Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

“உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? ஏன் என்னை எதுவும் சொல்ல வேணாம்னு சொன்ன? இது மட்டுமா? இதுவரைக்கும் என்கிட்ட எத்தனை விஷயத்தை மறைச்சு வச்சிருக்க? ஏன்? ஏன் இப்படியெல்லாம் பண்ற? ஏன் பதில் பேச மாட்டேங்கற? எங்க போயிட்டிருக்கோம் நாம? இப்ப ஏன் ஊருக்குப் போகாம இப்படி ரோட்டுல நடந்துட்டு இருக்கோம்?”

படபடவென அவள் பொரிய, கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நடந்தான் அவன். மதுரை காவல் நிலையத்திலிருந்து வெளியேறி பிரதான சாலையான மாட வீதியில் நடந்துகொண்டிருந்தனர் இருவரும். பாதிக் கடைகள் அடைந்திருக்க, மீதிப் பேரும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். பதில் வேண்டி அவன் முகத்தை பார்த்தாள் அவள். ஆனாலும் நடப்பதை நிறுத்தாதது அவளுக்கே வியப்பாக இருந்தது. ஏனோ உள்மனதில் திவாகரின் பேச்சை அப்படியே கேட்டுவிடலாம் என்று கூடத் தோன்றியது.

அவளுக்கு அதிகக் குழப்பம் வைக்காமல் ஆய்வாளர் அழகேசனின் கார் அவர்களுக்கு அருகில் உரசுமளவு நெருங்கி நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்தவர் சினேகமாகப் புன்னகைத்தபடி கதவைத் திறந்துவிட்டார்.

வானதி அவரை வியப்பாகப் பார்த்தாள். கடைசியாக மருத்துவமனையில் பார்த்தது. இப்போது நன்றாகவே தேறியிருந்தார். திவாகரை பரிச்சயமாகத் தெரிந்தது போல் தலையசைத்தார். இவளிடமும் திரும்பி, “திருமணத்துக்கு கன்கிராட்ஸ், மிஸஸ் வானதி.” என்றார்.

“நீங்க… எங்க இங்க?”

“உங்ககிட்ட இவ்வளவு நாள் மறைச்சதுக்கு சாரி, பட் இந்தக் கேசை நான் மறைமுகமா நடத்திட்டு இருக்கேன். உங்க ஹஸ்பண்ட்டோட உதவியோட.”

திவாகரை அவள் நம்பமு டியாத பார்வையுடன் முறைக்க, அவன் திணறினான்.

“வேணும்னு பண்ணல. உனக்கு எக்ஸாம்ல இருந்து கவனம் மாறக் கூடாதுன்னு தான்.. உங்கிட்ட இன்னிக்கு சொல்லத் தான் நினைச்சேன்..”

“ஆ..மா.. நினைச்சுக்க நல்லா..” என்று வாய்க்குள் முனகிக்கொண்டு பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

“சரி மேடம்.. கோபப்படாதீங்க. கார்ல ஏறுங்க, விலாவரியா பேசலாம்.”

வானதி பின்சீட்டில் ஏறி அமர்ந்தாள். திவாகரும் அவளைத் தொடர்ந்து ஏற வர, படீரெனக் கதவை அடித்துச் சாத்தினாள் அவள். திகைத்தவன் அவளை எப்படிச் சமாதானம் செய்வதென சிந்தித்தபடியே முன்பக்கம் ஏறிக்கொண்டான்.

இருவரையும் பார்க்க வசதியாக இருக்கையின் நடுவில் அமர்ந்துகொண்டு, “சொல்லுங்க, ரெண்டு பேரும் சேர்ந்து என்னத்த கண்டுபுடிச்சீங்க? எதுக்காக என்னைப் பேச வேணாம்னு சொன்னீங்க?” எனக் கடுமையாகக் கேட்டாள் அவள்.

இருவருக்குமான பொதுவான சிடுசிடுப்பு அழகேசனுக்குத் திகைப்பாக இருக்க, பாவமாக ஒருமுறை திவாகரைப் பார்த்துவிட்டு, கண்ணாடியில் தெரிந்த வானதியிடம் பேசினார் அவர்.

“வானதி, உங்க அண்ணனோட ஃபோன் சைபர் ஆபிஸ்ல இருந்து திறக்கப்பட்டு வந்தது, ஞாபகம் இருக்கா?”

பதில் பேசாமல் உம்கொட்டினாள் அவள்.

“அன்னிக்கு நைட் உங்களுக்கு அவசரமா மெசேஜ் பண்ணேனே, காலைல என்னை வந்து மீட் பண்ணச் சொல்லி?”

“ஆமா, நாங்களும் வந்தோம், ஆனா காலைல உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. கேசை வாபஸ் வாங்கச் சொன்னீங்க, அது தான?”

பொறுமையின்றி வினவினாள் அவள். குரலில் இருந்த குற்றஞ்சாட்டும் தொனி அழகேசனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.

“நான் பயந்து போய் கேசை மூடிட்டேன்னு தானே நினைக்கறீங்க? எதுக்கும் உங்க ஹஸ்பண்ட் கிட்ட இன்னொரு முறை கேளுங்க..”

வார்த்தைக்கு வார்த்தை ‘ஹஸ்பண்ட்’ என்று திவாகரைக் குறிப்பிடுவது வானதியை ஏனோ முகம் சுழிக்க வைத்தது. ஏதோ ஆற்றாமையில் அவர் பேசுவது போல் அவளுக்கு இருந்தது. இருப்பினும் கேள்வியாக திவாகரை ஏறிட்டாள் அவள்.

தீவிரமான முகத்துடன், “இன்ஸ்பெக்டர் சார் என்னைக் கூப்பிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினார். அவர் அவரோட உயிருக்கு பயந்து கேசை நிறுத்த சொல்லல. உனக்கு ஏதாவது ஆகிடும்னு தான் கேசைத் திரும்ப வாங்கச் சொன்னார். அத்தோட அதை விட்டுராம, அண்டர்கவர்ல நிறைய விசாரணை பண்ணி, நிறையக் கண்டுபிடிச்சிருக்கார். உன்கிட்ட இதையெல்லாம் சரியான நேரத்துல சொல்லணும்னு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம். இன்னிக்கு நடந்த இந்த திடீர் விசாரணை கூட ஏதோ சதின்னு நாங்க சந்தேகப்படறோம். அதுனால தான் உன்னை எதுவும் பேச வேணாம்னு சொன்னேன்.” என விளக்கினான்.

வானதி ஆச்சரியமாய் அழகேசனைப் பார்க்க, அவர் கண்ணாடியில் அர்த்தமாகப் புன்னகைத்தார். வானதிக்குக் கஷ்டமாக இருந்தது. மெய்யாகவே வருத்தத்துடன் அவரிடம் மன்னிப்புக் கேட்டாள் அவள். அவர் அவசரமாக மறுத்தார்.

“தட்ஸ் அல்ரைட். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு யாருக்கும் சந்தேகம் கிளம்பாம விசாரிச்சேன். உங்க அண்ணனோட மொபைல்ல பார்த்த டெஸ்ட் ரிசல்ட்ஸ் எல்லாமே, ஆறு மாசத்துக்கு முன்னாடி அதே நிலத்துக்கு எடுத்த டெஸ்ட்டை விட பல மடங்கு மாறியிருக்கு. அதை வச்சுத் தான் நிச்சயமா இதுல ஏதோ தப்பு இருக்குண்ணு புரிஞ்சது. அந்தக் கோணத்துல விசாரிச்ச போது, வேம்பத்தூர்ல இருந்த பல விவசாயிகள் இதன் காரணமா நிலத்த வித்துட்டு வெளியூர் போனதும் தெரிஞ்சது. அதுனால தான் இது நிச்சயமாக திட்டமிட்டு நடந்த கொலை முயற்சின்ற முடிவுக்கு வந்தேன்.

அதைப் பத்திப் பேசத்தான் உங்களை வரச் சொல்லி மெசேஜும் பண்ணினேன். ஆனா, எங்க டிபார்ட்மெண்ட்லயே எங்களுக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க போல, எனக்கு ஆக்ஸெடெண்ட் ஆகிடுச்சு. எனக்கு நடந்த மாதிரி உங்களையும் யாரும் தாக்கிடுவாங்களோன்னு தான், நான் கேசை மூடிட்டேன்னு எல்லாரும் நம்புற மாதிரி செஞ்சேன்.

அதுக்கப்பறம் திவாகரோட உதவியோட, ஆதிகேசவன் பத்தியும், அவரோட அரசியல் காலத்துல செஞ்ச க்ரைம்ஸ் பத்தியும் இந்த ஒருமாசமா நான் விசாரிச்சிட்டு இருந்தேன். ஆனா, இப்ப வரைக்கும் விக்னேஷுக்கும் ஆதிகேசவனுக்கும் எந்தவித தொடர்பையும் என்னால கண்டுபிடிக்க முடியல. இன்னைக்கு நடந்த இந்தக் கொலைக்கும், நம்ம கேசுக்கும் சம்பந்தம் இல்லைன்னுதான் நினைக்கறேன். ஏன்னா, மண் பரிசோதனைகள் எல்லாம் பண்ணறதுக்கு முன்னவே, காட்டை வித்துட்டு ஊர்மாறி வந்துட்ட ஆள் அவரு.

நிச்சயமா இது ஏதோ வழிப்பறி சம்பவமாத்தான் இருக்கணும். சோ, நீங்க வேற எதாவது சொல்லிட்டா, கேஸ் திசைமாறிடும், அந்த இன்ஸ்பெக்டர் வேற கோணத்துல விசாரிக்கத் தொடங்குவார், அப்பறம் எதிரி சுதாரிச்சுக்குவான். நம்மால கையும் களவுமா புடிக்க முடியாம போகலாம். அதுனால, உங்களுக்கு இன்னிக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு சாரி. இனிமேல் எதையும் மறைக்கத் தேவையில்லனு நினைக்கிறேன்.

உங்க வீடு வந்தாச்சு, குட் நைட்.”

பேசிக்கொண்டே வந்ததில் வீடு வந்துவிட, வானதி மனமார அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, திவாகருடன் வீட்டுக்குள் நுழைந்தாள். கூடத்தில் கவலையாக வேதாசலமும் மீனாட்சியும் அமர்ந்திருக்க, இவர்கள் வருவதைக் கண்டதும் மீனாட்சி வேகமாக எழுந்துவந்தார்.

“அம்மாடி, என்னம்மா நடந்தது? உனக்கு எதும் பிரச்சினை இல்லையே? ராத்திரி வேளையில கூப்பிடவும் எங்களுக்கெல்லாம் பயமாப் போச்சு, தெரியுமா?”

“எனக்கு ஒண்ணும் ஆகலை அத்தை. ஜஸ்ட் என்க்வயரி தான். பாவம், ஒரு வயசானவர் அநியாயமா இறந்து போயிட்டார்…”

வேதாசலம் திவாகரை ஏறிட்டு, “தம்பி.. எல்லாம் முடிஞ்சுதா? இனிமேல் எதுவும் கூப்பிட மாட்டாங்களே?” என்க, அவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

“இனிமேல் எதுவும் இல்லப்பா.”

“சரி, நேரமாச்சு. போய்த் தூங்குங்க. காலைல வானிக்கு பரீட்சை இருக்கில்ல?”

இருவரும் தலையசைக்க, பெற்றோரும் தூங்கச் சென்றனர். வானதிதான் குழப்பம் குறையாத முகத்தோடு சென்று நாற்காலியில் அமர்ந்தாள். அருகில் வந்து தோளைத் தொட்டான் திவாகர்.

“ப்ளீஸ்… காலைல பேசிக்கலாம். இப்பத் தூங்கப் போ வானி.”

“நீ என்கிட்ட பேசாத! சரியான ஏமாத்து மூளை! எங்கிருந்துதான் அத்தனை பொய் பேசக் கத்துக்கிட்டயோ!! எனக்கு வர்ற கோவத்துக்கு…”

கோபமாகப் பேசிவிட்டு அவள் எழுந்து செல்ல முயல, கையைப் பிடித்து அவளை நிறுத்தினான் அவன்.

“அடிக்கணும்னு தோணுதா? அடிச்சிரு மத்தாப்பூ! இன்னொரு நிமிஷம் கூட உன்னை விட்டுட்டு இருக்க மாட்டேன் நானு..”

வானதி கையை உதறிக்கொண்டு பால்கனிக்கு நடந்தாள். அவனும் நாய்க்குட்டி போல பின்னால் வந்தான்.

“வானி ப்ளீஸ்..”

“பேசாத.”

“ஹேய்..  கமான். நான் எல்லாமே உன் நல்லதுக்காகத் தான செஞ்சேன்?”

“எது? கொஞ்சம் கூட அன்பில்லாம எடுத்தெரிஞ்சு பேசினது எல்லாம் என் நல்லதுக்கா? என்னைப் பார்த்தா முட்டாள் மாதிரித் தெரியுதா உனக்கு? என்கிட்ட விஷயத்தை சொல்லியிருந்தா, எனக்குப் புரிஞ்சிருக்காதா? இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன்தான் அனாவசியமா ஹீரோயிஸம் காட்டறீங்களோ! நீங்க நினைக்கற மாதிரி நாங்க அவ்ளோ பாவப்பட்ட அப்பாவிக இல்ல. சும்மா காப்பத்தறேன்னு சொல்லிட்டு சீன் போட வேணாம்!”

“ம்ம்.. இப்போ பேசு! அன்னிக்கு அடிக்க வந்தானுங்களே, பதினைஞ்சு பேரு! அப்ப பேச வேண்டியது தான, எங்களைக் காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியும்னு! சொல்லியிருக்கணும்! உன்னை அடிச்சு துவைச்சிருப்பாங்க!”

திவாகர் ஆற்றாமையில் சண்டையிட, வானதியும் பதில் பேச வாயெடுத்தபோது, சட்டென அவளுக்குப் பொறிதட்டியது.

அடிக்க வந்த கூட்டம்அக்ரி ஆபிஸ்அங்கே போகாமல், அலுவலரை சந்திக்காமல் நம்மைத் தடுத்தனர்.. எதற்காக? அங்கே என்ன இருக்கிறது?’

  1.  

4 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *