Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-24

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-24

கையில் Geography and Demographics புத்தகத்தை எடுத்துக்கொண்டு, பால்கனியில் முன்னும் பின்னும் நடந்தபடி பூகோளம் படித்துக்கொண்டிருந்தாள் வானதி.

உள்ளே திவாகர் ஏதோ திரைப்படம் பார்க்கும் சத்தம் கேட்டது. சத்தம் அவளுக்குத் தொந்தரவளிக்கக் கூடாதென அவன் குறைத்துத் தான் வைத்திருந்தான். ஆயினும் அவ்வப்போது வரும் பின்னணி ஓசையில் வானதியின் சிந்தனை திவாகரை நோக்கித் திரும்பியது. அதிலும் அமெரிக்க வரைபடம் வேறு அடிக்கடி புத்தகத்தில் வந்தது.

இன்று காலையிலிருந்து ஏனோ மனதில் பாரமாகவே இருப்பதாக உணர்ந்தாள் அவள். திவாகர் அவனது இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டு அவளிடம் நெருங்கத் தொடங்கியிருந்தது அவளுக்கும் புரிந்தது. ஆனால் அதை ஏன் செய்கிறான் என்பதில் தான் அவளுக்குக் குழப்பம். அதிலும் குன்றின் மீது அமர்ந்திருந்தபோது அவன் பேசியதும் அவளைக் கலங்கடித்தது.

தெரிஞ்சோ தெரியாமலோ, we are tied in this destiny. So, let’s try to live with it.”

உன் விதி இது தான் என்று இதை ஏற்றுக்கொண்டதால் அமைதியாகி விட்டாயா திவா? என் மேல் உனக்கு அன்பு ஏதும் வரவில்லையா? என் பழைய திவா எனக்குக் கிடைக்க மாட்டானா? என்னைவிட்டு எல்லோரும் போனது போல் நீயும் போய்விடுவாயா? அதற்கு முன் என்னைத் தேற்றுவதற்காக இந்த செயல்களா?’

சிறிது நேரம் பால்கனியிலேயே அமர்ந்து எண்ணங்களில் மூழ்கியவள், சுவர்க்கோழிகளின் சத்தம் கேட்குமளவு நிசப்தம் பரவியதும் தன்னிலை திரும்பினாள். ஊரெங்கும் இருளில் மூழ்கியிருக்க, பிறை நிலா கருநீல வானில் நீந்திக் கொண்டிருந்தது. நட்சத்திரங்களற்ற அந்த வெற்று வானத்தைப் பார்த்தபோது, அதுபோலவே ஒரு முடிவில்லா இருட்கடலில் தானும் சிக்கியது போல உணர்ந்தவளுக்கு மூச்சுத் திணறியது. அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் வேகமாக அறைக்குள் வந்தாள் அவள்.

இங்கோ, திவாகர் கட்டிலில் படுக்காமல், அவள் வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சோபாவில் சொகுசாகப் படுத்துக்கொண்டு கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டிருந்தான். நெஞ்சின்மேல் பாதி மூடி வைக்கப்பட்ட மடிக்கணினி இருக்க, அவளுக்காகவே காத்திருந்ததுபோல் அவன் தலையை சாய்த்துப் பார்த்தான்.

அவளோ புத்தகத்தை மேசையில் அடுக்கி வைத்துவிட்டு, கறாரான பார்வையுடன் அவனை ஏறிட்டாள்.

“திவா..? என்ன இதுல படுத்திருக்க? எழுந்து அங்கிட்டுப் போ. நான் தூங்கணும்.”

அவனோ எழாமல், கைகளைத் தலைக்குப் பின்னால் மடக்கி வைத்துக்கொண்டு, விஷமமாகப் புன்னகைத்தான்.

“மாட்டேன்..”

“ப்ச்.. மணி என்ன தெரியுமா? உன் கூட ஆர்க்யூ பண்ண எனக்கு நேரமும் இல்லை, தெம்பும் இல்லை. நீ எழுந்துக்கலைன்னா, நான் பெட்ல படுத்துக்குவேன். நீதான் தூங்க முடியாம கஷ்டப்படணும்.”

அவள் சிடுசிடுவென வார்த்தைகளை உகுக்க, அவனோ அசராமல் அப்படியே படுத்திருந்தான்.

“தப்பே இல்லை. ரெண்டு பேர் தாராளமா படுத்துக்கலாம் இந்த பெட்ல.”

சொல்லிவிட்டு, கண்ணை வேறு அவன் சிமிட்டிக் காட்ட, வானதி திகைத்தாள். இதுவரை சிறு வயதில் தன்னோடு குழந்தையாக இருந்த திவாகராகவே அவனை நினைத்திருந்தவள், இன்று வாலிபனாக, ஆடவனாக அவனை நினைத்ததும் உள்ளூற ஒரு நடுக்கம் பரவியது. முதன்முறையாக அவனுடன் அந்த அறையில் தனித்திருப்பது உறுத்தியது அவளுக்கு.

அவனை நேராகப் பார்க்காமல் பார்வையை மாற்றியவள்,

“விளையாடாத திவா… தூக்கம் வருது எனக்கு..” எனக் கெஞ்சும் தொனியில் கூறினாள்.

அவனோ, மடிக்கணினியை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து சோபாவிலேயே அமர்ந்து, “எனக்கும் தான் தூக்கம் வருது. ரெண்டு பேரும் தூங்கலான்னு தான் நானும் சொல்றேன்.. எதுக்காக சோபாவுல குறுகிப் படுத்து நீ கஷ்டப்பட்டுக்கிட்டு? ஏன் பெட்ல படுத்துக்கக் கூடாது?” என தர்க்கம் செய்தான்.

அவளோ கையைப் பிசைந்தபடி, “நீ தெரிஞ்சு பேசறயா, தெரியாமப் பேசறயான்னு புரியலை எனக்கு. ப்ளீஸ்.. எழுந்து போ” என்றிட, சட்டென எழுந்து அவள் முகத்துக்கு நேரே நின்றான் அவன். அந்த நெருக்கம் அவளது இதயத் துடிப்பை உயர்த்திட, நடுங்கும் கைகளை சுடிதாருடன் சேர்த்துப்பிடித்து மறைத்தாள் அவள். அவளது வேதனையை அறியாத திவாகரோ, அவளுக்கு வேண்டியதையே தான் தருவதாக நினைத்துக்கொண்டு அப்படியே நின்றான்.

உன் மனசை வீட்டையும் வேம்பத்தூரையும் நினைக்கவிடாம, எக்ஸாம் பக்கம் திருப்ப நினைக்கறேன்நீயோ, அதிலயும் கட்டுப்படாம, இன்னமும் கேஸ், வேம்பத்தூர் அப்டின்னே அலையற. உன் மனசை திசைதிருப்பணும்னா, உன்  கூட நான் டைம் ஸ்பெண்ட் பண்ணாத்தான் முடியும்போலஅது இன்னிக்கு மலைக்கோயிலுக்கு போனப்பவே புரிஞ்சுது எனக்கு.’

அவளது கலவரப் பார்வையை ரசித்தபடி, “என் கூட பெட்ல படுத்துக்க உனக்கு என்ன கஷ்டம்? I am a very decent man, you know..” என்றான் அவன், சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு. அவளோ பதில் பேசாமல் விலகி வேகமாக பால்கனிக்குச் சென்று நின்றாள். அவனும் பின்தொடர்ந்து போனபோது அவள் விசித்து விசித்து அழத் தொடங்க, ‘கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ…?’ எனத் தன்னையே கேட்டுக்கொண்டான் திவாகர்.

அவளே அதற்குள், “என்னால.. நான்… என்னால அப்டில்லாம்… எல்லாத்தையும் மறந்துட்டு… என்னால.. உன் கூட…” என்றிட, அவள் சொல்லவருவது புரிந்த திவாகருக்கு சட்டென முகம் கன்றியது. அவளுடன் வம்பளந்து, விளையாடி, காலை முதல் நிகழ்ந்தவற்றை மறக்கடித்து அவளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர மட்டுமே அவளிடம் கிண்டல் செய்தவன், அவள் அதைப் புரிந்துகொண்ட விதத்தில் அதிர்ந்தான். தன்னுடைய அமெரிக்கக் காதலைத் தான் நினைக்க மறந்ததோ, மறக்க நினைத்ததோ அவனை உறுத்திட, அவளிடமிருந்து ஓரடி தள்ளி நின்றான் அவன்.

அவளோ, அவன் விலகிய கணத்தில் திரும்பி அவனிடம், “நீ அமெரிக்கா போ, ஆப்ரிக்கா போ, ஏன் அண்டார்டிகா கூடப் போ. அதுக்காகவெல்லாம் என்  கூட நீ சேர்ந்து இருக்கணும்னு நினைக்காத. உன்னோட பரிதாபம், அனுதாபம் எதுவும் எனக்கு வேணாம். என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும். உன்னோட உதவி தேவையில்லை” என்று கண்ணீருடன் காட்டமாக உரைத்துவிட்டு, அவனைத் தாண்டிக்கொண்டு உள்ளே சென்று சோபாவில் படுத்தாள்.

அவள் சொன்னதையே மீண்டும் மீண்டும் மனதில் அசைபோட்டுக்கொண்டு, நின்ற இடத்திலேயே நின்றிருந்தான் திவாகர்.

_________________________________

அழுகையை தலையணையில் புதைத்தபடி போர்வைக்குள் தஞ்சமடைந்திருந்த வானதிக்கு, எதனால் அழுகிறோமெனவே புரியவில்லை சில நேரம்.

நான் நேசித்தவன்தான் என்னிடம் நெருங்கி வருகிறான்.. அவனிடம் ஏன் எனக்கு நடுக்கம்?

நீ நேசித்தவன்தான், ஆனால் உன்னை நேசித்து வரவேண்டும் அவன்.

இரண்டும் ஒன்றுதானே..?

நிறையவே வித்தியாசம் உள்ளது. ‘

கண்களைப் போர்வையின் நுனியில் அழுந்தத் துடைத்துவிட்டு, இரவு விளக்குகளை அணைத்துவிட்டுக் கண்ணயர்ந்தாள் அவள்.

அடுத்த சில நாட்களில் அவன் பட்டும் படாமல் இருக்கப் பழகிக் கொண்டான். வானதியும் தன் விதி இது தான் எனப் புரிந்துகொண்டது போல் படிப்பில் கவனம் செலுத்தினாள். ஹரிணியோடும் பானுவோடும் விளையாடிக்கொண்டே  படிப்பாள்; மீனாட்சிக்கு சமையலறையில் உதவிக்கொண்டே சமன்பாடுகளை உருப்போடுவாள்; காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அதில் பாடங்களைக் கேட்டுக்கொண்டே வேதா மாமாவுக்குத் தேவையானதை எடுத்துத் தருவாள்.

திவாகர் தூரத்திலிருந்தே அவளது சூட்டிகைத் தனத்தையும், கிண்டல்களையும் விளையாட்டுக்களையும் ரசித்தான். அவள்மீது கொண்டுள்ள பிரியத்தையும், அக்கறையையும், தன்னால் கலப்படமின்றிக் காட்டமுடியாமல் தடுக்கும் இந்தத் திருமண பந்தத்தைத் தான் அவன் வெறுத்தான்.

உன்னை மணந்து கொள்ளுமுன் உன்னுடன் இது போல பேசிப் பழகியிருந்தால், நிச்சயமாக உன்னைத் தான் மணந்திருப்பேன்..’

தனக்குள் எழுந்த இந்த சிந்தனையில் அவன் அதிர்ந்தான். தன்னறையின் பால்கனியில் அமர்ந்திருந்தவன், கீழே தோட்டத்தில் துள்ளி விளையாடிக்கொண்டும், தும்பிகளைப் பிடிக்க முயன்று கொண்டும் இருந்த அந்த ஐந்தரை அடி அருவியை மறுபடி ஒருமுறை நோக்கினான்.

அலைபாயும் கூந்தலில் ஒற்றைக் கேட்ச்க்ளிப்பை மட்டும் பொருத்தி, நெற்றியில் சின்ன வட்டப்பொட்டு ஒன்று வைத்து, காதில் குடைக்கம்மல்கள் மாட்டி, கையில் ஒற்றை வளையல் மட்டும் போட்டுக்கொண்டு, மஞ்சள் வண்ண சுடிதாரில் அவள் செண்பகப் பூக்குவியலாகவே இருந்தாள்.

ஹரிணி தன்னிடம் ஒரு தலையணையளவு பெரிதாக இருந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து வினாக்கள் கேட்டுக்கொண்டிருக்க, அவளோ, ஒருநொடி கூடத் தாமதிக்காமல் அதற்கு விடைகளைக் கூறிக்கொண்டே தும்பிகளையும் வண்டுகளையும் துரத்திக்கொண்டிருந்தாள்.

மாலை மங்கத் தொடங்கிய நேரமென்பதால், சாய்வான செங்கதிர்கள் தோட்டமெங்கும் விழுந்திருக்க, அவள் முகத்திலும் அவை பட்டு தேவதைச் சாயல் காட்டியதாகவே இவனுக்குத் தோன்றியது. தன்னருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து திரும்பியபோது, மீனாட்சி அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“என்ன தம்பி… அவசரக் கல்யாணம் பண்ணி வச்ச கோபமெல்லாம் போயாச்சா? உன் நல்லதுக்காகத் தான் நாங்க எதுவும் செய்வோம்னு புரிஞ்சதா?”

எதிர்த்துப் பேச விருப்பமின்றித் தலையை மட்டும் ஆட்டினான் அவன். மகனை ஒருமுறை உச்சிமுகர்ந்துவிட்டு, அவர் நகர, அதற்குள் இருட்டிவிட்டதால் வானதியும் ஹரிணியும் வீட்டினுள் வந்தனர்.

“நாளைக்கும் இதே மாதிரி க்வெஷ்டின் கேளு ஹரி… ஜாலியா இருக்கு!!”

அவளிடம் பேசிக்கொண்டே அறைக்குள் வந்தவள், பால்கனியில் நின்ற திவாவைப் பார்த்தும் பாராமலும் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியேற எத்தனித்தாள்.

“வானி…”

நின்று திரும்பிப் பார்த்தாள்.

“நான் அமெரிக்கா போகப் போறதில்ல.”

3 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *