Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

‘இந்தப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் ஒன்றுபோலவே யோசிக்கின்றனரோ’ என்று திகைத்துப்போயிருந்தான் திவாகர்.

அவனது முகமாற்றத்தைக் கவனித்த வானதி சற்றே கூர்மையாக, “ஏன், பாக்கக் கூடாதா?” என்றிட, அவன் அவசரமாக மறுத்தான்.

“சேச்சே.. அப்டில்லாம் ஒண்ணுமில்ல. உன் எக்ஸாம்ஸ் முடியட்டும். நான் கூட்டிட்டு போறேன்.”

“ம்ம்”

மீதிப் பயணம் அமைதியாக நிகழ, வீடு வந்ததும் வாசலில் நின்ற பானுவின் முகத்தைப் பார்த்து சற்றே வியப்பாகினர் இருவரும்.

இனங்காண இயலா உணர்வுடன் நின்றிருந்தாள் அவள். லேசான பதற்றம், படபடப்பு, ஆனால் நிறையத் திகைப்பும் சந்தோஷமும்.

“என்னக்கா ஆச்சு?” எனக் கேட்டபடியே அவளிடம் சென்றாள் வானதி. வீட்டுக்குள் நுழையும் போது அவர்களுக்காகக் காத்திருந்ததுபோல் முன்னறையிலேயே வேதாசலம் அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும், “வானி, உங்க கல்யாண வரவேற்புக்கு நாள் குறிச்சாச்சு. அடுத்த முகூர்த்தம், ஆவணி பன்னெண்டு. அதாவது, இன்னும் எட்டு நாள்ல. சுதாகர் கிட்ட சொல்லியாச்சு, அவன் நாளைக்கு காலைல வந்துருவான். பத்திரிக்கை அடிக்கக் குடுக்கறதுக்கு பொன்னையா போயிருக்கான்.” என வெகுவேகமாக அடுக்கினார்.

வானதியும் திவாகரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். வேதாசலம் அதைக்கண்டு, “என்ன, எல்லாம் திருப்தி தானே? தம்பி, உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்றார். திவாகர் வேகமாகத் தலையாட்டினான்.

“எல்லாம் சம்மதம் தான்ப்பா.”

“ம்ம்.. அம்மா வானி, நீ எதுக்கும் அலட்டிக்காத. உன் பரீட்சை இந்த வாரம் முடிஞ்சிரும்ல, அதான், சீக்கரமா நாள் குறிச்சோம். ஆகவேண்டிய வேலை எல்லாம் பாத்துக்க ஆள் இருக்கு. நீ எதுக்கும் சிரமப்பட வேண்டாம். என்ன?”

அவன் சற்றே தயக்கமாகத் தலையசைத்தாள்.

“சரிங்க மாமா..”

பானு பூரிப்பான முகத்தோடு வானதியை ஏறிட்டாள். அவளது மகிழ்ச்சியின் காரணம் புரிந்ததும் வானதி குறும்பாகச் சிரித்தாள். உள்ளே சென்றதும், “எதோ எங்க ரிசப்ஷனுக்கு இத்தனை அவசரப்படறீங்கனு பாத்தா, உங்க ஆளை வீட்டுக்குக் கூப்பிடறதுக்கு தான் இவ்ளோவுமா?” என்று நகைக்க, பானு வெட்கப்பட்டாள்.

அவளுடன் பேசிக்கொண்டு அப்படியே சமையலறையில் அத்தைக்கு உதவியாக அவள் இருந்துவிட, திவாகர் தான் அவளுடன் பேச முடியாமல் தவித்தான். தன் காதலை சொன்னபோது அவள் பதிலேதும் கூறாமல் இருந்தது இப்போது அவனைப் பாதித்தது. முதலில் நாணமென்றும், திகைப்பென்றும் நினைத்துத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டவன், காரில் அவள் ரூபாவைப் பற்றிக் கேட்டதனால், அதையும் இதையும் சேர்த்துப் பார்த்துக் குழம்பினான். அவளோ, முகத்தில் எதையும் காட்டாமல் மதிய உணவை முடித்துவிட்டு, பானுவுடனும் மீனாட்சியுடனும் அளவளாவிக் கொண்டிருந்தாள்.

மாலை ஹரிணியும் வந்துவிட, இருவரும் சேர்ந்து சத்தமின்றி பானுவை கிண்டல் செய்து சிரித்தனர்.

“அண்ணியை நாளைக்கெல்லாம் கையிலயே பிடிக்க முடியாது! ஒரே கொண்டாட்டம் தான்!!”

“ஆமா ஹரிணி! நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க.. இப்பவே கனவுல டூயட் பாட ஆரம்பிச்சிருப்பாங்க!”

“ஆமாமா.. வீடியோ கால் பண்ணினா, ரெண்டு வார்த்தை கூட சேர்த்துப் பேச மாட்டாங்க. ‘சாப்டியா?’ அப்டிம்பான் அண்ணன். ‘சாப்ட்டேன், நீங்க?’ அப்டிம்பாங்க அண்ணி. அதுக்குமேல நம்ம முன்னாடி ஒரு வார்த்தை பேசிக்க மாட்டாங்க. எல்லாம் ரகசிய ரொமான்ஸ் தான் போல..”

அதில் விழுந்து விழுந்து சிரித்தனர் வானதியும் ஹரிணியும். பானு முகம்சிவக்க, “ச்ச்.. போங்க ரெண்டு பேரும்!” என்று வேகமாக எழுந்து அறைக்குள் செல்ல முயல, அவளை விடாமல் பிடித்து மீண்டும் கேலி செய்யத் தொடங்கினர் இருவரும்.

மீனாட்சி சற்றே இதைக் கவனித்துச் சிரித்தாலும், பெரிதாக இதில் கலந்துகொள்ளவில்லை. அவர்பாட்டில் விழாவுக்கு வாங்க வேண்டியவைகளைப் பட்டியலிடுவதும், வேலைகளைச் செய்ய ஆட்களை ஏவுவதுமாய் இருந்தார்.

இரவு உணவு கலகலப்பாக முடிய, அப்போதும் வெகுநேரம் பானுவிடம் பேசிக்கொண்டே படித்துக்கொண்டு இருந்துவிட்டு, தாமதமாகவே அறைக்குள் வந்தாள் வானதி. அவளுக்காகத் தூங்காமல் காத்திருந்தவன் அவள் வந்ததும் எழுந்து வேகமாக அருகில் வந்தான்.

சற்றே சோகம் தெரிந்த அவன் முகத்தைக் கரிசனமாகப் பார்த்து, “என்னாச்சு திவா?” என்றாள் வானதி, புத்தகத்தை மேசையில் மூடி வைத்தவாறு.

“உனக்கு.. இதுல.. இந்த ரிசப்ஷன்ல.. சந்தோஷமா..? இது.. ஓகேவா.. என்னை.. நான்..  ஓகேவா?”

அவன் என்ன கேட்க வருகிறானென ஓரளவு புரிந்தது அவளுக்கு. ஆனாலும்,

“சொல்றதை சீக்கரம் சொல்லு திவா.. எனக்குத் தூக்கம் வருது” என்றாள் அவள். முகத்தைப் பொறுமையில்லாதது போல் வைத்துக்கொண்டாள்.

கையைப் பிசைந்தவன் அதற்குமேல் வார்த்தை வராமல் சட்டென்று அவளை இறுக்க அணைத்துக்கொண்டான். லேசாக விசும்பினான்.

“எனக்கு என் மத்தாப்பை ரொம்பப் புடிக்கும். ஐ லவ் யூ. ஆனா என்னை உனக்குப் பிடிக்கலைன்னா நான் கோபப்பட மாட்டேன். I understand.  நான் காலைல உன்கிட்ட லவ்வை சொன்னப்ப, அதுல ஒரு துளி கூட பொய் இல்ல. முழுக்க முழுக்க உண்மை. உன்னை மறந்துட்டு இன்னொரு பொண்ணைக் காதலிச்சதும் உண்மை தான். ஆனால் அதை நம்ம கல்யாணத்தன்னைக்கே விட்டுட்டு, உன்மேல மட்டும் அன்பா இருந்ததும் உண்மை தான். ரூபா இனி என் வாழ்க்கைல எப்பவுமே இல்ல. நீ மட்டும் தான்.

ஆனா, you don’t have to take it. உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னா, நான் புரிஞ்சுப்பேன். யாருக்காவும், எந்த நிர்பந்தத்துக்காகவும் நாம இந்த உறவுல இருக்கவேணாம். திவாகர் இல்லாம மத்தாப்பூவால தனியாவே நல்லா வாழ முடியும். அவளுக்கு அந்த திறமையும் தைரியமும் உரிமையும் இருக்கு.

ஆனா மத்தாப்பூ இல்லாம திவா ரொம்பக் கஷ்டப்படுவான். அவனுக்கு நீ இல்லாம எதுவுமே செய்யத் தெரியாது. காபி போடக் கூட நீ தான் சொல்லித் தரணும்.. பைக் ஓட்டவும் நீ தான் கத்துத் தரணும்… உன்னைக் காதலிக்கவும் நீ தான் சொல்லித் தரணும்… வானி, உனக்கு என்கூட வாழறதுல விருப்பமா? என்னை லவ் பண்ண இஷ்டமா?”

அவன் அத்தனை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவானென எதிர்பாராதவள் உண்மையில் திகைத்துப்போய் பேச்சற்று நின்றாள். கண்களில் நீர் திரள, அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் அவளும்.

கண்ணீரால் கரகரத்த குரலில், “உன்னை எப்படி நான் வேணாம்னு சொல்வேன் திவா? உன்னை நினைக்காம ஒரு நாள் கூட இருந்ததில்லையே நான்… நீ எப்பவும் என்னோட திவா தான். என்னோடவன் மட்டும்தான். ஐ லவ் யூ” என்றாள்.

வானதியின் வார்த்தைகளில் அதிசயித்தவன், அவள் முகத்தை நோக்க, சிரிப்பும் கண்ணீருமாய் அவள் தலையசைக்க, பூரிப்புடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் அவன்.

அவள் லேசாக நிமிர்ந்து, மெல்லமாய் அவன் இதழ்களில் ஒரு மென்முத்தம் வைத்தாள்.

“நீ சொன்னவுடனே நானும் சொல்லியிருந்தா, அப்பறம் அதுல என்ன சந்தோஷம் இருக்கு எனக்கு? சாரை கொஞ்சம் அலையவிடலாம்னு பாத்தேன்… அதுக்குள்ள நீ அழ ஆரம்பிச்சா நான் என்ன பண்ணுவேன்?”

“ஆமா.. இதுல தான் உன் வெஞ்சன்ஸ் எல்லாம் காட்டணுமா? மத்தியானத்துல இருந்து நானும் உன் கூட பேச ட்ரை பண்ணிட்டே இருக்கேன்.. நீயும் கண்டுக்க கூட மாட்டேங்கற.. எப்படி பயந்துட்டேன் தெரியுமா?”

அவன் சிணுங்கிக்கொண்டு பேச, அவள் கலகலவெனச் சிரித்தாள்.

“மிஸ்டர் அமெரிக்கா மாப்பிள்ளை, உங்களுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு. அது ஞாபகம் இருக்கா இல்லையா? உங்க பொண்டாட்டி கிட்ட லவ்வை சொல்றதுக்கு இவ்ளோ சீன்லாம் இல்ல, தெரியுதா?”

“ஆ..மா… அப்படியே husband and wife மாதிரித்தான் இருக்கறோம் பாரேன்.. பயப்படாம இருக்கறதுக்கு..”

அவள் சிரிப்புக் குறையாமல் அவன் கன்னத்தைக் கிள்ளி, “சரிங்க ஹஸ்பண்ட்… இன்னும் ஒரே ஒரு வாரம்தான். ஊரறிய ரிசப்ஷன் வெச்சு, கல்யாணத்தை கம்ப்ளீட் பண்ணிடுவாங்க. அதுக்கப்பறம், நீயே வேணாம்னு சொன்னாலும், நான் மிஸஸ் வானதி திவாகர் தான்.” என்றாள்.

கண்களில் இப்போது குறும்பு மின்ன, இடுப்பில் கைவைத்து அவளை சாய்த்துப் பிடித்தான் அவன்.

“ஒரு வாரமா? அப்ப ரெண்டு மாசமா வெய்ட் பண்ணதெல்லாம் எதுக்காக?”

சட்டென அவன் மாற்றத்தை உணர்ந்த வானதி திகைத்து, “ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கணுமாம். நாளைக்கு சுதாகர் வர்றான். அனேகமா என்னை எக்ஸாம் சென்டர்ல விட்டுட்டு நீ தான் அவனைக் கூட்டிட்டு வரணும்னு நினைக்கறேன். சோ, ஒழுங்கா சீக்கரம் தூங்கு திவா” என்று அறிவுரைத்தபடி விலகி நின்றாள்.

சிணுங்கியபடியே வானதியின் கையைப் பிடித்துக்கொண்டு, “எனக்குன்னே வர்றானுக பாரேன்!” எனப் புலம்பிக்கொண்டே படுத்தான் அவன். வானதியும் சிரித்துக்கொண்டே அவனுடன் படுத்துக்கொண்டாள்.

திவாகர் சீக்கிரம் உறங்கிட, வானதி ஏனோ தூங்காமல் விழித்திருந்தாள்.

1 thought on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *