தலைமையாசிரியரிடம் விடைபெற்று மீண்டும் தங்கள் வீட்டுக்கு வரும்வரை இருவரும் மௌனமாகவே நடந்து வந்தனர்.
தன்னிடம் அனைத்தையும் மறைத்துவிட்டு சிரித்துப் பேசிய தந்தையையும் தமையனையும் நினைத்து மனதில் பொருமினாள் வானதி. தன்னிடம் அவர்கள் எதையும் பகிர்ந்துகொள்ள நினைக்கவில்லை என்ற எண்ணம் அவளை உலுக்கியது. எங்காவது சென்று வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
திவாகர் நஞ்சேசன் குடும்பத்தாரின் மேன்மையையும் தயாள குணத்தையும் கேட்டறிந்த பிரம்மிப்பிலும், அத்தகைய மனிதர்களுக்கு நிகழந்த சோகத்தை நினைத்து ஆற்றாமையிலும் அமைதியாக இருந்தான்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்… என் தந்தையைப் போல வசதி படைத்தவர்களுக்கு அது எளிது. ஆனால், சாதாரண விவசாயி… அவர்களுக்கே சரியான வரவு இல்லாத பொழுதும் கூட, தங்கள் சுற்றத்தாருக்கு ஒரு குறையும் வந்துவிடாமல் காத்தனரே… எவ்வளவு மனப் பக்குவம் இருந்திருந்தால், கஷ்டங்கள் அனைத்தும் தம்மைச் சூழ்ந்த போதும், உயிராய் நினைத்த விவசாயத்தை விடாமல் செய்து வந்திருக்க வேண்டும்!! விக்னேஷ் போன்ற இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து…
வானதியின் அறிவும் தெளிவும் எங்கிருந்து வந்ததென இன்று புரிகிறது.’
வீட்டை அடைந்ததும் விறுவிறுவென அண்ணனின் அறைக்குச் சென்று அலமாரிகள் அனைத்தையும் கலைத்தாள் வானதி. துணிமணிகள், புத்தகங்கள் அனைத்தையும் எடுத்துக் கீழே போட்டவள், ஆவணங்கள் எதுவும் அங்கே இல்லாததைக் கண்டு, சோர்ந்துபோய் நின்றாள். ஏற்கனவே கொண்டிருந்த சோகமும் ஆற்றாமையும் அதனோடு சேர்ந்து அழுத்த, கைக்குக் கிடைத்தவற்றை எல்லாம் விசிறியெறிந்துவிட்டு அழுதாள் அவள்.
அவளது மனநிலை புரிந்ததால் அவளைத் தடுக்காமல் தள்ளி நின்றான் திவாகரும். அழுது ஓய்ந்தவள், தானாகவே எழுந்து தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு, “லேட்டாகுது.. வீட்டுக்குப் போலாம்..” எனக் கிளம்பினாள்.
“ஹேய்… அப்ப உங்க அண்ணன் செஞ்ச டெஸ்ட்டோட டாக்குமெண்ட்ஸ் எதுவும் எடுக்க வேணாமா?”
“அதான் எங்க இருக்குன்னு தெரியலையே?”
வார்த்தைகளை சாட்டை போல உகுத்தாள் அவள். அது தன்மீதில் கொண்ட கோபமல்ல என்பது தெரிந்ததால் பொறுமையாக நின்றான் அவனும்.
“அவசரத்துல தேடுனா, கிடைக்கறது கஷ்டம் தான். நிதானமா யோசி.. உங்க அண்ணன் படிச்சவர். கண்டிப்பா பேப்பரா மட்டும் டாக்குமெண்ட்சை வச்சிருக்க மாட்டாங்க. நிச்சயமா சாஃப்ட் காப்பியும் இருக்கும். கம்ப்யூட்டர்ல தேடிப் பாரு.”
அவன் கூறியதை ஆமோத்தித்துத் தலையசைத்தவாறு, அண்ணனின் மேசையில் இருந்த கணினியை உயிர்ப்பித்தாள் அவள். கடவுச்சொல் என்னவாக இருக்கும் என ஊகிக்க முடியவில்லை அவளால். சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு, அண்ணனின் பெயர், தன் பெயர், அப்பாவின் பெயர், பிறந்த நாள் தேதிகள் ஆகியற்றை ஒவ்வொன்றாகக் கொடுத்துப் பார்த்தாள். எதுவுமே சரியானதாக இல்லை.
சோர்வாக மேசையில் தலைசாய்த்து அவள் படுத்துக்கொள்ள, அதற்குள் ஆளுக்கொரு கோப்பையில் காபி எடுத்து வந்தான் திவாகர். அந்த சோகத்திலும் ஒரு புன்முறுவல் பூத்தது வானதியின் இதழோரம்.
“தேங்க்ஸ்.. பசிக்கலையா?”
‘பயங்கரமா பசிக்குது. விட்டா தட்டையே கடிச்சு சாப்பிட்டுருவேன்… ஆனா உங்கிட்ட சொல்லி என்ன பலன்?’
இல்லையெனத் தலையசைத்தான் அவன். “Take your time.”
“ம்ஹூம்… எனக்கு செம்மையா பசிக்குது. வீட்டுல சமைக்க எதுவும் இல்ல. நாம முத்துப்பட்டிக்கே போலாம். அத்தையும் பானு அக்காவும் நாலைஞ்சு தடவை ஃபோன் பண்ணிட்டாங்க”
தெய்வத்திற்கு நன்றி சொன்னான் திவாகர்.
இருந்தாலும், எடுத்த வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு வருவது அவளது குணமல்லவே என யோசித்தவன் தயக்கமாகப் பார்த்தான். அதற்கு விடையளிப்பதுபோல் அவளே, “இந்த ஒரு லீட் மட்டும் தானே நின்னுபோச்சு..? மத்த லீடை பின்தொடரலாம். அப்பாவோட சக விவசாயிகளை சந்திச்சா எதாவது விவரம் கிடைக்கலாம்.” என்றாள் ஒரு நம்பிக்கையான குரலில்.
சரியென வெளியே வந்தனர் இருவரும்.
“ட்ரைவருக்கு கால் பண்ணவா? காரை எடுத்துட்டு வருவார்..?”
“இப்ப கால் பண்ணினா, வர்றதுக்கு அரை மணி நேரம் ஆகும். போகறதுக்கு இன்னொரு அரை மணி நேரம். அதுக்குள்ள நீ பசியில மயக்கம் போட்டாலும் போட்டுடுவ!”
அவள் கிண்டலாகச் சொன்னாலும், அதில் உண்மை இருப்பதை அவனும் ஏற்றுக்கொண்டான்.
“சரி, அப்றம் எப்டிப் போறது?”
வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த போர்ட்டிகோவுக்குள் சென்றவள், எதையோ மூடியிருந்த ப்ளாஸ்டிக் தார்பாயைப் பிடித்து இழுக்க, அழகாய் வெளியே எட்டிப்பார்த்த அந்த ஹோண்டா பைக்கை வானதி வாஞ்சையாகப் பார்த்தாள்.
திவாகரோ சலனமின்றி நின்றிருந்தான்.
அவள் கேள்வியாகத் திரும்பிப் பார்க்க, அவனோ, “I don’t know to drive a motorcycle” என்றான் சாதாரணமாக.
புரையேறி இருமினாள் வானதி.
“என்னது??? பைக் ஓட்டத் தெரியாதா???”
அவள் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகிறாள் எனக் குழம்பியபடி தலையை அசைத்தான் அவன். ஆச்சரியமும், ஏளனமும் கலந்த பார்வையுடன் அவனை ஏறிட்டாள் அவள்.
வாய்க்குள், “ஏழு கழுதை வயசாச்சு… ஒரு பைக்குக் கூட ஓட்டத் தெரியாதாம்..” என சபித்தவள், “ஏன்? பைக் கூட ஓட்டக் கத்துக்காம… அமெரிக்காவுல என்னதான் பண்ணுவ?” என்றாள் எரிச்சலுடன்.
அதே எரிச்சலுடன், “ஹலோ, இதெல்லாம் கத்துக்கிட்டா தான் அமெரிக்காவுல வாழணும்னு எந்த சட்டமும் இல்லை. And i don’t have time for that. I used cars, and public transport. I saved a lot of time, and i used it to study, and become a better engineer. உனக்குத் தெரிஞ்சதெல்லாம் அடுத்தவங்களுக்கும் தெரியணும்னு எதிர்பாக்கறது உன்னோட தப்பு. And that is hypocrisy. உன்னோட அப்ரூவல் தேவையில்லை எனக்கு. பைக் ஓட்டத் தெரியாதது ஒண்ணும் பெரிய க்ரைம் இல்ல. கியர் இல்லாத மத்த வண்டி ஓட்டுவேன் நான்.” என்றான் அவன்.
வந்ததிலிருந்து இவ்வளவு கோபமாக அவன் பேசிக் கேட்டிராதவள், கண்ணில் ஒருவித ஆச்சரியத்துடன் அவன் பேசுவதையே பார்த்திருந்தாள்.
பின் மௌனமாக, பைக்கில் ஏறி அவளே அதை எடுத்தாள். திவாகர் அதைக் கண்டு திகைத்தான்.
“உனக்கு.. உனக்கு பைக் ஓட்ட வருமா?”
விடையாக, தன் பையில் கைவிட்டு, தனது ஓட்டுனர் உரிமத்தை எடுத்து நீட்டினாள் அவள். கியர் வாகனங்களுக்கான உரிமம் அது. குறையாத ஆச்சரியத்துடன் அவன் பார்க்கையிலேயே, பைக்கை உயிர்ப்பித்து, முறுக்கி, வேகமாக வீதியில் செலுத்தி, பின் புழுதி பறக்கத் திரும்பி வந்து அவன் முன்னால் நின்றாள் அவள்.
“டெமோ பிடிச்சிருந்ததா? தைரியமா ஏறுவியா?”
திவாகர் சிரிப்பும் திகைப்பும் கலந்த பார்வையுடன் பின்சீட்டில் ஏறிக்கொள்ள, முத்துப்பட்டிக்கு சீறிப் பாய்ந்தது பைக். இருபதே நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிட, பைக்கை நிறுத்தியவள் கண்ணாடியின் மூலம் அவன் முகத்தைப் பார்க்க, கண்களை இறுக்க மூடிக்கொண்டு, பைக்கின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு களுக்கென சிரித்துவிட்டாள் அவள்.
“வீடு வந்தாச்சு. வண்டி நின்னாச்சு!”
வானதி கூறிய பிறகே கண்ணைத் திறந்தவன், “மோட்டோக்ராஸ் ரேசுக்கு ஓட்டற மாதிரி ஓட்டற!? பயமே இல்லையா உனக்கு?” எனக் கேட்டபடியே இறங்கினான்.
தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அதைக் கேட்டு சிரிக்க, வானதி துடுக்கான பார்வையுடன், “உன் திறமை மேல உனக்கு நம்பிக்கை இருந்தா, எந்த லிமிட்டுக்கும் பயமில்லாமப் போகலாம். பதினெட்டு வயசுல இருந்து பைக் ஓட்டறேன். அவ்ளோ சீக்கிரம் மிஸ்டேக் பண்ணிட மாட்டேன்” என்றுவிட்டு, பைக்கை ஓரமாக நிறுத்தினாள்.
வேலைக்காரப் பொன்னையாவிடம், “எங்க அண்ணனோட பைக் இது. கவனமா துடைச்சு வைய்யுங்க. கீறல் விழாம பாத்துக்கங்க.. ” எனக் கட்டளையிட்டவள், பைக்கை ஒருமுறை பாசமாகப் பார்த்துவிட்டு, திவாகருடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
வெளி முற்றத்திலேயே இருவரையும் கை கால் அலம்ப வைத்து, தலையிலும் தீர்த்தம் தெளித்து, தீட்டுக் கழித்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார் மீனாட்சி.
“பயங்கரமா பசிக்குதும்மா…” என்றபடியே அம்மாவின் பின்னால் சென்றவன், சாப்பாட்டு மேசையில் அப்பா அமர்ந்திருந்ததைப் பார்த்து அமைதியாகி, அவருடன் அமர்ந்துகொண்டான். வானதி தன் பொருட்களை அறையில் பத்திரப்படுத்திவிட்டு, அவளும் சாப்பிட வந்தமர்ந்தாள்.
பானுமதி அவர்களுக்குப் பரிமாறிவிட்டு, தானும் சாப்பிட அமர்ந்தாள். ஹரிணி பள்ளிக்குச் சென்றிருந்தாள்.
“சடங்கெல்லாம் முடிச்சாச்சு மாமா. அடுத்து பதினாறாம் நாள்னு ஏதோ இருக்காம். அதுவரை வேற எதும் வேலையில்ல.. “
அவர் கேட்காவிட்டாலும் அவளாகவே கூறினாள் வானதி.
“ம்ம்.. எனக்கு அவசரமான வேலை இருந்தது. அதான்.. சீக்கரம் கிளம்ப வேண்டியதா போச்சு. நீங்க ஏம்மா இவ்ளோ நேரங்கழிச்சு வர்றீங்க?”
பொதுவாக அவர் கேட்டாலும், அதிலிருந்த அழுத்தத்தை உணர்ந்தாள் அவள்.
“ம்ம்.. ஹெட்மாஸ்டரைப் பாத்துட்டு வந்தோம் மாமா. காலைல வர முடியலன்னு வீட்டுக்கு கூப்பிட்டிருந்தார்..”
பாதி உண்மையும் பாதிப் பொய்யுமாய் அவள் கூறுவதைப் புரியாமல் பார்த்தான் அவன். ஆனால் அமைதியாக உணவருந்தி முடித்துவிட்டு, அறைக்கு வந்த போது, அவளிடம் அதைக் கேள்வியாக வெளியிட்டான்.
“எங்க அப்பாவை நீ எதும் சந்தேகப்படறயா வானதி?”
அவனது கூரான கேள்வியால் திடுக்கிட்டு, பேச்சின்றி நின்றாள் அவள்.
Super👍