியும் வசந்தியும் சகோதரிகள் போலவே பழக்கமும் புழக்கமும். ஊரே வியந்து பார்க்குமளவு ஒற்றமை இரண்டு குடும்பத்துக்கும்.

இருபத்தைந்து வருட சினேகிதம்ஆல் போல் தழைத்து அழகாக வளர்ந்திருந்தது. குழந்தைகள் நால்வரும் கூட உடன்பிறவா சகோதரர்கள் போல ஒருகணமும் ஒருவரையொருவர் பிரியாமல் இருந்தனர்.

நஞ்சேசனுக்கு ஒரு தங்கை, நாச்சம்மாள். பதினேழு வயது சிறுமி அவள். சுட்டித்தனங்கள் நிறைந்த மங்கை. வாண்டுகளின் தலைவி. தாய்போல் அவர்கள் நால்வரையும் எப்போதும் பார்த்துக்கொள்பவள். தாய் தகப்பன் இல்லாத பெண் அவள். அண்ணனின் வீட்டில் வளர்ந்த செல்லப்பெண். அந்தக் குடும்பத்தில் முதன்முதலில் பள்ளிக்குச் சென்ற  பெண்ணும் அவளே. நஞ்சேனின் தேவதை வானதியென்றால், அவர் கும்பிடும் சாமிபோல நாச்சம்மாள். வேதாசலமும் அவளைத் தன் தங்கையாகவே பாவித்துபாசத்தைப் பொழிந்துவந்தார். மீனாட்சிக்கும் வசந்திக்கும் தலைமகளே அவள்தான் என்பதுபோல் இருப்பாள் அவள். இரண்டு குடும்பத்தின் குலவிளக்குப்போல இருந்தவள்.

பூப்பெய்தியபோது ஊரே அசந்து மூக்கில் விரல்வைக்கும்படி அவளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு சடங்குகள் செய்து பரிசுகள் வாங்கித்தந்தனர் இருவீட்டாரும். ஊரிலில்லாத அழகியென இளைஞர்கள் அசந்து பார்த்தாலும், ஐய்யனார்போல இரண்டு அண்ணன்களைப் பார்த்ததும் ஓடிவிடுவர் அவர்கள். ஊரில் பத்தாம் வகுப்பு வரையில் மட்டுமே பள்ளிக்கூடம் இருக்க, தங்கையின் ஆசைக்காக, கல்லூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர் அவளை.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் அவ்வூர் மைனரென்று திரிந்துகொண்டிருந்த போக்கிரி ஒருவன் அவளை வம்பிழுத்துத் தகாத முறையில் தொட்டுவிட, அவமானம் தாளாமல், அதை யாரிடம் சொல்லவெனவும் தெரியாமல், அன்றிரவே உத்தரத்தில் தூக்குப்போட்டு இறந்துவிட்டாள் அவள். இரண்டு குடும்பமும் இடிந்துபோக, நஞ்சேசன் தங்கையின் உடலைப் பிடித்துக்கொண்டு கதற, மீனாட்சியும் வசந்தியும் கண்ணீரும் கம்பலையுமாய்க் கரைய, அரசல் புரசலாக அவளது மரணத்தின் காரணமறிந்த வேதாசலமோ, ஆவேசத்தோடு இரவோடு இரவாக அந்தக் காமுகனைப் பிடித்துத் தோலை உரித்து, உடைகளைக் கிழித்து, ஊரின் நடுவிலுள்ள புளியமரத்தில் கட்டி வைத்தார்.

ஊரில் பெரிய அந்தஸ்துள்ள குடும்பத்துப் பையன் என்பதால் உடனே பஞ்சாயத்துக் கூடியது. தீர்ப்பளிக்கும் நாட்டாமையே அந்தக் காமுகனின் மாமன் என்றபோது நியாத்தை எதிர்பார்த்தல் நியாயமில்லை. வேதாசலம் வேம்பத்தூரின் பூர்வீக வாசி அல்ல. பஞ்சாயத்தின் தண்டனையை ஏற்குமளவு சக்தியும் இல்லை அப்போது. எனவே நஞ்சேசன் முன்வந்து, தங்கையை இழந்த சோகத்தால் தானே அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் தந்து, அதற்காக என்ன இழப்பீடு வேண்டுமானாலும் செய்வதாகச் சொல்ல, அப்போதும் திருப்தியடையாத பஞ்சாயத்தார், நஞ்சேசன் தன் பாதி சொத்துக்களை ஊர்க் கோவிலுக்கு எழுதி வைக்குமாறும், வேதாசலமும் அவரது குடும்பமும் இன்றே உடனடியாக ஊரை விட்டே வெளியேற வேண்டுமென்றும், இனி இவ்வூரார் எவரும் அக்குடும்பத்துடன் பேச்சுத் தொடர்பில் இருக்கக் கூடாதென்றும் தீர்ப்பளிக்க, கண்ணீருடன் ஒரே நாளில் ஊரை விட்டுப் புறப்பட்டு சிவகங்கை வந்துவிட்டனர் வேதாசலத்தின் குடும்பத்தார்.

வசந்தி நஞ்சேசனைப் பிடித்துக்கொண்டு கதற, மீனாட்சியும் கண்ணீர் வடிக்க, ஒரே நாளில் தங்கையையும் நண்பனையும் இழந்த சோகத்தில் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார் நஞ்சேசன். வேதாசலத்துக்கும் வருத்தம் இருந்தாலும், தன் மானமும், கவுரவும் பெரிதென்று, நண்பனிடம் தலையசைத்து விடைபெற்று, திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறினார்.

வேதாசலத்தின் ஆவேசமும், தீரமும் வெளியூரிலும் பரவ, பயமும் மரியாதையும் அவர்மீது வளரத்தொடங்க, கூலி வேலைகளை விடுத்து, சொந்தமாகவே கான்ட்ராக்ட்கள் எடுத்துச் செய்யுமளவு உயர்ந்தார் அவர். நேர்மையும் உழைப்பும் மட்டுமின்றி, தப்பென்றால் எதிர்த்து நின்று சண்டையிடும் மனதைரியமும், யாரென்றாலும் ஒற்றைக் கையால் தலையைத் திருப்பிடுமளவு உடல்வலிமையும் கொண்டவர் என்பதால், செல்வமும் செல்வாக்கும் அவர் தேடாமலே அவரைத்தேடி வந்துவிட, தொழில் விருத்தியடைந்து, முத்துப்பட்டியில் அழகாக வீடுகட்டி, குடும்பத்துடன் ஆனந்தமாக வாழத்தொடங்கினார்.

வேதாசலம் பெரிய மனிதராய் ஊருக்குள் வளர்ந்தபிறகு, வேம்பத்தூர் கிராமத்தாருக்கு அவரது உதவிகள் தேவைப்பட, அவர்கள் போட்ட தடையை அவர்களாகவே நயமாக மாற்றிக்கொண்டனர். அதாவது, வேதாசலம் பூர்வீகமாக வேம்பத்தூரைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அதனால் வேம்பத்தூரில் பிறந்த மீனாட்சிக்கு மட்டுமே ஊருக்குள் நுழையத் தடை எனவும் மாற்றிக்கொண்டனர்.

வேதாசலம் அதை எதையும் மதிக்கவில்லை. தன் மனைவியை நுழையவிடாத ஊருக்குத் தானும் வருவதில்லை என்றுவிட்டார். பேசவந்த பஞ்சாயத்தாரையும் வெட்டினார்போல் பேசி அனுப்பிவிட்டார். யாரிடம் பணிந்துபோக விரும்பாத நெடுமரமாய் ஆனார். எவருக்கும் பயந்து அடங்கிப்போக விரும்பாததால், ஊருக்குள் பெரிய தலைவராய் வளர்ந்தார். தன்னை போல கூலி வேலை செய்து குடும்பத்துக்கு உழைக்கும் ஊழியர்களுக்காக நலத் திட்டங்கள் தொடங்கினார்.

மக்களின் ஆதரவு பெற்றவர் என்பதால், அரசியல்வாதிகளும் கூட அவரது தயவுக்காகக் காத்திருந்தனர். ஆயினும், வளர்ந்து வரும் நேரத்தில் எதிரிகளும் அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால், மகன்கள் இருவரையும் வெளியூரிலேயே தங்கிப் படிக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார் அவர். மனம் கனத்தாலும், மகன்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு அம்முடிவை எடுத்திருந்தார். மீனாட்சிக்குக் கணவரின் முடிவில் இருந்த அர்த்தம் புரிந்தாலும், தாயாகத் தவித்தார்.

அதனாலோ என்னவோ, ஹரிணியைப் பெற்றெடுத்து, அவளைக் காரணம் காட்டி, கணவனின் இதர பணிகளை முடிந்தவளவு குறைக்கவைத்து, அவரது கான்ட்ராக்ட் தொழிலை மட்டும் பார்க்க வைத்தார். நல்ல நிலமைக்கு வந்தபிறகு பிறந்தவள் என்பதால் ஹரிணி மட்டும் வீட்டோடே வளர்ந்தாள், குடும்பத்தின் கடந்த காலம் தெரியாமல்.

வேம்பத்தூரை நினைத்து மீனாட்சி மனம் வருந்தினாலும், கணவரின் முடிவே தன் முடிவென, மனதைக் கல்லாக்கிக்கொண்டு முத்துப்பட்டியையே தன் ஊராகப் பாவித்துக்கொண்டார். அக்காலத்தில் அலைபேசிகளும் இல்லாததால் நினைவுகள் மட்டுமே துணையாகின.

தங்கள் நட்பைவிட, ரோஷம் தான் பெரிதென்று சென்றுவிட்ட வேதாசலத்தின்மீது நஞ்சேசன் கோபத்தில் இருந்ததால், அவரும் தொடர்பு கொள்ளவில்லை. பேசாவிட்டாலும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென மட்டும் வேண்டிக்கொள்வார் வேதாசலம்.

எனவே இருபது வருடங்கள் கழித்து, நஞ்சேசனின் இறுதிச் சடங்குக்காகத் தான் அந்த வேம்பத்தூர் மண்ணை மிதிக்க வேண்டிவரும் எனக் கனவிலும் நினைத்திடவில்லை அவர்.

இவை அனைத்தையும் சொல்லி மீனாட்சி கண்ணீர் வடிக்க, பானுவும் அதையனைத்தையும் கேட்டு சோகத்தில் நின்றாள். வானதிக்கும் அவள் குடும்பத்துக்கும் நடந்த அநீதி இன்று தான் அவளுக்குத் தெளிவாகப் புரிய, வானதியின் மனநிலையை உண்மையாக உணர்ந்து அவளுக்காகக் கண்ணீர் சிந்தினாள் அவள்.

தன் ஞாபக அடுக்குகளில் தூசி படிந்துபோன பற்பல பக்கங்களும் வெளிச்சமாக, தலை வெடிப்பது போல் இருந்தது திவாகருக்கு. அதிர்ச்சியும் ஆதங்கமும் ஒருசேரப் பொங்கிவர, அவனது விழிகளும் நனைந்தன.

_______________________________

காரைக் கிளப்பிக்கொண்டு சென்றவள், மாலை மூன்று மணியளவில் வீட்டை அடைந்து காரை சடாரென நிறுத்தினாள். வேலையாட்கள் பார்த்துக்கொண்டு நிற்க, பரபரப்பாக வாசலுக்கு ஓடிவந்தாள்.

வாசலில் திவாகரின் காலணிகளைப் பார்த்து, ஒரு நம்பிக்கையில் வேகமாக அவனைத் தேடிக்கொண்டு அறைக்குள் வந்தாள் வானதி. திருவிழாவில் பிள்ளையைத் தொலைத்த இளம் தாயைப் போலப் பதபதைப்புடன் ஓடி வந்தவள், கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்த திவாகரைப் பார்த்ததும் பெருமூச்சு விட்டாள்.

“திவா… ஐம் சாரி… ஏதோ கோவத்துல… சும்மா விளையாட்டுக்காகத் தான் பண்ணேன்.. நீ தனியா நிப்பயேனு கொஞ்ச நேரத்திலயே நான் மறுபடி உனக்காக வந்து பாத்தேன்.. உன்னைக் காணோம்.. ரொம்ப பயந்துட்டேன் நான்.. எங்கெல்லாமோ தேடுனேன்… அப்பறம் இன்ஸ்பெக்டர் தான் போன் பண்ணி சொன்னாரு…”

பேசிக்கொண்டே அவனருகில் நெருங்க, கண்ணீர் ததும்பும் முகத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தவன், அப்படியே இடையோடு அவளை அணைத்துக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்து அழத்தொடங்க, வானதி விக்கித்து நின்றாள். அதுவரை அவனை சீண்டி, சண்டையிட்டுப் பார்த்தபோதெல்லாம் அவன் அழுவான் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை அவள். திவாகரின் புன்னகையை மட்டுமே பார்த்தவள், கண்ணீரைக் கண்டதும் குற்ற உணர்வில் மருகினாள். அவனை அளவுக்கு மீறிக் காயப்படுத்தியதாக நினைத்துத் தன்னையே திட்டிக்கொண்டாள்.

“ஹேய்…திவா,  ஐம் சாரி… ரியலி..சாரி. விளையாட்டு வினையாகும்னு சொல்றது சரிதான்… இப்படி ஆகிடுச்சு. உனக்கு ஹீட் ஸ்ட்ரோக் எதுவும் வந்துடுச்சா? தலை வலிச்சதா? உனக்கு தான் வெய்யில் சேராதே.. கண்ணு கூடக் கலங்கியிருக்கே… சே.. நான் ஒரு முட்டாள். எதையும் யோசிக்காம… லூசு மாதிரி பண்ணிட்டேன்… சாரி.. அழாத திவா.. ப்ளீஸ்.”

அவன் நிறுத்தாமல் விசும்பிக்கொண்டே இருக்க, அவனது தலையைத் வருடியபடி அவள் மன்னிப்பு வேண்டினாள். அவளது குரலும் உடையும் தறுவாயில் இருந்தது.

அவன் மெல்ல நிமிர்ந்து, “மத்தாப்பூ..” என்றுவிட்டு இன்னும் இறுக்கி அவளை அணைத்துக்கொள்ள, வானதிக்கு ஒரு கணம் உலகமே நின்றது.

2 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *