Skip to content
Home » Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

திவாகர் வாய் திறந்து ஏதோ சொல்ல வந்த நேரத்தில், வாசலில் ஆங்காரமான சைரன் சத்தம் சட்டெனக் கிளம்பிட, அதன் எதிர்பாரா ஒலியில் திகைத்து இருவரும் திரும்பினர்.

வானதி அறையை விட்டு வெளியேறி வாசலுக்குச் செல்ல, அதற்குள் சத்தத்தில் வேதாசலம், மீனாட்சியும் வேகமாக கூடத்துக்கு வந்தனர். கேட்டிலிருந்து காவலாளி ஓடிவந்தார்.

“போலீஸ் வந்திருக்காங்க ஐயா. ஏதோ விசாரிக்கணுமாம்.”

வானதி திடுக்கிட்டு திவாகரைத் திரும்பிப்பார்க்க, அவன் முகமும் திகைப்பில் விரிந்தது. ஏதும் பேசுமுன் ஒரு காவல் அதிகாரி வீட்டுக்குள் வந்தார். வேதாசலத்திடம் பணிவாக ஒரு வணக்கம் வைத்தவர், “மதுரை ஸ்டேஷன்ல இருந்து வர்றோம். வானதிங்கறது யாரு சார்?” என்றார்.

வானதியைக் கடைக்கண்ணால் பார்த்தவர், பதில் கூறாமல், “எதுக்குக் கேக்கறீங்க இன்ஸ்பெக்டர்? நைட் நேரத்துல இப்டி வந்து பொம்பளைப் புள்ளைய விசாரிச்சா என்ன அர்த்தம்? என்ன விஷயம்?” என்றார் கடுமையான குரலில்.

காவலர் சற்றே பின்வாங்கினார். இருப்பினும் சமாளித்து, “விஷயம் கொஞ்சம் சீரியஸ் சார். நாங்க ஃபோன் பண்ணோம் உங்களுக்கு, ரெஸ்பான்ஸ் இல்ல. வேம்பத்தூர்ல இருந்து மதுரைக்கு குடிபோன விவசாயி ஒருத்தர் இன்னிக்கு சாயந்திரம் செத்துட்டாரு. மரணத்துல சந்தேகம் இருக்கறதா சொல்லி மதுரை ஜிஹெச் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்றாங்க சொந்தக்காரங்க. இதே மாதிரி இவங்க பேமிலியும் இறந்து போயிருக்காங்க, அதுனால… கொஞ்சம் விசாரிக்கணும்…” என இழுத்தார்.

வானதி கண்களில் நீர் திரண்டது. சில தினங்களாக அமிழ்ந்திருந்த சோகமும் குழப்பமும் மீண்டும் மனதில் மேலெழும்ப, லேசான விசும்பல் வெளிப்பட்டது அவளிடம். திவாகர் அவளோடு அணைப்பாக நின்று, கைகளை அவள் கையோடு கோர்த்துப் பிடித்துக்கொண்டு, ‘நான் இருக்கிறேன்’ என ஆறுதலாக நின்றான்.

வானதியைக் கண்டுகொண்ட ஆய்வாளர், ஒரு பெண் காவலரை அழைத்து, “மேடம்மை வண்டிக்குக் கூட்டிட்டுப் போங்க” என்றிட, அவளருகில் நெருங்கிய காவலரைக் கை காட்டித் தடுத்த திவாகர், “நானே கூட்டிட்டு வர்றேன்.” என்று அடர்ந்த குரலில் கூற, அந்தப் பெண்ணும் அவனையும் ஆய்வாளரையும் ஒருமுறை பார்த்துவிட்டு முன்னால் நகர்ந்தார்.

“ஒண்ணுமில்ல. சின்ன விசாரணைதான்.” எனக் குடும்பத்தினருக்குச் சொல்வது போல் தனக்கும் அவளுக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டான் அவன். வேதாசலம் இறுக்கம் குறையாமல் நின்றார். பெண்களும் வானதியைக் கலவரமாகப் பார்த்தபடி கையைப் பிசைய, திவாகர் ஒரு உறுதியான பார்வையை மட்டும் தந்துவிட்டு, கையைப் பிடித்துக்கொண்டு அவளை அழைத்துச்சென்று காரில் ஏற்றி தானும் அருகில் அமர்ந்துகொண்டான். வானதி அப்படியே அவன் தோளில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். மூடிய இமைகளிலிருந்து நீர்த்துளிகள் கசிய, அது சட்டையை நனைத்தது திவாகருக்கு. ஒரு கையால் அவளது கையில் அழுத்தம் கொடுத்துத் தன் இருப்பைத் தெரிவித்து தைரியமளித்தவன், மறுகையால் வேகமாகக் கைபேசியில் அழகேசனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் பதில் செய்திக்கான மணி ஒலிக்க, சட்டென ஒலித்த சத்தத்தில் முன்சீட்டில் அமர்ந்திருந்த காவலர் சந்தேகப் பார்வையுடன் திரும்பிப் பார்க்க, வேகமாக அதைத் திறந்தான் திவாகர்.

ஏற்கனவே வழக்கை மூடி வைத்துவிட்டதால் தன்னால் வெளிப்படையாக உதவிகள் ஏதும் செய்ய முடியாது என்றும், என்ன நடந்தாலும் ஆதிகேசவன் பெயரை எங்கும் பயன்படுத்தவேண்டாம் என்றும் கூறியிருந்தார் அழகேசன். அதை மூடி சட்டைப்பையில் வைத்தவன் ஆய்வாளரிடம் பேச்சுக் கொடுத்தான்.

“எங்க நடந்தது? எப்படி இறந்து போனார் சார்?”

“வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வர்ற வழியில யாரோ பிக்பாக்கெட் அடிக்கப் பாத்திருக்கானுக. தடுத்தவரை பிளேடால சரமாரியா கீறிட்டு தப்பிச்சிட்டானுக. ஆள் அடையாளம் ஏதும் தெரியல. இதுல ஏதோ சந்தேகம் இருக்காம். அந்த ஆளோட பையன் ஸ்டேஷன்ல வந்து ரகளை பண்ணிட்டான். ஆஸ்பத்திரியிலும் ஆளுங்களை சேர்த்துக்கிட்டு தர்ணா நடத்துறான். ஏதோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவனாம். நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்குப் போயி ஏதோ விசாரிச்சிருக்கீங்க. என்னன்னு ஞாபகம் இருக்கா?”

தலையைக் குனிந்தே இருந்த வானதி காதில் விஷயங்களை வாங்கிக்கொண்டாள். இதுவரை தான் எதிர்பாராத கோணங்களில் எல்லாம் இந்த வழக்குத் திரும்பியிருப்பது அவளை அயர்ச்சியாக்க, சரியாக ஒரு மாதத்துக்கு முன் மதுரைக்கு அந்த விவசாயியைச் சந்திக்க வந்ததை நினைவுகூர்ந்தாள்.

காரில் திவாகருடன் வந்திருந்தாள். நான்கைந்து இடங்களில் நிறுத்தி, வீடு விசாரித்து, ஒருவழியாக சந்து ஒன்றில் இருந்த அவரது விலாசத்தைக் கண்டுபிடித்து வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகியது. அதற்கும் அங்கே ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மற்றவர்கள் சொன்னதையே அவரும் சொன்னார்.

“உங்க அப்பா ஆரம்பிச்ச விவசாயிகள் நலச்சங்கத்துல, நான் பொருளாளர். லாப நஷ்டக் கணக்கெல்லாம் என் பொறுப்புதான். நல்லபடியா தான் போயிட்டு இருந்தது. போன வருஷம் தான் மகசூல் பொய்ச்சுப் போயிடுச்சு. அப்ப சங்கத்துல இருந்த வரவுக் காசையெல்லாம் உங்கப்பா எங்களுக்குப் பிரிச்சுக் குடுத்துட்டார். இருந்தாலும், அதெல்லாம் சாப்பாட்டுக்கே பத்தலை. என் பையன் மதுரைக்கு வேலைக்கு வந்துட்டான். இன்னும் எத்தனை வருசம் காடு கழனின்னு சுத்திட்டு இருப்பீகன்னு கேட்டு, என்னையும் இங்கயே கூட்டியாந்துட்டான். எனக்கு காட்டை விக்கறதுக்கு மனசில்ல. உங்க அண்ணன் ஏதோ ஆராய்ச்சி பண்றேன்னு சொன்னப்ப அதை அவங்ககிட்ட விட்டுட்டேன். யாருமே இப்ப விவசாயத்தை நம்ப முடியறதில்லம்மா… மழையோ, மானியமோ, எதுவுமே நமக்கு சாதகமில்லை. நாட்டோட முதுகெலும்புன்னு சொல்லி, அதை முதுகுக்குப் பின்னாலயே வச்சிருந்தா என்ன தான்மா பண்ணறது? எங்க குடும்பம் பரம்பரை பரம்பரையா விவசாயிக தான். ஆனா இருந்த சொத்தெல்லாம் கறைஞ்சு தானே போனது? இந்நேரம் வேற தொழிலா இருந்திருந்தா நல்ல நிலமைக்கு வந்திருப்போமோ என்னமோ..”

பேசிக்கொண்டிருந்தபோது அவரது மகனும் வந்தான். கோபக்காரன் என்பது முக பாவத்திலேயே தெரிந்தது. தந்தையின் தளர்ந்த குரலைக் கண்டு கோபமுற்றவன், “ஆமா.. காடு காடுன்னு காட்டையே கட்டிட்டு அழு! என்ன குடுத்தது அந்தக் காடு? ரெண்டு லட்சம் கடனும், எங்கம்மாவுக்கு பக்கவாதமும் தான்! அதான் அதையெல்லாம் ஒழிச்சுக் கட்டிட்டுதான் இங்க வந்தாச்சுல்ல? மறுபடி என்ன?” என்றான் சத்தமாக.

தங்களைக் கிளம்பச் சொல்வதை உணர்ந்த வானதியும் திவாகரும் அங்கிருந்து எழுந்துவிட்டனர்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபோதே காவல் நிலையம் வந்துவிட, இருவரும் இறங்கினர். வானதியைத் தன்னுடன் இழுத்த திவாகர், “என்ன ஆனாலும், நாம கண்டுபிடிச்சது எதையும் இங்க சொல்ல வேணாம். ஆதிகேசவன் பத்தியும் சொல்ல வேணாம். என்னை நம்பு, ப்ளீஸ்..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு அவளை உள்ளே அழைத்துச் செல்ல, குழப்பமாக அவனைப் பார்த்தவாறே அவளும் உள்ளே நடந்தாள்.

மூலையில் இறந்தவரின் மகனும் இன்னும் சிலரும் ஆங்காங்கே நின்றிருக்க, இவள் உள்ளே வந்ததும் அந்த மகன் இவளிடம் வந்தான்.

“ஏங்க, நீங்க சொல்லுங்க! அன்னிக்கு எங்கப்பா கிட்ட வயல் பத்தித்தானே விசாரிக்க வந்தீங்க? உங்க குடும்பத்துக்கும் கூட இந்த மாதிரி தானே ஏதோ நடந்தது? தயவு செஞ்சு நடந்ததை இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுங்க. சாவுல சந்தேகம் இருக்குன்னு சொல்லுங்க..!”

சத்தமாக, ஆனால் வேதனையுடன் அவன் கெஞ்ச, வானதி சற்றே பின்வாங்கினாள். திவாகர் இன்னும் கையை விடாமல் பிடித்துக்கொண்டு ஆய்வாளருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அவளை அமரச் செய்து தானும் அமர்ந்தான்.

“சொல்லுங்க.. என்ன நடந்தது? உங்க ஃபேமிலி ஆக்ஸிடெண்ட் கேஸ்ல என்ன சந்தேகம் இருந்தது? வேம்பத்தூர்ல என்ன அப்படி நடந்துச்சு?”

ஆய்வாளர் நிதானமாகக் கேட்க, ஒருமுறை திவாகரைப் பார்த்தாள் அவள். அவன் எச்சரிக்கும் பார்வையுடனே இருந்தான்.

கொஞ்சம் தயங்கியவள், “எங்க அப்பா, அம்மா, அண்ணா.. மூணுபேரும்… மூணுபேரும் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. நான் சென்னைல படிச்சுட்டு இருந்தேன் அப்ப. ஊருக்கு வந்தன்னைக்கு அப்படி நடக்கவும், அவங்க ஆக்ஸிடெண்ட் கேஸ்ல சந்தேகமா இருந்தது. அதுனால கேசை சிவகங்கைக்கு மாத்தினோம்…” என்றாள்

ஆய்வாளர் இடையிட்டார், “அப்றம் ஏன் கேசை திரும்ப வாங்கிக்கிட்டீங்க?”

“ஒரு மாசமா அலைஞ்சும், எந்த லீடும் கிடைக்கல. எனக்கும் நிறைய ஸ்ட்ரெஸ் இருந்தது. அதுனால…”

“ம்ம், உங்க கேசை விசாரிச்சது யாரு?”

“இன்ஸ்பெக்டர் அழகேசன். க்ரைம் ப்ரான்ச்.”

“க்ரைம் ப்ரான்ச் வரைக்கும் போன கேசை ஏன் பாதியில ட்ராப் பண்ணீங்க?”

“அ.. அதான்.. லீட் எதுவும் கிடைக்கல… நேரமும் இல்ல…”

பொய் சொல்ல விரும்பாதவளாய் தலையைக் குனிந்தாள் அவள். ஆய்வாளர் அவளை அவ்வளவாகக் கவனித்திடவில்லை. கோப்புகளில் தான் அவரது பார்வை இருந்தது.

இறந்தவரின் மகன் ஏமாற்ற முகத்தோடு அவளைப் பார்க்க, அதையும் தாளாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். நிச்சயமாக திவாகரிடம் இதைப்பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

“சரிம்மா, உங்க கேசுக்கும் இந்தக் கேசுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறீங்களா?”

திவாகர் லேசாகத் தலையாட்டினான்.

வானதி பெருமூச்சு விட்டாள்.

“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இல்ல சார்.”

3 thoughts on “Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *